'நெஞ்சினால் பிழைப்பிலாள்': பகுதி 3 - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ண்மை ஒன்றைக் காண,
மூன்று பிரமாணங்களை நம் ஆன்றோர் ஏற்றுக்கொள்வர்.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்,
அறிவுக்கருவிகளால் நேரே காண்பது அவற்றுள் ஒன்று.
இது 'காட்சிப்பிரமாணம்' எனப்படும்.
தெரிந்தவை கொண்டு,
தெரியாதவற்றை ஊகித்து அறிதல் மற்றொன்று.
இது 'அநுமானப்பிரமாணம்' எனப்படும்.
உயர்ந்தோர் கருத்தை ஏற்று,
ஒன்றை ஒத்துக்கொள்வது இன்னொன்று.
இது 'ஆகமப்பிரமாணம்' எனப்படும்.
இவையே ஆன்றோர் ஏற்றுக் கொள்ளும் பிரமாணங்களாம்.
🌾  🌾  🌾
அகலிகை கற்புள்ளவள் என,
வாதிடுவோர்தம் மேற்சொன்ன இரண்டு வாதங்களும்,
அநுமானப் பிரமாணத்தினை ஆதாரமாய்க் கொண்டு அமைந்தவை.
வாதநிலையில் அநுமானப்பிரமாணத்தினை,
காட்சிப் பிரமாணத்தால் உறுதி செய்தாலன்றி,
ஒப்புதல் முடியாது.
எனவே,
மேற்சொன்ன இருவாதங்களும்,
அகலிகையை,
நல்லவளாய் உறுதி செய்ய முடியாது,
நலிவுற்று நிற்கின்றன.
🌾  🌾  🌾
இனி,
அகலிகையை நல்லவளாய் வாதிடுவோர்,
ஆகமப்பிரமாணம் ஒன்றினை எடுத்துக் காட்டி,
அகலிகை நல்லவள் என உரைக்கின்றனர்.
அவ்வாகமப்பிரமாணம், விசுவாமித்திரர்; கூற்றாய் வெளிவருகிறது.
இராமனின் காற்துகள்பட்டு சாபவிமோசனமுற்ற அகலிகையை,
கௌதம முனிவரிடம் அழைத்துச் செல்கிறார் விசுவாமித்திரர்.
அவளைக் கௌதமரிடம் ஒப்புவித்து,
'மனத்தினாற் பிழை செய்யாத இவளை ஏற்றுக்கொள்' என,
உரைக்கிறார் அவர்.
அச்செய்தியைச் சொல்லும் பாடல் இது.

'அஞ்சன வண்ணத்தான்தன் அடித்துகள் கதுவாமுன்னம்,
வஞ்சிபோல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகிநின்றாள்;
நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக! என்ன,
கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும், கருத்துட் கொண்டான்.'


இப்பாடலில் அகலிகையை,
'நெஞ்சினால் பிழைப்பிலாள்' என,
விசுவாமித்திரர் கூறுகின்றார்.
பிரம்ம ரிஷியாகிய விசுவாமித்திரர்,
நிதானத்துடன் உரைக்கும் இக்கூற்று,
ஆகமப்பிரமாணமாய்க் கொள்ளத்தக்கதேயாம்.
'நெஞ்சினாற் பிழைப்பிலாள்' என,
விசுவாமித்திரரைச் சொல்ல வைத்ததன்மூலம்,
அகலிகையை இந்திரன் வஞ்சித்தே கெடுத்தான் என்பதையும்,
தான் தவறுவது தெரியாமல்,
உடலளவில் மாத்திரமே அகலிகை கெட்டுப்போனாள் என்பதையும்,
அதனாற்றான் அவளுக்கு இராமனால் சாபவிமோசனம் கிட்டியது என்பதையும்,
கம்பன் நமக்கு உணர்த்துகிறான் என உறுதிபட இவர்கள் உரைப்பர்.
அகலிகையை நல்லவளாய்க் காட்ட முயலும் இவ்வாதம்,
வலிமையானதாகவே தோன்றுகிறது.
🌾  🌾  🌾
அகலிகை,
தெரிந்தே தவறிழைத்தாள் என உரைப்போர்,
மேற்சென்ன வாதத்தினை ஏற்க முடியாதென்பர்.
தம்மறுப்புக்கு ஆதாரமாய்,
கவிக்கூற்றாய் அமையும் கம்பனின் பாடலொன்றை,
அவர்கள் எடுத்துக் காட்டுவர்.
அவர்தம் வாதத்தை வலிமையாக்கும்,
அக்கம்பன் கவியைக் காண்பாம்.
🌾  🌾  🌾
கௌதமமுனிவர் வேடத்தில் வந்த இந்திரன்,
அகலிகையைத் தன் விருப்புக்கு ஆளாக்க,
அவளும் அவனாசைக்கு உடன்படுகிறாள்.
இந்நிலையில், நீர் நிலைக்குச் சென்ற கௌதமன்,
சூழ்நிலையின் மாற்றத்தை உணர்ந்து,
தான் ஏமாற்றப்பட்டதறிந்து விரைந்து திரும்புகிறான்.
மேற்செய்திகள் கம்பனால் சொல்லப்படும் பாடல் இது.

'புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும், 
'தக்கது அன்று|' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.'


