'கணவனைப் பிரிந்த காரிகையர்': -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகைத் திருத்த ஒப்பற்ற காவியம் செய்தான் கம்பன்.
இன்று கம்பனைத்திருத்த முயல்கிறார் சிலர்.
அது கலியின் கைவண்ணம்.
தம் சிறுமதியால் கம்பனில் பிழை காண விழைவார்,
தமது அக அழுக்கைக் கம்பகாவியத்தில் ஏற்றி,
அதனையும் மாசு செய்ய முயல்கிறார்.
அதனால் அவர் தமக்கு எதிர் மறைப் பாத்திரங்களில் விருப்பும்,
நேர்முகப் பாத்திரங்களில் வெறுப்பும் விளைகிறது.
தேடித்தேடித் தியாகப்பாத்திரங்களில் பிழை காணும் அவர்கள்.
அறம் பிறழ்ந்த பாத்திரங்களில் அன்பு செய்கின்றனர்.
இராமனை தீயனாகவும், இராவணனை நல்லனாகவும் காட்ட,
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காணாது அவர் செய்யும் முயற்சி ஆச்சரியமானது.
🪔 🪔 🪔
ஆழ்ந்து கற்று, அறம் உணர்ந்து, மேடையேறிய,
அறிஞர் காலத்துப் பட்டிமண்டபங்கள்.
இன்று பெரும்பாலும் அறியார்தம் வாதக்களமாயின.
இக் கல்லாதார் சொல்காமுற்று,
காவியப் புலவன்தன் உள நோக்கத்தையோ,
காவியப் நுண்மையையோ, பாத்திரப் பண்பையோ அறியாது,
நல்லதைத் தீயது எனவும், 
தீயதை நல்லது எனவும்,
தம் சொற்திறத்தால் நிறுவி,
தாமும் மயங்கிக் கேட்போரையும் மயங்கச் செய்கிறார்.
முரண்பாட்டில் மோகம் கொண்டு,
கேட்போரும் கிளுகிளுக்க,
இவர்தம் அழுக்கு விற்பனை அமோகமாய் நடக்கிறது.
🪔 🪔 🪔
இத்தகையோர் சொல்லும் குற்றங்களில் ஒன்றைப் பற்றியதே இக்கட்டுரை.
சிற்றன்னையின் சிறுமதியால் தந்தை சொல்லேற்று,
கானகம் செல்கிறான் காகுத்தன்.
மெல்லியல் ஜானகி தானும் உடன் ஏக,
அண்ணனைப் பிரிந்தறியா இலக்குவனும்,
அன்னையின் அனுமதி பெற்றுத் தானும் காடு செல்கிறான்.
கானகம் செல்வதாய் முடிவு செய்த இராமன்,
அன்னையாம் கோசலையிடம் அனுமதி பெற்று,
பின்னர் ஆருயிர்ச் சீதைக்கு அறிவித்தே புறப்படுகிறான்.
ஆனால் உடன் ஏகும் இலக்குவனோ,
அன்னை சுமித்திரையிடம் மட்டுமே அனுமதி பெற்று,
உடன் புறப்படுகிறான்.
🪔 🪔 🪔
இவ்விடத்தில் தான் மேல் (கு) தர்க்கவாதிகள்,
தம் வாதத்தை ஆரம்பிக்கின்றனர்.
காடேக வேண்டிய இராமனே,
மனைவியிடம் சொல்லிச் செல்ல முனைய,
உடன் ஏகும் இலக்குவன்,
மனைவியின் அனுமதி பெறாது சென்றது சரியா?
இராமனுக்குத் திருமணம் நடந்த அதே மண்டபத்தில்,
ஜனகனின் தம்பியின் புதல்விகளான,
மாண்டவி, ஊர்மிளை, சுதகீர்த்தி ஆகியோரை,
முறையே, பரத, இலக்குவ, சத்துருக்கர்கள்,
மணம் புரிந்ததாய்க் காவியம் உரைக்கிறது.
இலக்குவன் காடேகும் முன்னர்,
தனது மனைவியாகிய ஊர்மிளையை,
சந்தித்ததாகவோ, காடேக அனுமதி பெற்றதாகவோ,
கம்பன் காட்டினான் இல்லை.
