'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 45 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩  🚩  🚩

ச. மணிமாறன்

இவன் 1993 இல் கழகத்தில் இணைந்தவன்.
பிரசாந்தனுடன் யாழ் இந்துவில் கற்றவன்.
பேச்சு, கவிதை, இசை, நாடகம் எனப் பல ஆற்றல்களும் வாய்த்தவன்.
இவனது தாயாரே இவனுடைய திறமைகளுக்கு அத்திவாரம் இட்டவர்.
போகப் பிரியன், இன்பத்துறையில் எளியன்.
புத்திக் கூர்மையில் என்னை வென்று வியப்படையச் செய்வான்.
ஆற்றல்கள் ஆயிரம் இருந்தும் ஒருநிலைப்படாத மனநிலையால்,
ஒரு துறையிலும் சாதிக்கமுடியாதவனாய் இன்றுவரை இருக்கிறான். 
இவன் புத்தி ஏதோ ஒன்றை எந்நேரமும் திட்டமிட்டுக்கொண்டேயிருக்கும்.
ஒன்றில் ஈடுபட்டு நிதானமாய் அதில் வெற்றி காண்பதன் முன்,
அடுத்தது பற்றித் திட்டமிட ஆரம்பிப்பான். 
முதல் திட்டமிட்டதை அரைவாசியில் கைவிட்டு விடுவான்.
இங்ஙனம் நிலையில்லாமல் இயங்குவது இவனது பெரிய குறை.
ஒரு வேலையில் ஈடுபட்டால், வெள்ளமாய் அதனுள் பாய்வான்.
தன்னைப் போலவே மற்றவர்களும்.
அவ்விடயத்தில் ஈடுபட வேண்டுமென எதிர்பார்ப்பான்.
ஆனால், அவனது அந்த வேகத்தின் ஆயுள் 
சில நாட்களாய்த்தான் இருக்கும்.
1995 இல் கழகத்தின் புதிய செயலாளராய்ப் பொறுப்பேற்று,
சில காலமே இயங்கிப் பின் அப்பதவியை விட்டு வெளியேறினான்.
பிரசாந்தன்மேல், நான் தன்னை விட அதிக அன்பு செய்வதாய்,
குறைபட்டுக் கொள்வான்.
பிரசாந்தனது அன்புப் பலயீனத்தை,
சுயநலமாய் இவன் பயன்படுத்த நினைக்கும் போதெல்லாம்,
நான் குறுக்கிட்டுத் தடுப்பதாலேயே எனக்கு இப்பழி.
நகைச்சுவை மிக்க இவனது பேச்சாற்றலால்,
கழக மேடையில் ஒருமுறை நடந்த 'இன்று சந்திக்கும் இவர்கள்' நிகழ்ச்சியில்,
பல அறிஞர்களும் பரிதவித்தனர்.
மெலியரெனின் மீக்கூறுவான்.
வலியரரெனின் வழி மொழிவான்.
பலயீனமானவர்களைத் தன் வழிப்படுத்துவதில் வல்லவன்.
மற்ற எல்லோரது குறையையும் அழகாய் வரைவு செய்வான்.
ஆனால், தன் குறைகளை அறிய மாட்டான்.
சுயநலம் இவனது பெருங் குறைபாடு.
தன்னைத்தான் வியப்பதில் சமர்த்தன்.
ஆனாலும், உண்மைச் சமூக உணர்வு மிக்கவன்.
இவன் ஆற்றல்மிக்க கவிஞனுங்கூட.
இவனது கவிதைகளில் ஆச்சரியமான சிந்தனைகள் பதிவாகியிருக்கும்.
இசைத்துறை ஆற்றலும் இவனுக்கு இயல்பாய் வாய்த்திருந்தது.
இவனது இலட்சியம் என்னைப் போல் ஆவது,
அல்லது என்னை வெல்வது.
வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டால்,
என்னைப் போல் பத்துப்பேரை இவன் வெல்லலாம்.
ஆனால், இனி அது கடினம் என்றே நினைக்கிறேன்.
துறைமாறித் தூரச் சென்றாலும் இன்றும் எங்கள்மேல் அன்போடிருப்பவன்.
இன்று திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் நிற்கிறான்.
இவனுக்கு வாய்த்த மனைவி கடவுளால் இவனுக்கு வழங்கப்பட்ட வரம்.
அந்த வரத்தின் பெறுமதி தெரியாதவன்.
தாயும் தாரமும் இவன் பெற்ற வரங்கள்.
சமயோசித புத்தியில் என்னைப் பிரதிபலிப்பவன்.
எனது தாமச குண விம்பம் இவன் எனலாம்.
நான் பிள்ளையாய் நேசிப்பவர்களில் இவனும் ஒருவன்.

