'பாலை' : பகுதி 1-கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

லகின் இயற்கையோடு ஒன்றியது நம் தமிழ்மொழி.
நம்தமிழ்ச் சான்றோர்,
மானுடப் பண்புகளைப் பதிவு செய்கையில்,
அப் பண்புகளுக்குப் பொருத்தமான,
நிலப் பின்னணியை வகுத்துக்கொண்டே,
பண்டைத் தமிழிலக்கியங்களை ஆக்கினர். 
இஃது இயற்கையோடு பொருந்திய,
நம் மொழிப் பண்பாட்டின் முதற்சான்றாம்.
சங்க இலக்கியங்களில் பயிலப்படும்,
முதல், கரு, உரிப் பொருள்கள்,
நம் தமிழ்ப் புலவோரின்,
இயற்கை அவதானிப்பின் மற்றுமொரு அடையாளம்.
🐪 🐪 🐪
இயற்கையை உணர்ந்து,
அதனோடு ஒன்றி, உறவாடி வாழ்ந்த அப்பெரியோர்கள்,
நிலத்தினை,
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என,
நால் வகையாய்ப் பிரித்தனர்.
இவையே நானிலங்கள் என உரைக்கப்பட்டன.
🐪 🐪 🐪
அவற்றுள் குறிஞ்சி என்பது,
மலையும் மலை சார்ந்த இடமும்.
முல்லை என்பது,
காடும் காடு சார்ந்த இடமும்.
மருதம் என்பது,
வயலும் வயல் சார்ந்த இடமும்.
நெய்தல் என்பது,
கடலும் கடல் சார்ந்த இடமுமாம்.
🐪 🐪 🐪
குறித்த நிலத்தினது இயல்பு,
அதன் சார்பு நிலங்களிலும் பரவியிருக்கும் என்பது வெளிப்படை.
அது போன்றே குறித்த நிலத்தன்மைக்காம் பண்பும்,
அச்சார்பு நிலங்களிலும் பரவியிருத்தல் இயல்பு.
அது நோக்கியே
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் நிலப்பகுதிகளை,
மலை, காடு, வயல், கடல் என  எல்லைப்படுத்தி உரைக்காமல்,
அவற்றைச் சார்ந்த நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி உரைத்தமை,
நம் தமிழ்ச் சான்றோரின் மதிநுண்மைக்காம் சான்று.
இந்நுட்பங்கள் விரித்து ஆராயப்பட வேண்டியவை.
🐪 🐪 🐪
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் இந் நானிலங்கள்,
எங்ஙனம் வரிசைப்படுத்தப்பட்டன?
தமிழர் மரபில்,
உயர்வு நோக்கியே வரிசைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
அவ்வடிப்படை கொண்டு நோக்க,
நானில வரிசை அமைந்த உண்மை தானே வெளிப்படும். 
மலை, காடு, வயல், கடல் என்பவை,
உயர் நிலத்திலிருந்து தாழ் நிலம் வரையுமாய் அமைந்தவை.
நிலங்களுக்கிடையிலான இந்த உயர்வு, தாழ்வும்,
மேல் நிலவரிசை அமைந்ததன் ஒரு காரணமாம்.
இஃது வெறும் பௌதீகக் காரணமே.
🐪 🐪 🐪
மேற்கூறிய பௌதீகக் காரணம் தவிர,
மற்றொரு காரணமும்,
இந்நில வரிசை அமைந்ததில் உளது.
அதனைக் காண்பாம். 
🐪 🐪 🐪
அமிர்தமாய் நின்று உலகைக் காப்பது நீர்.
வானின்று உலகம் வழங்கி வருதலால் 
தான் அமிர்தம் என்று உணரற் பாற்று

என்றனர் வள்ளுவக் கடவுளார்.
இயற்கை அமைப்பில்,
வான் வழங்கும் நீரால் நிலம் வாழ்தலின்,
வானின் உயர்வும், நிலத்தின் தாழ்வும் தானே பெறப்படும்.
வானினது நீரை வாங்கி,
மற்றை நிலங்களுக்கு அதனைச் செலுத்தும்,
முதல் நிலப்பகுதி மலையேயாம்.
அதனால்தான் நிலவரிசையில் குறிஞ்சி முதன்மை பெற்றது.
🐪 🐪 🐪
மலையிற் பொழியும் மழை,
உலகுக்குப் பயன் செய்யும் வண்ணம்,
ஆறாய் ஓடத் தொடங்கும்.
அவ் ஆறு மலை தாண்டி,
காட்டினுள் நுழைந்து,
பின் சமவெளிக்குள் புகுந்து,
நிறைவாய்க் கடலுள் கலக்கிறது. 
