'கம்பனில் உளவியல் கூறுகள்' - நிறைவுப் பகுதி: -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர் பண்பாளனான  இராமன் மேற்கொண்ட,
இந்நான்கு சந்திப்புக்களில் கோசலை சந்திப்பினை,
உளவியல் நோக்கோடு சற்று விரியக் காண்பாம்.
அச்சந்திப்பில் கோசலையைச் சமன் செய்ய,
இராமன் கையாண்ட உளவியல் உத்திகளையும்,
அவனுக்கு நிகராகக் கோசலை iயாண்ட உளவியல் உத்திகளையும்,
வரிசையாய்த் தொடர்ந்து காண்போம். 

📗  📗  📗
முதல் சந்திப்பு.
கோசலையின் அரண்மனை.
உள்ளுணர்ச்சி தந்த மனக்குழப்பத்துடன் வீற்றிருக்கிறாள் கோசலை.
அவள்முன் வருகிறான் இராமன்.
குழைக்கின்ற கவரியின்றி கொற்றவெண் குடையுமின்றி, 
தன்முன் வரும் இராமனை
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் காண்கிறாள்.
உடன் அவள் மனம் சூழ்நிலையைக் கணக்கிடுகிறது.
இராமனைப் பெற்றவள் அல்லவா?
மூப்பின் காரணமாகவும், அன்பின் காரணமாகவும்,
கோசலை தளர்வுறுவாள் என்று நினைத்தான் இராமன்.
ஆனால், கோசலையோ அவனை விஞ்சியவளாய்,
மனத்தடுமாற்றமின்றி உறுதியோடு செயற்பட நினைக்கிறாள்.

📗  📗  📗
மைந்தனோ இளைஞன்.
ஒருவேளை அவன் திடீர்ச்சூழ்நிலை மாற்றங்களால் பாதிப்புறலாம்.
எனவே அவனை இந்நேரத்தில் தெம்பூட்டவேண்டும் என நினைக்கிறாள் கோசலை.
தாயைச் சமாதானம் செய்ய நினைக்கிறான் மகன்.
மகனைச் சமாதானம் செய்ய நினைக்கிறாள் தாய்.
சோதனைக் காலத்தில் மனத்தளர்வு எய்தாமல் ஒருவரை நிதானப்படுத்த,
எங்ஙனம் உரையாடல் வேண்டும் என்பதற்கு இலக்கணமாய்,
அவ்விருவர் தம் உரையாடலும் அமைகிறது.

📗  📗  📗
இராமனைக் கண்டதும் கோசலை வார்த்தையேதும் பேசாமல்,
சூழ்நிலையைக் கொண்டு நிகழ்ந்ததை ஓரளவு உய்த்துணருகிறாள்.
இந்த நேரத்தில் இராமன் முடிசூட்டி இருக்கவேண்டும்.
ஆனால், அவன் தலையில் முடி இல்லை.
ஒருவேளை முடிசூட்டுமுன் தன்னிடம் ஆசிபெற வந்திருப்பானோ?
அங்ஙனமாயின் முடிசூட்டுதலின் முன்னான,
அபிடேகமாவது முடிந்திருக்க வேண்டுமே? என நினைந்து,
இராமனின் தலைமுடியைக் கவனிக்கிறாள் கோசலை.
அது நீரால் நனையாமல் காய்ந்து கிடக்கிறது.
அங்ஙனமாயின் முடிசூட்டு விழாவுக்கு ஏதோ இடையூறு நிகழ்ந்துவிட்டது என,
தெளிவுற உணர்கிறாள் அவள்.
புனைந்திலன் மௌலி குஞ்சி மஞ்சனப் புனித நீரால்
நனைந்திலன் என்னும் ஐயத்தாள்
   (கம். 1607)

