'செல்லும் சொல்வல்லான்' : பகுதி 6 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

'முடிசூட்டுதற்கு இடையூறாய் நின்ற, கைகேயியின் சூழ்ச்சிக்கு மேம்பட்ட சூழ்ச்சியாகவும், மும்மூர்த்திகளின் வலிமைக்கு அடங்காததாகவும் விளங்குகின்ற, விதியினிற்கு, விதி வகுக்கக்கூடிய என் வில் தொழிலினைக் காண்பாய்!' என்கிறான் இலக்குவன்.

யர்ந்த தன் உரைத்திறன் அனைத்தும்,
இலக்குவனிடம் தோற்று வீழ்வதைக்கண்டும்,
இராமன் மனம் சோர்ந்தான் அல்லன்.
முள்ளை முள்ளால் எடுப்பதென்பது ஓர் உத்தி,
அவ் உத்தியைப் பின்பற்றி,
கோபத்தைக் கோபத்தினாலேயே நீக்க நினைக்கிறான் இராமன்.
ஆராய்ந்து உரை செய்யும் இலக்குவனை நோக்கி,
'வேதங்களைப் படித்த நீ விதியை வெல்வேன் எனக் கூறுதல் சரியோ? 
மறை கற்ற நாவால் வாய்க்கு வந்தபடி பேசலாமோ?' என்கிறான்.
'நன்னெறியைக் கடைப்பிடிப்பாரிடம் நில்லாத செயல் அல்லவா? நின் செயல். 
பெற்ற தாய் தந்தையரையும் கோபித்தல் முறையோ?' எனக் குமுறுகிறான்.

ஆய்தந்து அவன் அவ் உரை கூறலும் ஐய! நின்தன்
வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?
நீ தந்தது அன்றே நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால் அவர் மேல் சலிக்கின்றது என்னோ?

      

இராமனது அவ்வுத்தியும் இலக்குவனிடம் பலிக்கவில்லை.
அப்போதும் இலக்குவன் இராமன் சொல்லை ஏற்றானல்லன்.
இளம்பிறையைச் சூடிய சிவனைப்போல் கொதித்து நிற்கிறான்.
'உனக்கே உரிய பொருள்களை அயலார்க்குத் தானம் செய்யக் கற்றவனே!
எனக்குத் தாயும் நீ, தந்தையும் நீ, தலைவனும் நீயே!
எனது வில்லின் செயலைக் காண்பாய்!' என அவன் கொதித்தெழ,
அவனை இடை மறிக்கிறான் இராமன்.

நல் தாதையும் நீ தனி நாயகன் நீ வயிற்றில்
பெற்றாயும் நீயே பிறர் இல்லை பிறர்க்கு நல்கக்
கற்றாய் இது காணுதி இன்று எனக் கைம்மறித்தான்
முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அன்னான்.

      

அடுத்தடுத்து, தான் கையாண்ட,
எந்த உத்தியும் இலக்குவனிடம் பலியாது போக,
மீண்டும் மீண்டும் இராமனது சொற்கள்,
இலக்குவனைச் சேராது தோற்று வீழ்கின்றன.
அப்போதும் இராமன் சலித்தானல்லன்.
நிறைவாய் இலக்குவனை வீழ்த்தவென,
ஓர் அரிய உத்தியைக் கையாளுகிறான் அவன்.

      

அன்பும், அறமும், ஆத்திரமும்,
இலக்குவனிடம் செல்லவில்லை என்பதை அறிந்த இராமன்.
தான் வருத்தமுறின் இலக்குவன் கோபம் தணியும் எனக் கருதுகிறான்.
இலக்குவனது செயலால் தான் நொந்து வருந்தினால்,
அவனது கோபம் உடன் நீங்கும் என நினைந்து,
வருத்தமுற்றாற் போல் இரங்கி உரை செய்யத் தலைப்படுகிறான்.

      

'தம்பீ! நின் கோபம் தீர்வது, உடன் பிறந்த பரதனை வென்ற பின்போ?
அன்றி, சான்றோர் புகழ்கின்ற தந்தையை வெற்றி கொண்ட பின்போ?
அல்லது தாயை ஜெயித்த பின்போ?' என வருத்தத்தோடு வினவுகிறான்.
தொடர்ந்து, 'நல்ல சொற்களைக் கூறி எனைப் பாதுகாத்த,
தந்தையின் சொல்லை மீறி,
இராட்சியத்தை மேற்கொள்வது எனக்குத் தக்கதன்று.
ஆனால் அண்ணனாகிய எனது சொல்லை மீறுவதால்,
உனக்கு என்ன இழுக்கு வரப்போகிறது?' என,
சோகமாய் உரைக்கிறான்.

ஆன்றான் பகர்வான் பினும் ஐய இவ் வைய மையல்
தோன்றா நெறி வாழ் துணைத் தம்முனைப் போர் தொலைத்தோ?
சான்றோர் புகழும் தனித் தாதையை வாகை கொண்டோ?
ஈன்றாளை வென்றோ? இனி இக் கதம் தீர்வது என்றான்.

நன் சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை
தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கதுஅன்றால்
என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்
தென்சொல் கடந்தான் வடசொல்-கலைக்கு எல்லை தேர்ந்தான்.

