'கம்பனில் உளவியல் கூறுகள்': பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் கம்பனின் பெருமையை உரைக்கத் தலைப்பட்ட பாரதி,
கல்வி சிறந்த தமிழ்நாடு என உரைத்து,
அதற்குச் சான்றாய், கம்பன் அங்கு பிறந்தமையை எடுத்துக்காட்டுகிறான்.
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு,
கல்வியிற் பெரியன் கம்பன்
என்பது நம் கற்றோர்தம் முடிவுமாம்.
இவ் உண்மைகளை உணர்ந்து கம்பனை நோக்க,
கம்பன்தன் விரிந்த கல்விப்புலமை தெற்றெனப் புலனாகும்.
பலவாய் விரிந்த கல்விக்கூறுகளுள்,
கம்பன், தன் ஆழ்ந்த புலமையை நிலைநாட்டியுள்ளான்.
கம்பனின் வியத்தகு புலமை வெளிப்படும் கல்விக்கூறுகளுள்,
உளவியல் கூறும் ஒன்றாம்.
heart heart heart
கதைப்போக்கில் கம்பன் வெளிப்படுத்திய,
உளவியல் கூறுகள் பல உள.
பாத்திர அமைப்பிலும், உரையாடல்களிலும்,
கம்பன் பதித்துள்ள உளவியல் நுட்பங்களை அறியின்,
எவரும் வியப்புறுவர்.
அந்நுட்பங்கள்  கட்டுரையாயன்றி ஒரு நூலாய் விரிக்கத்தக்கன.
இக்கட்டுரையில்,
இராமகாவியத்தில் கம்பன்  இலக்கியச்சுவையோடு கையாண்ட,
உளவியல் நுட்பங்கள் சிலவற்றை,
குறித்த ஒரு காட்சியில் மட்டும் வைத்துக் காண்போம்.
heart heart heart
கம்பன் மனித மனப்பாதிப்புக்கள் சிலவற்றையும்,
அம்மனப்பாதிப்புக்களை நீக்குவதற்கான,
மென்மையான மானுடத்தன்மையுடன் கூடிய இயல்பு வழிமுறைகளையும்,
மனஉணர்ச்சியால் விளையும் சில பண்பாட்டு அம்சங்களையும்,
தன்காவியத்தில் அற்புதமாய்ப் பதிவுசெய்துள்ளான்.
அப்பதிவுகள் நம்மூதாதையரின் உளவியல் அணுகுமுறைகளை,
மிகத்தெளிவாய் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
இனி அவற்றைக் காண்பாம்.
heart heart heart
வாழ்வில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்களால்,
நாம் நிலைகுலைந்து விடுகிறோம்.
நமக்கு ஏற்பட்ட அந் நிலைகுலைவை, 
நம்மைச் சார்ந்தார்க்கும் உருவாக்கிவிடுகிறோம்.
வேறு சிலவேளைகளில் நாம் தளர்வுறாதபோதும்,
நம்மேல் அன்புகொண்டோர்,
தாம் அடையும் அளவுக்கதிகமான உணர்ச்சிவயப்பாட்டை,
நம்மில் தொற்ற வைத்து,
தாம் அடையும் நிலைகுலைவை எமக்கும் ஏற்படுத்தி விடுகின்றனர்.
heart heart heart
பிரச்சினைகள் வரும்போது உணர்ச்சிவயப்பாடு ஏற்படுகிறது. 
அவ்வுணர்ச்சி வயப்பாட்டால் அறிவு குன்றுகிறது. 
இவ்வாறான நேரங்களில்,
நாம் நம் அமைதியைப் பெரிதும் சீர்குலைத்துக் கொள்கிறோம்.
எனவே இச்சந்தர்ப்பங்களில் நாம் உணர்ச்சிக்கு அடிமையாகாமல்,
நிதானித்துப் பிரச்சனையைத் தெளிவுற அணுகவேண்டும்.
நம்மைச் சார்ந்தாரையும் பிரச்சினையைத் தெளிவுற அணுகச்செய்ய வேண்டும். 
heart heart heart
உறவு நிலைப்பட்டோர், 
ஒருவரையொருவர் உணர்ச்சிநிலைக்கு ஆளாக்காமல்,
பிரச்சினைகளை எதிர்கொண்டு நிதானிக்கச்செய்து,
தெளிவான அறிவோடு அதனைக் கையாளின்,
நம்மைச்சூழ்ந்த பிரச்சினைகள் பனிபோல் விலகும்.
