'செல்லும் சொல்வல்லான்': பகுதி 4-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ஒருவர்க்குக் குறித்த ஒரு துறையில் பட்டம் வழங்குவதாயின், அப்பட்டம் வழங்குபவரும் அத்துறையில் விற்பன்னராய் அமைந்திருத்தல் வேண்டும். அங்ஙனம் அமைந்தாலே வழங்கப்பட்ட பட்டம் மதிப்புறுமாம் என முன்னுரைத்தோம். அனுமனுக்குச் சொல்லின் செல்வன் எனப் பட்டம் வழங்கிய இராமன், அச் சொற்திறத்தில் எத்தகையன்? அவனது தகுதி அறியப்பட்டாலன்றோ, அனுமனது சொல்லின் செல்வன் எனும் பட்டம் மாண்புறும். இதனை நினைந்த கம்பன், இராமனின் சொல்வன்மையைப் பாராட்டி, தானே அவனுக்குக் காவியத்தின் ஓர் இடத்தில் பட்டம் வழங்குகிறான். அவ்விடத்தினைக் காண்பாம்.

      
ரைக்குப் பெருமை,
சொற்சுருக்கமும், பொருட்பெருக்கமும் எனக் கண்டோம்.
அதுமட்டும் உரையின் பெருமையை உயர்த்தப் போதுமானதாகுமா?
அன்றாம்!
எத்துணை நுட்பமிகு பொருளினை உட்கொண்டு சொல் நின்றாலும்,
அது மற்றவரைச் சென்றடைந்தால் மட்டுமே பயன் விளைக்கும்.
கேட்பாரிடம் சென்று சேராத சொல் நுட்பம் பொருந்தியதாயினும் பயனற்றதேயாம்.
செல்லாத பணம், கொடுத்தவனிடமே திரும்பி வருமாப் போல்,
செல்லாத சொல்லும் சொன்னவனிடமே வந்து சேர்தல் நிச்சயமாம்.
      
சில வேளைகளில் செல்லும் பணம் கூடச் செல்லாது போவதுண்டு.
செல்லும் பணம்  தக்க இடம் சேரா இடத்து செல்லாப் பணமேயாம்.
ஐந்து ரூபாய் வியாபாரம் நடக்கும் கடையில்,
நாம் நீட்டும் ஆயிரம் ரூபா,
தகுதியிருந்தும் செல்லாப் பணமாதல்; கண்கூடு.
அது போலவே கேட்பார் தகுதி அறியாது,
உரைப்பார் கூறும் விரிந்த சொற்பொருளும் பயனற்றதாய் ஆகுமாம்.
      
இவ் உண்மைகளை உட்கொண்டு,
தக்க உரைகளைத் தக்கார்க்குத் தக்கபடி உரைத்து,
அவரிடம் தம் கருத்தைச் செலச்செய்வோனே,
உண்மைச் சொற்திறன் மிக்கவனாம்.
      
அயோத்தியா காண்டம்.
நகர்நீங்கு படலம்.
கைகேயியின் சூழ்ச்சி அறிந்து கோபம் கொண்ட இலக்குவன்,
ஆத்திர மிகுதியால், 
இராமனது சமாதான உரைகளை ஏற்கமறுத்து நிற்கிறான்.
அந்நிலையில் தக்கபடி உரை செய்து,
தன் கருத்தை இலக்குவன் ஏற்கும் படியாகச் செய்கிறான் இராமன்.
அவ்விடத்தில் இராமனின் சொற்திறன் கண்டு அதிசயிக்கிறோம் நாம். 
ஆத்திரம் கொண்ட இலக்குவனிடத்தில்,
தன் சொல்லைச் செலச் செய்த,
இராமனின் சொற்திறத் தகுதியை உறுதி செய்வதற்காய்,
அவனுக்குச் செல்லும் சொல்வல்லான் எனப் பட்டமளித்து,
கௌரவிக்கிறான் கம்பன்.
அக் காட்சியினைக் காண்பாம்.
      
கைகேயியின் சூழ்வினையால் பரதன் நாடு பெற, 
இராமன் காடேகப் போகும் செய்தியை அறிகிறான் இலக்குவன்.
கடும் கோபம் கொண்ட அவன், வன்சொற்கள் பல உதிர்த்து,
இராமனுக்கு முடியளிப்பேன் என, தன் வில் நாணின் ஒலி மீட்டுகின்றான்.

கேட்டான் இளையோன் கிளர் ஞாலம் வரத்தினாலே
மீட்டாள் அளித்தாள் வனம் தம்முனை வெம்மை முற்றித்
தீட்டாத வேல் கண் சிறு தாயென யாவராலும்
மூட்டாத காலக் கடைத்தீ என மூண்டெழுந்தான்.