அதனால்தான், ஆற்றோட்ட வரிசையில்,
முல்லை, மருத, நெய்தல் நிலங்கள்,
குறிஞ்சியின் பின் அடுத்தடுத்து  வரிசைப்படுத்தப்பட்டன.
இஃதே மேற் சொன்ன நில வரிசை அமைந்த மற்றைக் காரணமாம். 
இவை தவிர மேல் நில வரிசைக்காம் வேறொரு காரணமும் உண்டு.
அதனையும் அறிவாம்.
🐪 🐪 🐪
நிலங்களில் குறிஞ்சியே உயர்ந்ததெனக் கண்டோம்.
அந்நிலத்தின் இயற்கையோடு ஒன்றிய தன்மையே,
அவ்வுயர்வுக்காம் மற்றைக் காரணம்.
வருடம் முழுவதும் மழையைப் பெறுவதால்,
நீர்த் தேவைக்கான செயற்கை முயற்சிகள் ஏதுமின்றி,
அந்நிலம் எப்போதும் ஏற்றமுற்றிருக்கும்.
இயற்கையாய் அமைந்த நீர்வளத்தால்,
இந்நிலத்தில் விலங்குகள் நிறைந்து வாழ்தல் இயல்பு.
அதனால் இந் நிலத்தார்க்கு வேட்டையே தொழில் ஆயிற்று.
இங்ஙனம் இந்நிலத்தில் வாழ்வார்க்கான,
உணவுக்காம் முயற்சி சிறிதாக,
குறிஞ்சி நிலத்தார்க்கு,
வாழ்வு அனுபவ நேரம் அதிகரித்தது.
அவ் அனுபவத்திற்கு ஏற்ற குளிர்மையும்,
அந்நிலத்தில் இயல்பாகப் பொருந்தியதால்,
ஆண், பெண் ஒன்றி வாழும் இயல்பு ஈர்ப்பு,
அந்நிலத்தார்க்குச் சிறப்பாய் வாய்த்தது.
அதனால்தான் அந்நிலத்தார்க்குரிய பண்பை,
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என,
நம் பெரியோர் வகுத்தனர்.
🐪 🐪 🐪
அடுத்து வரிசைப்படுவது முல்லை நிலம்.
இது மலையைச் சார்ந்து  அமைவது.
நீர்த் தேவையைப் பொறுத்தவரை,
மலைக்கு அடுத்த இடமே இதற்காகிறது.
மழை குன்றிய காலத்தில்,
குறிஞ்சி நீர், முல்லைக்கு வரும் வாய்ப்பில்லை.
ஆதலால் இந் நிலத்தார், 
முழுமையாய் இயற்கை நீரை நம்பி வாழும் இயல்பு இழந்தனர்.
இந்நிலப்பகுதி அடர்ந்த காடுகளால் அமைந்ததால்,
ஆ நிரைகளை வளர்த்து அதனால் பயன் எய்தும் தொழிலை,
குறிஞ்சி நிலத்தார் தம் தொழிலாய்க் கொண்டனர்.
பசுக்கள் தரும் பாலாலும், தயிர் முதலியவற்றாலும்,
இவர்தம் உணவுத்தேவை ஓரளவு நிறைவு பெற,
பெரிய அளவில் பயிர் விளைத்துப் பயன்பெறும் தேவையும்,
நீரைத் தேக்கி பயன் கொள்ளும் தேவையும்,
இவர்க்கு இலதாயிற்று. 
ஆதலால், ஆ நிரை மேய்த்தலே இவர்தம் உணவுக்காம் முதல் வழியானது.
அச்சம் தரும் காட்டினுள் ஆ நிரை மேய்த்துச் செல்வோர்,
கொடிய விலங்குகளால் அழிவுறும் சம்பவங்களும் நிகழ்தல் இயற்கை.
இவ்வனுபவத்தால் வேட்டைத் தொழிலுக்குச் சென்றோர்,
வீடு திரும்பும் வரை காத்திருத்தல் அவசியமாக,
அந்நிலத்திற்காம் பண்புகளாய்,
இருத்தலும், இருத்தல் நிமித்தமும் அமைந்து போயின.
🐪 🐪 🐪
அடுத்தது மருத நிலம்.
இது காடுகளற்ற சமவெளியில் அமைந்தது.
மழையின் பயனை வருடம் முழுமையும் பெறமுடியாததாலும்,
வேட்டைத்  தொழிலுக்கு வாய்ப்பான காடுகள் இல்லாததாலும்,
இந் நிலத்தார்க்குப் பயிர்ச் செய்கையே உணவுக்காம் ஒரே வழியாயிற்று.