📗  📗  📗
அவள் புத்தி நிதானிக்கிறது.
முடிசூட்டு விழா தடைப்பட்டதால், 
இராமன் தளரக்கூடாது எனக்கருதி,
தன்னை வந்து வணங்கிய இராமனை,
முதலில் குழைந்த சொற்களால் வாழ்த்துகிறாள்.
குழைந்த சொற்களால் வாழ்த்தும் அவள் நோக்கம்,
இராமனை அன்பால் ஈர்த்து தெம்பூட்டுவதே !
ஒருவரைத் தெம்பூட்டுமுன்,
அவர்பால் நாம் கொண்ட அன்பை மிகைபட வெளிப்படுத்தின்,
அவ் அன்பு வார்த்தைகளால் ஈர்ப்புண்டு அவர் விரைவில் தெம்படைவர்.
இவ்வுளவியல் உண்மை உணர்ந்து,
குழைந்து வாழ்த்துகிறாள் கோசலை.
நளின பாதம் வனைந்த பொன் கழற்கால் வீரன்
வணங்கலும் குழைந்து வாழ்த்தி

📗  📗  📗
பின், நெகிழ்ந்து நிற்கும் மைந்தனை நோக்கி,
நினைந்தது என்? இடையூறு உண்டோ?
நெடுமுடி புனைதற்கு
என மெல்ல வினவுகிறாள்.
கோசலையின் இக்கேள்வி மிகநுட்பமானது.
என்ன நடந்தது எனும் கேள்விக்குப் பதில் கூறுமுன்,
மற்றொரு கேள்வியையும் அதனுடன் இணைக்கிறாள்.
முடிசூட்டு விழாவுக்கு இடையூறு ஏதும் நிகழ்ந்ததோ?
எனும் அவளின் அடுத்த கேள்வியில்,
'உன் தனி உயர்வு தாழ்வு முக்கியமில்லை.
முடிசூட்டுவிழா தேசத்தின் விழா.
அதற்கு ஏதேனும் இடையூறு நிகழ்ந்தால்,
அதுபற்றிக் கவலைப்படுவதே உன் முதற்கடமை.
நீ தனிமனிதன் அல்லன். 
இத்தேசச் சக்கரவர்த்தியின் மைந்தன்.
ஆதலால் தேசம் பற்றிய சிந்தனைக்கே நீ முதலிடம் தரவேண்டும்,'

எனும் குறிப்பு தொக்கி நிற்கிறது.

📗  📗  📗

தாய் தன்னைத்தேற்ற முனைகிறாள் என்பதை உணர்கிறான் இராமன்.
நிகழ்ந்ததைக் கூறுமுன்,
அவளைத் தான் தேற்ற வேண்டும் என முடிவு செய்கிறான்.
எந்தத் தேசப்பற்றை முன்னிலைப்படுத்தி,
தாய் தன்னைத் தேற்ற நினைந்தாளோ,
அதே தேசப்பற்றை தானும் முன்னிலைப்படுத்தி,
தாயை மெல்லத்தேற்ற முனைகிறான்.
'முடிசூட்டு விழாவுக்கு எந்த இடையூறும் இல்லை.
நின் காதலுக்குரிய குற்றமில்லாத குணமுடைய திருமகன்,
பரதன் முடிசூட்டுகிறான்'
என்கிறான்.
மங்கை அம்மொழி கூறலும் மானவன்
செங்கை கூப்பி நின் காதல் திருமகன்
பங்கமில் குணத்து எம்பி பரதனே
துங்கமாமுடி சூடுகின்றான் என்றான். 
(கம். 1608)

📗  📗  📗
இராமனின் இப்பதிலும் நுட்பமானது.
முடிசூட்டுவிழாவுக்கு இடையூறு இல்லை என்பது,
அவன் சொல்லும் முதற்செய்தி.
அச்செய்தியை மிகநுட்பமான உளவியல் முறையுடன்,
அவன் உரைக்கத் தலைப்படுகிறான்.
முடிசூடப்போகிறவன் நின் அன்புக்குரிய,
குற்றமில்லாத, குணமுடைய பரதன்.
அவனும் நின் அன்புக்குரிய மகனே ஆதலால்,
நின் மகனுக்கு முடிசூட்டப்படவில்லையென,
நீ கவலையுறுதல் ஆகாது எனும் குறிப்பு,
இராமன் கூற்றில் அமைந்து கிடக்கிறது.