சிங்கக் குருளைக்கு இடு தீஞ் சுவை ஊனை நாயின்
வெங்கட் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே
நங்கைக்கு அறிவின் திறம் நன்றிது நன்றிது என்னா
கங்கைக்கு இறைவன் கடகக் கை புடைத்து நக்கான்.

அடியில் சுடர் பொன்கழல் ஆர் கலி நாண ஆர்ப்ப
பிடியில் தடவும் சிலைநாண் பெரும் பூசல் ஓசை
இடியின் தொடர கடலேழும் மடுத்து இஞ்ஞால
முடிவில் குமுறும் மழை மும்மையின் மேன் முழங்க

இலக்குவனின் கோப நிலை உரைக்கும் கம்பகவிகள் இவை.
இலக்குவனது நாண்ஒலி கேட்ட இராமன்,
அவனுடன் உரையாடி அவன் சீற்றம் தணிப்பதற்காய் வருகிறான்.
      
இவ்விடத்தில் இராமனின் உரையாடற் திறன், 
நம்மை வியக்க வைக்கிறது.
அரிய அறப் பொருள் கொண்ட இராமனின் அறிவுரைகளை,
தன் சீற்ற மனநிலையால் நிராகரிக்கின்றான் இலக்குவன்.
தன் அரிய சொற்கள் இலக்குவனின் கோபத்தின் முன்,
செல்லாச் சொற்களாகாது சீரிய சொற்களாய் ஆகும் வண்ணம்,
இராமன் செய்யும் உரைத்திறன் வியப்பானது.
அவ் உரையாடலை விரியக் காண்பாம்.

      

கோபத்தில் கனன்று நிற்கும் இலக்குவனைக் கண்ட இராமன்,
அவன் கோபம் தணிக்க,
மனோதத்துவ முறை ஒன்றை முதலில் கையாளுகிறான்.
'எனது தந்தையே!' என விளித்து, 
அவ் உறவு நிலையால் இலக்குவனிடம் அன்பை உதிக்கச் செய்து,
அவனின் கோபத்தைத் தணிக்கச் செய்ய முயல்கிறான் அவன்.
மின்னொத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற,
பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கையானை என்அத்த!

இராமனின் அவ்வுத்தி இலக்குவனின் கடுங்கோபத்தின் முன்,
செல்லாது போய் விடுகிறது.
      
இலக்குவனது கோபத்தின் முன்,
தனது அன்புச்சொற்கள் செல்லாமையை அறிந்த இராமன்,
தொடர்ந்து மற்றோர் உத்தியினைக் கையாளுகிறான்.
கடும் கோபம் கொண்ட ஒருவனை நோக்கி,
கோபம் வராத உனக்குக் கோபம் வந்தது எங்ஙனம்? என,
அவனால் மதிக்கப்படும் ஒருவன் கேட்பின்,
தன்மேல் அவ் உயர்ந்தோன் கொண்ட நம்பிக்கையைக் காக்கவேனும்,
கோபம் கொண்டவன் தன் கோபத்தைத் தணிப்பான்.
இஃது உலகியல்பு.
      
அம் மனோதத்துவ உத்தியைக் கையாள நினைக்கும் இராமன்,
இலக்குவனிடம்,
'நொடிப் பொழுதும் சினம் கொள்ளாதவனான நீ,
போர்க்கோலம் கொண்டதன் காரணம் என்ன?' என வினவுகிறான்.

மின்னொத்த சீற்றக் கனல் விட்டு விளங்க நின்ற,
பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கையானை
என்அத்த! என் நீ இறையேனும் முனிந்திலாதாய்
சன்னத்தனாகி தனு ஏந்துதற்கு ஏது என்றான்.

      
இப்பாடலில் வரும்,
பொன் எனும் சொல் இலக்குவனின் மேனியது செம்மை நிறத்தையும்,
புயல் எனும் சொல் இலக்குவன் தடக்கைகளின் வலிமையினையும்,
அத்த எனும் சொல் தந்தையே எனும் அர்த்தத்தினையும்,
சன்னத்தன் எனும் சொல் கோபம் மிகுந்தவன் என்பதனையும் குறித்து நிற்கின்றன.
தந்தை, தன்மகனை என் அப்பா! என்றும்,
தாய் தன் மகனை எனைப் பெற்றவனே என்றும் அழைப்பதும்,
அன்பின் விழைவால் வரும் இயல்புச் சொற்களாம்.
      
ஆனால், இராமனின் இந்த உத்தியும்,
இலக்குவனிடம் தோற்றுப் போகிறது.
      
 (மிகுதி அடுத்தவாரம்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்