🌾  🌾  🌾
மாறு வேடத்தில் வந்த இந்திரன்,
அகலிகையை அனுபவிக்கும் செய்தியை,
இப்பாடலில் முதல் ஒன்றரை வரிகள் சொல்கின்றன.
புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டு இருத்தலோடும்|,

இந்திரன், அகலிகையைச் சேர்ந்து,
தன் நீண்டநாட் காமவேட்கையைத் தீர்க்க முனைகிறான். 
எல்லையற்ற இன்பநாட்டம் கொண்ட அவ் இந்திரன்,
தேவமாதரிடம் பெறாத புதிய இன்பத்தை,
அகலிகையிடம் காண்கிறான் எனும் கருத்தை,
இவ் ஒன்றரை வரிகளும் நமக்கு உணர்த்துகின்றன.
இது, இப்பாடலூடு தெரியும் இந்திரனின் மனநிலை.
🌾  🌾  🌾
இனி, நாம் அகலிகையின் மனநிலையைக் காண்போம்.
கம்பன் பாடல் அவள் மனநிலையைத் தெளிவுபடப் பேசுகிறது.
'உணர்ந்தனள்; உணர்ந்தபின்னும், 
'தக்கது அன்று|' என்னஓராள்; தாழ்ந்தனள் இருப்ப,

தன்னைச் சேர்பவன் இந்திரன் என அகலிகை உணர்ந்தாள் என்றும்,
உணர்ந்தபின்பும் அது தக்கதான செயலல்ல என அறிந்து,
அச்செயலை அவள் விலக்கினாளல்லளென்றும்,
இந்திரனின் விருப்புக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தனள் என்றும்,
இவ்வடிகளிற் தெளிவுபடச் செய்தி சொல்லப்படுகிறது.
இவையே இப்பாடல் தரும் செய்திகளாம்.
🌾  🌾  🌾
இப்பாடலை ஆதாரம் காட்டியே,
தெரிந்தே அகலிகை கற்பிழந்தாள் என,
உறுதிபட இப்புலவர்கள் வாதம் செய்வர்.
இவ்வாதமும் ஏற்கத்தக்க ஒன்றாகவே படுகிறது.
🌾  🌾  🌾
மேற்சொன்ன கம்பனின் கூற்றினால்,
அகலிகை தெரிந்தே கற்பிழந்தவள் என்பது உறுதிப்படுமேல்,
'நெஞ்சினால் பிழைப்பிலாள்' என,
இவளை எங்ஙனம் விசுவாமித்திரர் உரைத்தல் கூடும்?
கேள்வி பிறக்கிறது.
ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும்,
இவ்விரண்டு பாடல்களால்,
அகலிகை, தெரிந்து தவறினளா? 
தெரியாது தவறினளா? எனும், 
கேள்விக்கு விடைகாணமுடியாமல்,
திகைத்து நிற்கிறது இலக்கிய உலகம்.
🌾  🌾  🌾
அறிவுச் சோம்பல் கொண்ட சில இலக்கியவாதிகள்,
கம்பனின் முரண்பட்ட இவ்விரு கூற்றுக்களையும்,
ஆராய்ந்து முடிவுகாண முயலாமல்,
வழமையான தம்பாணியில் இவ்விருபாடல்களில் ஒன்று,
பிற்சேர்க்கை என உரைத்துத் தப்பமுயல்கின்றனர்.
இன்றுவரை வெளிவந்த எந்த இராமாயணப்பதிப்பிலும்,
இவ்விருபாடல்களில் எந்தவொன்றும்,
பிற்சேர்க்கையாய் ஒதுக்கப்படவில்லை.
கம்பகாவியத்திற்கு உரைசெய்த அறிஞர் பலரும்,
முரண்பாடான இப்பகுதிக்கு விடைகாணாது விட்டது,
இப்பகுதி பற்றிய சர்ச்சைகள் மேலும் வளரத் துணையாயிற்று.
முரண்பட்ட இவ்விருகூற்றுக்கள் கொண்டு மோதி நிற்பார்க்கு,
கம்பன் தரும்விடைதான் என்ன?
கம்பசூத்திரத்துள் நுழைந்து தேடின் பதில் கிடைக்காமலா விடும்?
முயல்வோம். 
🌾  🌾  🌾
'நெஞ்சினால் பிழைப்பிலாள்' என,
விசுவாமித்திரர் சொல்லும் கூற்று,
வேறுகருத்துக்கு இடமின்றி,
தெளிவுபடச் சொல்லப்பட்டிருப்பதால்,
அப்பாடலுள் நுழைந்து தேடும் அவசியமற்றுப் போகிறது.
அங்ஙனமாயின்,
அகலிகையின் நடத்தையைக் குறைகூறும் பாடல்வரிகளுக்குள்,
அவள் 'நெஞ்சினால் பிழைப்பிலாள்' எனும் முனிவர் கூற்றுக்காம்,
ஆதாரம் ஏதும் அகப்படுகிறதா என ஆராய்தல் அவசியமாகிறது.
அகலிகை,
மனதால் குற்றம் இழைக்கவில்லை என்பதற்கான ஆதாரத்தினை,
அவள் நடத்தையைக் கூறும் பாடல் வரிகளுக்குள் காண்போமாகில்,
இம்முரண்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
🌾  🌾  🌾
இவ்வெண்ணத்தோடு, 
அகலிகை தவறிழைத்ததாய்க் கூறும் அப்பாடலுள்,
மீண்டும் புகுந்து தேட நம் நெஞ்சம் விழைகிறது.
அதனால் மீண்டும் ஒருதரம் அப்பாடலைக் காணப் புகுகிறோம்.
🌾  🌾  🌾
                                                                                            (அடுத்த வாரமும் தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்