'நெஞ்சினால் பிழைப்பிலாள்': பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் தழுவிய இராமகாதை என்னும் விரிந்த கடலுள்,
கம்பனால் அமைக்கப்பட்ட அற்புதப் பாத்திரங்கள் எனும் அரிய முத்துக்கள்,
பலப்பலவாய் சிதறிக்கிடக்கின்றன.
அம்முத்துக்களுள் சில பெரியவை, சில சிறியவை.
பெரியதான முத்துக்கள் நம்மைக் கவர்வது இயற்கையே.
அபூர்வமாய் சில சிறிய முத்துக்கள், 
பெரியமுத்துக்களைவிட நம் மனதைக் கவர்ந்துவிடுகின்றன.
அங்ஙனம், கம்பனால் அழகுற அமைக்கப்பட்டு,
நம் மனங்கவர்ந்து நிற்கும் ஒரு சிறிய முத்தாய்,
அகலிகை பாத்திரம் அமைந்து விடுகிறது.
♠♠♠♠♠
தமிழிலக்கியப்பரப்பில் அகலிகைக் காதை,
பலபுலவர்களாலும் பண்டுதொட்டுப் பயிலப்பட்டு வருகின்றது.
பலராலும் கையாளப்பட்ட அக்காதையை,
மூலநூலான வான்மீகத்தின் வழிநின்று,
கம்பனும் தன் காவியத்துட் புகுத்துகிறான்.
இராமகாதையின் விரிந்த பரப்பில்,
அகலிகைப் பாத்திரத்தின் அகலம் மிகச் சிறியது.
புருஷோத்தமனாக இராமனைக் காட்டும் புலவனின் நோக்கத்திற்கு,
துணைசெய்து நிற்பதோடு,
அகலிகைப்பாத்திரத்தின் தேவை,
கம்பகாவியத்தைப் பொறுத்தவரை முடிந்துபோகிறது. அதுதவிர,
கதைப்போக்கிலோ காவிய ஓட்டத்திலோ,
இப்பாத்திரத்தின் பாதிப்பு,
இல்லையென்றே சொல்லும்படியானது.
அகலிகையோடு தொடர்புடைய இரண்டு பாத்திரங்கள்,
இராமகாதையில் வந்து போகின்றன.
அகலிகையின் கணவரான,
கௌதம முனிவர் எனும் பாத்திரம்,
ஜனகரின் குலகுருவாய்த் திகழும்,
அகலிகையின் புதல்வரான,
சதானந்த முனிவர் எனும் பாத்திரம் என்பவையே அவ்விரண்டு பாத்திரங்களுமாம்.
அகலிகைக் காதை மட்டுமன்றி,
அதனோடு தொடர்புடைய மற்றைய இரு பாத்திரங்களுங்கூட,
பாலகாண்டத்தோடு நிறைவுறுகின்றன.
இவ் அகலிகையின் கதை,
இருபத்தெட்டுப் பாடல்களில் அமைக்கப்பட்டு,
அகலிகைப்படலமாய்,
கம்பராமாயணப் பாலகாண்டத்தில் இடம்பெறுகிறது.
இவ் இருபத்தெட்டுப் பாடல்களுள்,
ஆறு பாடல்கள் தனித்த வர்ணனைகளாய் அமைவன.
பதினைந்து பாடல்கள் இராமகாவியத்தோடு அக்கதை இயையுமாற்றைக் கூறுவன.
சர்ச்சைக்குரியதான அகலிகையின் வரலாறு,
விசுவாமித்திர முனிவனின் கூற்றாய்,
ஏழே பாடல்களில் கம்பனாற் சொல்லப்படுகிறது.
அவ்வேழு பாடல்களிற் கம்பன் செய்யும் நுட்பங்களை
ஆராயுமுன்,
கம்பகாவியத்தில் அகலிகைப்படலம் கூறும்,
நிகழ்வுகளின் சுருக்கத்தை முதலிற் காண்பாம்.
♠♠♠♠♠
முதலில், இலக்கியப் பரிச்சயம் குறைந்த இளைஞர்க்காய்,
அகலிகையின் கதைச்சுருக்கம் ஒரு சில வரிகளில்.
கௌதம முனிவரின் மனைவியான அகலிகை,
அழகிற் சிறந்தவள்.
அவள் அழகு உலகெங்கும் பேசப்படுகின்றது.
தேவேந்திரன் அவள் அழகு கண்டு மயங்குகிறான்.
