'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 34 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩 🚩 🚩
வி.கே. கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி வெள்ளிவிழா (26.03.1989)

நாதஸ்வர வித்துவான்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்கள்,
தாம் இணைந்து வாசிக்க ஆரம்பித்த,
வெள்ளிவிழா நிகழ்வைக் கொண்டாட நினைந்து,
அவ்விழாவை நடாத்துவது பற்றி ஆலோசிக்க,
திரு. பொன். சுந்தரலிங்கம் அவர்களது இல்லத்தில்,
ஒரு கூட்டத்தினை நடாத்தினார்கள்.
அக்கூட்டத்தில் நானும், இணுவில் மகாதேவக் குருக்களும்  கலந்துகொண்டோம்.
கூட்டத்தின்போது விழா நடாத்துவது பற்றி,
வித்துவான்களோடு இனிமையாகப் பேசிவிட்டு,
கூட்டம் முடிந்து என்னை வீட்டிற்கு அழைத்து வரும்போது,
'இவங்கள் கரைச்சல் தருவாங்கள்.
இந்த விழா விடயத்தில் அதிகம் ஈடுபடவேண்டாம்' என,
எனக்கு பொன். சுந்தரலிங்கம் ஆலோசனை கூறினார்.
நான் மிகவும் சங்கடப்பட்டேன்.
சில காலம் அவ்விழா கிடப்பில் போடப்பட்டது.
சில காலத்தின் பின்னர் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்கள்,
என்னிடம் அவ்விழாவை நடத்தித் தரவேண்டும் என வேண்டிக்கொள்ள,
அவ்விழாவினைக் கழகமே பொறுப்பேற்று நடாத்தியது.
யாழ். கைலாசபதி அரங்கில் ஒரு பகற்பொழுது முழுவதும்,
இவ்விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. 
தன்னை மீறி விழா நடந்ததால்,
பொன். சுந்தரலிங்கம் மனதளவில் எங்களோடு பகை கொண்டார்.
அந்நாளில் புகழ் பெற்றிருந்த மூத்த நாதஸ்வரவித்துவானான,
என்.கே. பத்மநாதனையும் விழாவில் கலந்துகொள்ளாமல் தடுத்தார்.
ஒருவாறு அவ்விருவரையும் சமாளித்து விழாவினை நடாத்தி முடித்தோம். 
பின்னாளில் ஓர் ஆச்சரியம் நடந்தது.
யார் காரணமாக நாதஸ்வர வித்துவான் பத்மநாதனும், சுந்தரலிங்கமும்,
எங்களோடு பகைத்தார்களோ, அவர்களில் ஒருவரான பஞ்சமூர்த்தி,
அவர்களோடு சேர்ந்து நின்று,
எங்கள் கம்பன் விழாக்களில் சில காலம் கலந்து கொள்ளாததோடு,
மற்றைய வித்வான்களையும் 
கம்பன் விழாக்களில் கலந்து கொள்ளவேண்டாமென,
சுந்தரலிங்கத்தோடு சென்று தடுத்ததாய் அறிந்தபோது அதிர்ந்து போனோம்.
ஆனாலும் அப்பகை நிலைக்கவில்லை.
நாம் கொழும்பு வந்த பிறகு 
அவரின் உறவு அன்போடு மீண்டும் தொடர்கிறது.