🪔 🪔 🪔
இலக்குவன் மனைவியை உதாசீனம் செய்தான் என்றும்,
அவளது உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்றும்,
அவன் ஒரு ஆணாதிக்கவாதி என்றும்,
பதினான்கு ஆண்டுகள் தனது உணர்ச்சிகளை அடக்கி வாழ்ந்தவளாகிய,
ஊர்மிளையே சீதையை விட உயர்ந்தவள் என்றும்,
ஊர்மிளையின் மன உணர்வுகளைப் பதிவு செய்யாத கம்பன் குற்றவாளி என்றும்,
இவர்கள் அடுக்கும் குற்றங்கள் அநேகம்.
🪔 🪔 🪔
மனைவியைப் பிரிந்த இலக்குவனைக் குற்றம் சொல்லும் இவர்கள்.
மாற்றான் மனைவியைப் பிரித்த இராவணனை குற்றம் சொல்வதில்லை.
மறைந்து நின்று வாலி மேல் பாணம் செலுத்திய,
இராமனைக் குற்றம் சொல்லும் இவர்கள்.
மறைந்து நின்று பாணம் செலுத்திய,
இந்திரசித்தனைக் குற்றம் சொல்வதில்லை.
பிள்ளைகளுள் பேதம் பார்த்தான் என,
தசரதனைக் குற்றம் சொல்லும் இவர்கள்.
தன் காமத்திற்காய்ப் பிள்ளைகளைப் பலிகொடுத்த,
இராவணனைக் குற்றம் சொல்வதில்லை.
பிழைபால் கொண்ட பிரியத்தின் பேதைமையால்,
இவர்கள் நல்லோரை வீழ்த்தும் நாட்டத்துடன்,
பல்லோரையும் மயக்கிப் பலபல பயனில பேசுவார்.
ஏதுக்களாலும், எடுத்த மொழியாலும் உயர் பாத்திரங்களை,
மிக்குச் சோதிக்கும் இவர்தம் வீண் வாதம்,
கற்றோர்தம் கருத்தைக் கவலச் செய்வன.
🪔 🪔 🪔
கற்போர் தம் உயர் உளக் கருத்தால்,
பாத்திரப் பண்புகளை மென்மேல் உயர்த்தி,
தாமும் உவந்து மற்றவரையும் உவக்கச் செய்தலே,
தமிழர்தம் கற்கை மரபாம்.
மேல் உரைக்கப்பட்ட வாதிகளால்,
இழிவு செய்யப்பட்ட இலக்குவ, ஊர்மிளை உறவை,
தம் கற்பனைத் திறத்தால் உயர்த்தி உவந்தனர் பலர்.
பாத்திரங்களைப் பண்பின் சிகரங்களாக்கும்,
அவர்தம் உயர் கற்பனை ஒப்பற்றது.
செவிவழி கேட்கப்பட்ட,
அவர்தம் சிந்தைக் கருத்துக்கள் இரண்டினை,
கற்பார் நலம் நோக்கிப் பதிவு செய்கிறேன்.
🪔 🪔 🪔
இலக்குவனைப்பிரிந்த ஊர்மிளை,
தன் நாயகனைப் போலவே,
ஏழிரண்டு ஆண்டும் இமை மூடாது இருந்தாளாம்.
அவள் தோழி ஒருத்தி தூங்காது துவளும் இவளைக்கண்டு,
கணவன் வருமளவும் கண் மூடித்தூங்கினால்,
நலமாகுமே என்று நவின்றாளாம்.
அவட்கு ஊர்மிளை தான் உறங்காத காரணம் உரைக்கின்றாள்.
கருத்தெல்லாம் கணவன் நிறைந்திருக்கிறான்.
கண் மூடி உறங்கினால் கனா வரும்.
அக்கனாவில் கணவன் வருவான்.
இராமனுக்குக் காவல் செய்ய வேண்டிய கணவன்,
இங்கு என் கனவில் வரின்,
அவன் கடமை தவறுமன்றோ!
அதனால் தான் கண்மூடித் துயிலாது இருக்கின்றேன் என்றாளாம் அக்காரிகை.
