'கை கழுவுதல்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

ந்த வாரம் என்னமோ கவிதையின் மடியில் கண்ணயர விருப்பம் மிகுந்து கொண்டது.
அதற்குக் காரணம், மாணவர்களுக்கு இணைய வழியாக ஈழத்துக் கவிதை கற்பிக்க வேண்டியிருந்ததுதான். குறிப்பாக, நீலாவணன் கவிதை.
 
எனக்குப் பிடித்த கவிஞர்களுள் பிரதானமான ஒருவர் நீலாவணன். 
ஈழத்து நவீன கவிதையின் கிழக்கிலங்கை அடையாளம் அவர். ஆம் மண்ணுக்கேயுரிய கிராமத்து வாசம் குலையாத வரிகள் அவருடையவை.
 
சில விமரிசகர்களைப் போல, மாக்ஸியக் கவிஞர் என்றால் மகத்தான படைப்பாளி, இல்லை! இல்லை! ஆத்மார்த்தக் கவிஞர் என்றால்தான் அருமை – என்று கட்சி கட்டவெல்லாம் எனக்குத் தெரியாது.
நல்ல மணம் எங்கிருந்து வந்தாலும், அங்கு சாப்பிடக் கைகழுவுபவன் நான்.
கோட்பாடெல்லாம் குசினிக்கு வெளியேதான்.

படைப்பின் அழகிய நுனி கசங்காத எந்த வரியும் எனக்கு உவப்பானதே.
அப்படி உவப்பை மிகுதியாகத் தரும் ஒரு கவித் தச்சன்தான், நீலாவணன். 
அவன், செதுக்கல்களில் ஒளிரும் சொற்படைப்புகள் முப்பரிமாணம் கொண்டவை. மனசுக்குள் காட்சி விரிக்கும் வல்லமை கொண்டவை.

இந்த வாரம், அவன் சுரங்கத்துள் நுழைந்தபொழுது, எனக்கு முதலில் தெரிந்த புதையல் இதுதான்.  

கூத்தாடிகளே, விரைவா யாடுங்கள்
கூதல் போகக்குதித்து - வேர்த்துக்
கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்!

கிழக்கிலங்கை, கூத்துக் கலைக்குப் பேர் போனது. இக்கலையை வைத்து, வாழ்க்கையின் யதார்த்தத்தைப் படம் பிடிக்கிறான் கவிஞன்.
ஏன் விரைவாய் ஆடுங்கள் என்று, கூத்தாடிகளுக்குச் சொல்கிறான்? என்று பார்த்தால், 
விடிந்தால்... வேஷம் கலைந்தால் - உங்கள் 
வெட்டிய ஒட்டிய வேலைகள் மழுங்கும்!
என்பதற்காகச் சொல்கிறான். வெளிச்சம் வந்து விட்டால், வேஷங்கள், நடிப்புகள் விளங்கி விடும். ஆதனால் விரைவாக ஆடுங்கள் என்கிறான் கவிஞன்.

வேஷம் விளங்கிவிட்டால் என்ன! தலையா முழுகிவிடும் என நாம் நினைக்கலாம்.

ஆதைவிட மோசமாகவல்லவா போய்விடும். ஆமாம், தருமனுக்காக வேஷம் கட்டியவன் யார் தெரியுமா? அவன், உண்மையில் ஒரு போக்கிரி. நாடக மேடையில் மட்டும்தான் அவன் தருமன். 
இப்படித்தான் ஒவ்வொரு பாத்திரமும்...
போக்கிரிப் பொன்னன் தருமனுக் கென்றும்
பொண்டுகச் சின்னான் அருச்சுனன் என்றும்
இப்பொழுது தெரிகிறதா...கவிஞன் ஏன் விடிய முன் - வேஷம் கலையும் முன் கூத்தாடி முடியுங்கள் என்று சொல்லி வைத்தான் என்று.
 
இந்தக் கவிதையை, இத்தனை காலமும் நான் கூத்துக் கலையைப் பற்றிய கவிதையாகத் தான் எண்ணியிருந்தேன்.
இன்று இப்பொழுது, இக்கவி வரிகளை மீள வாசிக்கின்ற கணத்தில், ஒலிபெருக்கியில் காது கிழித்து அலறும் தேர்தல் பிரசாரத்தைக் கேட்கிற பொழுதுதான், கவிஞன் யாரை, கூத்தாடிகள் எனக் கருதினான் என்ற புதிர் அவிழ்ந்தது.
 
இப்படியான ஒரு தேர்தல் கால அலப்பறைகளின் பொழுதுதான் அந்தத் தச்சனுக்கு, இந்தச் செதுக்கல் வாய்த்திருக்க வேண்டும்.
ஆம், இனித் தொடரும் வரிகளைப் பாருங்கள்.

கூத்தாடிகளே விரைவா யாடுங்கள்...
 
இருட்டு மடியும் முன்னே, கூத்தை
எப்படி யேனும் நடத்திப் போடுக!
மருட்டு வேஷம் குலைந்து போனால்!
மக்கள் கூட்டம் கலைந்து போகும்!
 
இன்னும் முடியவில்லை... சற்றே பொறுத்திருங்கள்..

பொழுதும் புலரப் போகுது பாரீர்!
புலர்ந்தால்... ஜிகினாப் பொட்டுகள் அந்தோ!
வெளுக்கப் போகுது சாயம்! கண்டால்...
விரையப் போகுது சனங்கள் வீடு!
(ஒரு பிற்குறிப்பு: இந்த வீடு அந்த 'வீடு' அல்ல) 🤣

வெளுக்கப் போகுது சாயம், ஆதலால், இந்தத் தேர்தல் காலத்தில் எப்படியேனும் வாய்ப்பறை அடித்து, உங்கள் கூத்தை நடத்திவிடுங்கள், 
தேர்தல் முடிந்துவிட்டால்...
 
உங்கள் சாயம் வெளுத்து விடும்
ஜிகினாப் பொட்டுக்கள் கழன்றுவிடும்
என்கிறான் கவிஞன். 
எத்தனை யதார்த்தமான வரிகள். இவன் கவிஞன். இது, கவிதை.
👑 👑 👑
 
அந்தக் கான மயிலாடக் கண்ட இந்த வான்கோழியும், கவிதை என்ற பெயரில் கிறுக்கியது இவ்வாரப் பின்னிணைப்பு.
இது, லொக் டவுண் கவிதை. 
முடிந்தால் சகித்துக் கொள்ளுங்கள்.
 

கை கழுவுதல்...

தனித்த சிறைத் துயர் உணர்த்தி
கைகழுவச் செய்து
விடைபெற்றேகியது சிறு உயிரி.
மனசுப் பறவை 
எப்பொழுதும் இருந்ததில்லைத்
தனியே. 
அதன் சிறகடிப்பின் படபடப்பில்
அலைமோதும்
தாள்களில் இயல்பாகவே
தளிர்த்து விடுகிறது மின்னும் இருவிழி.
சொல்ல மறந்த –
சொல்லத் துடிக்கும் 
இமைகளின் ஓரத்தில்
கனிந்து நலம் கேட்கிறதா நீர்கசிவு.
ஈரம் சொட்டும் சொற்கள்,
பாரமாகும் நெஞ்சக் கூடு.
தொலைபேசியில், இசையின்
கர்வம் உடைத்துச் சிணுங்கும்
மொழி உரையாதா,
நலம் இங்கு என.
தனியே இருப்பதென்பது தனித்திருப்பதல்ல.
கரம் கழுவுதல் என்பது,
கை கழுவுதல் அல்ல.   

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்