'செல்லும் சொல்வல்லான்': பகுதி 2-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

அவனது சொற்திறனும், சொற்சுருக்கமும், தொடர்ந்து அழகுற வெளிப்படுகின்றன. நுண்மை மிக்க அனுமனது இவ்வரவேற்புரையைக் கேட்டு, இராமன் வியக்கிறான். கருணையோடு அவனை நீ யார்? என இராமன் வினவ, அனுமன் தன்னை அறிமுகம் செய்யத் தொடங்குகிறான். எவ்வழி நீங்கியோய்! நீ யார்? என விளம்பலுற்றான்.

      

ளம் மகிழ அனுமன் தன்னை அறிமுகம் செய்யத் தொடங்குகிறான்.
அவன் தன்னை அறிமுகம் செய்யும் பாடல் அற்புதமானது.
தம் பெருமைகளை எடுத்துரைத்து மற்றவர்க்குத் தம்மை அறிமுகம் செய்வதே பொது வழக்கம்.
அனுமனோ,  தன் பதிலுரையில் இயல்புக்கு நேர்மாறாய்,
இராமனை விதந்துரைப்பதற்கு அதிக வார்த்தைகளைப் பயன்படுத்தி,
மிகக் குறைந்த வார்த்தைகளால் தன் பெருமையைச் சுருக்கி உரைத்து,
பணிவோடு தன்னை அறிமுகம் செய்கிறான்.
அனுமன், தன்னை அறிமுகம் செய்யும் பாடல் இது.

மஞ்செனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கெல்லாம்
நஞ்செனத் தகைய ஆகி நளிர் இரும் பனிக்குத் தேம்பா
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தர்க்கு,
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்.


      

திரண்ட கரிய மேகங்களைப் போன்ற அழகிய மேனியை உடையவனே!
நஞ்சையொத்துப் பெண்களின் மனங்களை  வேதனை செய்பவனே!
கடுமையான பனிக்குளிரிலும் வாடாத தாமரையைப் போன்ற, 
மலர்ந்த கண்களையுடையவனே!
நான், வாயு பகவானுக்கு தேவி அஞ்சனையிடம் உதித்த மகன்.
எனது பெயர் அனுமன்.
இஃதே அனுமனின் அறிமுக வார்த்தைகள்.
மூன்று உவமைகளால்,
இராமனைப் பெருமைப்படுத்தி விளிக்கும் அனுமன்,
ஒன்றே கால் அடியில் தன்னைச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறான்.

      

அடுத்த பாடலில்,
தன்னைச் சுக்கிரீவனின் ஏவலாளனாக உரைத்த பின்னர்,
உமது வரவு கண்டு அஞ்சி சுக்கிரீவன் அனுப்பி வைக்க,
நீர் யார்?, என அறிவதற்காய் வந்தேன் என,
தான் வந்த நோக்கத்தை அனுமன் உரைக்கிறான்.

இம் மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதிச் செல்வன்,
செம்மலுக்கு ஏவல் செய்வேன். தேவ! நும் வரவு நோக்கி,
விம்மலுற்று அனையன் ஏவ! வினவிய வந்தேன் என்றான்
எம்மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்.


      

மேற்பாடலின் நிறைவில் கம்பன் உள் நுழைந்து,
தன் கூற்றாய், அனுமனைப் புகழ்ந்து ஓர் அடியினை இடுகிறான்.
அப் புகழ்ச்சி இவ்விடத்தில் பொருந்தாது நிற்கிறது.
எந்த மலையும் தாழும்படியாகப் புகழ் சுமந்த,
உயர்ந்த தோள்களை உடையவன் எனும் அர்த்தத்தில்,
கவிக்கூற்றாய் கம்பன் இட்ட,
எம்மலைக் குலமும் தாழ இசை சுமந்து எழுந்த தோளான்
எனும் அடி, அனுமனின் வீரத்தை விதந்துரைத்து நிற்கிறது.
மேற் காட்சியில் அனுமனின் வீரம் எவ்விடத்திலும் வெளிப்படவில்லை.
தன்னை ஓர் ஏவலாளனாய் அறிமுகம் செய்து கொண்டு,
அனுமன் பணிந்து நிற்கும் காட்சி இது.
இவ்விடத்தில் அறிஞனாய் அன்றி,
வீரனாய் அனுமனைக் கம்பன் புகழ்ந்ததேன்?
காரணம் உளது!