📗  📗  📗
இப்போது கோசலைக்கு நிகழ்ந்தது ஓரளவு புரிகிறது.
ஏலவே ஏதேனும் தீமை நிகழுமோ என மனம் குழம்பி இருந்த அவள்.
இராமனுக்கோ, தசரதனுக்கோ ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடாதது பற்றி,
இச்செய்தியால் சற்று ஆறுதலுறுகிறாள்.
இராமனுக்கு முடியில்லை எனும் செய்தி மனதை ஓரளவு தைக்கினும்,
அதைப் புறக்கணித்து,
முறைமை தவறும் என்பதைத் தவிர வேறொன்றில்லை.
பரதன் நிறைகுணத்தவன், நின்னை விடக்கூட நல்லவன்,
ஆதலால் அவனுக்கு முடிசூடுதல் நன்றே என்கிறாள்.
முறைமை அன்று என்பது ஒன்று உண்டு மும்மையின்
நிறை குணத்தவன் நின்னினும் நல்லனால் குறைவிலன்
  (கம்.1609)

📗  📗  📗
இந்நிகழ்வின் பின் ஏதோ சூழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது.
அதனால் இராமன் பாதிப்புறக்கூடாது என நினைந்த கோசலை,
தொடர்ந்து அவனைத் தெம்பூட்டுமாப்போல் பேசுகிறாள்.
மன்னவன் எதைச்சொன்னாலும்,
மறுக்காமல் அதனைச் செய்தலே உனக்கு அறன்.
தம்பிக்கு ஆட்சியை தந்தை கொடுக்கச்சொன்னால்,
உடன் அதைக்கொடுத்து தம்பியுடன் ஒன்றி ஊழிபல வாழி என்கிறாள்.
என்று பின்னரும் மன்னவன் ஏவியது 
அன்று எனாமை மகனே உனக்கு அறன்
நன்று நும்பிக்கு நானிலம் நீ கொடுத்து
ஒன்றி வாழுதி ஊழி பல என்றாள் 
(கம்.1610)

📗  📗  📗
தாய் தன்னைத் தேற்ற நினைப்பது அறிந்து இராமன் மனம்நெகிழ்கிறது.
கைகேயியின் இரண்டாம் வரத்தினை அறிந்தால்,
தன்மேல் எல்லையற்ற பாசம் கொண்டவளான தாய்,
பெரிதும் அதிர்வாள் என நினைந்து,
தான் காடேகும் செய்தியைச்சொல்ல,
தாய் தன்னிடம் சொன்ன கூற்றினையே,
கருவியாய்ப் பயன்படுத்த நினைக்கிறான் இராமன்.
தாயே! சக்கரவர்த்தி என்னை நன்னெறியில் உய்ப்பதற்கு,
மற்றுமோர் உத்தரவைப் பணித்திருக்கிறார்.
எனச்சொல்லி நிறுத்துகிறான்.
தாய் உரைத்த சொல் கேட்டுத் தழைக்கின்ற
தூய சிந்தை அத்தோம் இல் குணத்தினான்
நாயகன் எனை நன்னெறி உய்ப்பதற்கு
ஏயது உண்டு ஓர் பணி என்று இயம்பினான்
  (கம். 1611)

📗  📗  📗
அதிர்வுச் செய்திகள் பல இருப்பின்,
அவற்றை ஒருங்கே உரைக்காமல்,
கேட்பவர் மனதைத் திண்மைப்படுத்தி,
ஒவ்வொன்றாய் உரைத்தல் வேண்டும் என்பது,
உளவியல் நுண்மை.
இவ்விடத்தில் கோசலை - இராமன் உரையாடலில்,
இவ் உளவியல் நுட்பத்தை இராமன் கையாளும் திறத்தை,
கண்டு வியக்கிறோம் நாம்.

