'செல்லும் சொல்வல்லான்': பகுதி 3 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

மேற்கண்டவாறு இராமனைத் தான் உணர்ந்து கொண்டமையை, புகழுரைகளால் நுண்மையாய் வெளிப்படுத்திய அனுமன்தன் உரையால், அவனது நுண்ணறிவினை இராமன் அறிந்து கொள்கிறான்.

      

லகம் வியக்கும் அனுமனின் மேற் புகழுரைகள்,
கற்போர் நெஞ்சைக் களிக்கச் செய்கின்றன.
அப்புகழுரைகளின் பின், 
தொடர்ந்து, அனுமன் தன்னைப் பற்றிய அறிமுகத்தை, 
மிகச் சுருக்கமாய்ச் செய்கிறான்.
யான் காற்றின் வேந்தர்க்கு,
அஞ்சனை வயிற்றில் வந்தேன் நாமமும் அனுமன் என்பேன்.
தனைப் பற்றிப் புகழோடு விரித்துரைக்க வகையிருந்தும்,
இவ்வொன்றேகால் அடிகளுள்,
வாயுபகவான் தனது தந்தை என்பதனையும்,
அஞ்சனாதேவி தன் தாய் என்பதனையும்,
தனது நாமம் அனுமன் என்பதனையும், 
அடக்கத்தோடு சுருக்கி உரைக்கிறான் அனுமன்.
தன்னைப் பற்றிய அனுமனது மேல் அறிமுக உரையில்,
அனுமனது அடக்கத்தை இனம் காண்கிறான் இராமன்.
அதனால் இராமனுக்கு அவனது கல்விஅமைதி புலனாகிறது.

      

அடுத்த பாடலில் வரும் முதன் மூன்று அடிகளுள்,
தான் சுக்கிரீவனது ஏவலாளன் என்பதனையும்,
சுக்கிரீவன் சூரிய புதல்வன் என்பதனையும்,
சுக்கிரீவன் இம்மலையிலேதான் வாழ்கிறான் என்பதனையும்,
உங்கள் வருகையைக் கண்டு அஞ்சிய அவன்,
நீங்கள் யார்? என அறிந்துவரும்படி தன்னை அனுப்பினான் எனவும் உரைத்ததன் மூலம்,
அச்சப்படும் சூழ்நிலையில் சுக்கிரீவன் வாழ்கிறான் என்பதனையும்,
புதிதாய் வந்தவரைக் கணிக்க, தான் ஏவப்பட்டதாய் உரைத்ததால்,
தான் வெறும் ஏவலாளன் அல்லன், சுக்கிரீவனது மந்திரியே என்பதனையும்,
இராம இலக்குவர் யார் என்பதனை அறிவதே,
தனது நோக்கம் என்பதனையும் உள்ளடக்கி,
பல செய்திகளையும் இராமனுக்குச் சுருக்கி உரைக்கிறான் அனுமன்.

இம்மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்,
செம்மலுக்கு ஏவல் செய்வேன். தேவ! நும் வரவு நோக்கி,
விம்மலுற்று அனையன் ஏவ! வினவிய வந்தேன் என்றான்

      

மேற்பாடலில் வரும்
இம்மலை இருந்து வாழும் எரி கதிர் பரிதிச் செல்வன்,
எனும் அடிக்கு, 
சுக்கிரீவன் இம்மலையிலிருந்து வாழ்கிறான் என்பது மட்டுமன்றி,
சுக்கிரீவன் இம்மலை இருந்ததால்த்தான் வாழ்கிறான் என்பதுவும் பொருளாம்.
இதன்மூலம்,
இந்த உருசியமுக மலைக்கு வாலி வரமுடியாத சாபச் செய்தியையும்,
இராமனுக்கு உணர்த்தி விடுகிறான் அனுமன்.

      

மேல் அனுமனது உரைகள் மூலம்,
மீண்டும்  அனுமனது நுண்ணறிவு வெளிப்படுகிறது.
மற்றவர் துன்பம் தீர்க்க முயலும் அவனது இயல்பில்,
அவனது நற்குணங்களையும் உணர்ந்து கொள்கிறான் இராமன்.
அதனால் தான்,
'ஆற்றலும், நிறைவும், கல்விஅமைதியும், அறிவும், என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம்'  என, விளம்பலுற்றான்
போலும்.

      

அனுமனது தகுதிகளை இனம் கண்டுகொண்ட இராமன்,
இலக்குவனிடம் அனுமனது பெருமைகளை விரித்;துரைக்கிறான்.
முற் கூறிய அவ்விரித்துரைப்பில்,
வேதங்களாலும், குற்றமில்லாத ஞானத்தாலும், 
அறியப்பட முடியாத மோட்சமே குரங்குருக்கொண்டதோ? என வியந்து,
அனுமன் கல்லாத கலைகளும், வேதங்களும் இல்லை என்றும்,
இவ்வுலக இயக்கத்திற்கு அச்சாணி போல் திகழ்பவன் இவன் என்றும்,
புகழும் இராமன்,
அனுமனை இவன் பிரம்மனோ? சிவனோ? எனப் பாராட்டி,
இவன் ஆற்றலை, நீ பின் காண்பாய்! என்கிறான்.