      

இராமன்மேல் உதித்த பேரன்பினாலும், மதிப்பினாலும்,
அனுமன் அவன்முன் அளவுக்கதிகமாய்ப் பணிந்து நிற்கிறான்.
இராம இலக்குவருக்கு மட்டுமன்றி,
காவிய வாசகர்க்கும் அனுமன் அறிமுகமாகும் காட்சி இது.
மேற் சூழ்நிலையில் அனுமனின் பணிவு கண்டு,
அவனை வீரமற்றவனாகவும், வெறும் ஏவலாளனாகவும்,
வாசகர்கள், தம் மனதுள் பதிவு செய்து விடக் கூடாது என்பதற்காகவே,
பொருந்தாத இடத்தில் அவனது வீரத்தினை,
தன்  கூற்றாய் கம்பன் பதிவு செய்தனன் போலும்.

      

சூழ் நிலையால் பாத்திரப் பண்பு பாதிப்புறும் வேளைகளில்,
உள் நுழைந்து அப்பாத்திரப் பண்பைத் தனது கூற்றால் உறுதி செய்வது கம்பனது வழக்கமாம்.
முதற் போரில் தோல்வியுற்றுத் திரும்பும் இந்திரசித்தன்,
இராம இலக்குவரின் வீரத்தினை முழுமையாய் அறிந்து கொண்டு,
தந்தையின் உயிர் காக்கவென,
சீதை மேல் கொண்ட காதலை விடுத்து அவளைத் திருப்பி அனுப்புக!
என இராவணனிடம் இறைஞ்சுகிறான்.

ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசை தான் அச்
சீதைபால் விடுதியாயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன் மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகெலாம் கலக்கி வென்றான்.

மேற் பாடலிலும்,
தோல்வியுற்று சீதையை விடுக! என இறைஞ்சி நிற்கும் இந்திரசித்தனை,
உலகெலாம் கலக்கி வென்றான் என, 
பொருந்தா இடத்தில் கம்பன் புகழ்ந்துரைக்கிறான்.

      

தந்தையின் நலன் நோக்கி இறைஞ்சி நிற்கும் இந்திரசித்தனை,
வீரம் அற்றவன் என எவரும் விளங்கிவிடக் கூடாதென்பதற்காகவே,
பொருத்தமில்லா அவ்விடத்தில்,
அவனது வீரத்தினைக் கம்பன் புகழ்ந்தனன் என்க.
அது போலவே, அனும அறிமுகத்திலும்,
பொருந்தாவிடத்தில்,
அனுமன் வீரத்தைக் கம்பன் விதந்துரைப்பது,
மேற்கருத்தினாலேயாம்.

      

மீண்டும் காட்சியுள் நுழைகிறோம்.
அனுமனது அறிமுக உரையினைக் கேட்ட இராமன்,
அவனைப்பற்றித் திடமுறத் தெளிந்து, 
இலக்குவனிடம் அனுமனை மிக விதந்து பாராட்டுகிறான்.
இராமனின் பாராட்டுக்கள் அமைந்த பாடல் இது.

மாற்றம் அஃது உரைத்தலோடும், வரி சிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்று, இவனின் ஊங்குச் செவ்வியோர் இன்மை தேறி,
'ஆற்றலும், நிறைவும் கல்வி அமைதியும், அறிவும், என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்' என, விளம்பலுற்றான்.


      

இப்பாடலில், அனுமனது தகுதிகளை,
கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்துகின்றான் இராமன்.
ஆற்றல், நிறைவு, கல்வி அமைதி, அறிவு என்பனவே அவையாம்.
மேற்சொன்னவற்றுள்,
அனுமனது ஆற்றலை அவனது புலனடக்கத்தாலும்,
நிறைவை அவனது நற்குணவிரிவாலும், 
கல்விஅமைதியை அவனது தன்னடக்கத்தாலும்,
அறிவினை அவனது நுண்ணுணர்வாலும் 
இராமன் கண்டு கொள்கிறான்.

      

அனுமனின் தகுதிகளில் இராமனால் முதல் உரைக்கப்படுவது அவனது ஆற்றல்.
ஆற்றல் புலனடக்கத்தால் வெளிப்படுமோ எனின்,
வெளிப்படும் என்பதற்கு,
புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம் எனும்
ஒளவையின் கருத்து, சான்றாகிறது.