🚩  🚩  🚩

த. ஜெயசீலன்

1993 இல் கவிதைப்போட்டி மூலம் கழகத்திற்கு வந்தவன் இவன்.
இவனும் யாழ் இந்துக்கல்லூரி மாணவனே.
கழகத்தில் இணைந்தபோது பல்கலைக்கழகத்தில் மாணவனாய் இருந்தான்.
இவனது போட்டிக் கவிதை அப்போதே,
ஒரு கவியரங்கக் கவிதை போல் தரம் பெற்றிருந்தது.
இவனது ஆற்றலை இனங்கண்டு,
இவனுக்குப் பரிசு வழங்கவேண்டுமென நான் எவ்வளவோ போராடினேன்.
போட்டி நடுவர்களான,கவிஞர் முருகையனும் கல்வயல் குமாரசாமியும்,
பரிசுக்குரியவனாய் இவனை ஏற்க மறுத்து விட்டனர்.
அதனால், போட்டியில் இவனுக்கு பரிசு வழங்கப்படவில்லை.
ஆனாலும் அந்த ஆண்டு கழகக் கவியரங்கில் நாம் அவனை ஏற்றினோம்.
தரமாய்ப் பாடிப் பலரது மனதிலும் பதிந்தான். 
பின்னர், 1995 இல் கழகத்தின் புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டபோது,
அதில் பொருளாளராய்ப் பொறுப்பேற்றான். 
அவ்வாண்டு நடந்த இடப்பெயர்வில் நாங்கள் கொழும்பு சென்றுவிட,
தனது உயிர் அச்சம் தவிர்த்து பிரசாந்தனுடன் சென்று,
கம்பன் கோட்டத்தை இராணுவத்திடமிருந்து மீட்டவன் இவன்.
நானும் இரத்தினகுமாரும் குமாரதாசனும் சிவசங்கரும் பிரசாந்தனும்,
கொழும்புக்கு இடம்பெயர்ந்த பின், 'நிலாக்கால நிகழ்ச்சிகள்' மூலம்,
தனித்துச் சிலகாலம் கழகத்தை யாழில் இயக்க முயன்றான்.
பின் சற்றுச் சோர்ந்து தூரப்போனான். 
இவன் எம்மேல் கொண்ட அன்பு சத்தியமானது.
அவன்மேல் நாம் கொண்ட அன்பும் சத்தியமானது.
சிவசங்கர், பிரசாந்தன், மணிமாறன் அளவிற்கு,
தன்மேல் எனக்கு அன்பில்லையோ எனும் ஐயப்பாடு,
அவன் அடி மனதில் என்றும் உண்டு, இன்றும் உண்டு.
அளவுக்கதிகமான ரோஷம் இவனது குறைபாடு.
அதைத் தாழ்வுச் சிக்கல் என்றும் சொல்லலாம்.
கொஞ்சம் கஞ்சத்தனமும், தொட்டாற்சுருங்கி மனநிலையும் கொண்டவன்.
தன்னையும் தனது கவிதைகளையும்,
பாராட்டியன்றி குறைசொல்லி எவரும் விமர்சிக்கக் கூடாது என நினைப்பவன்.
நாங்கள் கொழும்பு சென்ற பிறகு,
இவனின் போக்கு கொஞ்சம் மாறியது.
அறிவுலகத்தின் அங்கீகாரம் தேட முனைந்தான்.
ஆரம்பத்தில் இவனைக் கவிஞனாய் ஏற்க மறுத்த முருகையனை,
பின்னாளில் குருவாய்க் கொண்டு பக்தி காட்டினான்.
அவனது அந்த சுயவிருப்பச் செயற்பாட்டில்,
எமக்கு எந்த மாறுபாடும் இருக்கவில்லை.
ஆனால், அதுபற்றி நாம் ஏதேனும் நினைப்போமோ எனும்,
மனக்குறுகுறுப்பு இருந்திருக்கும்போல.
அதனால்தானோ என்னவோ பின்னாளில்,
நாம் அவனை 'மேய்க்க' நினைப்பதாயும்,
அதற்கு தான் அடிபணியப்போவதில்லை என்பதாயும்,
நன்றி மறந்து மிகக் கேவலமாய் ஒரு கவிதை எழுதினான்.
இதுதான் அவன் எழுதிய கவிதை.

