'உன்னைச் சரணடைந்தேன்': பகுதி 47 - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

🚩 🚩 🚩
ஐந்தாவது காரைநகர்க் கம்பன்விழா 21.01.1994

நாட்டுச்சூழலால் சிலகாலம் விழாக்காணமுடியாத, காரைநகர்க் கம்பன் கழகம், இடம்பெயர்ந்த நிலையில் 
நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில்,
கண்ட விழா இது. 
1994 ஆம் ஆண்டில் 
இவ்விழா நடைபெற்றது.
எங்கள்மேல்பகைகொண்டிருந்த பொன். சுந்தரலிங்கம்,
மித்திரபேத முயற்சியாய் சிவகுமாருக்கு 
முழு ஆதரவு கொடுத்து,
தன் மண்டபத்தில் விழா நடத்தத்துணைசெய்தார்.
அவர் எண்ணம் ஈடேற வில்லை. சிவகுமார் எடுப்பார் கைப்பிள்ளைப் புத்தியால்,
ஆரம்பத்தில் சுந்தரலிங்கத்தின் வஞ்சனைக்கு ஆட்படப் பார்த்தான்.
நாங்கள் ஒருமித்து நின்று சுந்தரலிங்கத்தின் வஞ்சனையை அவனுக்கு உணர்த்த,
விழாவின்போது அவரைக் கைவிட்டு எங்களோடு இணைந்து கொண்டான்.
இக்காலத்தில் இராமனை ஆரியனாய்ப் பிரச்சாரப்படுத்தும்,
அரசியல் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 
விடுதலைப்புலிகள் இயக்கம் எமக்குப் போட்டியாக,
அப்போது இராவணனைப் போற்றும் கொள்கையை முன்வைத்திருந்தது. 
ஆனாலும், ஆரம்பத்தில் எங்கள் கழகத்திலிருந்துவிட்டு,
பின் இயக்கத்தில் இணைந்து,
புலிகளின் கலை, பண்பாட்டு துறைப் பொறுப்பாளராய் ஆகியிருந்த,
கவிஞர் புதுவை இரத்தினதுரை மூலம்,
புலிகளுடனான எமது இலக்கியத் தொடர்புகள் தொடரவே செய்தன. 
இவ்விழாவில் கலந்துகொண்டு,
இராமாயணம் பற்றிய தங்கள் இயக்கக் கொள்கையைப் பிரச்சாரப்படுத்தி,
இலங்கைக்குத் தூதனாய் வந்து தீவைத்த அனுமனை,
தனக்குப் பிடிக்காது எனப் புதுவை பேசிய பேச்சும்,
அதே மேடையில் பட்டிமண்டப நடுவராய் இருந்து,
அனுமனைத்தான் எனக்குப் பிடிக்கும் என்பதற்கான காரணங்கள் சொல்லி,
அவருக்கு நான் அளித்த பதிலும் அந்நாளில் பரபரப்பாய்ப் பேசப்பட்டன.
இவ்விழாவில் நடைபெற்ற,
 'படைத்தவனைச் சந்திக்கும் பாத்திரங்கள்' எனும் நாடகம்சார் நிகழ்ச்சி, 
இயல் நிகழ்ச்சிகளையும் தாண்டிப் பெரிதும் பேசப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் நான் கம்பனாய்ப் பாத்திரமேற்றேன்.
கம்பனின் சீடப்பிள்ளைகளாய் மணிமாறனும் கஜரூபனும் வேடமேற்றனர்.
மணிமாறன் தன் இயல்பான நகைச்சுவையால்,
ஏனையோரைச் சங்கடத்திற்காளாக்கினான்.
அவனது அட்டகாசமான நகைச்சுவையுடன் கூடிய மேடை வெளிப்பாடு,
புதிதாய்க் கம்பன் கழக மேடையேறிய,
இளைஞர்கள்குறித்த அச்சத்தை, பல அறிஞர்களிடம் ஏற்படுத்தியது.

