'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 4: 'பிறப்பொக்கும்...' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

யர்வு, தாழ்வு எனும் பேதங்கள் நீங்க வேண்டும் என்பது,
உயர்ந்தோர் அனைவரதும் ஒருமித்த கருத்தாகும்.
நம் தமிழ்ப்புலவர்களிலும் வள்ளுவர், கம்பர், பாரதியெனப் பலரும்,
அக்கருத்தை வலியுறுத்தியே வந்துள்ளனர்.
ஆனாலும் உலகில் உயர்வு, தாழ்வு எனும் பேதங்கள்,
இன்றுவரை நீங்கியபாடாய்த் தெரியவில்லை.
உயர்வு, தாழ்வு எனும் பேதங்களை உலகைவிட்டு முற்றாய் நீக்கமுடியுமா?
ஆராய்வது அவசியமாகிறது.
🐚 🐚 🐚
நீக்கமுடியுமா? எனும் கேள்விக்கு விடைகாண்பதற்கு முன்பாக,
நீக்கவேண்டுமா? எனும் கேள்விக்கு விடைகாண வேண்டியிருக்கிறது.
தாம் நிற்கும் இடத்தைவிட உயர்வான, சிறந்த ஒர் இடம் இருப்பது தெரிந்தால்த்தான்,
மனுக்குலம் அவ்விடத்தைத் தொட வேண்டும் என்ற ஆர்வத்தில்,
தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும்.
அன்றேல், மனுக்குலத்தின் வளர்ச்சி ஸ்தம்பித்துவிடும்.
அதனால் பேதங்களை நீக்கவேண்டுமா? எனும் கேள்விக்கு,
'வேண்டாம்' என்பதே பதிலாகிறது.
ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்க, பேதம் நீங்கிய உலகம்,
என்றுமே இருக்கப்போவதில்லை என்பதும் தெளிவாகிறது.
உயர்வு, தாழ்வற்ற உலகம் என்பது,
மனிதகுலத்தை  உயர்த்துவதற்கான இலட்சியம் மட்டுமேயாம்.
நடைமுறையில் அந்த இலட்சியம் என்றும் சாத்தியப்படப் போவதில்லை என்பதுவே நிஜம்.
🐚 🐚 🐚
சாத்தியப்படாத அந்த இலட்சியத்தைப் பேணுதல் பொய்மையாகாதா?
வினா பிறக்கும், நிச்சயம் அது பொய்மைதான்.
பின்னர் அப்பொய்மையை ஏன் பேணல் வேண்டும்?
அந்த இலட்சியம் பொய்மையே ஆனாலும்,
அது 'புரைதீர்ந்த நன்மை பயக்கும் பொய்மை.'
எனவே அது வாய்மைக்கு ஒப்பானது.
அந்தப் பொய்மையால்த்தான் சமூகம் நாளாந்தம் உயர்ந்து  கொண்டிருக்கிறது.
🐚 🐚 🐚
பிறந்தநாட் தொட்டு என் பாலப்பருவம் முழுவதும்,
வேற்று ஊர்களிலேயே கழிந்துவிட்டபடியால்,
யாழ்ப்பாணத்தில் அதிகம் வேரூன்றியிருந்த ஜாதிப்பாகுபாடு,
என் மனதில் சிறிதளவும் விதைபடாமல் போனது என் நல்வினை.
அதற்கு என் பெற்றோர்க்கும் நான் நன்றி  சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர்களும், பிள்ளைகளாகிய எங்களின் மனதில்,
அக்கொடிய  பேதத்தை என்றும் புகுத்த முயன்றதில்லை.
இப்படியாய் பேதங்கள் அற்று வாழ்ந்த எனக்கு,
முதல் முதலாய் உயர்வு, தாழ்வு என்னும் பேதத்தை,
என் வாழ்வில் நடந்த ஓர் சம்பவம் உணர்த்தியது.
அச்சம்பவம் புசல்லாவையில் நான் வாழ்ந்தபோது நிகழ்ந்தது.