🚩 🚩 🚩
கழகத்துடனான இசை வேளாளர்களின் தொடர்பு

ஆரம்பகாலம் தொட்டே, இசை வேளாளர்களுடனான,
எமது தொடர்பு மிக நெருக்கமாய் இருந்தது.
எங்களது விழாக்களைச் சிறப்பிக்க,
அவர்கள் தந்த ஆதரவினை நாம் என்றும் மறக்க முடியாது.
தமது இசையாற்றலை மட்டுமன்றி,
புகழையும் பொருளையும் கூட,
எமது கழக வளர்ச்சிக்காய் அவர்கள் பயன்படுத்தப் பின்னின்றதில்லை.
ஆரம்பகாலத்தில் யாழ். இந்துக் கல்லூரியில் நான் நடத்திய 
கதம்ப விழாவிற்கு,
அந்நாளில், புகழ்பெற்றிருந்த நாதஸ்வர வித்துவானான,
என்.ஆர். கோவிந்தசாமி அவர்கள்,
இனாமாக வந்து மங்கள இசை வாசித்தார்.
இவர் தவில் வித்துவான் என்.ஆர். சின்னராசாவினுடைய தமையனாவார்.
இவரது வாசிப்பு, தனித்தன்மையானது.
நாதஸ்வரத்தை அதிகம் அசைக்காமல்,
சங்கதிகளில் சற்றும் பிசகின்றி, துரித கதியில் மிக இனிமையாக வாசிப்பார்.
அக்காலத்தில் பல இடங்களில்,
என்னைச் சிபாரிசு செய்து பேச வைத்தவர் இவர்.
இவரது தம்பியாரான சின்னராசாவைப் பற்றி முன்னரே சொல்லிவிட்டேன்.
பின்னாளில், ஆண்டுதோறும் எங்கள் முதல்நாள் கம்பன் விழாக்களில்,
நாதஸ்வரம் இசைத்துத் தொடக்கி வைத்தவர்,
நாதஸ்வர வித்துவான் கே.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்.
நாம் யாழில் இருக்கும்வரையும் விழாவின் முதல் நாளில் 
அவர் வாசிப்பதென்பது,
கழகத்தில் ஒரு மரபாகவே பேணப்பட்டது.
இவரது தம்பியாரான தவில் வித்துவான் புண்ணியமூர்த்தி,
ஆரம்பகாலம் தொட்டே எங்களுக்குப் பேருதவி புரிந்து வந்தார்.
கழக விழாக்கள் என்று வந்துவிட்டால்,
தனது விழாவைப்போல எமக்கு இவர் துணைசெய்து பாடுபடுவார்.
அக்காலத்தில், பிரபலமாக இருந்த நாதஸ்வர வித்துவான்களுள்,
முதன்மையானவராகக் கருதப்பட்டவர் என்.கே. பத்மநாதன் அவர்கள்.
இவரும் எங்கள் கழகத்தில் மிகுந்த அன்பு பாராட்டினார்.
எங்கள் கழக விழாக்கள் அனைத்திலும் கலந்துகொண்டு,
எந்த உபகாரமும் எதிர்பார்க்காமல் வாசித்துச் சிறப்பிப்பார்.
பின்னாட்களில் பொன். சுந்தரலிங்கம் அவர்களின் சூழ்ச்சியால்,
எம்மோடு பகைத்து, எமது விழாக்களை நிராகரித்து நின்றார்.
நான் கொழும்பு வந்த பிறகு, கடும் நோயுற்று, 
தனியார் வைத்தியசாலையில் அவர் சேர்க்கப்பட்டிருந்தபோது,
அவரைச் சென்று பார்த்தேன்.
பேச முடியாத நிலையில், என் கைபிடித்துக் கண்ணீர் வடித்தார்.
அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம்.
சாந்தமும் அமைதியும் அடக்கமும் நிறைந்தவரான,
நாதஸ்வர வித்துவான் கே.எம். பஞ்சாபிகேசன் அவர்களும்,
அவர் புதல்வர்களான நாகேந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரும்,
எங்கள் கழகத்தில் பேரன்பும் மரியாதையும் வைத்துத் துணைபுரிந்தனர்.
எமது கழகத்தின் இசை விழா ஒன்றில் திரு. நாகேந்திரம் அவர்கள்,
தனது குருநாதரான அளவெட்டி எம்.பி. பாலகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து,
சிறந்ததொரு வாய்ப்பாட்டு நிகழ்ச்சியையும்  நடாத்தித் தந்தார்.
பின்னாளில், நாங்கள் இசை விழாக்களை நடாத்தத் தொடங்கியபோது,
எமது இசைப் பேரறிஞர் விருதினை,
முதன்முதலாக கே.எம். பஞ்சாபிகேசனுக்குத்தான் வழங்கினோம்.
இதேபோல, நாதஸ்வர வித்துவான் எஸ். சிதம்பரநாதன் அவர்களும்,
என்மேலும் கழகத்தின்மேலும் தனிப்பிரியம் காட்டி நின்றவராவார்.
அடிக்கடி உறவாய் என்னை வந்து பார்த்துச் செல்லும் மனிதர் இவர்.
நான் முன்னரே சொன்ன,
நாதஸ்வர வித்துவான்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களும்,
எமக்கு நிறையத் துணை புரிந்திருக்கின்றனர்.
ஈர்ப்புமிக்க அவர்களது இசையால்,
எமது கழக விழாக்கள் சிறப்புற்றிருக்கின்றன.
பின்னாளில், பஞ்சமூர்த்தியின் மைந்தனான குமரேஸ்,
எங்கள் இசைவிழாவில் வாய்ப்பாட்டுக் கச்சேரி நிகழ்த்தினான்.
வளர்ந்துவரும் இளம் வித்துவான்களில் ஒருவனான அவன்,
இன்றும் எமது கழகத்தின்மேல் அன்பும் மரியாதையும் கொண்டு,
எம்மோடு இணைந்து செயற்படுகிறான்.
நாதஸ்வர வித்துவான் அளவெட்டி எம்.பி. பாலகிருஷ்ணன் அவர்கள்,
சாகித்திய ஞானம் மிக்க சிறந்த கலைஞர்.
தன்னடக்கம் மிக்கவர்.
அதுபோலவே, என்.கே. பத்மநாதனுடன் நீண்டகாலம் இணைந்து வாசித்த,
நாதஸ்வர வித்துவான் கேதீஸ்வரன் அவர்கள் சிறந்த பண்பாளர்.
இசை ஞானம் மிக்கவர். தனித்து உயர்ந்திருக்கவேண்டியவர்.
ஆனாலும் தன் ஆயுளின் பெரும்பகுதியை, தனது குருநாதரான,
என்.கே. பத்மநாதன் அவர்களுடன் இணைந்து வாசிப்பதிலேயே செலவிட்டார்.
தன் குருவைச் சிறப்பிக்க, தன் ஆற்றலை தியாகம் செய்தவர்.
இவரும் எங்கள்மேல் பேரன்பு கொண்டு துணைபுரிந்து வந்தார்.
எங்களது நல்லூரிலேயே வாழ்ந்து வந்த நாதஸ்வர வித்துவானான,
பிச்சையப்பா அவர்கள்,
எங்கள் கழகத்தை இசையால் வளர்த்துப் பெருந்துணை புரிந்தவர்.
இன்றும் இவரது புதல்வர்களான ரவி, ரஜி சகோதரர்கள்,
தந்தையின் இடத்தை செம்மையுற நிரப்பி வருகின்றனர்.
இவர்களைத் தவிர, 
புகழ்பெற்ற வித்துவான்களான மறைந்த பி.எஸ். ஆறுமுகம்பிள்ளை,
கணேசபிள்ளை, கைதடி பழனி, குமரகுரு, நடராஜசுந்தரம், 
நித்தியானந்தன், காரை கணேசன் ஆகியோரும் 
எம்மோடு நெருக்கமாய் இருந்தனர்.
இளைய தலைமுறையைச் சேர்ந்த
சுதந்திரன், வாகீசன், மாத்தையா, ராமதாஸ், சித்தார்த்தன், பிரதித்தன்
போன்ற வேறுபலரும்,
எமது விழாக்களை அன்றுதொட்டு இன்றுவரை சிறப்பித்து வருகின்றனர்.
இவர்கள் எமது கழகத்தை தமது கழகமாகவே கருதி செய்து வரும் ஆதரவை எம்மால் மறக்க முடியாது.
1995இல் நாம் கொழும்பு வந்தபிறகு கொழும்பில் வாழ்ந்துவந்த,
ஆர்.வி.செல்வராஜா, ஆர்.ரவிசங்கர், எஸ். கபிலதாஸ், 
ஆர்.வி.எஸ். கமலஹாசன், ஆர்.வி.எஸ்.சூரியபிரசாத், ஆர்.வி.எஸ்.ஸ்ரீகாந், பா.சரண்ராஜ் போன்ற வித்துவான்கள் எமக்குச்செய்துவரும் 
உதவிகளையும் நம்மால் மறக்கமுடியாது.

