'ஐந்துபேர் அறிவு' :பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

ங்களில் பலர் இக் கட்டுரைத் தலைப்பைக் கண்டதும்,
நான் ஏதோ சமயவிடயம் பற்றி எழுதப் போவதாய் நினைத்திருப்பீர்கள்.
பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார்,
சுந்தரரின் வரலாற்றை உரைக்கையில் வரும் ஒரு பாடலில்,
மேற் தலைப்புப் பதிவாகியிருப்பது உண்மையே.
சிதம்பரத்தில் நடேசரைக் கண்டதும்,
சுந்தரர் அடைந்த நிலையினைச் சேக்கிழார் அப்பாடலில் சொல்கிறார்.

ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரு கரணங்கள் நான்கும் 
சிந்தையே ஆக குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்விகமே ஆக 
இந்து வாழ் சடையான்  ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர்  இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்;ச்சியின் மலர்ந்தார்

இதுவே அப்பாடல்.
இறைவன் ஆடும் ஆனந்த நடனத்தைக் கண்டதால்,
ஐம்பொறி அறிவும் கண்களிற்; திளைக்க,
கரணங்கள் நான்கும் சிந்தையில் ஒன்ற,
குணங்கள் மூன்றும் சாத்விகமே ஆக,
சுந்தரர் பேரின்பக்கடலுட் திளைத்து மகிழ்ந்தார்.
என்பதுவே இப்பாடற் கருத்தாம்.

💠 💠 💠 💠

சமயப்பற்றுள்ள வாசகர்கள் என்னை மன்னிப்பார்களாக!
இக் கட்டுரையில் மேற்சொன்ன புராணம் பற்றியோ,
சுந்தரரின் நிலை பற்றியோ நான் எழுதப் போவதில்லை.
இத்தலைப்பை மட்டும் எனதாக்கி,
என் மனச்சிகரத்தில் வீற்றிருக்கும்,
யாழ் இந்துக்கல்லூரியின் எங்கள் கால அதிபர்கள் பற்றியும்,
அவர்களால் நான் பெற்ற அறிவு பற்றியுமே,
இக் கட்டுரையில் எழுதப்போகிறேன்.

💠 💠 💠 💠

உலகப் பார்வையில் கல்லூரி என்பது,
வெறும் கட்டிடம்தான்.
ஆனால், 
ஊடுருவிப்பார்க்கும் உணர்வுடையார்,
அதற்குமேலே ஏதோ ஒன்று,
அவ்வார்த்தைக்கூடாக நம்மைப்பாதிப்பதை உணர்வர்.
கண்ணுக்குத் தோன்றும் சடமாகிய உடம்புக்குள்,
வெளித்தோன்றாத உயிர் நின்று உணர்வு தருவதுபோல,
கல்லூரிக் கட்டிடங்களுக்குள்ளும்,
உணர்வைத்தரும் ஓர் உயிர்ப்பொன்று இருக்கவே செய்கிறது.
இதுதான் அது என,
அவ்வுணர்வை என்னால் வரையறை செய்ய முடியாவிட்டாலும்,
அவ்வுணர்வின் தாக்கத்தை நான் நன்கு உணர்கிறேன்.

💠 💠 💠 💠

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி.
என்னுள் உணர்வுப் பாதிப்புக்களை ஏற்படுத்திய கல்லூரி இதுதான்.
யாழ்ப்பாணத்தை இலங்கையின் சிரம் என்றும்,
அறிவுத்தளம் என்றும் பலபேர் பாராட்டுவார்கள்.
ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் அப்படித்தான் இருந்தது.
அறிவுத்துறையைப் பொறுத்தவரை,
இலங்கை முழுவதற்கும் தலைமை தாங்கிய யாழ்ப்பாணத்தின்,
தலைமைக்கல்லூரியாகக் கருதப்பட்ட பெருமை,
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கே உரியதாம்.
மகாத்மா காந்தி, விவேகானந்தர் போன்ற யுகப் புரட்சியாளர்கள்,
இக்கல்லூரிப் பிரார்த்தனை மண்டபத்தில் உரையாற்றியமையை,
இக்கல்லூரியின் பெருமைக்காம்  உயர் சான்றாய்க் கொள்ளலாம்.