🚩 🚩 🚩
நான்காவது இசை ஆராதனை  (31.01.1994)

இந்நிகழ்வு 1994 ஜனவரி 31 ஆம் திகதி நடைபெற்றது.
வழமைபோலக் காலை, மாலை நிகழ்ச்சிகளாக,
இவ்விழா நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்விழாவுக்கு அப்போதைய பல்கலைக்கழகத் துணைவேந்தர்,
பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையேற்றார்.
எங்கள் கழக உறுப்பினரான ஸ்ரீ இரத்தினகுமார் அவர்களின் தந்தையும்,
பிரபல வயலின் வித்துவானுமான வி.கே. குமாரசாமி அவர்களுக்கு,
இவ்விழாவில் 'இசைப்பேரறிஞர்' விருது வழங்கப்பட்டது.
வழமைபோல, காலை நிகழ்ச்சிகளில் நாதஸ்வர வித்துவான்களும், 
இசைக்கலைஞர்களும் கலந்து இசையாராதனை நிகழ்த்தினர்.
காலை, மாலை நிகழ்வுகளில் 
அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி,
அறிஞர் கே.கே.சோமசுந்தரம், 
பேராசிரியர் நந்தி ஆகியோர் கலந்து உரையாற்றினர்.
மாலை நிகழ்வுகளில் திரு. வி.கே. குமாரசாமி அவர்களின் 
வயலின் கச்சேரியும்,
நாதஸ்வர வித்துவானான எம்.பி. நாகேந்திரனின் பாட்டுக் கச்சேரியும்,
மூன்று தலைமுறை வித்துவான்களான,
எஸ். கணபதிப்பிள்ளை, எல். திலகநாயகம்போல், 
வர்ண. ராமேஸ்வரன் ஆகிய,
மூவரும் இணைந்து வழங்கிய இசைக்கச்சேரியும் நடைபெற்றன.
வி.கே.குமாரசாமி அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து,
இவ்விழாவில் தியாகராஜசுவாமிகளின் பஞ்சரத்தினக் கீர்த்தனைகளை,
ஒரு நூலாய் வெளியிட்டு அனைவருக்கும் இனாமாய் வழங்கினர்.
இவ் விழா நிகழ்ச்சிகளில்,
என்.கே. பத்மநாதனும், 
பொன் சுந்தரலிங்கமும் கலந்து கொள்ளவில்லை.

🚩 🚩 🚩
வி.கே. குமாரசாமி,  புவனசுந்தரி தம்பதியர்

ரத்தினகுமாரின் பெற்றோர்களான இவர்களுக்கும்,
கழகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்குண்டு.
ரத்தினகுமாரின் தாயாரான புவனசுந்தரி ஆளுமைமிக்க ஒரு பெண்மணி.
ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, ஒரு வித்துவானின் வருமானத்தில்,
வெற்றிகரமாகக் குடும்பத்தை நடத்தியவர் அவர்.
அந்த வீட்டின் பிள்ளைகள் அனைவரும் 
தாயின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தனர்.
ஆரம்பகாலத்தில் ரத்தினகுமார் எங்களோடு நெருங்கி இணைய முன்பும்,
இவர்கள் வீட்டுடன் எனக்கு உறவு இருந்தது.
விளையாட்டாய் அக்காலத்தில் நான் கைரேகை பார்க்கத் தொடங்க,
அது பிரபலமாகி ஒரு சாத்திரக்காரன் அளவுக்கு என் நிலை மாறியது.
அப்போது ரத்தினகுமாரின் தாயார் என்னிடம் சோதிடம் கேட்க முயல்வார்.
பின்னாளில் ரத்தினகுமார் எங்களோடு முற்றாய் இணைந்து,
கழக முயற்சியில் மூழ்கியபோது அம்மையார் அதைத் தவறாய் எடுக்கவில்லை.
மற்றப் பிள்ளைகளைவிட 
அவருக்கு ரத்தினகுமாரின் மீதுதான் அதிக அன்பு.
அதனால் ரத்தினகுமாரின் முடிவுகளை அவர் மறுக்கமாட்டார்.
போகப் போக ரத்தினகுமார் கழகத்துள் கரைந்தபோது,
அவன் குடும்பத்தார் அதைப் பெரிய அளவில் விரும்பவில்லை.
ஆனாலும் அத்தாயார் அதுபற்றி என்னிடம்,
மனம் நோகும்படி ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை.
ரத்தினகுமார் தொடர்ந்து எங்களுடன் இருப்பதற்கு அவர் அனுமதித்தார்.
அவர் நினைத்திருந்தால் தனது ஒருவார்த்தை மூலம்,
ரத்தினகுமாரை எங்களிடமிருந்து பிரித்திருக்கலாம்.
நான் அத்தாயாய் இருந்திருப்பினும் அதைத்தான் செய்திருப்பேன்.
ஆனால் அத்தாய் பெருந்தன்மையோடு அதனைச் செய்யவில்லை.
ஒவ்வொரு வருடப்பிறப்பின் போதும் கம்பன்கோட்டத்திற்கு வந்து,
பூசை அறையில் நூற்றியொரு ரூபாய் பணம் வைத்து,
கழகம் பெருக வேண்டும் என வேண்டிச் செல்வார்.
வி.கே.குமாரசாமி அவர்களும் 
எனது இசை ஆர்வத்தால் என்னை நேசித்தார்.
நானும், கழகமும் அப்பெற்றோருக்கு,
எத்தனையோ துன்பங்களைக் கொடுத்திருக்கிறோம்.
ஆனாலும், அவர்கள் கடைசிவரை எம்மை வெறுக்காமல் வாழ்த்தினர்.
பாரிசவாதத்தால் உடலின் ஒரு பகுதி இயங்காத கடைசி நிலையிலும்,
தன் ஆளுமை குன்றாமல் ஒற்றைக் கையால் சமையல் செய்து தனித்திருந்து, தன் கணவரைக் காப்பாற்றினார் அவ் அம்மையார்.
மரணப் படுக்கையில் கிடக்கையில் எனை அருகழைத்து,
'அவனைக் கடைசிவரை கைவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கோ' என்று,
அவர் சொல்லிச் சென்றதை நினைந்தால்,
இப்போதும் என் நெஞ்சுருகும்.
கழகத்தின் ஒரு சிறந்த விழுதை உருவாக்கிய வேர்கள்.
அவர்களைத் தக்காராக நிரூபிக்கும் எச்சமாய் நிற்கும் ரத்தினகுமார்,
இன்றும் கழகத்தின் காவலனாய்த் தன்னை அர்ப்பணித்து நிற்கிறான்.