🚩 🚩 🚩
இரண்டாந்தரம் பாண்டிச்சேரி கம்பன் விழா  (14.05.1989)

இக்காலகட்டத்தில் பாண்டிச்சேரி விழாவிற்கு மீண்டும் அழைப்பு வர,
கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு குழுவாக,
மறுபடியும் அவ்விழாவில் கலந்துகொண்டோம்.
இம்முறை சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும், 
நண்பன் மகாராஜா, முரசொலி சிவராஜா தம்பதியர் போன்றோரும்,
புதிதாய் எம்மோடு இணைந்து கொண்டனர்.
விழாவில் சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் உரை,
பலரும் பாராட்டும்படி அமைந்தது.
விழா முடிந்து திருச்சி வந்து சேலைக் கடையில்,
அம்மையாரும் மற்றைப் பெண்களுமாக சேலைகள் வாங்கிக் குவித்தனர்.
திரும்பி வரும்போது விமானம் கடுமையாய் ஆடத் தொடங்க,
அம்மையார் கண் மூடித் தேவாரம் படித்ததும்,
எனது நண்பன் மகாராஜா என் கையை இறுகப் பற்றிக்கொண்டதும்,
இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.
சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாருடன்,
நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பாய் இப்பயணம் அமைந்தது.

