'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 35 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
பிரபாகரனைச் சந்தித்தேன்

இது முக்கியமான சம்பவம்.
இந்திய இராணுவம் வெளியேறி,
ஒரு சில நாட்கள் கழிந்திருந்தன.
வன்னிக்காட்டிற்குள்ளிருந்து வந்திருந்த புதுவை அண்ணை,
எங்களைத் தேடி வந்து 
அன்பினைப் பொழிந்தார்.
ஒரு நாள் காலை,
திடீரென வந்த புதுவை,
'தயாராய் இருங்கோ உங்களை ஓர் இடத்திற்குக் கூட்டிச்செல்லப்போகிறேன்',
என்று மொட்டையாய்ச் சொல்லி விட்டுப் போய்விட்டார்.
சிறிது நேரத்தில் ஒரு வான் வந்தது, என்னோடு நின்ற ஜே.கி.ஜெயசீலன்,
தானும் வரப்போகிறேன் என்று பிடிவாதம் பிடித்து,
என்னுடன் வானில் ஏறிக்கொண்டான்.
வானுக்குள் கவிஞர் வில்வரத்தினம், பொன். சுந்தரலிங்கம்,
பண்டிதர் பரந்தாமன் போன்ற சில தெரிந்தவர்களும்,
பல தெரியாதவர்களும் இருந்தனர்.
வான் கண்ணாடிகள் மறைக்கப்பட்டிருந்தன.
எங்கெல்லாமோ சுற்றிய வான் ஓர் இடத்தில் வந்து நின்றது.
இறங்கும் போதுதான் அது எங்கள் கோட்டத்திற்கு அருகிலேயே இருந்த,
சிறீராம் சிவகுமார் அவர்களின் வீடு என்று தெரிய வந்தது.
நாம் உள்ளே அழைத்துச் சென்று இருத்தப்பட்டோம்.
உள்ளே ஏதோ ஒரு பரபரப்புக் காணப்பட்டது.
நாங்கள் இருந்த இடத்திற்கு முன்னால்,
ஒரு மேசையும், கதிரையும் போடப்பட்டிருந்தன.
திடீரென, பாதுகாவலர்கள் சூழ,
புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அங்கு வந்தார்.
கலை இலக்கியவாதிகளை அவர் சந்திக்க விரும்பியதாற்தான்,
நாம் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் எனும் உண்மை,
அப்போது தான் எமக்குத் தெரிந்தது.
சிறிது நேரம் அவர் எங்களுடன் உரையாடினார்.
பின்னர் எமது கருத்துக்களைக் கேட்க விரும்பினார்.
வந்தவர்களில் யாரும் பயந்து எதுவும் பேசவில்லை.
கவிஞர் வில்வரத்தினம் துணிந்து எழுந்து,
நடுநிலையாய்ச் சில கருத்துக்களைச் சொன்னார்.
பொன். சுந்தரலிங்கம் தனது கட்டிடத்திற்கு உதவும்படி
கேட்டுக்கொண்டார்.
சிறுகதை, கவிதை, நாவல் என, பிரபாகரனும் தனது கருத்துக்களை,
அவ் உரையாடலில் பகிர்ந்து கொண்டார்.
அடுத்து நான் எழும்பினேன்.
'நாங்கள் மரபிலக்கியத்தைப் போற்றுபவர்கள்.
போர்க்காலத்தில் அவ் இலக்கியங்களை வளர்ப்பது பற்றியும்,
மரபிலக்கியத்தில் உங்கள் ஈடுபாடு பற்றியும், 
சொல்ல வேண்டும்'
எனக் கேட்டேன்.
இலக்கிய முயற்சிகள் எதையும் வரவேற்பதாகச் சொன்ன அவர்,
சிறுவயதில் தான் மணி ஐயரின் இராமாயண, பாரதப் பிரசங்கங்களை,
விரும்பிக் கேட்டதாய்ச் சொல்லி,தனக்கு இராமாயணத்தை விட,
பாரத காவியம் தான் அதிகம் பிடிக்கும் என்றதோடு,
பீஷ்மர் தான் தனக்குப் பிடித்த வீரர் என்றுரைத்தார்.
எனக்குச் சங்கடமாய் இருந்தது.
'ஒரு குடும்பத்தின் சண்டையில், மூத்தவரான பீஷ்மர்,
சரி பிழை சொல்லி மற்றவர்களைத் திருத்தாமல்,
ஓரு அணிசார்ந்திருந்து போராடி மடிந்ததை எப்படிப் போற்றலாம்?'
என,
துணிந்து கேட்டேன்.
அங்கிருந்தவர்கள் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை.
பேச்சு, திசை திருப்பப்பட்டது. நான் கவனிக்கப்பட்டேன்.
ஜெயசீலனுக்கு பிரபாகரனைக் கண்டதில் தலைகால் தெரியாத மகிழ்ச்சி.
கெஞ்சிக் கூத்தாடி அவரோடு தானும் நின்று,
என்னையும் நிற்க வைத்துப் படமெடுத்துக் கொண்டான்.
பாவம் கடைசி வரை அப்படப்பிரதி அவன் கைக்கு வரவேயில்லை.
🚩 🚩 🚩