கண்ணியம் நிறைந்த கற்பனையின் உச்சம்.
பாத்திரத்தில் நிறைவு கண்டு உயர்த்தும்,
கற்றார்தம் கற்பனை கண்டு சிலிர்க்கிறது நம் உள்ளம்.
தேடிப் பொன் கண்டார் அவர்.
தேடிப் புண் காண்கிறார் இவர்.
🪔 🪔 🪔
பதினான்காண்டுகள் முடிந்து இராம, இலக்குவர் அயோத்தி வந்தனராம்.
அவர்தமைக் காண அனைவரும் முட்டி மோத,
ஊர்மிளையோ ஓரடி கூட எடுத்து வைக்காது,
ஓரிடத்திலேயே உட்கார்ந்திருந்தனளாம்.
அது கண்ட தோழிக்கு ஆச்சரியம்!
உன் காதற் கணவன் காடேகி வந்திருக்கிறான்.
இதயம் நிறைந்தவனை ஈரேழு ஆண்டுகள் பிரிந்து,
ஏங்கித்தவமிருந்த ஏந்திழையே!
ஊரெல்லாம் ஓடுகிறது உன் நாயகனைக் காண,
நீயோ ஓய்ந்து அமர்ந்திருக்கிறாய்.
இலக்குவரைக் காணலாம் எழுவாய்!, வருவாய்! என,
அப் பாங்கி அழைக்கப் பதற்றமின்றிப் பேசுகிறாள் ஊர்மிளை,
ஈரேழு ஆண்டுகள் என் கணவனைப் பிரிந்தேனா? 
யார் சொன்னார் உனக்கு!
கண்ணிறைந்த கணவர்,
என் இதயத்தில் எப்போதும் இருந்தனரே அறியாயோ நீ?
காணாதவரை அன்றோ காணுதல் வேண்டும்.
பிரியாதவரைப் புதிதாய்ப் பேணுதலும் வேண்டுமோ?
இன்று வந்தாரென ஏங்கிச் செல்வேன் எனில்,
அவர், நெஞ்சில் பிரியாது நின்று வாழ்ந்தமை பொய்க்குமே
சென்று நீ காண்! எனக் கூறிச் சிரித்தபடி இருந்தாளாம் ஊர்மிளை.
ஓர் உயர் கல்வியாளனின் ஒப்பற்ற கற்பனை இது.
கடல் புகுந்து முத்தெடுக்கும் கைவண்ணம்.
🪔 🪔 🪔
இத்தனையும் கற்பனைகள்.
மேற் பொய்மையாளரின் வினாக்களுக்கு,
கம்பன் விடையேதும் பகர்ந்தானா?
அறிய மனம் அவாவுகிறது.
ஆழ்ந்து நோக்க அவ்விடையும் கிடைக்கிறது.
அது காண்பாம். 
🪔 🪔 🪔
அறமற்ற இராவணனின் ஆளுமையால்,
அவனுக்காய் உயிர் கொடுக்கத் துணிந்தோர் எத்தனை பேர்?
கும்பகர்ணன், இந்திரசித்தன், அதிகாயன், மண்டோதரி என,
அவர்தம் வரிசை நீளும்.
அறம் பிறழ்ந்த அவனுக்கே அங்ஙனம் எனின்,
காசில் கொற்றத்து இராமனுக்காய்,
வாழவென எத்தனைபேர் வரிசையிலே நின்றிருப்பர்.
பரத, இலக்குவ, சத்துருக்கர் சோதரர்,
குக, சுக்கிரீவ, விபீடணர் உடன்பிறவாச் சோதரர்,
இவர் தவிர சபரி, சடாயு என வேறும் பலர்,
இராமனுக்காய் தம் வாழ்வை அர்ப்பணிக்க,
ஏங்கித் தவமிருந்தனர்.
கம்பன் இத் தியாகிகள் வரிசையின் சிகரம் தொட்டுக்காட்ட,
நம்மை யுத்தகாண்டத்திற்கு அழைத்துச் செல்கிறான்.
🪔 🪔 🪔
வனவாசம் முடிந்து இராமனாதியோர் அயோத்தி வருகின்றனர்.