பிறனில் விழையும் அறமற்ற பெருவிருப்பு உந்த,
அகலிகையை அனுபவிக்கத் திட்டமிடுகிறான்.
ஒருநாள் அதிகாலை விடிவதன் முன்,
கௌதம முனிவர்,
நித்திய கருமங்கள் நிறைவேற்ற,
நீர்நிலைநோக்கிச் செல்கிறார்.
முனிவரில்லா அச்சூழ்நிலையைப் பயன்படுத்தி,
கௌதமரின் வடிவம் கொண்டு,
ஆச்சிரமத்தினுள் நுழைகிறான் இந்திரன்.
வந்தது கணவனே என நினைந்து,
இந்திரனின் வஞ்சனைக்குப் பலியாகி,
தன்னை இழக்கிறாள் அகலிகை.
நீர்நிலை சென்ற கௌதமர் நிகழ்ந்தது உணர்ந்து,
ஆத்திரத்துடன் ஆச்சிரமம் திரும்புகிறார்.
முனிவரின் வருகையுணர்ந்து,
இந்திரன் பூனையாய் மாறி ஓட, 
அவனைச் சபித்து,
கலங்கி நிற்கும் அகலிகையையும்,
கல்லாகச் சாபமிடுகிறார் அவர்.
அகலிகை வருந்தி வேண்ட,
'தசரத குமாரனான இராமன் கழற்துகள்பட,
மீண்டும்  பெண்ணாவாய்!' என,
சாபவிமோசனம் உரைத்துக் கௌதமர் செல்கிறார்.
பின்னாளில்,
வேள்விகாக்க விசுவாமித்திரரோடு இராமன் காடேகிறான்.
யாகம் முடிந்து,
மிதிலை செல்லும் வழியில்,
அவன் கழற்துகள் பட்டு,
கல்லாய்க் கிடந்த அகலிகை,
சாபம் நீங்கிப் பெண்ணாகின்றாள்.
பின், அகலிகையைக் கௌதமரிடம் சேர்ப்பித்து,
விசுவாமித்திரரும், இராமஇலக்குவரும் மிதிலை சேர்கின்றனர்.
இதுவே, கம்பன்தரும் அகலிகைக் காதையின் சுருக்கம்.
♠♠♠♠♠
மேற்சொன்ன அகலிகைக் காதையை,
கம்பன்,
பின்னோக்கும் உத்தியால் உரைக்கத் தலைப்படுகிறான்.
தசரதனிடம்,
இராமலட்சுமணர்களை வேள்விகாக்க வேண்டிப்பெற்று,
காடேகிறார் விசுவாமித்திரர்.
வழியில் இராமனால் தாடகைவதம் நிகழ்த்தப்படுகிறது.
பின்,
இராமலட்சுமணர்கள் அரக்கர்களை அழித்து,
முனிவரின் வேள்விகாத்து வெல்கின்றனர்.
அதன்பின்,
இராமலட்சுமணர்களை அழைத்துக் கொண்டு,
ஜனகனின் வேள்வி காணப்புறப்படுகிறார் விசுவாமித்திரர்.
இவ்விடத்திலேயே,
கம்பனின் அகலிகைப்படலம் ஆரம்பிக்கிறது.
சோனை நதிக்கரையிற் தங்கி,
கங்கையைக் கண்டு மிதிலைநாடு சேரும் இவர்கள்,
மிதிலை நகரின் மதிற்புறத்தே,
ஒளிரும் கல்லொன்றைக் காண்கின்றனர்.
அக்கல்லின்மேல் இராமன் கழற்துகள்பட,
அது பெண்ணாகிறது.
ஆச்சரியமுற்ற இராமன்,
யாரிவள்? என விசுவாமித்திரரை வினவுகிறான்.
இவ்விடத்தில், அகலிகையின் வரலாறு,
விசுவாமித்திரரால் விரித்துரைக்கப்படுகிறது.
அகலிகையை இந்திரன் விரும்பியமை ஒரு பாடலிலும்,
இந்திரன் கௌதம முனிவரின் வேடத்தில் வந்த செய்தி ஒருபாடலிலும்,
இந்திரனால் அகலிகை மாசுபடும்செய்தி ஒரு பாடலிலும்,
கௌதம முனிவர்வர, இந்திரன் பூனையாய் ஓடும் செய்தி ஒருபாடலிலும்,
இந்திரற்கான கௌதமரின் சாபம் ஒருபாடலிலும்,
அகலிகைக்கான கௌதமரின் சாபம் ஒரு பாடலிலும்,
அகலிகைக்கு முனிவர் சொன்ன சாபவிமோசனம் ஒரு பாடலிலுமாக,
மொத்தம் ஏழு பாடல்களில்,
அகலிகை வரலாறு கம்பனால் உரைக்கப்படுகிறது.