சுயம்

நாயாய் இருப்பதற்கு நான் தயார்தான்!
சோறுவைத்து
நாளும் அணைப்பவரை நக்கி, அவர் வருங்கால்...
வாலாட்டி,
அவர்களது மகிழ்ச்சிகளில் நான்துள்ளி,
சோகத்தில் அவர்களுடன் சுருண்டு விழிசிந்தி,

ராவு பகலெல்லாம் 'காவற் துறையாக'
வீடுதனைச் சுற்றி,
வேலிமீறும் ஆடுமாட்டை
ஓடித்துரத்தி, ஒருபொழுது அவர்களுடன்
பந்தடித்தும் விளையாடி,
அவர்கள் உதைத்தாலும்...
வந்து முதுகுரஞ்சி, பின் எந்தன் பாட்டில், 
'வெளிக்குந்தில் ' அனாதையைப்போற் குறண்டி,
கடன் தீர்க்கும்
நாய் போற் கிடப்பதற்கு நான் தயார்தான்

அதற்காக 
'வளர்ப்போர்க்கு மட்டுந்தான் வணக்கஞ் செலுத்தோணும்.
வளர்ப்போரின் வீட்டுக்கு மட்டும் உழைக்கோணும்.
வளர்ப்போரைச் சாடுவோரை வடிவாய்க் கடிக்கோணும்.
வளர்ப்போர்கள் செய்வதெல்லாம்
'சரி' யென்றுரைக்கோணும்.
வளர்ப்போர்கள் சொல்லிவிட்டால்....
வாய்பொத்தி, வாலட்டி,
குலைக்கோணும்.
வளர்ப்போர்கள் 'வா' என்றாற் போகோணும்.
வளர்ப்போர்க்காய் என்னுணர்வை,
என்விருப்பை,
என் வாழ்வைப்
புதைக்கோணும்' என்று
புவிமக்கள் எதிர்பார்த்தால்...
நாயாய் அவதரிக்க நான் விரும்ப மாட்டேனாம்!

ஒன்றுரைப்பேன்
'வளர்த்தோம் நாம்' என்பவர்க்கு ஒன்றுரைப்பேன்.
மண்ணிலுள்ள மனிதன் நான்,
என் மானம் மலடில்லை,
நன்றியுள்ள மிருகம் நாய், அது அடிமை ஜென்மமில்லை!

அவனோடு நாம் பகை கொள்ள வேண்டிய தருணம் அது.
ஆனாலும், எமக்குள்ளும் அவனுக்குள்ளும் இருந்த உண்மை அன்பு,
அச்சிறு விடயத்தைப் புறந்தள்ளிற்று,
எனக்கென்னவோ முருகையனுடனான அவனது சேர்க்கையின்பின்,
இவனது கவிதையில் இருந்த இயல்புணர்ச்சி 
குன்றியதாகவே தோன்றுகிறது.
நான் அன்போடு இவனை நெறிசெய்ய நினைக்கும் போதெல்லாம்,
இவன் ஏதோ நான் அவனை வீழ்த்த நினைப்பதாய் எண்ணி மிரள்வான்.
என்னோடு முரண்பட்டு இவன் எழுதிய பல கடிதங்கள்,
கழகக் கோப்புகளில் இன்றும் இருக்கின்றன.
கழகத்தோடு நெருங்கினால்,
தன்னை கழகம் விழுங்கி விடுமோ எனும் அச்சத்தினால்,
கோடு கீறி புறம் நின்று வாழ்பவன்.
எங்களுள் கரைந்து போக விருப்பமின்றியும்,
பிரிந்து போக விருப்பமின்றியும் தடுமாறி நிற்பவன்.
கழகம் எங்களது எனும் உரிமையை இவன் என்றும் விட்டதில்லை.
முழுமையாய்த் தொட்டதும் இல்லை.
நல்லூர் முருகனின் பெரும் பக்தன்,
போர்க்காலத்தில் வீரியமாய்க் கவிதைகள் பல பாடினான்.
போர் முடிந்ததும் மற்றவர்கள்போல் கொள்கை மாறவில்லை என்றாலும்,
தன் சுதந்திர வீரியத்தை சற்றுக் குறைத்துக் கொண்டான்.
தன் கவிதைகளை நான் ஆழ ரசித்து விமர்சிப்பதில்லை எனும் குறை,
இவனுக்கு எப்போதும் உண்டு.
மேற் சென்று இடிக்கும் விமர்சனங்களை ஏற்கா இவன் மனநிலையே,
எனது அச்செயலின் அடிப்படை.
கவிதைப் போட்டியில் இவனைத் தகுதியில்லாதவன் என்று தள்ளிவைத்த,
முருகையனையே தனது குருவாய் நினைப்பது இவனது தகுதி.
இன்று ஈழத்தில் தரமான கவிஞனாய் இவனுக்கோர் பதிவுண்டு. 
நிர்வாகச்சேவையில் இணைந்து
இன்று உதவி அரச அதிபராய் இருக்கின்றான்.
அப்பதவிக்கேற்ற ஆளுமை இவனிடம் இன்னும் வரவில்லை என்பது,
இவன்மேலான எனது குறைபாடு.
கழகச்செயற்பாடுகளில் இன்றும் இவனது துணை உண்டு,
எம்முடன் தொடர்போடும், அன்போடும் தொடர்ந்து இயங்குகிறான்.
இவனது மாமனார் எங்கள் கழகத்தின் பரம இரசிகர்.



Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்