'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 44 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦


🚩 🚩 🚩
கவிஞர் நாவண்ணனின் தியாகம் 

இக்காலத்தில் சிலரின் தூண்டுதலால்,
விடுதலைப்புலிகள் இயக்கம் கழக நிகழ்ச்சிகளைப் பகிஷ்கரித்தது. 
புதுவை கூட இவ்விழா நிகழ்ச்சிகளில் பங்குபெறவில்லை.
இவ்விழாவின் ஓரிரு நாட்களின் முன்னர்தான்,
கவிஞர் நாவண்ணனின் மகள் தற்கொலை செய்து இறந்து போனாள்.
அத்துயரையும் தாங்கிக் கொண்டு கவியரங்கத்திற்கு வர நாவண்ணன் சம்மதித்தார்.
கம்பன் கழகத்துக் கவியரங்க நிகழ்ச்சியில், 
அவர் அவ்வளவு மதிப்பு வைத்திருந்தார்.
சோ.ப. விற்கு, கார் அனுப்பாத நான்,
நாவண்ணனிற்கு அவர் கேட்காமலே கார் அனுப்பி.
கவியரங்கத்திற்கு வரவழைத்தேன்.
அன்று தனது துயரைப் பொறுத்துக்கொண்டு,
மற்றவர்களைச் சிரிக்க வைத்து நாவண்ணன் கவிதை பாடியதை மறக்க முடியாது.