எந்தப் பெற்றோர்கள் எங்களுக்குப் பேதங்களைக் கற்பிக்கவில்லை என்று சொன்னேனோ,
அவர்களின் அடிமனதிலேயே அப்பேதத்தின் விளைவைக் கண்டபோது நான் திகைத்துப்போனேன்.
🐚 🐚 🐚
புசல்லாவை சரஸ்வதி மகாவித்தியாலயம் தான், நான் முதலில் படித்த பாடசாலை.
அப்போது முதலாம் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு படித்ததாய் ஞாபகம்.
அந்த வகுப்பில் எனக்கு நட்பானவன் தான் 'மாடசாமி.'
தோட்டத் தொழிலாளி ஒருவனின் மகன் அவன்.
அவனது தாயும் கொழுந்து எடுக்கும் வேலை செய்து வந்தாள்.
'லயத்தில்' தங்கியிருந்த அவர்களது குடும்பம்  மிகவும் பிற்பட்டது.
அவனது குடும்பத்தின் பிற்பட்ட நிலையையும் வறுமையையும்,
அவன் பாடசாலைக்கு வரும் தோற்றமே பறைசாற்றும்.
🐚 🐚 🐚
பொத்தான் இல்லாத காற்சட்டையை,
முடிந்து கட்டியபடிதான் பெரும்பாலும் அவன் பாடசாலைக்கு வருவான். 
அப்படி அவன் போட்டுவரும் காற்சட்டைகளில்,
ஓரிரண்டு இடங்களிலாவது ஒட்டைகள் இல்லாமல் இருந்ததில்லை.
காற்சட்டை போலவேதான் அவனது மேற்சட்டையும் இருக்கும்.
'சேற்' பொத்தான்களைப் பெரும்பாலும் வரிசையின்றி பூட்டியிருப்பான்.
அடிக்கடி குளிப்பதில்லை என்பதை, 
அவன் உடம்பிலிருந்து வீசும் ஒருவித வாடை வெளிப்படுத்தும். 
அவனது மூக்கில் சளி வற்றா நதியாய் எப்போதும் வழிந்தபடியே இருக்கும்.
அதை அவன் கையாளும் முறை வினோதமானது.
துணியாலோ வேறெதனாலோ அவன் அதைத் துடைத்துக் கொள்வதேயில்லை.
வழிகின்ற அந்தச் சளி உதடுகளைத் தாண்டி வாயை அண்மிக்கும் நேரத்தில்,
ஒரு உறிஞ்சு உறிஞ்சுவான், அது உள்ளே ஓடிவிடும்.
சிறிது நேரத்தில் பழையபடி அது தன் வேலையைக் காட்டும்.
இவனும் தன்  வேலையைக் காட்டுவான்.
இதைப் படிக்கும்போது, ஓர் அசிங்கத்தை இத்தனை தூரம் வர்ணிக்கவேண்டுமா? என,
உங்களில் பலர் முகம்  சுழிப்பீர்கள், இந்தக் கட்டுரையின் வெற்றிக்கு,
அவனது வடிவம்பற்றிய அந்த முகச்சுழிப்பு அவசியமாகிறது.
🐚 🐚 🐚
மாடசாமியின் மேற்சொன்ன இயல்புகளைக் கண்டும்,
ஏனோ எனக்கு அவன்மேல் அருவருப்புத் தோன்றியதில்லை.
என்மேல் அவ்வ்வ்வளவு அன்பாக இருப்பான் அவன்.
எந்தப்பிறவித் தொடர்போ எனக்கும் அவன்மேல் அன்பு பொங்கும்.
மற்றவர்கள் அவன் வடிவம் கண்டு அவனை இகழ,
எனக்கோ அவன்மேல் அன்பு ஊறிக்கொண்டே இருந்தது.
🐚 🐚 🐚
எங்கள் வீட்டில் எப்போதும் விருந்து நிகழும் என்று முன்னரே கூறியிருக்கிறேன்.
என்னவோ தெரியவில்லை, அன்று மாடசாமியை வீட்டுக்கு அழைத்து வந்து,
சாப்பாடு போட வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உதித்தது.
