'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 33 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


🚩  🚩  🚩
ஊரெழுக்  கம்பன்  கழகம்

ரகுபரன்
இவன் 1983 ஆம் ஆண்டளவில் 
கழகத்தோடு தொடர்பு கொண்டவன். 
கொக்குவிலைச் சேர்ந்தவன்.
எங்களைச் சந்தித்தபோது 
ஊரெழுவில் வசித்து வந்தான்.
வித்துவான் ஆறுமுகம் 
அவர்கள் நடத்திய பண்டித வகுப்பால், எம்மோடு இணைந்தான்.
கழகத் தொடர்பால் பின்னர் ஊரெழுவில் ஒரு கம்பன் கழகம் அமைத்து,
இரண்டு விழாக்களை நடாத்தினான்.
தமிழில் புலமை மிக்கவன்.
என்னைவிட 
வயதிற்குறைந்த இவன், தமிழால் 
எனக்குத் தம்பியாகி,
ஆரம்பகால கழக முயற்சிகளில் பெரும் பங்கேற்றான்.
வைமன் ரோட்டிலும் பின்னர் கம்பன் கோட்டத்திலும்,
பலகாலம் எங்களுடனேயே தங்கியிருந்தான்.
தமிழாசிரியர்களுக்கே உரியதான பெண்மை கலந்த மென்மையானவன். 
கழகத்தில் என் சமையல் முயற்சிகளுக்குத் துணைசெய்வான்.
அவனும் நன்றாகச் சமைப்பான்.
குமாரதாசனுக்கும் எனது தங்கைக்கும் நடந்த திருமணத்திற்கு,
இவன்தான் மாப்பிள்ளைத் தோழனாக இருந்தான்.
அந்தளவுக்கு எங்களோடு நெருங்கியிருந்தவன் இவன்.
1995 இல் நாங்கள் கொழும்புக்கு இடம்பெயர்ந்தபொழுது,
இவனும் எங்களோடு கொழும்பு வந்தான்.
இடையில் நாங்கள் பட்ட பாடுகளையெல்லாம் சேர்ந்து அனுபவித்தான்.
கழகத்தோடு இணைந்திருந்ததால்,
பல்கலைக்கழகத் தமிழ்த்துறையால் முதலில் இனங்காணப்பட்டான்.
பின்னர் அதே காரணத்தால் நிராகரிக்கவும் பட்டான்.
இவனை உள்வாங்கியிருந்தால்,
யாழ். பல்கலைக்கழகம் பலம் பெற்றிருக்கும்.
சோம்பல் இவனது பெரும் குறைபாடு.
எங்கள் கழகத்தில் பெரும் மதிப்புக்கொண்டிருந்த,
அறிஞர் சோமசுந்தரத்தின் மகளைப் பின்னர் திருமணம் செய்தான்.
இவனது திருமணத்திற்கூட எனது பங்களிப்பு இருந்தது.
பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,
இவனை விரிவுரையாளராய்த் தேர்ந்தெடுத்தது.
எனக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான,
பொருத்தமின்மையோ என்னவோ,
விரிவுரையாளரான பின்பு இவனது போக்கில் சில மாற்றங்கள்.
🚩  🚩  🚩

ரகுபரனின் தூய தொண்டு

எங்களோடு ஒன்றாய் இருக்கையில்,
தன் உயிர் பற்றியும் அக்கறையில்லாமல் எமக்குத் துணை செய்தவன் இவன்.
கழகத்தைக் குடும்பமாய் நினைத்துக் காத்தவன்.
தன் நட்பு வட்டாரத்தைக் கழகப் பணியில் ஈடுபட வைத்தவன்.
எனக்கு நிகழ்ந்த அவமரியாதையை, தனக்கு நிகழ்ந்ததாய்க் கருதியவன்.
தான், தன் குடும்பம் என்ற வட்டங்களைக் கடந்து,
அறிவுலகத்திற்கும் சமூகத்திற்குமாகப் பாடுபடும் மனநிலையுடையவன்.
நாம் கொழும்பு வந்த பிறகு,
மயூராபதி அம்மன் ஆலயத்திற்கென ஒரு நூலினைத் தயாரித்தோம்.
அப்போது இவனது மனைவி,
கடுமையான சுகவீனமுற்று வைத்தியசாலையில்,
'ஐ.சி.யு.' வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதுபற்றிக் கவலைப்படாமல் அப்போதும் எங்களோடு உடனிருந்து,
அந்நூல் முயற்சிக்காய் இவன் பாடுபட்டான்.
கழகத்தில் பின்னர் வந்து இணைந்த இளைஞர்களிடம்,
இத்தகு மனநிலை பெரும்பாலும் இருக்கவில்லை.
வீட்டில் ஒரு சிறு பிரச்சினை என்றாலும்,
அவர்களில் பலபேர் கழக வேலையை மறந்து விடுகிறார்கள்.
சுயநலம் கடந்து,
ஆரம்பகாலத்தில் ரகுபரன் செய்த பணிகளை என்னால் மறக்கமுடியாது.
எங்களது ஆரம்பகாலப் பதிப்பு முயற்சிகள் அனைத்தும்,
இவனது கைவண்ணத்தாலேயே மிளிர்ந்தன.
சுயமுயற்சி அதிகம் இல்லாத இவனை,
அறிவுலகில் அடையாளப்படுத்தவும் தகுதிப்படுத்தவும்,
நான் பெருமுயற்சி செய்திருக்கிறேன்.
🚩  🚩  🚩

