'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 37 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

🚩 🚩 🚩
புலிகளின் மாத்தையாவைச் சந்தித்தோம்

இவ் இடைக்காலத்தில்,
கிட்டு கால்களை இழந்து இந்தியா சென்றுவிட, புலிகளின் தளபதியாய் மாத்தையா பொறுப்பேற்றிருந்தார்.
அவரோடு எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கவில்லை.
ஒருநாள் புதுவை என்னையும், திருநந்தகுமாரையும்,
மாத்தையாவிடம் அழைத்துச் சென்றார்.
திருநெல்வேலியில் இருந்த அவர்களது அலுவலகத்தில்,
அவரைச் சந்தித்தோம்.
எங்களை அழைத்துச் சென்ற புதுவை.
உள்ளே வராமல் வெளியிலேயே நின்றுவிட்டார்.
தனது உதவியாளரை வைத்துக் கொண்டு மாத்தையா எங்களோடு பேசினார்.
போராட்டத்தை விட,
மக்கள் ஆலயங்களில் அதிக அக்கறை காட்டுவதாய்க் குறைபட்டார்.
நாங்கள் மக்களைப் போராட்டம் நோக்கித் திருப்ப வேண்டும் என,
கேட்டுக்கொண்டார்.
அவரிடம் விடைபெற்றுத் திரும்பினோம்.
பின்னர் 1992 இல் ஆதீனத்தில் நடைபெற்ற எமது கம்பன் விழாவிற்கு,
தமது இயக்கச் சீருடையுடன் வந்து கலந்து கொண்டார். 
🚩 🚩 🚩

பூபாலசிங்கம்  ஸ்ரீதரசிங், ராஜன்

இக்காலகட்டத்திற்தான் பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர்களான,
திரு. ஸ்ரீதரசிங் அவர்களும், அவர் சகோதரர் இராஜன் அவர்களும்,
எம்மோடு நெருங்கிப் பழகத் தொடங்கினர்.
கழக முயற்சிகள் பலவற்றிற்குப் பொருளுதவி செய்தது மட்டுமன்றி,
கழகத்தாருடன் சகோதரர்களாகவே இவர்கள் அன்பு செய்தனர். 
இவ்விருவர் மட்டுமன்றி அவர்கள் குடும்பத்தார் முழுப்பேருமே,
எமக்குத் துணையாய் இருந்தனர்.
அவர்களது தாயார் என்னால் மதிக்கப்படுபவர். 
இவ்விருவரது துணைவியரும்,
என்மேலும் கழகத்தின்மேலும் என்றும் அன்பு செலுத்துபவர்கள்.
கொட்டடியில் இருந்த இவர்கள்,
பின்னர் நல்லூருக்கே குடிவந்தனர்.
அதன்பின்பு இவர்கள் உறவு மேலும் நெருங்கிற்று.
ஸ்ரீதரசிங் 1992 இல் கொழும்பு சென்றுவிட,
இராஜன் தமையனார் இடத்தையும் நிரப்பி எங்களுக்கு ஆதரவு செய்தார். 
1995 இடப்பெயர்வின்போது இராஜன் குடும்பமும் நாமும்,
ஒன்றாகவே கொழும்பு வந்தோம். 
1995 இடப்பெயர்வின்போது,
சாவகச்சேரியிலிருந்து நாங்கள் கொழும்பு புறப்பட்டோம்.
அப்போது கொழும்பு செல்வதானால் வவுனியா இராணுவ முகாமில்,
நாம் செல்லும் இடத்தின் முகவரி கொடுக்க வேண்டும்,
அப்போது எங்களுக்குக் கொழும்பில் யாரும் இல்லாததால்,
கொழும்பு வர ஸ்ரீதரசிங்க் அவர்களின் முகவரியையே கொடுத்தோம்.
அதனால் எங்களோடு அவரையும் கைதுசெய்து, பின் விடுவித்தனர்.
அதுபற்றிப் பின்னால் விபரமாய் எழுதுகிறேன்.
எங்களாhல் துன்பம் ஏற்பட்டபோதும்,
எங்கள் உறவைத் துன்பமாய்க் கருதாத,
அவர்கள் பண்பால் ஈர்க்கப்பட்டேன்.
இன்றுவரை அவர்களது உறவும் அன்பும் குன்றாமற் தொடர்கின்றன. 
அவர்கள் வீட்டைப் பொறுத்தவரை நானும் ஓர் உறுப்பினன்தான்.
🚩 🚩 🚩

சித்திரக் கதவுத் திறப்பு (22.07.1991)