🚩 🚩 🚩

ஸ்ரீ. பிரசாந்தன்

1992 இல் கம்பன் கழகத்தில் இணைந்தவன் இவன்.
யாழ். இந்துக் கல்லூரியில் நடந்த ஒரு பேச்சுப்போட்டியில்,
இவன் பேசியதைப் பலரும் பாராட்டிச் சொல்ல,
இவனைக் கழக நிகழ்ச்சியில் மேடையேற்றினோம். 
அற்புதமாய்ப் பேசி, மேடையிலேயே பேராசிரியர் நந்தியால்,
'குட்டி ஜெயராஜ்' எனப் பாராட்டப் பெற்றான்.
பின் கழகத்தில் முழுமையாய்க் கரைந்தான்.
க.பொ.த. உயர்தரத்தில் கணித மாணவனாய் இணைந்து,
முதற் தவணையில் சிறந்த புள்ளிகள் பெற்றிருந்தும்,
பிடிவாதமாய் வீட்டிலும், கல்லூரியிலும் போராடி,
இந்துக் கல்லூரியில் கலை மாணவனாய் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
அங்ஙனம் இவன் செய்யாதிருந்திருந்தால்,
இன்று இவன் ஒரு எஞ்ஜினியராய் இருந்திருப்பான்.
பணிவு, அன்பு, விசுவாசம் என்பவை இவனுக்கு இயல்பாய் வாய்த்திருந்தன.
கொஞ்சம் கொஞ்சமாக, கழகத்தின் முழு விசுவாசியானான்.
1995 இல் இவனைக் கழகத்தின் புதிய அமைப்பாளராய் ஆக்கினோம்.
கழகத்தில் இணைந்த பின்பு முழுமையாய் அதற்காய்ப் பாடுபட்டவன் இவன்.
இவனது தாய்வழிப் பேரன் கோப்பாயில் புகழ் பெற்ற மனிதராய்த் திகழ்ந்தார்.
இவனது முன்னோர் மலேசியாவிலும், இலங்கையிலும்,
பல கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவர்கள்.
பின்;னர் ஏ.எல். பரீட்சையில் வட மாகாணத்தில்,
கலைப் பகுதியில் முதல் மாணாக்கனாய் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
கழகத்தில் இணைந்த பிறகு எனது பிள்ளையாகவே இயங்கி வருகிறான்.
எல்லோரோடும் இனிய வார்த்தை பேசி அன்பு செய்பவன்.
எல்லோர்க்கும் உண்மையாய் நடக்க நினைப்பவன்.
ஆழ்ந்த அறிவுப் பார்வை உடையவன்.
தனக்குக் கிடைத்த பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பை,
தனது நண்பன் மணிமாறனுக்காய் விட்டுக்கொடுக்க நினைத்தான்.
அப்போது இவனை நான்தான் தடுத்தாட்கொண்டேன்.
அதனால் மணிமாறனுக்கு இப்போதும் என்மேல் கோபம்.
எங்களால் பல பாதிப்புக்கள் தனிவாழ்வில் ஏற்பட்ட போதும்,
கழகத்தின்மேலும், என்மேலும் என்றும் உண்மை அன்பு செய்தான்.
பின்நாளில் எஸ்.எல்.ஏ.எஸ். பரீட்சையில் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
அதன் பின்னர் நடைபெற்ற எஸ்.எல்.ஈ.எஸ் பரீட்சையில்,
இலங்கையில் முதல் மாணவனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
அரச அதிபர், அமைச்சின் செயலாளர் போன்ற பதவிகள்,
கிடைக்கும் வாய்ப்பிருந்தும்,