மனதை வருத்திய பொய்மை

ரகுபரன் மரபுவழியைச் சார்ந்தவன் என்பதாலும்,
நவீனத்தில் ஈடுபாடு இல்லாதவன் என்பதாலும்,
கழகத்தோடு தொடர்புபட்டிருந்ததாலும்,
தொடக்க காலத்தில் இவனைப் பேராசிரியர் சிவத்தம்பி போன்றோர்,
அங்கீகரிக்க விரும்பவில்லை.
பிற்காலத்திலும் அங்கீகரித்தார்களா தெரியவில்லை.
இவனுக்கும் அவர்களது போக்கு அதிகம் பிடிக்காது.
எங்களோடு சேர்ந்து இருக்கையில் அவர்களை விமர்சிப்பான்.
பல்கலைக்கழகத்தில் அவர்கள் செய்யும் தவறுகளை,
எங்களோடு பகிர்ந்து கொள்வான்.
பின்னாளில் எங்களோடு முரண்பட்ட பிறகு,
கழகத்துடன் முரண்பட்ட அத்தகுதியை வைத்தே
அவர்களது ஆதரவைப் பெற்றான்.
பேராசிரியர் சிவத்தம்பியின் நினைவுமலரில்,
இவன் எழுதிய கட்டுரையில் வந்த ஒரு செய்தி,
என்னைப் பெருங்கவலையில் ஆழ்த்திற்று.
அக்கட்டுரையில்,
ரகுபரன் பேராசிரியரை மிகவும் புகழ்ந்து பாராட்டி எழுதியுள்ளான்.
பேராசிரியர் பாராட்டுக்குரியவர் என்பதில் எனக்கு எந்த மறுப்புமில்லை.
ஆனால் ரகுபரன் எங்களோடு நெருக்கமாக இருந்த காலத்தில்,
பேராசிரியரின் இந்த நல்ல பக்கங்கள் பற்றி எம்மோடு பேசியதேயில்லை.
இன்னும் சொல்லப்போனால் அவர்தம் குறைகளையே அவன்,
பெரும்பாலும் எம்மோடு கலந்துகொண்டிருக்கிறான்.
பேராசிரியரைப் பற்றி மனதில் இத்தனை மதிப்பை வைத்துக் கொண்டு,
ரகுபரன் எம்மோடு அவரைக் குறை கூறி நடந்துகொண்டது,
எம்மைத் திருப்திப்படுத்துவற்காகவா?
அங்ஙனம் எங்களைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை என்ன?
அதே கட்டுரையில்,
'பேராசிரியர் கம்பன் கழகத்தை மறைமுகமாகத் தாக்கவும் செய்தார்.
இவ்வாறாக இருதிறத்தாரும் ஒருவரையொருவர் தாக்கும் செயற்பாடு,
இடையிடையே நிகழ்ந்தே வந்தது.
அதனால் பேராசிரியருக்கு என்னிடம் அதிகம் உவப்பில்லை.
அதுபோலவே கம்பன்கழகத்தார்க்கும் என்னிலே பூரண உவப்பில்லை.
ஆனால் யாரையும் யாரிடத்தும்,
நான் என்றும் அநியாயத்திற்கு விட்டுக்கொடுத்ததில்லை.'