1985 இல் நாங்கள் கம்பன் கோட்டம் அமைக்கத் தொடங்கியிருந்தபோது,
எங்களோடு இணைந்திருந்த கவிஞர் புதுவை இரத்தினதுரை,
கம்பன் கோட்டத்தின் முன் வாயிற்கதவை,
தன் கையாலேயே செய்துதர விரும்பினார்.
சிற்பக் கலைஞரான அவரது கைவண்ணத்தில்,
அக்கதவு உருவாகத் தொடங்கியது.
அவரும் அவர் உறவினரான முத்துக்குமாரும்,
அக்கதவுக்கான ஆயத்தவேலைகளைச் செய்தனர்.
1986இல் புதுவை இரத்தினதுரை அவர்கள் இயக்கத்திற்குச் சென்றுவிட,
அக்கதவு வேலை கைவிடப்பட்டுக் கிடந்தது.
இடைக்காலத்தில் அக்கதவினைச் செய்துமுடிக்கும் பொறுப்பினை,
திருநெல்வேலி செல்வராஜா ஆசாரியிடம் கொடுத்தோம்.
அவர் புதுவை செய்திருந்த கதவுப் பலகையில்,
பெயருக்கு வேலையைத் தொடங்கிவிட்டு,
மூன்றாண்டுகள் அவ்வேலையை முடிக்காமல் இழுத்தடித்தார்.
பின்னர், அவரிடமிருந்து பலவந்தமாகப் பலகைகளை வாங்கிவந்து,
சாவகச்சேரி கலாமோகன் ஆசாரியிடம் ஒப்படைத்தோம்.
அவரும் ஓராண்டுக்குமேல் 'இன்று தருகிறேன், 
நாளை தருகிறேன்'
என்று இழுத்தடித்தார்.
ஓராண்டு முடிவில், நான் நெருக்கடி கொடுக்க,
வேலை முடிந்து விட்டது, நாளை அனுப்புகிறேன் என்றார்.
எனக்கு அவரது வாக்கில் நம்பிக்கை வரவில்லை.
காரை எடுத்துக்கொண்டு அடுத்தநாள் 
அவரது பட்டறைக்குச் சென்றேன்.
அங்கு நான் கொடுத்த பலகைகள் 
தொட்டும் பார்க்காமல் அப்படியே கிடந்தன.
கடுமையாகக் கோபித்துவிட்டு பலகைகளை மீண்டும் எடுத்து வந்தேன்.
ஆறு வருடங்களின் பின்தான் அவ்வேலையை முடிக்க முடிந்தது.
சிற்பாச்சாரியர்களான திருநெல்வேலி கணபதிப்பிள்ளையும்,
அராலி சிவசுப்பிரமணியமும் அப்பொறுப்பை ஏற்று,
அவ்வேலையைச் செய்யத் தொடங்கினர்.
அவர்களும் தாமதம் செய்வார்கள் என்று தெரிந்தது.
ஒரு குறித்த திகதி வைத்தாலன்றி அவ்வேலை முடியாது என்பதற்காக,
'சித்திரக்கதவம் திறப்பு விழா' என ஒரு விழா அமைத்து,
அழைப்பிதழ் அடித்தோம். 
அவ்விழா 1991 ஜுலை 22 இல் நடைபெற்றது. 
இந்நிகழ்விலும் சிவத்தமிழ்ச் செல்வி, 
ஆணையாளர் சீ.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட,
கழக அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவன்றுதான்,
பின்னாளில் தன் சிற்பக்கலை வண்ணத்தாலும் 
கொடைத்தன்மையாலும்,
பலவிதத்திலும் எனக்கும் கழகத்திற்கும் துணைசெய்த,
திருநெல்வேலி ஆறுமுக சிற்பாலய அதிபர்,
சீவரத்தினம் என்னோடு தொடர்புபட்டார்.
அவர்பற்றிப் பின்னர் சொல்லியிருக்கிறேன்.
🚩 🚩 🚩

நல்லூர் உற்சவ இசையரங்கு 
(ஆக.24-செப்.09.1991)