🚩 🚩 🚩
வித்துவான் க.ந. வேலன்

எங்களை வளர்த்தெடுத்தவர்களுள் இவர் மிக முக்கியமானவர்.
மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆசிரியராக இருந்த இவர்,
ஆரம்பத்திலேயே எங்களை இனங்கண்டு எங்கள்மேல் அன்பு காட்டினார்.
ஆளுமையுள்ள தமிழ்ப்புலவர். யாருக்கும் அஞ்சாதவர்.
தமிழிலக்கியங்களில் சுய பார்வையைச் செலுத்தும் கலையை,
எமக்குக் கற்றுத்தந்தவர்.
தமிழ்ப் புலவர்கள் மென்மையானவர்கள் எனும் கருத்துக்கு 
மாறாய் வாழ்ந்தவர். 
தன் தனிப்போக்கால் மற்றைத் தமிழ்ப் புலவர்களிலிருந்து 
வேறுபட்டு நின்றவர்.
சிறுமைகண்டு பொங்குபவர்.
எங்கள் வித்துவான் ஆறுமுகமும் சிவராமலிங்கம் மாஸ்ரரும் இவரும்,
ஒரே காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் கற்றவர்கள்.
அம்மூவருடைய நட்பும் ஆச்சரியமானது.
முரண்பட வேண்டிய இடங்களில் முரண்பட்டு,
உடன்பட வேண்டிய இடங்களில் உடன்பட்டு,
அன்பு சிதையாமல் நட்பைப் பேணியவர்கள் இவர்கள்.
யாழ். இந்துக்கல்லூரியில் நடந்;த எங்கள் கலை விழாவின்,
வழக்காடு மன்றத்தில் நாங்கள் பேசியது கேட்டு மகிழ்ந்து,
பெரிய ஆசிரியர்களுக்கு எதிராக,
எங்களுக்கு இவர் தீர்ப்புத் தந்தது பற்றிச் சொல்லியிருக்கிறேன்.
அன்றிலிருந்து அவருடனான உறவு தொடர்ந்தது.
என்னை உயிரினும் மேலாக நேசித்தார்.
அக்காலத்தில் மேடையை ஆட்கொண்ட பேச்சாளர்களில் 
இவருக்கே முதலிடம்.
கல்வி பற்றி விரிந்த எண்ணம் கொண்டிருந்தார்.
அவ் எண்ணத்தை எங்களுக்கும் தொற்ற வைத்தார்.
எல்லாரோடும் முரண்பட்டு நிற்பவர்.
வித்துவான் வேலனும் அவர் துணைவியாரும்,
எங்கள்மேல் காட்டிய அன்பை உயிருள்ளவரை மறக்கமுடியாது.
என் அறிவு வளர்ச்சி, சுய சிந்தனை, இலட்சிய வாழ்வு, தொடர் தேடல்,
உண்மைக் கடவுள் நம்பிக்கை, பாசாங்கற்ற வழிபாடு,
ஆகியவற்றுக்கு வழிகாட்டியதில்,
என் ஆசிரியர்களில் இத்தெய்வத்திற்கே முதலிடம்.
இரண்டாயிரமாம் ஆண்டளவில் லண்டனில் இவர் காலமானார்.
அவர் காலமான பின்பு, நான் எழுதிய 'வேலன் என்றொரு வேழம்' 
எனும் கட்டுரை 40ஆவது இயலில் உள்ளது.
அக்கட்டுரை நீங்கள் அவரை முழுமையாய்த் தரிசிக்க உதவும்.

