'நெஞ்சினால் பிழைப்பிலாள்': பகுதி 4 - கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ண்மையைக் காண்பதற்காக,
அகலிகை தவறிழைத்ததாய்க் கூறும் பாடலை,
மீண்டும் ஒருதரம் காணப்புகுகிறோம். 
அச்செய்தியை வெளிப்படுத்தும் கம்பனின் பாடல் இது.

'புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள் உணர்ந்தபின்னும், 
தக்கது அன்று என்னஓராள்ளூ தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.'


இப்பாடலில் வரும்
உணர்ந்தனள் உணர்ந்தபின்னும், 
தக்கது அன்று என்னஓராள் தாழ்ந்தனள் இருப்ப,

எனும் அடிகளே,
அகலிகையின் செயற்பாட்டைக் குறிக்கின்றன.
இவ்வடிகளூடு,
அகலிகை நெஞ்சினாற் பிழைப்பின்றி இருந்தாள் எனும் கூற்றுக்காம்,
ஆதாரம் கிடைக்கிறதா என ஆராய,
அற்புதமான விடை கிடைக்கிறது.
அகலிகை மனதினாற் தவறிழைக்கவில்லை எனும் கருத்தை,
அவள் தவறிழைத்தாள் என வாதிடுவோர் கூறும்,
அதே பாடல் அடிகள் கொண்டு நிரூபிக்க முடிகிறது.
விடைகாணும் விருப்போடு அப்பாடலுள் மீண்டும் நுழைவோம்.
♠♠♠♠♠
தன் நித்திய கருமங்களை நிறைவேற்ற,
ஆற்றங்கரை செல்கிறார் கௌதமர்.
முனிவர் அகன்றார் எனத் தெரிந்ததும்,
அவர் வடிவெடுத்து ஆச்சிரமம் புகுந்து,
அகலிகையை அணைய முயல்கிறான் இந்திரன்.
புலராப் பொழுதில், தெளியா அறிவோடு இருந்த அகலிகை,
ஒத்தவடிவு, ஒத்தகுரல் தந்த மயக்கத்தால்,
வந்தவன் கணவனே என நினைந்து,
அவன் விருப்புக்கு உடன்படுகிறாள்.
வடிவும், குரலும் ஒத்தாலும்,
மோகம் கொண்ட இந்திரனின் இயக்கத்தால்,
இவன், தன் கணவனல்லன் என அகலிகை உணர்கிறாள்.
'காமப் புதுமண மதுவின் தேறல் 
ஒக்க உண்டு இருத்தலோடும் உணர்ந்தனள்'

