உலகமெலாம் அதிர்ந்திடவே உயர்ந்த நல்ல
ஒப்பற்ற பெருங்கலைஞன் விண்ணைச் சேர்ந்தான்
நிலமகளைத் தன் இசையால் ஈர்த்த ஐயன்
நிம்மதியாய் அவள் தனக்கே தன்னை ஈந்தான்
பல இனமும் இவன் எங்கள் சொத்து என்றே
பாரதிர குரல் கொடுத்து பற்று வைத்த
விலையதிலாக் குரல் வேந்தன் மௌனம் கொள்ள
வெற்றுலகாய்ப் போனதுவாம் இந்தப் பூமி
கோரோனா என்கின்ற கொடிய நாசன்
கொண்டேதான் போனான் எம் பெரிய சொத்தை
பாரெல்லாம் தன் இசையால் பரிவு செய்த
பண்பனையும் அவ் அரக்கன் பறித்துப் போனான்
ஆராரோ போனார்கள் அதிர்வு இல்லை
அப்படியா இவன் மறைவு அகிலமெல்லாம்
நீர் வாரும் கண்ணோடு நிலத்தில் வீழ்ந்து
நெஞ்சதிரக் கதறுவதை என்ன சொல்ல?
புன்னகையால் முகம் நிறைத்த புனிதன் நல்ல
பொன்னான பேரிசையால் உளங்கள் அள்ளி
எண்ணரிய பாடல்களால் இசையாம் தாய்க்கு
எப்போதும் சோராது பணிகள் செய்தோன்
விண்ணதிரப் பாடிடவும் செய்வான் மென்மை
விளங்குகிற குரலாலே விதிர்க்க வைப்பான்
கண்ணதனில் நீங்காத உருவம் இன்று
களையிழந்து கிடக்கிறதே நெஞ்சம் வேகும்
அல்லாவை யேசுதனை அன்பை இந்த
அகிலமெலாம் உரைத்திட்ட புத்தன்தன்னை
நல்லோர்கள் போற்றுகிற எங்கள் இந்து
நலம்மிகுந்த தெய்வங்கள் அனைத்தும் போற்றி
பல்லாண்டு பாடியவன் பழிசேர் நோயால்
பாரினிலே வீழ்ந்ததுவும் பலவும் செய்தும்
வெல்லாமல் போனதுவும் என்னே மாயம்
விதியரக்கன் வென்றேதான் வீறு கொண்டான்
ஆண்டதனின் தொடக்கத்தில் ஐயன் தன்னை
அன்போடு அழைத்தே நாம் அகிலம் போற்ற
நீண்டபெரும் விழவெடுத்து நெஞ்சம் தன்னின்
நேசமதை ஈழத்தார் நிகழ்த்தி நின்றோம்
ஆண்டவனாய் கம்பனையே போற்றுகின்ற
அரியபெரும் எம் கழக அழைப்பை ஏற்று
மீண்டவனும் கொடிய பெரும் நோயில் வீழ்ந்து
மீளாமல் போனதனை என்ன சொல்ல ?
எங்களது மேடையினில் இதயம் ஈர்த்து
எல்லோரும் மனம் மகிழ ஏறி நின்றாய்
தங்களது உடன் பிறப்பாய் எங்கள் ஈழத்
தமிழரெலாம் உளம் உருக வாழ்த்தி நின்றார்
மங்கலமாய் அன்றந்த மேடைதன்னில்
மன்னவனாய் கொலுவிருந்த காட்சி என்னே !
பங்கமுடை எவர் கண்தான் பட்டதேயோ
பண்பாள! பார் உன்னை இகழ்ந்து போச்சே
வானிலவை அழைத்தபடி வந்த ஐய
வற்றாத உன் இசையால் மயங்கி அன்பர்
தேன் நிகர்த்த உன் குரலுக்கடிமையாகி
தேற்றமொடு உனைத்தங்கள் உதிரமென்றே
காணுகிற இடமெல்லாம் கனிந்தே தங்கள்
கண்ணீரால் உனை நனைத்துக் கதறி நின்றார்
பேணுகிற உன் இசையால் மயங்கி நின்றோர்
பிரிவதனைத்தாங்கித்தான் வாழுவாரோ ?
கடந்த பல பத்தாண்டாய் எங்கள் காதில்
காற்றுந்தன் இசை நிரப்பி நிரப்பி என்றும்
தடம் பதித்து நின்றதனால் என்றும் எங்கள்
தலைமுறைக்கும் இசைச்சொத்தை எழுதிச்சென்றாய்
படமெனவே எம் கண்ணில் பதிந்து நிற்கும்
பாவலனே பார் விட்டு நீ போனாலும்
நடமிடுவாய் எம் இதயக் கோயில் தன்னில்
நல்லவனே இறையடிக்குச் சென்று மீள்வாய்