'நெஞ்சிருக்கும் வரைக்கும்' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகம் மிகவிசித்திரமானது!
படைப்பு இரகசியத்தை எவராலும்,
முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
அறிவாளியாய்த் தன்னைத்தான் நினைக்கும் மனிதன்,
கடவுளிடம் தோற்றுப் போகும் இடம் இது தான்.
🎗🎗🎗
இவ் உலகத்தின் விதிகளெல்லாம்,
பெரும்பான்மைபற்றியே வகுக்கப்படுகின்றன.
ஆனால், அங்ஙனம் வகுக்கப்படும் எந்த ஒரு விதிக்கும்,
விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை.
பெரும்பான்மைபற்றிய விதிகளுக்குள் இருக்கும்,
ஒருமைப்பாட்டை ஆராய்ந்து, அறிந்து,
இவ்வுலகை, புரிந்துகொண்டுவிட்டதாய் பெருமைப்படும் மனிதன்,
அப் பெரும்பான்மை விதிகளுக்கு மாறான விதிவிலக்குகள்,
அறிவின் எல்லைகளுக்குள் அகப்படாமல் இருப்பதைக் கண்டு,
மிரண்டுபோகிறான்.
அப்போதுதான் படைப்பு இரகசியம் தம்புத்திக்கு அப்பாற்பட்டதென்னும்,
உண்மை அவனுக்குத் தரிசனமாகிறது.
🎗🎗🎗
இறையின் படைப்பினை முழுமையாய் அறிதல் அரிதாயினும்,
ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவங்களிலும்,
படைப்பு இரகசியத்தின் ஏதோ ஒரு கூறினை,
நாம் அனுபவிக்கலாம் என்பது மற்றொரு வியப்பு.
கடல் நீரின் ஒருதுளி மொத்தக் கடலினதும் பண்புகளை அறிய உதவுமாப்போல்,
ஒரு மனிதனின் தனி வாழ்க்கை அனுபவத்தை அறிய,
அதனூடு படைப்பின் வியப்பினை நாம் உணரமுடியும்.
ஒவ்வொருவரது வாழ்க்கை அனுபவங்களும் ஒவ்வொரு விதமானவை.
தனது வாழ்க்கை அனுபவங்களை, அளவுகோலாய்க் கொண்டு,
உலகை அளந்துவிட்டதாய் முடிவு செய்கையில்,
வேறொருவரது வாழ்க்கை அனுபவம்,
அம்முடிவிற்கு நேர்மாறாய் அமைந்து ஆச்சரியம் தரும்.
சுருங்கச் சொன்னால், ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும்,
படைப்பு இரகசியத்தை அறியத் துணை செய்யும் துளிகளேயாம்.
🎗🎗🎗
இஃதென்ன திடீரென ஓர் தத்துவார்த்த முன்னுரை?
உங்களில் பலர் நினைப்பது புரிகிறது.
எழுதப்போகும் இத்தொடருக்கு இம்முன்னுரை,
பொருத்தமாய் இருக்கும் என்று பட்டதால் எழுதினேன்.
அவ்வளவே!
🎗🎗🎗
கட்டுரைத் தொடரை ஆரம்பிப்பதன் முன்பாக,
வேறு சில சொல்லவேண்டும்.
நீண்டநாட்களின் பின் மீண்டும் எழுதச் சொல்லி,
வீரகேசரியிலிருந்து திடீரென அழைப்பு வந்தது.
முன்பு நான் எழுதிய 'அதிர்வுகள்' கட்டுரைத்தொடர்,
ஏனென்று தெரியாமலே நின்று போயிற்று!
இன்றுவரை அதற்கான சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை.
அறிவிக்கப்படவும் இல்லை!
🎗🎗🎗
இந்நிலையில் மீண்டும் எழுத அழைப்புவர,
எதை எழுதுவது? எனும் கேள்வி மனதுள் பிறந்தது.
இலக்கியம், சமயம், தத்துவம் என எதை எழுதினாலும்,
இன்றைய இளையோர் அதைப் படிக்கப் போவதில்லை.
எண்ணம் வர, எதை எழுதுவது எனும் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது.