பயிர்ச் செய்கைக்கான நீர்த் தேவைக்கு,
முழுமையாய் இயற்கையை நம்பும் வாய்ப்பில்லாததால்,
இந்நிலத்தார், தம் முயற்சியால் நீரை தேக்கிப் பயன்படுத்தும்,
தேவை நோக்கித் தள்ளப்பட்டனர்.
அங்ஙனம் நீரைத் தேக்கி வாழ்ந்ததால்,
திட்டமிட்ட விவசாயம் இவரின் கைவயப்பட,
அதனால் விளைந்த செல்வ மிகுதியால்,
விரிந்த சமூக அமைப்பு இவர்க்கானது.
இங்ஙனம் சேமிக்கப்பட்ட மிக்க செல்வம்,
இவர்தம் ஒழுக்க வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்த,
பரத்தமைப் பண்பில் இவர்கள் மூழ்கினர்.
வரையறை செய்யப்பட்ட இவர்தம் இல்லறவாழ்வில்,
குழப்பங்கள் ஏற்பட,
ஊடலும், ஊடல் நிமித்தமும்,
இவர்தம் வாழ்வியற் பண்பாய் அமைந்து போயின.
🐪 🐪 🐪
நிலம் சார்ந்த வாழ்க்கைகளுள்,
இம் மருதநில வாழ்க்கையையே மானுடர்கள் பெரிதும் போற்றினர்.
இயற்கையோடு தாம் இயையாமல்,
இயற்கையைத் தம்மோடு இயைவித்து வெற்றி கண்டதால்,
இவ் வாழ்க்கை மானுடர்க்குப் பெரிதாய்ப் பட்டது.
சிந்திக்கும் திறன் வாய்த்த இவர்கள்,
தம்  அறிவால், இயற்கையை மீறி,
தாம் திட்டமிட்டு அமைத்துக் கொண்ட இல்வாழ்வினையே,
பெரிதாய்ப் போற்றினர்.
மற்றைய நிலத்தார் போல்,
இயற்கையையே வாழ்வாய் ஏற்றுக்கொள்ளும் நெறி மீறி,
புத்தியால் புதிய வாழ்வமைத்தனர்.
இயற்கைநெறி மீறினும் அறிவால் அமைந்த இவ் வாழ்வே,
இவர்க்குப் பிடித்துப் போயிற்று.
அதனால்தான்,
மருதநில வாழ்வினை உயர்வாய்க் கொள்ளும் வழமை வந்தது.
🐪 🐪 🐪
நிறைவாய் அமைந்தது நெய்தல் நிலம்.
உயர்விலும், தாழ்விலும்,
ஒத்த பண்புகள் செறிந்திருப்பது இயற்கை.
கடலும் கடல் சார்ந்த நிலமுமாகிய,
இந் நெய்தல் நிலத்தில் வாழ்ந்தாரும்,
குறிஞ்சி நிலத்தார் போலவே,
முழுக்க முழுக்க, 
தம் நில இயற்கையைச் சார்ந்தே,
வாழும் தேவைக்கு ஆளாயினர்.
🐪 🐪 🐪
இவர் தமக்கு கடல் எனும் பெருநீர் இருப்பினும்,
அதன் உவர்ப்பால் விவசாயம் இவர்க்கு வாய்க்காமற் போனது.
காடு அற்றதன்மையால் வேட்டையும் இவர்க்கு இயலாமற் போயிற்று.
நிலத்தன்மையால் நீரைத் தேக்கிப் பயன்படுத்தவும் இவரால் இயலாதுபோக,
இயற்கையாய்த் தம் நிலத்தில் அமைந்த கடற் செல்வத்தை நம்பியே,
இவர்கள் தமது வாழ்க்கையை அமைக்க வேண்டியதாயிற்று. 
ஆனாலும் கடற் செல்வத்தைப் பெறும் முயற்சி அபாயமானதாக,
அதனால் இவர்களின் வாழ்வு,
நிலையும், நிம்மதியும் அற்றதாயிற்று.
கடலுள் பொருள் தேடிச் சென்றோரின்,
மீளுதலில் இருந்த நிலையின்மையால்,
இவர்தம் இல்லறப் பண்பு,
இரங்கலும், இரங்கல் நிமித்தமுமாயிற்று.
🐪 🐪 🐪
இந் நானில வரிசையில்,
பாலை என்பதொரு நிலத்தையும் இணைத்து,
ஐந்நிலமாய் உரைக்கும் மரபும் நம் தமிழில் உண்டு.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என வகுக்கப்பட்ட நில அமைப்பில்
பாலை இயல்பாய் அமையாதது வெளிப்படை.
அங்ஙனமாயின் நில அமைப்பில் பாலைக்காம் இடம் யாது? 
அறிதல் அவசியமாகிறது.
🐪 🐪 🐪

 

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்