சொரூபன்!
வீழ்ந்தபோதும் நீ வீரன்,
அதற்குப் பின்னான மாற்றங்களில்,
இன்று
அப்படிச் சொல்லல் ஆகாதாம்.
கார்த்திகைக் கண்ணீர்
குற்றமென்கிறது
நீதிமன்று.
தடை கடந்து
உரத்துச் சப்தமிட்டுச் சொல்ல,
வீரன் இல்லை, நான் நினைப்போல்.
இன்று கண்டேன், நின் அம்மையை.
நினைத்
தொலைத்த அன்று
தங்க விக்கிரகமாய் மினுங்கிக்
கொண்டிருந்த அந்த
அமைதிப் பேரழகில்
முதுமையின் வரிகள்.
என் தலைகோதி தலை கோதி
அவள் தேடியது
நின் பால்யத்தை.
கண்டெடுத்தாள்தான்,
அதன்பின்பு வெளிவந்ததொரு
நீண்ட பெருமூச்சு...
பின் அமைதி.
சேலை மூடி
மறைத்துப் பேணுகிறாள்
முதுமை தன்னில் செதுக்கிய வரிகளை.
அவற்றை விசுவாசிக்கிறாள்
அவற்றில் அன்பு சொரிகிறாள்
அவை
நின் சீருடையில் இருந்தவை
என நம்புகிறாள்
பூரணமாக.