இங்ஙனம் உறவுநிலைப்பட்ட இரு பாத்திரங்கள்,
பெரும் பிரச்சினை தாக்கியபோது,
ஒருவரையொருவர் தெம்பு செய்து சமநிலைப்படுத்தியதாய்,
கம்பன் அமைத்த உளவியல் சார்ந்த,
ஓர் அற்புதமான காட்சியைக் காண்போம். 
heart heart heart
நிலையாமைபற்றி ஏற்பட்ட திடீர்மனநிலையால்,
தசரதன் ஆட்சியைத்துறக்க முடிவு செய்கிறான். 
தனக்குப் பின் ஆட்சிப்பொறுப்பேற்கத் தக்கவன் இராமனே என நினைந்து,
அக்கருத்தை தக்காரோடு ஆராய்ந்து உறுதி செய்கிறான்.
மறுநாளே இராமனுக்கு முடிசூட்டுவிழா என்று முடிவாகிறது.
அச்செய்தி ஊர் முழுதும் பரவுகிறது. 
முடிசூட்டுவிழாச் செய்தியறிந்த கூனி,
இராமன்மேற் கொண்ட பழைய பகையால் சினந்து,
சூழ்ச்சியால் கைகேயியின் மனம்மாற்றி,
பரதன் நாடாளவும் இராமன் காடேகவும்,
தசரதனிடம் வரம் கேட்பிக்கச் செய்கிறாள்.
heart heart heart
தன் பிடிவாதத்தால் கைகேயி,
தசரதனிடம் அவ்வரத்தைப் பெற்றுக்கொள்ள,
வரமீந்த தசரதன் மயங்கிச் சரிகிறான்.
இவையனைத்தும் ஓர் இரவிலேயே நடைபெறுகின்றன. 
heart heart heart
மறுநாள் காலை,
தசரதன் வரம் கொடுத்தது அறியாது,
இராமனின் முடிசூட்டுவிழாவுக்கான ஆயத்தங்களை,
வசிட்டர் முதலியோர் செய்கின்றனர்.
முடிசூட்டுவிழாவுக்கான புனிதநீராட்டுதலுக்கு,
இராமனைத் தயார்படுத்திய அவர்கள்,
தசரதனின் வருகை தாமதமாகவே,
மந்திரியாகிய சுமந்திரனை,
சக்கரவர்த்தியை அழைத்துவரும்படி அனுப்பிவைக்கின்றனர். 
தேடிவந்த சுமந்திரனிடம்,
தசரதச் சக்கரவர்த்தி இராமனை அழைத்து வரும்படி உத்தரவிட்டதாய்,
கைகேயி கூற,
அவ் உத்தரவை ஏற்று இராமன் கைகேயியிடம் வருகிறான்.
கம்பன் உளவியல் நுட்பங்களைப் பதிவு செய்யும் காட்சிகளில் இதுவும் ஒன்று.
heart heart heart
கைகேயியைத் தாயாய் நினைந்து,
பணிவுடன் வந்து நிற்கும் இராமனைக் காண,
முன்னர் இராமன் மேல் பாசம் பதித்திருந்த,
கைகேயியின் மனம் தடுமாறுகிறது.
தான் எல்லையற்ற அன்பு கொண்டிருந்த இராமனை,
'காடுபோ!' என நேரடியாய்ச்சொல்ல முடியாமல் அவள் தவிக்கிறாள்.
மனநிலையில் குற்றவுணர்ச்சி உள்ளார்க்கு நேர்படப்பேசும் திறனும்,
தெளிவுறப்பேசும் திறனும் அற்றுப்போம் எனும்,
உளவியல் உண்மையைக் கம்பன் இவ்விடத்தில் தெளிவுபடுத்துகிறான்.
heart heart heart
 'பரதன் நாடாள நீ காடு ஏகு' 
இராமனிடம் கைகேயி சொல்லவேண்டிய செய்தி இவ்வளவே.