📗  📗  📗
கோசலை இராமன் உரையாடல் தொடர்கிறது.
தசரதன் சொன்ன மற்றொரு உத்தரவு உண்டு என இராமன் கூறியதும் 
அவ் உத்தரவு யாது? எனக் கேட்கிறாள் கோசலை.
இராமன் மிக நுட்பமாக,
தன்னைத் தண்டிக்க தசரதனிடம் கைகேயி வாங்கிய வரத்தை,
தன்னை நல்வழிப்படுத்தத் தசரதன் தந்துதவிய உத்தரவாய்,
உயர்த்தி உரைக்கிறான்.
அன்னையே! பதினான்கு ஆண்டுகள்,
மாட்சிமைப்பட்ட தவத்தாரோடு காட்டில் வைகி பயனுற்று,
நீ மீண்டு வரவேண்டும் என்பதே அவ் உத்தரவு என்கிறான்.
ஈண்டு உரைத்த பணி என்னை? என்றவட்கு
ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை,
மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின்,
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் என்றான்
(கம். 1612)

📗  📗  📗
இவ்விடத்திலும் இராமனின் உரையாடலில்,
உளவியல் நுட்பங்கள் பலவற்றைக் கம்பன் பதிவு செய்கிறான்.
தான் பதினான்காண்டுகள் காடு செல்ல வேண்டும் என உரைப்பின்,
கோசலையின் மனம் அதிரும் எனக் கருதிய இராமன்,
காடேகும் காலம் சுருக்கமாய்த் தெரிவதற்காய்,
அக்கால எல்லையை இரண்டாய்ப் பிரித்து,
ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், என உரைக்கிறான்.
வனம் தனிமையானது.
அங்கு இராமன் சென்றால் துணையின்றி தனிமையுறுவான் என,
கோசலை மனம் வருந்தும் எனக் கருதும் இராமன்,
கானகத்தில் தான் தனியே இருக்கப்போவதில்லை
மாண்புடைய பெரிய தவத்தோருடன் தான் வாழப்போகிறேன்,
இதுவே தந்தையின் கட்டளை என்கிறான்.
மாண்ட மா தவத்தோருடன் வைகி, 
அதுமட்டுமன்றி, தந்தை தன்னை,
கானகத்தில் நிரந்தரமாய் இருக்கச் சொல்லவில்லை.
திரும்பி வரவே சொல்லியிருக்கிறார் எனவும் உரைத்து,
கோசலையின் மனதை ஆற்ற முயல்கிறான்.
மீண்டு நீ வரல் வேண்டும் என்றான் 
இங்ஙனமாய், தான் சொல்லும் அதிர்வுச் செய்தி,
கோசலையின் மனதைப் பாதிக்காத வண்ணம்,
உளவியல் நுட்பங்களோடு இராமன் உரைக்கும் விதம் அற்புதமானது.

📗  📗  📗
இராமன் காடேகும் செய்தியில் கோசலையின் நிதானம் குலைகிறது.
அதுவரை அந்த அதிர்வுச் செய்திகளைத் தாங்கி நிதானித்து நின்றவள்.
மைந்தனைப் பிரிதல் வேண்டும் எனும் நினைவால் வாடி வருந்துகிறாள்.
ஆங்கு, அவ் வாசகம் என்னும் அனல், குழை
தூங்கு தன் செவியில் தொடராமுனம்,
ஏங்கினாள் இளைத்தாள் திகைத்தாள் மனம்
வீங்கினாள் விம்மினாள் விழுந்தாள் அரோ
  (கம்.1613)
அத்தளர் நிலையிலும் தன் கணவனை,
இழித்துரைக்காத அப்பெரு நங்கை,
இங்ஙனமாய் அரசர் உன்னைக் காடேகச் சொல்ல,
நீ செய்த தவறுதான் என்ன? என்று,
இராமனை அதட்டுகிறாள்.
அன்பு இழைத்த மனத்து அரசர்க்கு நீ
என் பிழைத்தனை? 