இதன்பின், சாபவிமோசனம் பெற்ற அகலிகையை அழைத்துச் சென்று,
கௌதம முனிவரிடம் விசுவாமித்திரர் ஒப்படைக்க,
இராமன் கௌதமரை வணங்கி,
முனிவரோடு மிதிலை செல்கிறான் என்பதோடு,
கம்பனின் அகலிகைப் படலம் முற்றுப்பெறுகிறது.
♠♠♠♠♠
நம் பழைய மரபுப்புலவர்களால் மட்டுமன்றி,
நவீன இலக்கியக் கர்த்தாக்களாலுங்கூட,
அகலிகைக் கதை அழகுறக் கையாளப்பட்டுள்ளது.
பலபுலவர்களாலும் பயிலப்பட்ட அவ் அகலிகைக் காதை,
அப்புலவர்களின் மனப்போக்கிற்கேற்ப,
விதவிதமாய் மாற்றியுரைக்கப்பட்டது.
இந்திரனை, 
அகலிகையின் முன்னைக்காதலனாய் உரைப்பர் ஒருவர்.
இந்திரனின் அழகுகண்டு அவன்பால் விருப்புற்று,
அகலிகை,  
அவனை அணைந்ததாய் உரைப்பார் மற்றொருவர்.
இருளில் வந்தது யாரென்று தெரியாமலே,
அகலிகை தன்னையிழந்ததாய் உரைப்பார் வேறொருவர்.
இங்ஙனம்,
அகலிகைக் கதை பலவிதமாய்ப் பேசப்பட்டிருக்கிறது.
இராமகாவியத்தின் அறநிலை வழுவாமல்,
தனக்கென ஒரு தனிப்பாணி அமைத்து,
கம்பன் இக்கதையை அற்புதமாய்க் கையாள்கிறான்.
அவ்வற்புதம் காண்பாம்.
♠♠♠♠♠
கம்பனில் வரும் அகலிகை,
தெரிந்தே கற்பிழந்தாளா? ஏமாற்றப்பட்டாளா?
கம்பகாவியத்தினூடு அகலிகையைக் கற்போர் மனதில்,
இக்கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.
வந்தது இந்திரன் எனத் தெரிந்தே, 
அகலிகை கற்பிழந்தாள் என, 
ஒருசாரார் வாதிடுகின்றனர்.
அங்ஙனமன்றி,
அவள் தன்னையறியாமலே தவறிழைத்தாள் என,
அடித்துப் பேசுகின்றனர் வேறு சில அறிஞர்கள்.
இவ்விருதிறத்தாரும், முரண்பட்ட தம் வாதத்திற்கு, 
கம்பன் கவிதையினையே சான்றாய்க் காட்டுவது, 
வியப்புத்தருகிறது.
முரண்பட்ட இவ்விருதிறத்தார்க்கும், 
கம்பன் கவி சான்றாவது எங்ஙனம்?
ஆராய்வது அவசியமாகிறது.
மாறுபட்ட அவ்விருதிறத்தாரினதும், 
வாதங்களை முதலில் ஆராய்வோம். 
♠♠♠♠♠
அகலிகை தெரிந்தே கற்பிழந்தாள் என,
வாதிடுவோரில் ஒருசாரார்,
கம்பகாவியத்துட் புகாமல்,
தம் அறியாமையே சான்றாக,
அழுக்குகளை இரசிக்கும் தம் ஆழ்மன விருப்பினை வெளிப்படுத்தி,
கற்பனையான ஒரு வாதத்தினை முன்வைக்கின்றனர்.
அவ்வாதம் ஆராயப்படவேண்டிய ஒன்றன்று.
ஆயினும்,
இளையோர் மனதில் அவர்கருத்து பதியாதிருக்க,
அவர்தம் வாதத்தையும் ஆராய்தல்கூட அவசியமாகிறது.
கற்பனையான அவர்தம் வாதம்தான் என்ன?
காண்பாம்.
♠♠♠♠♠

(அடுத்த வாரமும் தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்