'செல்லும் சொல்வல்லான்': பகுதி 5-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

இப்பாடலில் வரும், பொன் எனும் சொல் இலக்குவனின் மேனியது செம்மை நிறத்தையும், புயல் எனும் சொல் இலக்குவன் தடக்கைகளின் வலிமையினையும், அத்த எனும் சொல் தந்தையே எனும் அர்த்தத்தினையும், சன்னத்தன் எனும் சொல் கோபம் மிகுந்தவன் என்பதனையும் குறித்து நிற்கின்றன. தந்தை, தன்மகனை என் அப்பா! என்றும், தாய் தன் மகனை எனைப் பெற்றவனே என்றும் அழைப்பதும், அன்பின் விழைவால் வரும் இயல்புச் சொற்களாம். ஆனால், இராமனின் இந்த உத்தியும், இலக்குவனிடம் தோற்றுப் போகிறது.

     

ச்சிவரை கோபமேறி நின்ற இலக்குவன்,
'தீய கைகேயிக்கு எதிராக நினக்கு முடி சூட்டவும்,
அதைத் தடைசெய்பவர் எவரேனும் இருப்பின், 
அவரைச் சுட்டெரிக்கவும் துணிந்தேன்.
என் கையில் வில் இருக்க,
தேவரும் என்னை விலக்க மாட்டார்.
அங்ஙனம் விலக்கின்,
எனது பாணத்திற்கு அவரை இலக்காக்குவேன்.
இலக்காக்கி மன்னர் குலக்காவலை இன்று உனக்காக்குவேன்.'
எனக் கொதிக்கின்றான்.

மெய்யைச் சிதைவித்து நின் மேன் முறை நீத்த நெஞ்சம்
மையின் கரியாள் எதிர் நின்னை அம் மௌலி சூட்டல்
செய்யக் கருதி தடை செய்குநர் தேவரேனும்
துய்யைச் சுடு வெங் கனலின் சுடுவான் துணிந்தேன்;

(துய்-பஞ்சின் நுனி)

      

மீண்டும் தன் சொல் செல்லாமை அறிந்த இராமன் சோர்ந்தான் அல்லன்.
'அறமுறைக்கு மாறாமல் நடக்கின்ற நின் அறிவில், 
அழியாத அறம் வற்றிடும் வண்ணம், 
அறத்திற்கு மாறுபட்ட கோபம் விளைந்தது எங்ஙனம்?' என வினவி,
இலக்குவனது அற உணர்வைத் தூண்டி,
அவன் கோபத்தை மழுங்கச்செய்ய முயற்சிக்கிறான்.

இளையான் இது கூற இராமன் இயைந்த நீதி 
வளையாவரும் நல் நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
உளையா அறம் வற்றிய ஊழ் வழுவுற்ற சீற்றம்
விளையாத நிலத்து உனக்கு எங்ஙன் விளைந்தது? என்றான்.


      

மீண்டும் இராமனுக்குத் தோல்வியே விளைகிறது.
இராமன் அங்ஙனம் உரைத்தும்,
இலக்குவனின் கோபம் தணிந்தபாடில்லை.
இராமனின் வார்த்தைகளை உள்வாங்க மறுத்து நிற்கிறான் அவன்.
முத்துப்போன்ற தனது பற்கள் தெரியும் படியாக,
விரக்திப் புன்னகை புரிந்து, 
'தந்தை இப்பெரிய பூமி நினக்கு என்றுரைக்க,
அதனை அங்கீகரித்தாய்,
பின்னர் பகைவரால் அவ்வாட்சியை இழந்து,
இன்று காட்டிற்குச் செல்வாய் என்றால்,
அதுகண்டு கோபம் வராமல்,
எப்போது தான் இனி எனக்குக் கோபம் வருவது?' என வினவி,
கொதிக்கின்றான் இலக்குவன்.

நீண்டான் அது உரைத்தலும் நித்திலம் தோன்ற நக்கு
சேண்தான் தொடர் மாநிலம் நின்னது என்று உந்தை செப்பப்
பூண்டாய் பகையால் இழந்தே வனம் போதி என்றால்
யாண்டோ அடியேற்கு இனிச்சீற்றம் அடுப்பது என்றான்.