'இல்லாத உலகத்து எங்கும், இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும், வேதக் கடலுமே' என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்றுஅன்றே! யார்கொல் இச் சொல்லின்செல்வன்?
வில்ஆர் தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?

'மாணி ஆம் படிவம் அன்று, மற்று இவன் வடிவம் மைந்த!
ஆணி இவ் உலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமைதன்னைச் சிக்கு அறத் தெளிந்தேன் பின்னர்க்
காணுதி மெய்ம்மை' என்று, தம்பிக்குக் கழறி, கண்ணன்

இப்பாராட்டின் இடையிலேயே இராமனால் அனுமனுக்கு,
சொல்லின் செல்வன் எனும் பட்டம் வழங்கப்படுகிறது.

      

அனுமனது ஆற்றலை இனங்கண்டு கொண்ட இராமனது பாராட்டில்,
சற்று மிகை வந்ததோ என எண்ணத் தோன்றுகிறது.
அம் மிகைப் புகழ்ச்சிக்காம் காரணம் உண்டு.
அனுமனது ஆற்றலையும், அறிவையும் இனம் கண்டு கொண்ட இராமன்,
அவனது பணிவை இலக்குவன் தவறாய் விளங்கி,
அனுமனை வெறும் ஏவலாளனாய்க் கருதி,
இழிவு செய்து விடலாகாது என்பதற்காகவே,
மேல் மிகைப் புகழ்ச்சியை செய்தனன் போலும்.

      

இராமனது இவ்வுத்தியைப் பின்னரும் ஓர் இடத்திலும்,
கம்பன் சித்தாந்தப்படுத்துகிறான்.
இராமன் சுக்கிரீவனோடு நட்புக் கொண்ட பிறகு,
அவனருகில் ஏவலாளன் போல் பணிந்து நிற்கிறான் இலக்குவன்.
அவனது ஆற்றலைப் புரிந்து கொள்ளாது,
சுக்கிரீவன், இலக்குவனை அவமரியாதை செய்து விடக்கூடும் என நினைந்த இராமன்,
வாலியால் விண்ணில் எறியப்பட்டு விழுந்து கிடந்த,
துந்துபியின் உடலைச் சுக்கிரீவன் காட்ட, 
அதனை இலக்குவனின் காற் பெருவிரலால் விண்ணில் எற்றச் செய்து,
அவனது பெருமையைச் சுக்கிரீவனுக்கு மறைமுகமாய் உணர்த்துகிறான்.
இஃதும், அனும அறிமுகத்தில் மிகைப்புகழ்ச்சி நிகழ்த்தியது போன்றதோர்,
உள்நோக்கம் கொண்ட நிகழ்வேயாம்.

      

அதிகம் பேசுதலையே ஆற்றல் எனக் கருதுகிறது இன்றைய உலகு.
அஃது ஆற்றல் அன்றாம்.
அறிவற்றோரே பயனில் சொற்களைப் பெரிதும் பாராட்டுவர்.
விரிந்த சொற்களுள் குறைந்த பொருளுடைய உரைகள்,
கற்றோரால் கணிக்கப்படமாட்டா,
குறைந்த சொற்களுள் விரிந்த பொருள்களை அடக்கும் ஆற்றலே,
உண்மைச் சொற்திறமாம்.
அங்ஙனம் அனுமன், 
விரிந்த பொருளைச் சுருங்கிய சொற்களுள் அடக்கி,
நிகழ்த்திய உரை கேட்டு மகிழ்ந்தே,
அவனுக்கு இராமன்  சொல்லின் செல்வன் எனப் பட்டமளித்து மகிழ்கிறான்.

      

ஒருவர்க்குக் குறித்த ஒரு துறையில் பட்டம் வழங்குவதாயின்,
அப்பட்டம் வழங்குபவரும் அத்துறையில் விற்பன்னராய் அமைந்திருத்தல் வேண்டும்.
அங்ஙனம் அமைந்தாலே வழங்கப்பட்ட பட்டம் மதிப்புறுமாம் என முன்னுரைத்தோம்.
அனுமனுக்குச் சொல்லின் செல்வன் எனப் பட்டம் வழங்கிய இராமன்,
அச் சொற்திறத்தில் எத்தகையன்?
அவனது தகுதி அறியப்பட்டாலன்றோ,
அனுமனது சொல்லின் செல்வன் எனும் பட்டம் மாண்புறும்.
இதனை நினைந்த கம்பன்,
இராமனின் சொல் வன்மையைப் பாராட்டி,
தானே அவனுக்குக் காவியத்தின் ஓர் இடத்தில் பட்டம் வழங்குகிறான்.
அவ்விடத்தினைக் காண்பாம்.

      

 (மிகுதி அடுத்தவாரம்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்