முதலாவது பி.எஸ்.நினைவுச்சொற்பொழிவு (19.01.1990)

யாழ். இந்துக்கல்லூரியின் அதிபராகவும், 
எமது கழகத்தின் போஷகராகவும் இருந்த,
பி.எஸ். குமாரசாமி அவர்கள் மறைந்து விட,
அவர் ஞாபகமாக கழகம் ஒரு நினைவுச் சொற்பொழிவுத் தொடரை,
நடாத்துவதென முடிவு செய்தது.
அம் முடிவின்படி முதல் நினைவுச் சொற்பொழிவு,
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில்,
1990 ஜனவரி 19 ஆம் திகதி நடைபெற்றது.
ஒரு வித்தியாசத்திற்காக,
மேற்குலகப்பாணியில் மேடையமைப்பு, நிகழ்ச்சிப் பங்கேற்பு என,
அனைத்தையும் செய்தோம்.
கழக உறுப்பினர்களும், தலைவர் உள்ளிட்ட விருந்தினர்களும் கூட,
மேற்குலகப் பாணியில் உடையுடுத்தி மேடையில் தோன்றினர்.
கழகம் ஓரளவு முக்கியத்துவம் பெற்றுவிட்ட காலம் இது.
பேராசிரியர் சிவத்தம்பியுடன் முன்பு ஏற்பட்ட பகை நீங்கும்பொருட்டு,
அவரையே அந்நினைவுச் சொற்பொழிவினையாற்றக் கேட்டுக்கொண்டோம்.
ஆச்சரியமாய் உடன்பட்டார்.
எமது வேண்டுகோளையேற்று, பட்டமளிப்புக் கவுனோடு பேச வந்தார்.
எங்கள் கழகத்தில் பேசுவதை எதிர்த்து,
அவருக்கு மாக்சியவாதிகள் பலரும் அழுத்தம் கொடுத்தனர்.
'கம்பன் கவியியல்' எனும் தலைப்பில் அன்று பேசினார்.
நல்லபடி பேசியவர் முடிக்கும்போது,
மரபாளர்களின் இரசனைப்பாணியைக் கிண்டல் செய்தார்.
மரபாளர்கள் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் படித்து ரசிப்பதை,
உண்பதை வாந்தி எடுத்து மீண்டும் உண்பது போன்றதாய் உவமித்தார்.
தன் ஆதரவாளர்களை திருப்திப்படுத்த அவர் செய்த முயற்சி அது.
அதனால் எம்முடனான பகையை மேலும் வளர்த்துக்கொண்டார்.
பின்னாளில் மீள் வாசிப்பு என 
மேற்குலகம் இதே பாணியை அறிமுகம் செய்ய,
அதனை உச்சிமேல் வைத்து உவந்தார்.
கடைசிவரை இவரது ஆழ்ந்த அறிவு, ஸ்திரத்தன்மை பெறவேயில்லை.
🚩 🚩 🚩

பாண்டிச்சேரிக் கம்பன் விழா
மூன்றாவது பயணம் (1990)