🚩 🚩 🚩
சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி

நான் பேச்சுத்துறைக்குள் நுழையும் முன்பே,
என் மனதில் பக்திக்குரியவராய்ப் பதிந்தவர் இவர்.
ஒரு ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே,
தன் தனி வாழ்க்கையைத் துறந்து,
சமயச் சொற்பொழிவுகளை ஆலயந்தோறும் ஆற்றிவந்தார்.
அந்தக் காலத்தில்,
அம்மையாரின் சொற்பொழிவுகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது.
'சிவத்தமிழ்ச்செல்வி எங்கள் ஆலயத்திலும் பேசியிருக்கிறார்' என்று,
பலரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.
அக்காலத்தில், 
வேறு ஒரு சில பெண்மணிகள் ஆலயங்களில் பேசிவந்த போதும்,
இவரதும் திருமதி. வசந்தா வைத்தியநாதனதும் சொற்பொழிவுகளே,
பக்திக் கண்ணோட்டத்தோடும் மரியாதையோடும் பார்க்கப்பட்டன.
அருவிபோல் சிவத்தமிழ்ச்செல்வி பேசும் பேச்சு,
அழகுற அமைந்திருக்கும். ஆழம் நிறைந்திருக்கும்.
இவர், தமிழிலும் சமயத்திலும் நிறைந்த புலமை பெற்றிருந்தார்.
கொச்சைத் தமிழ் கலக்காமல் செந்தமிழில் தொடர்ந்து பேசுவார்.
அவரது பேச்சை அப்படியே எழுதினால்,
சிறந்த ஒரு கட்டுரையாக அது அமையும் என்று எண்ணுவேன்.
அவரை, யாழ்ப்பாணம் ஒரு சிவனடியாரைப் போலவே போற்றி வந்தது.

🚩 🚩 🚩
அம்மையாருடனான முதற் சந்திப்பு

யாழ். இந்துக் கல்லூரியில் நான் கலை விழாவினை நடாத்தியபொழுது,
அவ்விழாவில் அம்மையாரையும் பேச வைக்க வேண்டும் என விரும்பி,
அவரது சொந்த ஊரான அளவெட்டியில் அமைந்திருந்த,
இல்லத்திற்குச் சென்றேன்.
நான் போனபோது, நிலத்தில் இருந்தபடி,
'டிரெசிங் கவுனுடன்' அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்தார்.
அதுதான் அவருடனான எனது தனிப்பட்ட முதற்சந்திப்பு.
என் அழைப்பையேற்று வந்து பேசி விழாவைச் சிறப்பித்தார்.
நாம் விழா நடத்திய ஒழுங்கினைக் கண்டு,
என்மேல் மதிப்பும் அன்பும் பூண்டார்.
அதன்பின்பு, காணும்போதெல்லாம் என்மேல் அன்பு பாராட்டுவார்.
சேக்கிழார் விழா ஒன்றில் நான் பேசிய பின்பு,
அருகிருத்தி, 'உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று சொன்னவர்,
குரலைத் தாழ்த்தி, 'மச்சம் சாப்பிடுவீரோ?' என்று கேட்டார்.
நான் பொய் பேச விரும்பாமல், 'சாப்பிடுவேன் அம்மா!' என்றேன்.
அதை விட்டுவிடும் என்று சொல்வார் என 
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக,
அம்மையார், 'அது பரவாயில்லை, போகப்போக விடலாம்,
இப்ப உடம்பை வடிவாப் பாத்துக்கொள்ளும்' என்று,
ஒரு தாய்க்கே உரியதான அன்போடு,
அறிவு நிலைகளைக் கடந்து அவர் சொன்னது,
இன்றும் என் நெஞ்சில் பதிவாக இருக்கிறது.

🚩 🚩 🚩
ஆளுமைத் தலைவர்

பின்னர், அம்மையார் நாம் நடத்திய கம்பன் விழாக்கள் 
பலவற்றிலும் கலந்து,
உரையாற்றிச் சிறப்பித்தார்.
பிற்காலத்தில், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயிலின் தலைவராக,
பொறுப்பேற்றபின் அவரது நிலையே மாறிப்போயிற்று.
அதுவரை அவரது சொற்பொழிவுத் திறனைக் கண்டு வந்த யாழ்ப்பாணம்,
அவர் ஆலயத்தின் தலைவரானபின்,
அவரது நிர்வாகத் திறனையும் ஆளுமையையும் கண்டு வியந்தது.
ஆலயங்களை சமூகப் பணி நோக்கித் திருப்பி,
அவர் தனிப்பெருமை தேடிக்கொண்டார்.
தன் இல்லத்தைவிட்டு ஆலயத்தையே தன் இருப்பிடமாக்கினார்.
அவர் வந்து அமர்ந்ததும் ஆலயம் விறுவிறுவென வளர்ச்சி பெற்றது.
ஒரு காலத்தில் வெளவால் பிடித்துக்கிடந்த சிறு ஆலயம்,
கோபுரம், தீர்த்தம், தேர், முதியோர் இல்லம், மகளிர் இல்லம் என,
சிறப்புக்கள் பெற்று 'துர்க்காபுரம்' ஆகிற்று.