குற்றவுணர்ச்சி காரணமாக கைகேயியால் இச்செய்தியைத்,
தெளிவாகவும் நேரடியாகவும் சொல்லமுடியவில்லை.
அவள் படும் சங்கடத்தினை,
கம்பன் எடுத்துக் காட்டும் அழகு வியக்கத்தக்கது.
heart heart heart
ஆழிசூழ் உலகமெல்லாம் என மெல்ல இழுத்து,
பின் பரதனே ஆள எனத் தயங்கி, 
விடயத்திற்கு வருகிறாள் கைகேயி.
இனி இராமனைக் காடுபோகச் சொல்லவேண்டும்.
வரத்தினால் பரதனுக்கு ஆட்சியுரிமையைப் பெற்ற கைகேயி,
அச்செய்தியை ஓரளவு தயங்கிச் சொல்லிவிடுகிறாள்.
இராமனைக் காடுபோகச்சொல்வது எவ்விதத்திலும் நியாயமில்லை என,
அவள் உள்மனதுக்குத் தெரிகிறது. 
அதனால், அச்செய்தியை நேரே சொல்லமுடியாமல் தயங்கித் தயங்கி,
வேறு எதனையோவெல்லாம் சொல்லித் தடுமாறுகிறாள் அவள்.
heart heart heart
நீ போய் தாழிரும் சடைகள் தாங்கி,
தாங்கரு தவமேற்கொண்டு,
பூழிவெங் கானம் நண்ணி,
புண்ணியத்துறைகள் ஆடி
என,
வார்த்தைகளைத் தேவையன்றிக் கோர்த்தாலும்,
சொல்லவேண்டிய விடயத்தை,
வெளிப்பட அவளால் சொல்லமுடியவில்லை.
குற்றவுணர்வால் அவள் மனம் தடுமாறுகிறது. 
ஏயவரங்கள் இரண்டில் ஒன்றினால் 
என் சேய் உலகாள்வது,
சீதை கேள்வன் போய் வனமாள்வது
என,
காலவரையறையின்றி இராமன் காடு ஏக,
தசரதனிடம் தான் கேட்ட வரத்தை,
பாசத்தோடு நிற்கும் இராமனிடம் சொல்ல முடியாமல்,
மனம் தடுமாற,
இராமன் காட்டில் வதியும் காலத்தை,
வரையறைப்படுத்துகிறாள் கைகேயி.
heart heart heart
ஏழிரண்டாண்டில் என,
இராமன் காட்டில் வதியும் காலத்தை,
வரையறை செய்த பின்பும்,
குற்றவுணர்ச்சியால் அவள் மனம்,
இராமனைக் காடுபோ! எனச்சொல்லத் தயங்குகிறது.
போ! எனச் சொல்ல விழைந்தவள்,
வா! எனச்சொல்லித் தடுமாறுகிறாள். 
ஏழிரண்டாண்டில் வா என,
அவளையறியாது அவள் வாயிலிருந்து,
வார்த்தைகள் வந்து வீழ்கின்றன.
heart heart heart
இப்போது அவளின் குற்றவுணர்ச்சி மேலும் அவளைத் தாக்குகிறது.
குற்றவுணர்ச்சிக்கு உட்பட்டார் தன்பிழையை மற்றொருவரில் ஏற்றி,
அமைதிகாண முனைவது இயல்பு.
அவ் உளவியல் இயல்புக்கேற்ப கைகேயியும்,
வீணே தசரதன் மேல் பழி சுமத்துகிறாள்.
என்று இயம்பினன் அரசன் என்றாள் என,
தன் உரையை முடிக்கின்றாள்.
இவ்விடத்தில் கம்பன்,
குற்றவுணர்ச்சிக்கு ஆளான மனநிலையுடைய ஒருவரின்,
வார்த்தைத் தடுமாற்றத்தையும், மனக்குழப்பத்தையும்,
அற்புதமாக நமக்கு அமைத்துக்காட்டி விடுகிறான்.

ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீபோய் 
தாழிரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற்கொண்டு 
பூழிவெங் கானம்நண்ணி புண்ணியத்துறைகள் ஆடி
ஏழிரண்டாண்டில் வா என்றியம்பினன் அரசன் என்றாள். (கம்ப 1601)

heart heart heart

தொடரும்...

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்