என்று ரகுபரன் எழுதியிருக்கிறான்.
இச்செய்தியிலிருக்கும் பொய்மை கண்டு மனம் வருந்தினேன்.
ஒருநாள் கூட நானோ என்னைச் சார்ந்தவர்களோ,
பேராசிரியரோடு ரகுபரன் இணைந்து நடப்பது பற்றி விமர்சித்ததில்லை.
ஆனால் பேராசிரியருடனான தொடர்பில்,
கழகம் வருந்தியதாய் இவன் பொய்ம்மையாக எழுதியிருப்பது,
மிக வஞ்சனையான விடயம் என்றே கருதுகிறேன்.
பல்கலைக்கழகத்தாரைத் திருப்திப்படுத்தவும், 
தன்னை ஒரு நடுநிலையாளனாய்க் காட்டவும்,
எங்கள் மேல் பழி சுமத்திய அவனது போக்கு,
என்னை மிகவும் வெறுப்புக்காளாக்கியது.
அதுமட்டுமல்லாமல் ரகுபரன் எழுதிய,
'ஆனால் யாரையும் யாரிடத்தும்,
நான் என்றும் அநியாயத்திற்கு விட்டுக்கொடுத்ததில்லை'

என்னும்  கூற்றும் எனக்கு நகைப்பைத் தந்தது.
பேராசிரியரைப் பற்றி எங்களுடனான அவனது உரையாடல்,
எப்படி இருந்தது என்பது பற்றி அவன் மனச்சாட்சிக்குத் தெரியும்.
அவனது கல்வி முயற்சியில் நான் எடுத்துக் கொண்ட அக்கறை பற்றி,
நான் எழுதினால் அது அவனைச் சங்கடத்திற்கு ஆளாக்கும் என்பதால்,
அதனைத் தவிர்க்கிறேன்.
🚩  🚩  🚩

ரகுபரன் விலகிச் செல்லக் காரணம்

அதுவரை எங்களோடு ஒன்றாய்க் கலந்து நின்ற ரகுபரன்,
பதவி நோக்கில் தனக்குத் தனி அடையாளம் தேடத் தொடங்கினான்.
இவன் இப்படி மாறுவான் என்று நான் நினைத்ததே இல்லை.
எங்கள் சங்கமத்தில் தனது சுயம் இழக்கப்படுவதாய் உணர்ந்தான்.
ஏதேதோ காரணங்கள் சொல்லி,
மெல்ல மெல்ல எங்களிடமிருந்து விலகத் தொடங்கினான்.
கடம்பேஸ்வரனைப் போலவே இவனிடமும்,
கருத்து வெளிப்பாட்டு ஆற்றல் மிகக் குறைவாகவே இருந்தது.
அதனால் கம்பன் விழா நிகழ்ச்சிகளில்,
பெரும்பாலும் இவனை நான் சேர்த்துக் கொள்ளவில்லை.
சேர்த்துக் கொண்ட ஓரிரு நிகழ்ச்சிகளிலும் இவன் மிளிரவில்லை.
ஆனால் மேடை ஏறவேண்டும் என்ற விருப்பம்,
இவனுக்குள்ளும் இருந்திருக்கும் போல் தெரிகிறது.
பின்னாளில் வேறு அமைப்புக்களில்,
நன்றியுரை, வரவேற்புரை போன்ற நிகழ்ச்சிகளைக் கூட,
தன் தகுதியறியாது விரும்பி ஏற்றான்.
எங்களுடனான இவனது மனப்பிரிவு விதியின் விளையாட்டே!
ஆயிரந்தான் இவன் தூரப்போனாலும்,
இவன் திறமைகளைக் கழக முத்திரையிட்டே உலகம் இன்றும் பார்க்கிறது.
இன்று இவன் எங்களோடு அதிக நெருக்கமாய் இல்லை.
ஆனாலும், என் இதயத்தில் ஆழப்பதிந்தவர்களில் இவனும் ஒருவன்.
இன்று சுயம்தேடிச் சற்றுத் தூர நிற்கின்றான்.
என் மந்தையிலிருந்து பாதை மாறிச் சென்ற ஒரு வெள்ளாடு.
🚩  🚩  🚩

ஊரெழுக் கம்பன் கழகம் அங்குரார்ப்பணமும் 
திருவாசக விழாவும்
(20.01.1989)