💠 💠 💠 💠

இவ்விடத்தில் உகரத்தின் இந்திய வாசகர்களுக்காய்,
ஓர் செய்தியைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
உங்கள் நாட்டின் 'பிளஸ் டூ' வகுப்பு வரை,
படிப்பதற்கான இடமாகவே,
இலங்கையில் கல்லூரிகள் இயங்குகின்றன.
உங்கள் நாட்டைப் போல,
கல்லூரிகள், பட்டப்படிப்பிற்கான இடங்களாய் இருப்பதில்லை.
கல்லூரிகளில் படித்தவர்கள் 'பிளஸ் டூ' பரீட்சையில்,
குறித்த புள்ளிகளுக்கு மேல் எடுத்தாலேயே,
பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்புக்களைப் படிக்கமுடியும்.
இச்செய்தியை இங்கு ஏன் வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால்,
நான் கல்லூரியில் படித்தேன் என்றதும்,
என்னை ஒரு பட்டதாரியாய் நீங்கள் கருதிவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

💠 💠 💠 💠

உலகப்பார்வையில் யாழ் இந்துக்கல்லூரி என,
தோற்றம் தரும் கட்டிடம்,
என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை,
இன்றைய நிலையில் என்னாற் தெளிவாய் உணரமுடிகிறது.
அரச உத்தியோகத்தரான எனது தந்தையாரின்,
இடமாற்றங்கள் காரணமாக என் இளமைக்கல்வி,
பறித்துப் பறித்துப் பலஊர்களிலும் பதியம் போடப்பட்டுப் பலயீனப்பட்டது.
செட்டிகுளம், புசல்லாவை, சிலாபம் என,
இலங்கையின் பிற்பட்ட பல இடங்களில் சுற்றியதால்,
ஆழமான அடித்தளம் இல்லாத கல்வியோடு,
பலயீனப்பட்டிருந்த இப்பாலகனுக்கும்,
தந்தையார் படித்தார் என்ற ஒரே உரிமை காரணமாக,
இந்துக்கல்லூரியில் இடம் கிடைத்தது.

💠 💠 💠 💠

அன்று,
இந்துக்கல்லூரியில் இணைவதற்காய்,
ஏங்கித்தவம் கிடந்து நிராகரிக்கப்பட்ட நீண்ட மாணவர் வரிசை,
இன்றும் என்னைக் குற்றஉணர்வுக்கு ஆளாக்கும்.
தந்தையார் பழையமாணவர் என்ற தகுதி மட்டும் இல்லாதிருந்தால்,
நானும் ஒதுக்கப்பட்டிருப்பேன்.
யார் கண்டது?
ஓர் தகுதி மிக்க மாணவன்,
யாழ்இந்துவில் கற்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கக்கூடும்.
அது நிகழ்ந்திருந்தால் உலகிற்கு மற்றுமொரு,
டாக்டரோ, எஞ்சினியரோ, எக்கவுண்டனோ கிடைத்திருப்பான்.
அவர்களையெல்லாம் விட்டுவிட்டு,
வெறும் கற்றுண்டாகக் கிடந்த என்னை,
எடுத்து, அணைத்து, செதுக்கி ஆளாக்கினாள் இந்து அன்னை.
அவள் அருளால் இக் கற்துண்டு, 
இன்று உலகின்முன் ஓர் சிற்பமாய்க் காட்சி தருகிறது.
இஃது யாழ் இந்து அன்னையின்,
ஏற்றமிகு கருணையின் வெளிப்பாடேயாம்.