      

இராமனின் எண்ணம் ஈடேறுகிறது.
சொற்பொருள் வலிமையை விட,
அச் சொற்பொருளை மற்றவரிடம் செலச்சொல்லும் வலிமையே,
உரைத்திறத்தின் உச்சநிலை என நினைந்த கம்பன்,
செல்லாத இடத்தும் தன் சொல்லைச் செலச் செய்த,
இராமனின் சொற்திறன் கண்டு மகிழ்ந்து,
தென்சொல் கடந்தான்,
வடசொல் கலைக்கு எல்லை நேர்ந்தான்
என,
அவனை வியந்து பாராட்டுகின்றான்.

      

அதுவரை தணியாத இலக்குவனது கோபம்,
அண்ணனது வருத்தம் கண்;டதும் பறந்து போகிறது.
ஆராய்ந்து தர்க்கிக்கும் வார்த்தைகளை நீக்குகிறான் அவன்.
இறை ஆணைக்குக் கட்டுப்;பட்டு நிற்கும்,
கடல் அலைகள் போலச் சீற்றம் துறந்து,
வேதங்களை ஒத்த அண்ணனின் சொல்லுக்குக் கட்டுப்படுகிறான்.

சீற்றம் துறந்தான் எதிர்நின்று தெரிந்து செப்பும்
மாற்றம் துறந்தான் மறை நான்கு என வாங்கல் செல்லா
நால் தெண்திரை வேலையின் நம்பி தன் ஆணையாலே
ஏற்றம் தொடங்காக் கடலின் தணிவு எய்தி நின்றான்.

      

சீற்றம் துறந்த இலக்குவன் வாயிலிருந்து,
விரக்தியாய் வார்த்தைகள் வெளிவருகின்றன.
'அண்ணனுக்குத் தீமைவரப் பார்த்திருந்ததால்,
எதிரிகள் இழித்துச் சொல்லுகின்ற சொற்களையும் சுமந்தேன்.
மலைகளைப் போல் வளர்ந்திருக்கும் தோள்களையும் பயனின்றிச் சுமந்தேன்.
அம்பறாத்தூணியையும், உறுதி பெற்ற வில்லையும் வீணே சுமந்தேன்.
நான் வெகுண்டு கோபித்து என்ன பயன்?'
என்றுரைத்து அடங்குகிறான்.

செல்லும் சொல் வல்லான் எதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்
சொல்லும் சுமந்தேன் இரு தோள் எனச் சோம்பி ஓங்கும்
கல்லும் சுமந்தேன் கணைப் புட்டிலும் கட்டு அமைந்த
வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டு என்னை? என்றான்.

      

சொல்லை உரைத்து, 
சொல்லுக்குள் உயர்ந்த பொருளையும் அடக்குவதோடல்லாமல்,
அச் சொல்லையும், பொருளையும்,
செல்லாச் செவியிலும் செலச் செய்த,
இராமனின்  சொல் வலிமையைப் பாராட்ட நினைந்த கம்பன்,
இப்பாடலில் தனது கூற்றாய்,
இராமனுக்கு, செல்லும் சொல்வல்லான் என,
பட்டமளித்துப் பாராட்டுகிறான்.

      

இராமனுக்கு செல்லும் சொல்வல்லான் எனும் பட்டத்தை,
கம்பன் நல்குவதில் பொருள் உண்டு.
இப்பட்டமளிப்பின் மூலம், 
கேளாச்செவியிலும் தன் கருத்தை ஏற்றுவிக்கும் ஆற்றலை,
சொல்வன்மையின் அதி உச்சத் தகுதியாகப் பதிவு செய்கிறான் கம்பன்.
சொல்லாற்றல், பொருளாற்றல் எனும் இரண்டினோடும்,
அவற்றை உட்செலுத்துகிற ஆற்றலும் ஒருசேர அமைந்த இராமனுக்கு,
கம்பன் வழங்கிய செல்லும் சொல்வல்லான் எனும் பட்டம்,
சொல்வன்மையை அங்கீகரிக்கின்ற அதி உயர் பட்டமாம்.

      

இப்பட்டத்தினை இராமனுக்கு முன்னரே வழங்கியதால்,
செல்லும் சொல்வல்லான் ஆன இராமன்,
குறிப்பறிந்து விரிந்த பொருளைச் சுருங்க உரைக்கவல்ல அனுமனுக்கு,
சொல்லின் செல்வன் என வழங்கும் பட்டம், தகுதியின் பாற்பட்டதாம்.
கம்பன் வழங்கும் பட்டம் கொண்டு இராமனது சொல்வன்மையையும்,
இராமன் வழங்கும் பட்டம் கொண்டு அனுமனது சொல்வன்மையையும்,
அறிந்து மகிழ்கிறோம் நாம்.
பாத்திரங்களுக்கான பட்டமளிப்பின் மூலம்,
சொற்திறத்தின் நுண்மைகளை ஆராய்ந்து விரித்துரைத்த,
கம்பனின் ஆற்றல் கண்டு நம் உள்ளம் வியந்து நிற்கிறது.

      

(முற்றும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்