பல்கலைக்கழகப் பதவி நிரந்தரம் இல்லாதிருந்த வேளையில் கூட,
தமிழ் கற்பிக்கும் ஆசையில் அவற்றைத் துறந்தான்.
அத்தகு ஆர்வம் மிகு மாணவனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைகள்,
தவமாய்க் கருதி ஈர்க்காமல் தள்ளி வைத்திருந்தன.
இன்று இந்தியா சென்று கலாநிதிப் பட்டம் பெற்று வந்துவிட்டான்.
கழகத்தில் ரகுபரனுக்குப் பின்னர்,
கழக நூல் முயற்சிகள் அனைத்தையும் முன்னெடுத்தவன் இவனே.
பேச்சாளன், நல்ல கவிஞன். 
எல்லோராலும் விரும்பப்படுபவன்.
2010 இவனுக்குத் திருமணம் நடந்து இன்று,
இரு குழந்தைகளுக்குத் தந்தையாகியிருக்கிறான்.
அறிவுலக விடயங்களில் இவனோடு ஆலோசிக்காமல்.
நான் எதையும் செய்வதில்லை.
தனக்குப் பிடிக்காவிட்டாலும்,
வெளிப்படையாய் என் கருத்தோடு முரண்படமாட்டான்.
முகக் குறிப்பால் இவன் முரண்பாட்டை அறிவேன்.
வித்துவான் வேலனுக்கும், எனக்குமான உறவும் இங்ஙனம்தான் இருந்தது.
என்னைத் தனது ஆதர்ஷ வழிகாட்டியாய் ஏற்றுக்கொண்டவன்.
எந்த முக்கிய முடிவையும் என்னோடு ஆலோசிக்காமல் எடுக்கமாட்டான்.
மனக்கட்டுப்பாட்டிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்து நிற்பவன்.
எனக்குப் பிள்ளைபோல் ஆனவன் அல்லன்.
பிள்ளையே ஆனவன்.
அளவுக்கதிகமான இவனது சாத்வீக இயல்பு,
சில வேளை எனக்கு எரிச்சல் தருவதுண்டு.
இளமையில் இருந்த இவனது அறிவுவேகம்,
இப்போது குறைவுபடுவதாய்த் தெரிவதால் கவலையோடிருக்கிறேன்.
பல்கலைக்கழகப் பதவியும், பட்டமும்,
இவனிடமும் பொய்மையை வளர்த்துவிடுமோ எனும் அச்சம்.
என் உள்ளத்துள் துளிர்க்கத் தொடங்கியிருக்கிறது.
உலகியல் சாதுரியத்தில் மிகப் பலவீனனாய் இருக்கிறான்.
தனி உறவுகளைப் பேணும் அளவு,
சமூகத் தொடர்பைப் பேணாதது இவனது குறை.
கல்வி முயற்சிகளிலும், அறிவுத் தேடலிலும், அவற்றின் வெளிப்பாடுகளிலும்,
இவன் இன்னும் வேகப்பட வேண்டும் என்பது என் கருத்து.
பட்டம் பதவிகளை நோக்கிய பொய்மைப் பாராட்டுகளால்,
நம் சமூகம் இவனைப் பலவீனப்படுத்தப் பார்க்கிறது.
அதற்கு இவனும் பலியாகிவிடுவானோ என அஞ்சி நிற்கிறேன்.
'கழகத்தில் எனக்குப் பின் இவனே' என்ற சமுதாயத்தின் எதிர்பார்ப்பை,
இவன் பூர்த்தி செய்வானா?- தெரியவில்லை.
பாலமை தவிர்த்துத் தேவையான இடங்களில்  ரௌத்திரம் பயின்று,
ஆளுமையைத் திறம்பட வளர்த்துக்கொண்டு,
தன்னைத்தான் முழுமையாய்த் தெரிந்து கொள்வானானால்,
இவனால் அறிவுலகும், நம் சமூகமும் பெரும் பயன் பெறும்.
'சாதனை செய்க பராசக்தி'
எனது சாத்வீக குண விம்பமாய் இவனைச் சொல்லலாம்.