அன்போடு நான் அழைக்க அவனும் சம்மதித்து என்னோடு வீட்டிற்கு வந்தான்.
நான் முன்னே சொன்ன அதே கோலம்.
கையில் அந்தக்கால 'சீமெந்துப்' பையில் சுற்றிய புத்தகமும், சிலேடும்.
வீட்டு வாசலில் எனது வரவுக்காய்க் காத்திருந்த என் அம்மாவின் முகத்தில்,
மாடசாமியைக் கண்டதும்  சிறு மாற்றம் உண்டானது.
🐚 🐚 🐚
பொய்யாய் சிரித்த முகம் காட்டிய அம்மா,
ஏதோ காரணம் சொல்லி மாடசாமியை வாசலிலேயே நிறுத்திவிட்டு,
என்னை மட்டும் உள்ளே அழைத்துச் சென்று,
'யாரிது' என்று சற்று வெறுப்பாகக் கேட்டார்.
நான் 'அவன் என்ட பிறெண்ட்' என்று பெருமையாய்ச் சொல்லி,
அவனைச் சாப்பிட அழைத்து வந்த செய்தியையும் சொன்னேன்.
குழந்தையான என்மேல் வெறுப்புக் காட்டவும் அம்மாவால் முடியவில்லை.
அதே நேரத்தில் என் கோரிக்கையை முழுமனதாய் ஏற்கவும் அவரால் முடியவில்லை.
ஏதோ நினைத்த அம்மா, பின்னர் என்னையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார்.
மாடசாமியில் அன்பு காட்டுவது போல், வெளியில் இருந்த படிக்;கருகில் அவனை உட்கார வைத்தார்.
பின்னர் அங்கு முளைத்திருந்த மணிவாழைச் செடியில் இலை ஒன்றை வெட்டி வந்து,
அவன்முன்போட்டுச் சோறிடத் தொடங்கினார்.
🐚 🐚 🐚
எனக்குப் பெரிய ஆச்சரியம், வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால்,
அவர்களை அன்போடு உள்ளே அழைத்து வந்து,
சாப்பாட்டு மேசையில் உட்கார வைத்து,
பீங்கான் கோப்பைகளில் உணவிடுவதுதான் அம்மாவின் வழக்கம்.
இன்றைக்கு ஏன் அம்மா மாடசாமியை உள்ளே கூப்பிடவில்லை?
ஏன் அவனை மேசையில் உட்கார வைக்கவில்லை?
ஏன் அவனுக்குப் பீங்கான் கோப்பையில் சாப்பாடு கொடுக்கவில்லை?
இப்படியாய் அந்த வயதிலேயே என்மனதில் கேள்விக்கு மேல் கேள்விகள் தோன்றி,
என்னைக் கவலைப்படவைத்தன, என்னால் அம்மாவின் செயலை ஜீரணிக்க முடியவில்லை.
அந்த வயதிலேயே உணர்வுகளைப் பகுத்து ஆராயக்கூடிய என் புத்திக்கு,
அம்மா மாடசாமிமேல் அன்பு காட்டுவதுபோல் நடிக்கிறார் என்பது மட்டும் தெரிந்தது.
இதுவரை மனிதர்களில் பிரிவுகாட்டாத அம்மாவின் அன்றைய புதுச்செயல் கண்டு வாடிப்போனேன்.
மாடசாமி இவையெதையும் கவனித்ததாய்த் தெரியவில்லை.
அம்மா இட்ட சோற்றை ஆனந்தமாய்ச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
பிறகு சந்தோஷமாய் வீடு சென்றான்.
🐚 🐚 🐚
'பிறப்பொக்கும்' என்று பொதுமை பேசிய திருவள்ளுவர்,
தனது குறளின் அடுத்தவரியிலேயே,
'சிறப்பு ஒவ்வா' என்று உரைத்த நுட்பம் இன்று புரிகிறது,
இன்று மாடசாமி எங்கு, எப்படி இருக்கிறானோ?
அவனைக் கண்டு அன்றைய அம்மாவின் செயலுக்காய்,
அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.
நடக்குமா?
🐚 🐚 🐚
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்