இவ்வாண்டில் மீண்டும் பாண்டிச்சேரி விழாவில் கலந்து கொண்டோம்.
இம்முறை பெரிய கூட்டமே எம்மோடு வந்தது.
பேராசிரியர் சண்முகதாஸ், பேராசிரியர் பாலசுந்தரம், 
விரிவுரையாளர் சிவலிங்கராஜா, தமிழருவி சிவகுமாரன், 
காரைநகர்க் கம்பன் கழகத் தலைவர் ஏகநாதன்,
கவிஞர் கல்வயல் குமாரசாமி என,
பலரும் இப்பயணத்தில் எம்மோடு இணைந்து கொண்டனர்.
சென்னை போய் இறங்கியபோது,
விமான நிலையத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு,
சிவகுமாரனுக்கும் ஏகநாதனுக்கும் மட்டும் கடுமையான சுங்கவரி விதித்தார்கள்.
அதனால் அவ்விருவரும் பெரிதும் தளர்ந்துபோக,
அந்த வரிப்பணத்தை எல்லோரும் பகிர்ந்து கொள்வோம் என,
சிவலிங்கராஜா பெருந்தன்மையாய்ச் சொல்லி என்மனதில் இடம் பிடித்தார்.
அப்படியே செய்தோம்.
பாண்டிச்சேரி கம்பன் கழகம்,
அனைவரையும் உபசாரத்தால் திக்குமுக்காடச் செய்தது.
உரிமையோடு அனைவரும் கம்பன்கழகத்தின் பெயர் சொல்லி,
நல் அனுபவங்களைப் புதுவையில் பெற்றுவிட்டு, 
விழா முடிந்து நாடு திரும்பிய போது,
பேராசிரியர் சண்முகதாஸிடம் படித்த சிலர்,
'கஸ்ரம்ஸ்' அதிகாரிகளாக நின்று அவரை வரவேற்றார்கள்.
அவ்வரவேற்பில் மகிழ்ந்து, 
கூட வந்த எங்களை, தனியே விட்டுவிட்டு,
பல்கலைக்கழகத்தார் மூவரும் வெளியே சென்றனர்.
அதனால் நாம், சற்று சங்கடப்பட்டோம்.
🚩 🚩 🚩

கம்பன் கோட்டம் மேற்தள வேலைகள் பூரணம் (1990)

1989 இல் பாண்டிச்சேரி விழாவுக்குச் சென்று திரும்புகையில்,
மீண்டும் 'மாணிக்கம் பிரதர்ஸ்' உரிமையாளரான,
சுருவில் மா. தவயோகராஜாவைச் சந்தித்தோம்.
கம்பன்கோட்ட மேல் மண்டப வேலைகள் நின்றிருப்பதை
நாம் எடுத்துச்சொல்ல,
அம்மண்டப வேலைக்கான முழுச்செலவையும் 
தவயோகராஜா ஏற்றுக்கொண்டார்.
மொத்தம் நான்கு இலட்சம் ரூபா கொடுத்தார்.
அவரது செயலால் இறைவனே எங்களை அங்கீகரிப்பதாய் உணர்ந்தோம்.
இனம் பற்றியும், மொழி பற்றியும் அதிக அக்கறையுள்ள மனிதர் அவர்,
செல்வத்தால் வரும் செருக்கு சிறிதும் இல்லாதவர்.
இன்னொரு நாள் அவரது இவ் இயல்புக்கான காரணத்தை கேட்டபோது,
இறக்கும் போது தன் தந்தை எழுதி வைத்துச் சென்ற 
கடிதம் ஒன்றைக் காட்டினார்.
பொருளால் ஒரு பயனும் இல்லை, தர்மம்தான் காக்கும் என்பதாய்,
ஒரு ஞானியின் கடிதம்போல் அக்கடிதம் அமைந்திருந்தது.
துளியளவும் விளம்பரம் இல்லாமல் தவயோகராஜா செய்யும் தர்மங்களுக்கு,
அவர் தந்தையிட்ட தர்ம வித்தே காரணம் எனத் தெரிந்து கொண்டேன்.
அவர் புண்ணியத்தில் கம்பன்கோட்ட மேல்மண்டப வேலைகள்,
1990 இல் ஓரளவு நிறைவுற்றன.
முழுமையாய் அதை முடிப்பதற்கு முன்பு,
மீண்டும் யுத்தம் வெடித்தது.
நாம் கொழும்பு வந்த பிறகு இவரோடு சிறு முரண்பாடு ஏற்பட்டது.
அதுபற்றி, கொழும்புக் கழக அனுபவங்களை எழுதும்போது 
பின்னர் எழுதுவேன்.
முரண்பட்ட இன்றைய நிலையிலும்,
கழகத்தார்க்கு அவர்மீதான மதிப்பு அப்படியே இருக்கிறது.
🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்