🚩 🚩 🚩
ஆலயத்தை சமூகம் நோக்கி நகர்த்தியவர்

ஆதரவற்ற குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும்
தன் ஆலய வரம்புக்குள் அணைத்து 
ஆதரவளிக்கத் தொடங்கினார் அம்மையார்.
உலகெங்கணும் இருந்து அவர் தொண்டுக்கு ஆதரவு குவிந்தது.
செல்வத்தைக் கண்டு அவர் அசையவே இல்லை.
இன்ப துன்பங்களைச் சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெற்றார்.
ஒரு முறை ஏதோவொரு இயக்கம் சார்ந்த கொள்ளையர்கள்,
ஆலயத்துள் புகுந்து அம்மையாரை மிரட்டி,
அவருடன் இருந்த சிவபாலன் போன்ற தொண்டர்களைக் கட்டிப்போட்டு,
ஆலய நகைகள் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
அன்றும் எதுவித அசைவுமின்றி அம்மையார் செயற்பட்டது,
என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஒரு வருட முடிவுக்குள் கொள்ளையடித்தவர்களே,
அத்தனை நகையையும் 
ஆலய எல்லைக்குள் மீளப் போட்டுச் சென்றார்கள்.
அச்செயல் அம்மையாரின் ஆன்மீக வாழ்வின் வெற்றியை,
உலகிற்கு எடுத்துக் காட்டியது.
கடும் போர் யாழ்ப்பாணத்தில் நடந்தபோது,
இராணுவ வரம்பாக இருந்த தெல்லிப்பழையில்,
அசையாது நின்று எல்லைக் காளியாய்க் காவல் செய்தார்.
ஒரு முறை விமானக் குண்டு வீச்சில் ஆலயம் சிதைவுற்று,
அவர் வளர்த்த ஓர் அநாதைக் குழந்தை இறந்துபோனதையறிந்து,
ஆபத்தான சூழ்நிலையிலும் அவரைக் காண ஓடினோம்.
கனத்த இதயத்தோடு ஒரு கல்லில் குந்தியிருந்து,
நடக்க வேண்டிய காரியங்களை,
உறுதியோடு செயற்படுத்திக் கொண்டிருந்த அவரைக் கண்டு,
நான் வியந்து, விறுவிறுத்துப் போனேன்.
அம்மையார் பற்றிய நினைவுப் பதிவுகள் பற்பல.
இவ்வளவு பெருமை மிக்க அம்மையார் எங்களைத் தாய்போல் நேசித்தார்.
ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்த பணம் தந்து உதவினார்.
எங்களோடு பாண்டிச்சேரிக் கம்பன் விழாவிற்கு,
ஒரு சாதாரண பெண்மணிபோல உறவு கொண்டாடி வந்து போனார்.
தனது பிறந்த நாளொன்றில், சமயப் பேச்சாளர்களில் ஒருவராய் என்னைக் கௌரவித்தார்.

🚩 🚩 🚩
சிறு முரண்பாடு

நாம் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்படும் முன்,
புலிகள் இயக்கத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டில்,
நடுநிலை நிற்கத் தவறினார் என்ற ஒரு குறைபாட்டைத் தவிர,
என் மனதில் பதிந்துள்ள அவர் பற்றிய எண்ணங்கள் எல்லாம்,மதிப்பிற்குரியவையே!
அந்நடுநிலை தவறுதலுக்குக் கூட,
பலபேர் கொடுத்த அழுத்தங்களே காரணம் என அறிந்து ஆறுதற்பட்டேன்.
கொழும்பு வந்தபின்கூட, அம்மையாரின் அன்பு முன்னர்போலவே குறைவின்றித் தொடர்ந்தது.
அதுபற்றிப் பின் எழுதுவேன்.

தொடரும்...
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்