அவர்தம் வருகையால் ஊர்மக்கள் உவந்து சிலிர்க்கின்றனர்.
கட்குடியர் ஆடை சோர நின்றாற் போல் அந்நகரத்தார்,
உவகை தோன்றி உடல் பூரித்ததாலும், துள்ளிக் குதித்ததாலும்,
தம் ஆடை சோர நின்றனர் என்றான் கம்பன்.

வாங்குதும் துயில்கள் என்னும் மன மிலர் கரத்தில் பல்கால்
தாங்கினர் என்ற போதும் மைந்தரும் தையலாரும்
வீங்கிய உவகை மேனி சிறக்கவும் மென்மேல் துள்ளி
ஓங்கவும் களிப்பால் சோர்ந்த உடையிலாதாரை ஒத்தார்.
(கம்ப. பால: 10, 301)
🪔 🪔 🪔
இவ்விடத்தில் தான் கம்பன், மேற் குதர்க்கவாதிகளுக்கு,
குறிப்பால் ஒரு விடை இறுக்கின்றான்.
இராமன் காடு சென்ற நாளிலிருந்து மனம் மகிழ்ச்சியில்லாததால்,
தம் கணவரைக் கூடாது வேறிடத்திருந்த,
பிறை போன்ற நெற்றியையும், கைவளையையும் உடைய,
அயோத்தி மாதர்,
இராமன் வந்த செய்தி அறிந்ததும்,
நீண்ட காலம் பிரிந்திருந்த தம் கணவர் உயிர்க்கு கலகம் பிறக்கும் வண்ணம்,
அணிகலன்களால் தம் உடல்களை நிறைத்து,
தம் உடலை மறைத்தனர்.

இறைப் பெரும் செல்வம் நீத்த ஏழிரண்டாண்டும் யாரும்
உறைப்பிலர் ஆதலானே வேறிருந்து ஒழிந்த அன்னார்
பிறைக் கொழுந்தனைய நெற்றிப்  பெய்வளை மகளிர் மெய்யை
மறைத்தனர் பூணின் மைந்தர் உயிர்க்கொரு மறுக்கம் தோன்ற.
  (கம்ப. பால: 10, 303)
🪔 🪔 🪔
கம்பனின் இப்பாடல் நமக்கு வியப்புத் தருகிறது.
இராமனின் உடன் பிறந்தவர்களும் உற்ற நண்பர்களும்,
அவனுக்காய் அனைத்தையும் தியாகம் செய்யக் காத்திருந்ததை,
கம்பன்தன் காதையுள் அறிந்தோம்.
அவர்தம் தியாகத்தைக் கடுகளவாக்கி,
இராமனை அரிதாய்க் கண்டு வந்த,
அந்நாட்டு இல்லறத்தார் கூட இராமன் காடேகிய பின்,
உடற்சுகம் துறந்து ஒப்பற்ற தவ வாழ்க்கை வாழ்ந்தனர் என்கிறார் கம்பர்.
இச்செய்தி நமக்கு எல்லையற்ற வியப்புத் தருகிறது.
ஒரு தேசமே இராமன் பிரிவால் வாடி,
முனிவர்கட்கும் அடக்க அரியதான,
காம இன்பத்தையும் கடிதிற் துறந்ததென்றால்,
இராமனின் சத்திய ஈர்ப்பின் சக்தியை உணர்கிறோம் நாம்.
இராமன் காட்டில் தாழிரும் சடைகள் தாங்கி,
தாங்க அரும் தவ வாழ்க்கை வாழ,
பிள்ளையைப் பிரிந்த பெற்றோராய்,
ஊர் முழுதிருந்த இல்லறத்தார்,
தம் இல்லற சுகத்தையே துறந்தனர் என்றால்,
இராமன் உடன்  இருந்த இலக்குவனும் அவன் தன் மனையாளும்,
காட்டிய துறவு எம்மட்டு?
இவ் இல்லறத்துறவை இயல்பாய் ஏற்று நின்ற,
இலக்குவனதும், ஊர்மிளையினதும் ஒப்பற்ற உயர் தியாகத்தை,
அறியாதார் அறியாதாரே!
🪔 🪔 🪔

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்