🚩 🚩 🚩

த. சிவசங்கர்

1993 கவிதைப்போட்டியில் கலந்துகொண்டவன் இவன்.
ஆற்றலோடு கவிதை செய்தான்.
நடுவர்களாய் செயலாற்றிய கவிஞர் முருகையன், கல்வயல் குமாரசாமி
ஆகியோர் இவனுக்கு முதற்பரிசு கொடுக்க மறுத்தனர். 
எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனாலும் இவனது திறமையை இனங்கண்டு கம்பன் விழா மேடையில்,
கவியரங்கில் இவனை ஏற்றினோம். 
அத்தொடர்பு பின்னர் அன்பாய் வளர்ந்தது. 
இவன் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன்.
தமிழார்வமும் அறிவும் இவனிடம் இயல்பாய் அமைந்திருந்தன.
தமிழ் ஆர்வத்தைத் தாயிடமும், அறிவைத் தந்தையிடமும்,
சொத்தாய்ப் பெற்ற பொறுப்புள்ள பிள்ளை.
பெற்றோரால் நல்வழியில் வளர்க்கப்பட்டவன்.
உண்மையானவன், முன்கோபி, செலவாளி.
நடைமுறைப்படுத்தும் ஆற்றல் இல்லாவிட்டாலும்,
எதிர்காலம்பற்றி நிறையக் கற்பனை செய்வான்.
அப்போது விஞ்ஞான மாணவனாய் யாழ். பல்கலைக்கழகத்தில் இணைந்திருந்தான்.
பின்னர் கழகப் பிள்ளைகளில் ஒருவனானான்.
நவீன உலகத்தோடு தமிழைச் சமன் செய்ய வேண்டும் எனும்,
எனது விருப்போடு ஒத்துப்போபவன்.
மேற்காரணங்கள் அவனை எங்களோடு நெருங்கி உறவாட வைத்தன.
பின்னர், 1995 இல் கழகத்தின் புதிய தலைவராய்ப் பொறுப்பேற்றான்.
தலைமைக்குரிய ஆளுமை அவனிடம் நிறைய இருந்தது. 
1995 இடப்பெயர்வின்போது கொழும்பு வந்து,
கணினித்துறையில் ஈடுபட்டு மதிப்புச் சேர்த்தான்.
பின்னர் நடந்த கொழும்பு விழாக்கள் அனைத்திலும்,
முன்னின்று உழைத்தான்.
கழகத் தலைவனாய் இவன் விழா மேடைகளை இயக்கும் ஆற்றல் கண்டு 
பலரும் வியப்பர்.
அந்தச் செயற்பாட்டின் மூலமே,
தனக்குப் பல இரசிகர்களைத் தேடிக்கொண்டவன் இவன்.
கொழும்பில் என் திருக்குறள் வகுப்பு மாணவியான சிவதேவியை,
பல பிரச்சினைகளைச் சமாளித்து என் நெறிப்படுத்தலில் பின்பு திருமணம் செய்தான்.
சமூக அக்கறையோடு செயற்பட்ட இவனும்,
மற்றவர்மேல் அன்பைப் பொழிந்த சிவதேவியும் ஒன்று சேர்ந்தால்,
இவனது வீடு மட்டுமன்றி, கழகமும் சமூகமும்.
பெரும் பயனெய்தும் எனக் கருதினேன்.
இவனது திருமண விடயத்தில் மூளையால் நிறையக் கணக்குப் போட்டேன்.
ஆனால், அக்கணக்குகள் எல்லாம் பெரும்பாலும் பிழைத்துப் போயின.
தொழில், வாழ்வு, உறவு எனப் பல திசை ஈர்ப்புகளாலும்,
உலகியலோடு சமரசம் செய்து கொள்ள வேண்டி,
இவனது வீடு தந்த நெருக்கடியாலும்,
இவனால் தமிழ்த்துறையில் முழுமையாய் ஈடுபட முடியாமற் போயிற்று.
ஈடுபட்டிருப்பின், தமிழ்த்துறை ஆளுமைமிக்க, 
ஒரு வலிமையான கவிஞனை, பெற்றிருக்கும். 
சிக்கலான விடயங்களை,
அறிவார்ந்து சிந்திக்கும் எனது சங்கமத்தில் இவனும் ஒருவன்.
தேசத்தின் எதிர்காலம்பற்றி உணர்வுபூர்வமாய்ச் சிந்திப்பான்.
பொய்க்கலப்பில்லாதவன்.
சிறுமை கண்டு பொங்குவான்.
அவற்றைத் தீர்க்க விரிவாய்த் திட்டமிடுவான்.
பின், தனி வாழ்வின் வெற்றி நோக்கிய முயற்சியில் அவற்றை மறந்து போவான்.
இது இவனது குறை.
புறத்தில் தன்கருத்தை உறுதிபடப் பதிப்பதில்,
உறுதியும் ஆவேசமும் கொண்டு செயற்படும் இவன்,
அகத்தில் அதனைச் சாதிக்க முடியாது தத்தளிப்பான். 
எதிரிகளின் முன் இவன் வீரன்.
உறவுகளின் முன் இவன் கோழை.
அதுவும் அவன் அன்பின் வெளிப்பாடே.
வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் திட்டமிட்டுச் செயற்படுவதில் வல்லவன்.
அவனது நல்லியல்பால் மூளையால் அவன் இடும் திட்டங்களை,
இதுவரை இறைவன் அங்கீகரித்து ஆசி செய்துவருகிறான்.
எப்போதும் அவ் ஆசி அவனுக்கு இருக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பேன்.
இன்பமோ, துன்பமோ,
கழகம் எடுக்கும் முடிவைத் தனதாக்கி உறுதியாய்ச் செயற்படுவான்.
கழகச் செயற்பாட்டில் இவனது ஆளுமை முழுமையாய் வெளிப்படாமைக்கு,
என் ஆளுமையே காரணம் என்பதை அறிவேன்.
நான் இல்லாத இடத்து,
இவனது வீரியம் இன்னும் வெளிப்படும் என்பது என் நம்பிக்கை.
என்னையோ, கழகத்தையோ எவரும் குறை சொல்ல விடமாட்டான்.
இவன் மட்டும் சமூகத்திற்காய்த் தன்னை முழுமையாய் அர்ப்பணித்திருந்தால்,
நம் இனம் ஒரு நல்ல தலைவனைப் பெற்றிருக்கும்.
அப்படி அவன் ஆகவேண்டுமென்று பிரார்த்தித்தபடி இருக்கிறேன்.
என்னுடைய ஆளுமையின் பிரதிபலிப்பை இவனில் காண்பேன்.
எனது ராஜச குண விம்பம் இவனென்றால் அது மிகையில்லை.
பிள்ளையாய் எனக்குத் துணை செய்து நிற்பவர்களில் இவனும் ஒருவன்.

🚩 🚩 🚩

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்