      

இரண்டாவதான அனுமனது அறிவாற்றலை,
அவனது நுண்ணுணர்வால் இராமன் கண்டது எங்ஙனம்?
கேள்வி பிறக்கும்.
அனுமன் தன்னை அறிமுகம் செய்யும் முதற்பாடலில்,
இராமனை,
மஞ்செனத் திரண்ட கோல மேனிய! எனவும்,
மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகைய ஆகி 
நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! எனவும்,
விளித்த விளிப்புக்களில்,
பார்வையினாலேயே தான் இராமனை முழுமையாய் உணர்ந்து கொண்டதை,
இராமன் மட்டுமே அறியும்படியாய்,
அற்புதமாய் அனுமன் வெளிப்படுத்துகிறான்.
அவ் அற்புத வெளிப்பாடே,
அனுமனது அறிவு நுண்மையை,
இராமனுக்கு தெளிவுற விளக்கம் செய்கிறது.
அவ் விளிப்புக்களினூடு அனுமன் வெளிப்படுத்திய நுண்பொருள்கள் யாவை? 
காண்பாம்.
 

      

மஞ்செனத் திரண்ட கோல மேனிய!
மேகங்களைப் போன்றவனே எனும் இம் முதல் விளிப்பால்,
அம் மேகங்களைப் போல,
மேலிருந்து இறங்கி வந்த அவதார புருஷன் இராமன் என்பதையும்,
மழை, உலகை உய்விக்க வருமாற் போல்,
இராமனும் உலகை உய்விக்கவே வந்தனன் என்பதையும்,
மேகம் உலகின் வெம்மை நீக்கிக் குளிர்மை செய்யுமாப் போல்,
இராமனும் உலகின் மற வெம்மை நீக்கி,
அறக்குளிர்மையை நிலைநிறுத்தவே வந்தனன் என்பதையும்,
மேகத்திற்கு ஒப்பானது இராமனின் கருணைமனம் என்பதையும்,
வான் இருந்து பெய்யும் மழை, 
அருவியாகவும், ஆறாகவும் உலகெலாம் ஓடிப் பயன் செய்யுமாறு போல்,
அயோத்தியில் உதித்த இராமன், 
உலகனைத்தையும் உய்விக்கவே காடேகி வந்தனன் என்பதையும்,
மழை பாரபட்சம் இன்றி அனைவரையும் காக்குமாற்போல்,
இராமனும் பாரபட்சம் இன்றி உலகினைக் காப்பான் என்பதையும்,
தான் தெரிந்து கொண்டதாய் இம்முதல் விளிப்பின் மூலம்,
இராமனுக்குக் குறிப்பினால்த் தெரிவிக்கிறான் அனுமன்.

      

மகளிர்க்கெல்லாம் நஞ்செனத் தகைய ஆகி, அலர்ந்த செய்ய கண்ண!
மகளிர்க்கு,  நஞ்சினை ஒத்துத் துன்பம் தரும்,
அகன்ற செம்மையான கண்களை உடையவனே!
எனும் இவ்; இரண்டாம் விளிப்பில்,
இராமனின் அழகில் மயங்கி அவனை அணைய நினையும் பெண்களுக்கு,
சிறிதும் இடம் கொடாத கண்களால்,
நஞ்சாகத் திகழ்பவன் அவன் என உரைத்து,
இவ் அவதாரத்தில்,
இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை, தான் கண்டு கொண்டதனையும்,
இராமனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறான் அனுமன்.

      

நளிர் இரும் பனிக்குத் தேம்பா கஞ்சம் ஒத்து
அலர்ந்த செய்ய கண்ண!

அடுத்து, குளிர்ச்சி மிகுந்த பனிக்கும் வாடாத, தாமரை போன்ற
அகன்ற சிறந்த கண்களை உடையவனே எனும் விளிப்பால்,
இராமன் இன்பத்திற்கு இன்பமும்,
துன்பத்திற்குத் துன்பமும் உறாத,
இருவினையொப்பு நிலையுற்ற தெய்வபுருஷன் என்பதையும்,
தற்போது சீதையைத் தேடி வாட்டமுற்றிருக்கும் அவனது நிலை,
அவதார நாடகந்தான் என்பதையும் தான் அறிந்து கொண்டதை
மேல் தொடரால் மறைத்துரைக்கிறான் அனுமன்.

      

மேற்கண்டவாறு இராமனைத் தான் உணர்ந்து கொண்டமையை,
புகழுரைகளால் நுண்மையாய் வெளிப்படுத்திய அனுமன்தன் உரையால்,
அவனது நுண்ணறிவினை இராமன் அறிந்து கொள்கிறான்.

      

(மிகுதி அடுத்தவாரம்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்