அக் கேள்வியிலும் தசரதனை
அன்பு இழைத்த மனத்து அரசர்க்கு என,
உயர்த்தியே பேசும் கோசலையின் கணவன் மீதான பற்று,
நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

📗  📗  📗
நிறைவில் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி,
இராமனிடம் வேண்டி முடிக்கிறாள் கோசலை.
தந்தையின் தவவாழ்வுக்கு உதவுவதே நின் கடன் என உரைத்து,
அவள் கோரிக்கையை ஏற்க மறுக்கிறான் இராமன்.
ஒன்றும் செய்யமுடியாத கோசலை தசரதனிடம் கேட்டு,
இராமன் காடு செல்லாமல் காப்பேன் என நினைந்து,
கைகேயியின் அரண்மனைக்குச் செல்கிறாள்.

📗  📗  📗
இவ்விடத்திலும் கம்பன்,
ஓர் உளவியல்சார் உண்மையை மீண்டும் பதிவு செய்கிறான்.
வந்த துன்பம் ஒன்று, அதைவிடப் பெரும் துன்பம் வர நீங்கிப்போம்.
இவ் உண்மையை இவ்விடத்தில் காட்டுகிறான் கம்பன்.
இராமன் காடேகும் துன்பமுற்றான் என வருந்திய கோசலை,
தசரதனின் துணை பெற்று அதனை நீக்க நினைந்து அவனிடம் வருகிறாள்.
அங்கோ,
தசரதன் உயிர்க்குப் போராடிக் கிடக்கிறான்.
அவனைக் கண்ட கோசலை,
கணவன் மேற்கொண்ட பெருங்காதலால் அதிர்ந்து போகிறாள்.
மகனுக்காய், கணவனைத் துணைக்கு அழைக்க வந்தவள்,
கணவனுக்காய் மகனைத் துணைக்கு அழைத்துக் கதறுகிறாள்.
மின் நின்றனைய மேனி வெறிதாய்விட நின்றதுபோல்
உன்னும் தகைமைக்கு அடையா உறுநோய் உறுகின்று உணரான்
என் என்று உரையான் என்னே இதுதான் யாது என்று அறியேன்
மன்னன் தகைமை காண வாராய் மகனே என்னும் 
(கம். 1638)

📗  📗  📗
கோசலை இராமன் சந்திப்பில்,
கம்பன் பதிவு செய்யும் உளவியல் நுட்பங்களைக் கண்டு மகிழ்ந்தோம்.
இது போலவே இலட்சுமணனுடனான சந்திப்பில்,
அவன் கோபத்தைத் தணிக்க,
இராமன் கையாண்ட உளவியல் உத்திகளை,
எனது 'செல்லும் சொல்வல்லான்' எனும் நூலில்,
வெளியாகியிருக்கும் அதே பெயரிலான கட்டுரையில் விவரித்துள்ளேன்.
இராமனின் மற்ற இரு சந்திப்புக்களும் கூட,
உளவியல் நுட்பங்கள் பொதிந்தவையே.
இச்சந்திப்புக்கள் தவிரவும் இராமாயணம் முழுவதுமாக,
பல காட்சிகளூடும், பாத்திரங்களூடும் பல உளவியல் நுட்பங்களை,
கம்பன் கையாளும் திறம் கற்றாரை வியக்க வைப்பது.
முன் சொன்னாற்போல,
ஒரு முழுமையான நூலுக்குரிய விடயங்களை,
கம்பன் காவியத்துள் காணலாம்.
காலமும், வாய்ப்பும் பொருந்தின் அந்நூலை எழுத முயல்வேன்.
இராமாயணத்தில் ஆர்வம் கொண்ட மற்றவர்களும் கூட,
இம்முயற்சியில் ஈடுபடலாம்.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்