இவ்வரங்கு 1991 ஓகஸ்ட் 24 தொடக்கம் செப்ரெம்பர் 9 வரை நடைபெற்றது.
நல்லூர் பத்தாம் திருவிழாவிலிருந்து இந்நிகழ்வுகளை ஒவ்வொருநாளும்,
எமது கம்பன்கோட்ட மேல்மண்டபத்தில் நடாத்தினோம்.
யாழின் பிரபல இசைக்கலைஞர்கள்,
தினம் ஒருவராய் இந்நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
சங்கீத வித்துவான்களான எஸ்.பாலசிங்கம், 
எஸ்.சிவானந்தராஜா, ஐ. வேலாயுதபிள்ளை,
வி.கே. குமாரசாமி, கே.ஆர். நடராஜா, 
திருமதி தனலஷ்மி கணநாதலிங்கம்,
எஸ். கணபதிப்பிள்ளை, திருமதி மேரி சரோஜா ஜஸ்டின்,
டாக்டர் ரி. கங்காதரன், செல்வி பரமேஸ்வரி கணேசன், 
வி.கே. நடராஜா, செல்வி கனகாம்பரி பத்மநாதன்,
செல்வி நாகம்மா கதிர்காமர், வ. பரமசாமி, 
எஸ். குமாரசாமி, நா.வி.மு. நவரத்தினம்,
பொன். சுந்தரலிங்கம், எல். திலகநாயகம்போல், 
எஸ். பத்மலிங்கம், உ. இராதாகிருஷ்ணன் ஆகியோரோடு,
இசைவேளாளர்களான கே.ஆர். சுந்தரமூர்த்தி, என். கேதீஸ்வரன்,
பி.எஸ். ரஜி, வி.கே. கானமூர்த்தி, வி.கே. பஞ்சமூர்த்தி,
என்.கே. பத்மநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 
இந்நிகழ்வை ஒழுங்கு செய்வதில்,
எம்மோடு உடன் நின்ற திரு. பத்மலிங்கம் அவர்கள்,
எங்களோடு சேர்ந்து நிகழ்ச்சி நிரல் போட்டுவிட்டு,
பின்னர் மூத்த கலைஞர்களிடம்,
'உங்களுக்குத் தந்த நேரம் போதாது, 
நீங்கள் அங்கு பாடவேண்டாம்'
என,
தனியே அவர்களைச் சந்தித்துத் தூண்டிவிட்டார்.
அதனால் பாடச் சம்மதித்த கணபதிப்பிள்ளை, பாலசிங்கம் முதலியோர்,
பாட மறுத்து எனக்குக் கடிதம் அனுப்பினர்.
பின் நான் அவர்களுடன் வாதிட்டு, 
நிகழ்ச்சியில் அவர்களைப் பாடவைத்தேன்.
இந்நிகழ்வில் கணபதிப்பிள்ளை அவர்களின் கச்சேரி உச்சம் தொட்டது. 
🚩 🚩 🚩

அனுபவம் தந்த பாடம்

அக்காலத்திலேயே பொன். சுந்தரலிங்கத்தின் எதிர்ப்பும் தொடங்கிவிட்டது.
எமது நிகழ்வில் பாடச் சம்மதித்த,
மூத்த கலைஞரான நாகேஸ்வரி பிரமானந்தா அவர்கள்,
சுந்தரலிங்கத்தின் தூண்டுதலால், நிகழ்வில் பாடாது விட்டார்.
நிறைவுநாள் நிகழ்ச்சியில்,
என்.கே. பத்மநாதன், இராதாகிருஷ்ணன் ஆகியோர்,
இணைந்து வழங்கிய கெஞ்சிற் கச்சேரியன்று கூட்டம் நிரம்பிவழிந்தது.
ஆட்களை வெளியே பிடித்துத் தள்ளி, 
வாசற் கதவைப் பூட்டவேண்டி வந்தது. 
விழாக் காண வந்தோரை அங்ஙனம் செய்யவேண்டி வந்ததால், 
பெரிதும் வருத்தமுற்றோம்.
இதன் பின்னர், சிலகாலம் மெல்ல மெல்ல எமக்கு இறங்கு முகம் ஏற்பட்டது.
தேடிவந்த இரசிகர்களைத் துரத்திய குற்றத்தாற்தான்,
அவ்விறங்கு முகம் ஏற்பட்டதோ என, பின்னர் கலங்கினேன்.
அதை ஒரு பாடமாகக் கொண்டு,
கம்பன் விழாவிற்கு வரும் இரசிகர்களோடு,
மிக மரியாதையாய் நடந்து கொள்ள வேண்டும் என்பதை,
கழக உறுப்பினர்களுக்குப் பின்னர் கட்டளையாக இட்டிருந்தேன்.
இந்நிகழ்விற்தான் மிருதங்க வித்துவான்களான,
க. கண்ணதாசன், எஸ். துரைராஜா, வேல்மாறன்,
வயலின் வித்வான்களான எஸ். கேசவமூர்த்தி, 
பா. கண்ணன், இரா. சிவராமன், பாக்கியலஷ்மி நடராஜா ஆகியோர்,
கழகமேடையில் முதன்முதலாய் ஏறினர்.
🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்