(நீண்டான்- உயர்ந்தவன், நித்திலம்-முத்து, சேண்-பழமை)

      

மேற்பாடலில்,
உனக்குத் தீமை செய்த தசரதன்,
இனி என் தந்தை அல்லன் எனும் கருத்துப்பட,
தசரதனை உந்தை என இலக்குவன் சுட்டுவதும்,
கைகேயியோடு பரதனையும் உட்படுத்தி,
பகையால் என அவன் உரைப்பதுவும்,
அவன் கோபத்தின் உச்ச வெளிப்பாடுகளாம்.
இராமனின் வார்த்தைகளை உள்வாங்காத,
இலக்குவனின் கோப வார்த்தைகள் தொடர்கின்றன.

      

'என் கண்முன்னே,
உனக்குக் கொடுத்த இராச்சியத்தை இல்லை என்றுரைத்து,
உன் மேல் அன்பில்லாதவர்கள்,
நீண்ட காட்டிற்கு உன்னை அனுப்ப,
அதனை மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த,
கொடிய கண்களையுடைய தசரதன் போல்,
யானும் துன்பத்தைக் கொடுக்கின்ற,
ஐம்பொறிகளையுடைய உடலைத்தாங்கி,
கோபம் வராமல் உயிரைப் போற்றுவேனோ?' என்கிறான்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான்.

(புன்- புள்ளிய, வன்கண்-இரக்கமின்மை)

      

தன் உத்திகளெல்லாம் இலக்குவனின் கோபத்தின் முன்,
பயனற்றுப் போவதை அறிந்த இராமன்.
விதி பற்றிய தத்துவத்தை எடுத்துக்காட்டி,
'நடந்தவை யார் பிழையும் அன்றாம்.
விதியின் பிழையே!' என உரைத்து, 
இலக்குவன் கோபத்தை அடக்க மீண்டும் முயல்கிறான்.

      

'நதியில் நீர் இல்லையேல் அது நதியின் பிழை அன்றன்றோ!
அது போல நடந்த செயல்,
தந்தையின் பிழையன்று.
தாய் கைகேயியின் பிழையன்று.
மகன் பரதன் பிழையுமன்று.
அனைத்தும் விதியின் பிழையே.
இதற்குப் போய் நீ வெகுளலாமோ?' என்கிறான் இராமன்.

நதியின் பிழை அன்று நறும் புனல் இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை அன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கு என்னை வெகுண்டது என்றான்.

(அற்றே- அதுபோலவே)

      

இராமனின் அறிவுரைகள்,
இலக்குவனின் கோப மதியினுள் நுழைய முடியாது 
இப்போதும் தோற்கின்றன.
இலக்குவனின் கோபம் அடங்கவில்லை.
பருத்த உலைக்களத்தினுள்ளே பொருந்திய தீப் போல,
பெருமூச்சுப் பொங்கி வெளிவர,
'வெம்புகிற மனத்தை எங்ஙனம் ஆற்றுவேன்?'
என வினவி,
'முடிசூட்டுதற்கு இடையூறாய் நின்ற,
கைகேயியின் சூழ்ச்சிக்கு மேம்பட்ட சூழ்ச்சியாகவும்,
மும்மூர்த்திகளின் வலிமைக்கு அடங்காததாகவும் விளங்குகின்ற,
விதியினிற்கு விதி வகுக்கக்கூடிய,
என் வில் தொழிலினைக் காண்பாய்!' என்கிறான்.

உதிக்கும் உலையுள் உறு தீ என ஊதை பொங்க
கொதிக்கும் மனம் எங்ஙனம் ஆற்றுவென் கோள் இழைத்தாள்
மதிக்கும் மதி ஆய் முதல் வானவர்க்கும் வலி ஈதாம்
விதிக்கும் விதி ஆகும் என் வில்தொழில் காண்டி என்றான்

(ஊதை- மூச்சுக்காற்று, கோள்-தீமை)

      

(மிகுதி அடுத்தவாரம்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்