🚩 🚩 🚩
கழகத்தின் மூன்றாம் கட்டத் தொண்டர்கள்

இக்காலத்தில் நிறைய இளைஞர்கள் கழகப்பணிகளில் ஈடுபட்டார்கள்.
அவர்களுள் முக்கியமான ஒரு சிலரைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.

ஜெபரஞ்சன், சுரேன்: 
இவ்விருவரும் ரகுபரனோடு வந்து இணைந்தவர்கள்.
சுயநலம் பாராது கடுமையாய்க் கழகத்தில் உழைத்தவர்கள்.
அதிகம் பேசாதவர்கள்.
இவர்களுள் சுரேன்,
வைமன் ரோட்டில் சிலகாலம் எங்களுடனேயே தங்கியிருந்தான்.
அவனது பேச்சு, செயல் எதிலும் மிகையிராது.
என் மனதிற்கு மிகவும் பிடித்தபிள்ளை.
நல்லூர் வீதியில் கம்பன்விழாக்கள் நடக்கத் தொடங்கிய பிறகு,
பேராளர்களுக்கு நாம் பெரு விருந்திடுவதாய் முன்பு சொல்லியிருக்கிறேன்.
அந்தப் பொறுப்பினை இவ்விருவரும்தான் பார்த்துக் கொள்வார்கள்
மேடையிலோ அல்லது சபைகளிலோ தம்மை வெளிப்படுத்த வேண்டும் என்று,
துளியும் எதிர்பாராதவர்கள்.
இருவரும் மிக அமைதியான நல்ல பிள்ளைகள்.
இடப்பெயர்வின் பின் இவர்கள் நெருக்கம் ஏனோ குறைந்துபோயிற்று.
ஜெபரஞ்சன் திருமணமாகி வெளிநாடு சென்று விட்டான்.
இங்கு வரும்போதெல்லாம் அன்போடு உறவு பேணுவான்.
சுரேன் திருமணமாகி வவுனியாவில் இருந்தாலும்,
நாம் கொழும்பு வந்தபிறகு அவனுடைய தொடர்பு ஏனோ குன்றிப் போயிற்று.
இவ்விருவரதும் உண்மை உழைப்பையும், அன்பையும்,
கழகம் என்றும் மறவாது

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்