🎗🎗🎗
திடீரெனப் புத்தியில் ஓர் மின்னல்!
சமயமும் இலக்கியமும் தான் இன்றைய தலைமுறைக்கு,
'(B)போர்'அடிக்கும் விடயங்கள்.
ஆனால் ஒருவரின் தனிவாழ்க்கை அனுபவங்கள்,
என்றும் எவர்க்கும் ஈர்ப்பானவையேயாம்.
என்மேல் படிந்திருக்கும் சமய இலக்கியசாயல்களை விட்டுவிட்டு,
வாழ்க்கை அனுபவங்களை எழுதினால் அது எடுபடுமா?
கேள்வி குழப்பியது.
அனுபவப் பிழியல்கள்கள்தானே சமயமும் இலக்கியமும் ஆகின.
இவ் எண்ணம் வந்ததும் மனதுள் மகிழ்ச்சி!
🎗🎗🎗
அறுபத்துமூன்று வயதைக் கடந்து சென்று கொண்டு இருக்கையில்,
கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்க வியப்பாய் இருக்கிறது,
எத்தனை மேடுகள், எத்தனை பள்ளங்கள், எத்தனை இராஜபாட்டைகள்,
நாம் திட்டமிட்டவைகள் தோற்றுப்போனதும்,
திட்டமிடாதவைகள் வெற்றிதந்ததுமான,
அனுபவங்கள்தான் எத்தனை எத்தனை?
அந்த அனுபவப் பதிவுகளில் சில நெஞ்சைவிட்டு அகலாமல் நிலைத்து நிற்கின்றன.
எனக்கு அப்புறமாய் நின்று நானே அனுபவிக்கும் விடயங்கள் அவை.
அங்ஙனமாய் என் மனதுள் பதிந்து நிலைத்து நிற்கும் சிலவாழ்க்கை அனுபவங்களை,
'நெஞ்சிருக்கும் வரைக்கும்' எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதலாமென முடிவு செய்தேன்.
🎗🎗🎗
உங்கள் அனுபவங்களைப் படிப்பதால்,
எங்களுக்கு என்ன பயன்?-கேட்பீர்கள்.
ஒருவரது அனுபவம்தான் மற்றவருக்குஅறிவாகிறது.
இலக்கியத்திற்கு மட்டும் என்றில்லை,
எந்த அறிவுத்துறைக்கும் இது பொருத்தம்.
என் வாழ்க்கைஅனுபவங்களைப் படிப்பதால் சிலவேளைகளில்,
நான் விழுந்தகுழிகளில் நீங்கள் விழாமல் தப்பிப் போகலாம்.
வேறு சிலவேளைகளில் நான் கஷ்டப்பட்டு ஏறிய மேடுகளை,
நீங்கள் சுலபமாகக் கடக்கக்கூடும்.
இன்னும் சில அனுபவங்கள்,
உங்கள் வாழ்க்கை அனுபவங்களை நினைப்பூட்டி சிலிர்ப்பூட்டலாம்.
எது எப்படியோ, அனுபவங்கள் அறிவாகப் போவது நிச்சயம்!
அதுநோக்கியே 'நெஞ்சிருக்கும் வரைக்கும்' எனும்
இக்கட்டுரைத்தொடர் முயற்சி-பயன் கொள்க!
🎗🎗🎗
அப்படியானால், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த,
உண்மைகள் முழுவதையும் சொல்லப் போகிறீர்களா?
மற்றவரின் வாழ்க்கையை எட்டிப்பார்க்க நினைக்கும்,
உங்களின் ஆர்வம் புரிகிறது.
அது சாத்தியம் என்று தோன்றவில்லை.
காரணங்கள் இரண்டு.
ஒன்று என் மறதி, மற்றையது என் பக்குவமின்மை.
ஆனால் ஒன்றை மட்டும் உறுதிபடச் சொல்ல முடியும்
உண்மைகள் முழுவதையும் சொல்கிறேனோ இல்லையோ,
நான் சொல்லப் போகின்றவை, அத்தனையும் உண்மைகள் தான்.
இனி வாரா வாரம் பல சம்பவங்களூடு பயணிப்போம்
🎗🎗🎗
 (அடுத்தவாரம் சந்திப்போம்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்