💠 💠 💠 💠

அவள் அன்புக்கு ஆளாகியது, 
என் முன்னைத் தவப்பயனன்றி வேறென்ன?
இன்று,
ஓர் இலக்கியவாதியாய் எனக்கும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இது, இந்து அன்னை தந்த ஏற்றமேயாம்.
வெறும் களிமண்ணாய்க் கிடந்த என்னை,
மற்றவர்க்குப் பயன்படும் கலயமாக்கியது எது?
விடை தெரியாது வியந்து நிற்கிறேன்.

💠 💠 💠 💠

முன் சொன்னவாறு என்னை உருப்படவைத்தது,
நிறைந்த கட்டிடங்களுடன் நிமிர்ந்து நிற்கும்,
யாழ் இந்துக் கல்லூரி எனும் வடிவமா?
அன்றேல் அக்கல்லூரியில் நான் பெற்ற கல்வியா?
அல்லது அங்கு நடந்த பரீட்சைகளில் நான்  பெற்ற சித்திகளா?
எது? எது? எது?
ஆழ்ந்து சிந்திக்க இவை ஏதுமே இல்லை என்று தெரிகிறது.

💠 💠 💠 💠

அப்படியானால் எதுதான் என்னை உருப்பட வைத்தது?
ஆழ்ந்து சிந்திக்க இன்று விடை தெரிகிறது. 
ஆளுக்கொரு இயல்புடன் இருந்த அதிபர்கள்,
ஆளுக்கொரு தனித்துவத்துடன் இருந்த ஆசிரியர்கள்,
அணைத்தும், பகைத்தும், உறவையும், உரிமையையும் கற்றுத்தந்த நண்பர்கள்.
இப்படி எத்தனையோ பேரது பாதிப்பால் உருவானவனே,
இலக்கிய உலகில் இன்று நின்று பிடிக்கும் இந்த ஜெயராஜ்.
கூம்பிக் கிடந்த இந்த மொட்டை மலரச்செய்த,
அந்த ஒளிக்கதிர்களை இன்று எண்ணிப்பார்க்க,
என் உள்ளம் உருகுகிறது.

💠 💠 💠 💠

அக்கால யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர்களாய் இருந்தவர்கள்,
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய்க் காட்சி தந்தனர்.
ஒருவர்பின் ஒருவராய்ப் பதவியேற்றும்,
ஒருவரின் பாதிப்பில்லாத மற்றவரின் தனித்துவப்பாணி,
இன்றும் எனக்கு ஓர் ஆச்சரியம்!
இவர்களில் பெரும்பான்மையினர் பதவியாற் பெருமைப்படாமல்,
பதவியைப் பெருமைப்படுத்தியவர்கள்.
இன்றெல்லாம் அதிபர் பதவியில் வந்து அமர்ந்ததும் தான்,
அவர்களை உலகத்திற்குத் தெரிகிறது.
அன்று அப்படியில்லை.
தம் அறிவாலும் ஆற்றலாலும் ஏலவே உலகத்தில் பதிவானவர்கள்தான்,
அதிபர் பதவியில் வந்து அமர்ந்தார்கள்.
அங்ஙனம் வந்த அதிபர்களின் ஆற்றல்,
அன்றைய அறிவுலகை அதிரச் செய்திருந்தது.
வெளிப்படச் சொல்வதானால்,
இன்றைய ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு இருக்கும் மதிப்பை விட,
அன்றைய யாழ் இந்துக் கல்லூரி அதிபர் மதிப்பு மிகுந்தவராய் இருந்தார்.

💠 💠 💠 💠

யாழ் இந்துவில் படித்த காலத்தில்,
ஐந்து அதிபர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
அவ் ஐவரிடமும் நான் கற்றவையும், பெற்றவையும் பல.
அவர்கள் தம் வாழ்வூடு தந்த செய்திகள்,
என்வாழ்வை வளமாக்கின.
அவர்கள் எனக்குக் காட்டியவற்றைக்காட்ட,
இக்கட்டுரையைப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றுகிறது.
முயல்கிறேன்.

💠 💠 💠 💠

(தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்