அவளின் இவ் ஐயத்திற்கு,
மென்மை சார்ந்த அவளின் உணர்வே சான்றாகிறது.
அக்குறிப்பினை, 
கம்பனிட்ட 'உணர்ந்தனள்' எனும் வார்த்தையால்,
தெரிந்து கொள்கிறோம்.
இவன் கணவனல்லன் என,
அகலிகை, உணர்வால் தெரிந்தனளே அன்றி,
அறிவால் தெரிந்தனள் அல்லள்.
அதுநோக்கியே, 'அறிந்தனள்' எனாமல்,
'உணர்ந்தனள்' என்கிறான் கம்பன்.
வந்தவன் கணவன் அல்லன் என உணரினும்,
அறிவால் அதனை நிரூபிக்கமுடியாத ஐய நிலையில்,
அகலிகை மனம் தவிக்கிறது.
இந்நிலையில்,
ஐயமுற்ற அகலிகை,
வந்தவனை விலக்கியிருக்கக் கூடாதா?
கேள்வி பிறக்கிறது.
♠♠♠♠♠
வாசகராய் இக்கேள்வியைக் கேட்பது சுலபம்.
அகலிகையின் நிலைநின்று,
இக்கேள்விக்கான விடையை ஆராய்தல் வேண்டும்.
வந்திருப்பது கணவனா? இல்லையா? என்று,
உறுதியாய்த் தெரியாத நிலையில்,
'நீ என் கணவனல்லன், மாற்றான்' என,
வந்தவனை அகலிகை விலக்கியிருக்கலாம்.
நிச்சயமில்லாத ஐயநிலையில்,
அவள் அதைச் செய்திருப்பின்,
ஒருவேளை வந்தது கணவனே ஆகின்,
கணவன் செயற்பாட்டில் பிற ஆடவர் நினைப்புண்டாகிய,
குற்றத்திற்கு ஆளாகி,
கணவன் முன் அவள் பழிசுமக்கவேண்டிவரும்.
அதுநோக்கியே,
அகலிகை மேற்சொன்ன முடிவை எடுக்கமுடியாது போயினள்.
உணர்வுக்கும், அறிவுக்குமான முரண்பாட்டில்,
குழப்பமுறுகிறாள் அகலிகை.
இவள் குழப்பத்தை,
அற்புதமான ஒரு தொடராற் காட்டுகிறான் கம்பன்.
'தக்கதன்றென்னவோராள்'
கம்பனின் இத்தொடர்,
மாற்றானுக்கு உடன்படும் இச்செயல், 
தகுதியான செயலன்று என நினையாது, 
தாழ்ந்தாள் அகலிகை எனும் கருத்தைத் தருவதாய்க் கொண்டே, 
பலரும் அவளைக் குற்றம் காண்கின்றனர்.
ஆனால், அத்தொடருக்காம் அர்த்தம் அதுவன்று.
அறிவுக்கும், உணர்வுக்கும் இடைநின்று குழம்பிய அகலிகை,
அச்செயல் தக்கதென்றோ, 
தக்கது அன்று என்றோ,
முடிவு செய்ய முடியாது தவித்தனள் என்பதையே,
அக்கூற்று உணர்த்துகிறது.
'தக்கது, அன்று என்னவோராள்'
எனப்பிரித்தே இத்தொடருக்குப் பொருள்கொள்ளல் வேண்டும்.
அங்ஙனம் பொருள்கொள்ள,
அகலிகை தெரிந்து தவறிழைத்தாள் எனும் கருத்துமாறி,
குழப்பமுற்று நின்றாள் எனும் பொருள் வெளிப்படுகிறது.
♠♠♠♠♠
பாடலில் கம்பனிடும் அடுத்த சொல்,
அகலிகையை நல்லவளாய்க்காண,
மீண்டும் இடர் செய்து நிற்கிறது.
'தாழ்ந்தனள்' என்பதே கம்பன் அடுத்து இடும் சொல்.
'தாழ்ந்தனள்' எனக் கம்பன் இடும் அச்சொல்லுக்கு,
கற்பு நிலைநின்றும் அகலிகை 'தாழ்ந்தனள்' எனப் பொருள் கொண்டு,
பலரும் மயங்குகின்றனர்.
ஒருசொல் பலபொருள் தரும் உண்மை மறந்த இவர்கள்,
'தாழ்தல்' எனும் சொல்லுக்காம் பிறபொருள்களைத் தேடத்தவறினர்.
'தாழ்தல்' எனும் சொல்லுக்கு,
தாழ்த்துதல் எனும் பொருளும் உண்டு.
அப்பொருள் கொண்டு நோக்க,
'தாழ்ந்தனள்' எனக் கம்பனிட்ட வார்த்தை,
'தாழ்த்தினள்' எனப் பொருள் தருவதை உணரலாம்.
அப்பொருளை,
நடந்த சம்பவத்தோடு இயைத்து நோக்க,
கம்பசூத்திரம் தெளிவாகிறது.
வந்தவன் கணவனா? அல்லனா? எனத் தெளிய முடியாது தவிக்கும் அகலிகை,
அவன் ஆசையை மறுக்க முடியாவிடினும்,
அவன் ஆசைக்கு முற்றாய் உடன்படாது,
காலத்தைத் தாழ்த்தினள் எனும் உண்மை வெளிப்படுகிறது.
வந்தவன் பொய்யனேல்,
உண்மையறிந்து தன் கணவன் விரைவில் திரும்புதல் கூடும்.
அது கூடுமேல் தான் தவறிலிருந்து தப்பலாம் என நினைந்து,
அகலிகை காலத்தைக் கடத்துகிறாள்.
இக்கருத்தை நிரூபிக்குமாற்போல்,
உண்மையுணர்ந்த கௌதமர்,
தவறு தடுக்கும் நோக்கத்தோடு, 
வேகமாய்த் திரும்பினார் என உரைக்கிறான் கம்பன்.
'முடுகி வந்தான்' எனும் கம்பன் வார்த்தைகளால்,
இவ்வுண்மை உணர்கிறோம்.
♠♠♠♠♠
மேற்சொன்ன கருத்துக்களை மனங்கொண்டு,
மீண்டும் கம்பன் பாடலைக் காணவிழைகிறோம்.

'புக்கு, அவளோடும், காமப் புதுமண மதுவின் தேறல்
ஒக்க உண்டிருத்தலோடும், உணர்ந்தனள் உணர்ந்தபின்னும், 
தக்கது அன்று என்னஓராள் தாழ்ந்தனள் இருப்ப, தாழா
முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும், முடுகி வந்தான்.'


