'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 46 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
பிரசாந்தனின் கல்வி பட்டபாடு

கம்பன் கழகத்துடன் இணைந்தவர்களில் பிரசாந்தன்தான்,
அதனால் அதிகபயனும், அதிக நஷ்டமும் பட்டான்.
கனடா, லண்டன், சீசல்ஸ், அவுஸ்திரேலியா, சுவிஸ்லாந்து, மலேசியா என, பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு 
கழகத்தால் அவனுக்குக் கிடைத்தது.
தமிழ்நாட்டில் பல மேடைகளில் பேசும் வாய்ப்பையும் அவன் பெற்றான்.
அவன் பெற்ற பயன்களில் சில இவை.
நஷ்டங்கள் இவற்றைவிட அதிகமானவை.
கம்பன் கழகத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக,
ஈழத்தமிழ் அறிவுலகம் அவனைப் படுத்தாதபாடு படுத்தியது.
அவன் தனது முதற் பட்டப்படிப்பை,
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நிறைவுசெய்தான்.
அப்போது தமிழ்த்துறைத் தலைவராய்,
பேராசிரியர் தில்லைநாதன் இருந்ததால்,
அவனுக்கு 'ஃபெஸ்ற் கிளாஸ்' சித்தி கிடைத்தது.
பின்னர், தில்லைநாதன் ஓய்வுபெற்றுவிட,
அவனைப் பாடுபடுத்தத் தொடங்கினார்கள்.
அவனது ஆற்றல் தெரிந்திருந்தும்,
அவன் வெளிநாட்டிற்குச் சென்று வந்ததைக் காரணங்காட்டி,
அவனை ஒதுக்கத் தொடங்கினர். 
'எம்.பில்' பட்டப்படிப்பு ஆய்வை,
அவன் எழுதி முடித்தும், திருத்தித்தர இழுத்தடித்தார்கள்.
அவ்வாய்வுக்கு 'பாரதியும் மஹாகவியும்' என்ற தலைப்பை,
பேராசிரியர் நுஃமானின் அனுமதியோடு அவன் பெற்றிருந்தான்.
அவன் ஆய்வை முடித்தபின்பு,
பரீட்சராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் தில்லைநாதன் 
ஏனோ, 'பாரதியுடன் மஹாகவியை ஒப்பிட முடியாது' என,
பல்கலைக்கழகத்திற்கு மறுப்புத் தெரிவிக்க,
இவனது பட்டம் இழுபட்டது.
பின் ஒருவாறு பேராசிரியர் சண்முகதாஸ் துணையால்,
அவ் இடரையும் கடந்தான்.
அக்காலத்தில் கிழக்குப் பல்கலைக்கழகம் நடத்திய,
தமிழ் விரிவுரையாளர் நேர்முகப் பரீட்சையில்,
இவன் கலந்து கொண்டபோது,
முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர்,
பேராசிரியர்கள் மௌனகுரு, சித்திரலேகா, அம்மன்கிளி 
போன்றவர்களால் நிராகரிக்கப்பட்டான்.
உடனே மனித உரிமை வழக்கை இவன் சந்திக்க,
அந்தத் தேர்வு முடிவு ரத்தானது.
பின்னர், யாழ் பல்கலைக்கழகத்தில் இருமுறையும்,
ஊவா பல்கலைக்கழகத்தில் ஒருமுறையும்,
நேர்முகத் தேர்வாளர்களாய் இருந்த
பேராசிரியர்களான சண்முகதாஸ், 
சிவலிங்கராஜா, சுசீந்திரராஜா, நுஃமான்
போன்றவர்களால் நிராகரிக்கப்பட்டான்.
அதன் பின்னர் மீண்டும் பேராதனையில் விரிவுரையாளர் தேர்வு நடந்தது.
அதில், இவனுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய பதவியை,
வேண்டுமென்றே திட்டமிட்டு இவனைவிட 
தகுதியும் அனுபவமும் குறைந்த ஒருவருக்கு,
பேராசிரியர்கள் 
துரை. மனோகரன், நுஃமான் ஆகியோர் வழங்கினர்.
மீண்டும் மனித உரிமை வழக்கை இவன் தொடுக்க
உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையில்,
மேற் பேராசிரியர்கள் வேண்டுமென்றே,
புள்ளியிடலில் செய்த தவறு வெளிப்பட்டது.
முடிவில் நீதிமன்றம்,
இவனுக்கே அப்பதவியை வழங்கவேண்டும் என, 
சிபார்சுசெய்து உத்தரவிட்டது.
அதன் பின்னும் எத்தனையோ இழுபறிகள் செய்து,
இப்போதுதான் 
அப்பதவியை அவனுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
இடையில், ஸ்ரீ ஜெயவர்த்தனபுரப் பல்கலைக்கழக 
விரிவுரையாளர் பதவிக்காக,
இவன் நேர்முகப் பரீட்சைக்கு சென்றபொழுது,
இவன் தகைமையைப் பரிசீலித்த சிங்களப் பேராசிரியர்கள்,
இவனது ஆற்றலையும், தகுதியையும் கண்டு,
'எப்படி பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள்
இதுவரை உன்னை விட்டுவைத்திருக்கின்றன?' 

என வியந்து கேட்டார்களாம்.
பின், அவனுக்கு அங்கு பதவியை வழங்கியதோடு,
நீதிமன்றத் தீர்ப்பின்படி இவன் பேராதனைக்குப் புறப்பட,
அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே,
'நீ அங்கு போகாதே, உனக்கு நாங்கள் தனியே தமிழ்த்துறை 
ஆக்கித் தருகிறோம்'
எனக் கூறி மறித்தாராம்.
சிங்கள இனம் வளர்வதற்கும், தமிழ் இனம் தேய்வதற்குமான காரணம்,
இப்போது உங்களுக்குப் புரிகிறதா?
இதுதான் இன்றைய தமிழ்க் கல்வியாளர்களின் நிலை.

🚩 🚩 🚩

வித்துவான் குமாரசுவாமி நினைவுக் கூட்டம்  (13.01.1994)

இக் காலத்தில் எங்கள் ஆசிரியரான நயினாதீவைச் சேர்ந்த,
வித்துவான் குமாரசுவாமி அவர்கள் மறைந்தார்.
எல்லோராலும் விரும்பப்பட்டவர் அவர்.
நிறைந்த படிப்பாளி, ஆணவம் சிறிதும் இல்லாதவர்.
மற்றவர்களில் நன்மையைத் தவிர தீமையைப் பாராதவர்.
தமிழ் ஆற்றலில் எவருக்கும் சளைக்காதவர்.
ஆனால் எவரோடும் போட்டி போட விரும்பாதவர்.
எங்களுக்குச் சிலகாலம் இலக்கியம் கற்பித்தார்.
அவர் இழப்பால் பெரிதும் வாடினோம்.
அச்சான்றோனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,
மேல் திகதியில் கம்பன் கழக மேல் மண்டபத்தில்,
ஓர் அஞ்சலிக்கூட்டத்தை நடாத்தினோம்.
 

(தொடரும்...)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்