ரகுபரனது தொடர்பால் ஊரெழுவில் ஒரு கம்பன்கழகம் அமைக்கப்பட்டது.
இக்கழகத்தின் அங்குரார்ப்பணமும்,
இக்கழகத்தின் சார்பாய் எடுக்கப்பட்ட திருவாசக விழாவும்,
1989 ஜனவரி 20, 21, 22 ஆகிய திகதிகளில் நடைபெற்றன.
மற்றைய இலக்கியங்களையும் படிக்கவேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாய்,
கம்பன் கழகத்தின் சார்பில் திருவாசக விழா எடுத்தோம்.
ஊரெழுவிலிருந்த ரகுபரனின் பெரிய வீட்டில்,
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட எல்லோரும் போய்த் தங்கினோம்.
விழாவை, ஊரெழு அம்மன் கோயில் அருகில் பந்தலிட்டு நடாத்தினார்கள்.
வித்துவான் வேலன், முருகையன், சுப்பிரமணிய ஐயர்,
சண்முகதாஸ், சோ.ப., சிவலிங்கராஜா, வேதநாதன், நாகேஸ்வரன்,
வித்துவான் குமாரசாமி முதலியோர்,
மூன்று நாட்களும் இவன் வீட்டில் ஒன்றாய்த் தங்கியிருந்தோம்.
சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி,
அவ்விழாவில் திருவாசகம் பற்றிய,
மிக அருமையான உரை ஒன்றினை நிகழ்த்தினார்.
பட்டிமண்டபம், கவியரங்கம், வழக்காடுமன்றம் எனப் பல நிகழ்ச்சிகளையும்,
இவ்விழாவில் நாம் நடாத்தினோம்.
விழாவில் கலந்து கொண்ட கூட்டம் குறைவெனினும்,
நிகழ்ச்சிகள் சிறப்புற நிகழ்ந்தன.
🚩  🚩  🚩 

தவில்மேதை என்.ஆர். சின்னராசா

இணுவிலைச் சேர்ந்த இவர் உலகம் போற்றிய தவில்மேதை.
ஈழத்தில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும்,
இவருக்கென ஒரு தனி மதிப்பு இருந்தது.
மகா வித்துவான் என்பதோடு,
தனித்த தலைமைப் பண்பும் கொண்ட,
ஓர் ஆளுமையாளராகவும் இவர் திகழ்ந்தார்.
தன்னினத்தைச் சார்ந்த வித்துவான்கள் அத்தனைபேருக்கும்,
ஒரு தலைவர்போல் வாழ்ந்தார். 
பெருமனிதர்கள் பலரையும் இவர் தன்வயப்படுத்தியிருந்தார். 
வித்தைச் செருக்குடையவர். 
எங்கள் கழகத்தின்மேல் தனித்த அன்பு கொண்டிருந்தார். 
ஆரம்பகாலத்தில் எங்கள் வளர்ச்சிக்காகப் பெரும் துணைபுரிந்தார்.
ஒரு நாட்பூராகவும் தனது மாணவரான,
தவில் வித்துவான் புண்ணிய மூர்த்தியுடன் இணைந்து,
எங்களையும் அழைத்துச் சென்று,
பல பிரமுகர்களிடம் பணம் சேர்த்துக் கொடுத்தார்.
(கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாய்கள்).
அந்த ஒருநாளில் அவரின் ஆளுமை கண்டு நான் வியந்திருக்கிறேன். 
அங்ஙனம் அவரோடு ஏற்பட்ட உறவு பின்னர் மேலும் நெருங்கியது. 
மற்றைக் கலைஞர்கள் பற்றி அக்கறையுடையவர்.
போர் நிகழ்ந்துகொண்டிருந்தபோது ஒருநாள், 
எங்கள் கோட்டத்திற்கு வந்து ஒரு மூடை அரிசி இறக்கினார். 
அரிசி தட்டுப்பாடான காலமது. 
'நீங்கள் தனிய இருக்கிறீங்கள்,
உங்களுக்கு உதவுமெண்டு கொண்டுவந்தனான்' என்று கூறிப்போனார்.
கடைசிக் காலத்தில் அவர் கடும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
அப்போது யாழில் புகழ்பெற்றிருந்த டாக்டர் சிவகுமாரிடம்,
மிகச் சிரமப்பட்டு அவரை அழைத்துச் சென்றேன். 
நலம் பெற்று மீண்டு வந்து, கண்ணீரோடு நன்றி சொன்னார். 
இணுவில் கந்தசாமி கோயிலுக்குப் பலதரம் என்னைப் பேச அழைத்து, 
முன்னிருந்து இரசிப்பார். 
மற்றை வித்வான்களின் தரம் பற்றி என்னோடு கலந்துரையாடுவார். 
இக்காலகட்டத்தில் அவர் மறைவு நிகழ்ந்தது. 
அவர் மரணச்சடங்கில் நானே தலைமையேற்று, கூட்டம் நடாத்தினேன். 
பொன். சுந்தரலிங்கத்தின் பகை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாயிற்று.
🚩  🚩  🚩

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்