இந்திரன் தன்னை அணைக்க,
அவன் தீண்டலின் மாறுபாட்டால்,
இவன் கணவனல்லன் என உணரினும்,
அறிவால் அக்கருத்தை உறுதிப்படுத்த முடியாத அகலிகை,
அவன் இச்சைக்கு உடன்படுதல்,
தக்கதா? அன்றா? எனத் தெளிவுபட முடியாமல்,
உண்மை வெளிப்படும்வரை நேரத்தைத் தாழ்த்தியிருப்ப,
கௌதமமுனிவர் தவறு தடுக்கும் நோக்கத்தோடு,
வேகமாய் ஆச்சிரமம் திரும்பினார் என,
இப்பாடலுக்குப் பொருளமைவது இப்போது புலனாகிறது.
கம்பன் சொற்களூடே வெளிப்படும் இப்பொருளால்,
தெரிந்தே அகலிகை பிழைசெய்தாள் எனும் வாதம்,
தவறென உணர்கிறோம்.
தர்ம சங்கடமான சூழ்நிலையில்,
உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தில்,
ஏதும் செய்ய இயலாத அகலிகையின் அவலத்தை,
நுட்பமாய்க் கம்பன் காட்டியிருப்பது நமக்குப் புரிகிறது.
இந்திரனுக்கு இசைந்த அவள் செயல்,
நெஞ்சினால் செய்த பிழை அன்று எனப் புரிந்துகொள்கிறோம்.
இதனால், 'நெஞ்சினாள் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக' எனும்,
விசுவாமித்திரர் கூற்றின் உண்மை வெளிப்பட,
மேற்சொன்ன இருபாடல்களுக்குள்ளும்,
முரண்பாடின்மை தெற்றெனப் புலனாகிறது.
♠♠♠♠♠
அங்ஙனமாயின்,
குற்றமிழையாத அகலிகையைக் கௌதமர் சபித்தது ஏன்?
கேள்வி பிறக்கும்.
அகலிகையின் அகத்துள் நடந்த,
இப்போராட்டத்தை உணராத கௌதமர்,
அவளும் பிழை செய்ததாய் நினைந்து,
அகலிகைக்கும் சாபமிடுகிறார் என்பதே பதிலாம்.
முற்றும் உணரும் வல்லமை பெற்றவரேனும்,
ஆத்திர நிலையில் சிதைவுற்ற சிந்தையால்,
அவர் அகலிகையின் அகம் உணர்ந்தார் அல்லர்.
பின்னர் தெளிவு பெற்றதும், 
அகலிகையின் உண்மைநிலையை,
கௌதமர் உணர்கிறார் என்பதை வெளிப்படுத்தவே,
'நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக' என,
விசுவாமித்திரர் சொல்ல,
'கஞ்சமா மலரோன் அன்ன முனிவனும் கருத்திற் கொண்டான்'
என்று கம்பன் பாடுகிறான்.
♠♠♠♠♠
நெஞ்சினால் தவறிழையாது இருந்திருப்பின்,
கௌதமரின் சாபத்தை,
ஏன் அகலிகை மறுத்துரைக்கவில்லை?
மீண்டும் கேள்வி பிறக்கும்.
சம்பவம் நிகழ்ந்தபோது,
தன் மனதில் நிகழ்ந்த போராட்டம்,
உணர்வு சார்ந்ததென்பதால்,
காட்சியே சான்றாய்க் கொண்டு கோபத்தோடு நின்ற கௌதமருக்கு,
சான்றுகளற்ற அகம் சார்ந்த தன் உணர்வை,
அகலிகையால் வெளிப்படுத்த முடியவில்லை என்பதும்,
அக்கருத்தை அவள் வெளிப்படுத்தியிருப்பினும், 
அது அங்கீகரிக்கப்பட்டிருக்காது என்பதுமே பதில்களாம்.
தன்மேற் கொண்ட அன்பே,
கணவனின் கோபத்திற்குக் காரணம் என உணர்ந்தவளாய்,
வாதிட்டு அவரை இழிவு செய்யாமல்,
அவர் சாபமேற்று,
சாபவிமோசனம் வேண்டி அவள் பணிந்தனளாம்.
♠♠♠♠♠
இவை அனைத்தையும் கருத்திற் கொண்டே,
கம்பநாடன், 'நெஞ்சினாற் பிழைப்பிலாள்' என,
அகலிகையைக் குறிப்பிடுகிறான்.
கற்போரை, அகலிகை தவறிழைத்தாளோ? என ஐயுறவைத்து,
'நெஞ்சினாற் பிழைப்பிலாள்' எனும் சூத்திரத் தொடரினால்,
அவ் ஐயம்பற்றியே ஐயம் தந்து,
அறிவுத்தேடலால் உண்மை உணர்ந்து,
கற்போர் களிப்புறும் வண்ணம்,
அவள் தூய்மையை மீட்டெடுக்கும் கம்பநாடன் கவித்திறம் வியக்கவைக்கிறது.
எல்லை தாண்டின் விரசமாகிவிடக்கூடிய அகலிகைக் காதையைத் தூய்மை செய்து,
கம்ப காவியத் தரத்திற்கேற்ப,
சொற்சூத்திரங்களுள் அதிநுட்பமாய் அமைத்துக் காட்டும்,
கம்பன் கவித்திறம் கண்டு மகிழார் யார்?
♠♠♠♠♠
(அகலிகை நிறைந்தாள்)

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்