'மங்கையராய் வந்து பிறப்பதற்கே' :பாகம் 2: 'சந்தனநங்கை':பகுதி 4-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளத்தில்  ஆர்வத்தோடு தலைவருக்காய்க் காத்திருந்த,
நங்கையர்கள் இருவரும் கதவு தட்டப்படும் ஓசை கேட்டு,
அடியாரை வரவேற்கும் ஆர்வத்தோடு ஓடிச்சென்று கதவைத் திறக்கின்றனர்.
அவர்கள் முகத்தில் அதிர்ச்சி.
வாயிலில், வாடிய முகத்தோடு பரஞ்சோதியார் மட்;டும் நிற்கிறார்.
என்ன ஆயிற்று? அடியார் வேறெங்கும் சென்றுவிட்டாரா?
தலைவரின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே எனும் அச்சத்தோடு,
வெண்காட்டு நங்கை தலைகவிழ்ந்து நிற்க,
அவர் பின்னால் ஒட்டியபடி நிற்கிறாள் சந்தனநங்கை.
 
🎗 🎗 🎗
 
உள் நுழைந்த பரஞ்சோதியார் முகம் இருண்டு கிடக்கிறது.
சில நிமிடங்கள் நிதானித்த பின்பு,
'நங்கை உன்னோடு சிறிது தனிமையில் பேச வேண்டும்,
உள்ளே வா!' என்று உத்தரவிட்டு உட்கூடத்தினுள் செல்கிறார்.
அவரைப் பின்தொடர்ந்து வெண்காட்டு நங்கையும் உட்செல்ல,
தம்பதியரின் தனிமையில் உட்புகலாகாது எனும் நாகரிகம் உணர்ந்து,
சந்தனநங்கை மீண்டும் அட்டில் தொழில் கூடத்திற்குள் சென்று ஒதுங்கிக் கொள்கிறாள்.
 
🎗 🎗 🎗
 
சந்தனநங்கையின் மனதில் பெரும் குழப்பம்.
இல்லத் தலைவரின் முகம் வாடியிருந்தது ஏன்?
அன்னையை அவர் தனிமையில் பேச அழைத்தது ஏன்?
ஏதும் பிரச்சினையா? கேள்விகள் மனதைக் குடைய,
அவளுக்கு, நிமிடங்கள் வருடங்களாய்க் கழிகின்றன.
பூட்டிய கதவம் திறக்க, நாயகரைத் தொடர்ந்து,
வெண்காட்டு நங்கை தளர்ந்த நடையோடு வெளியே வருகிறார்.
அன்னையின் முகம் பேயறைந்தாற்போல் இருண்டு கிடக்கிறது.
பரஞ்சோதியார் கண்களிலும் சிறிய கசிவு.
என்னதான் நடக்கிறது இங்கே?
சந்தனநங்கைக்குத் தலை வெடித்துவிடுமாப்போல் தோன்ற,
அவள் தளர்ந்து நிலப்படியில் அமர்கிறாள்.
 
🎗 🎗 🎗
 
ஏதும் சொல்லாமல் பரஞ்சோதியார் மீண்டும் வெளிக் கிளம்புகிறார்.
நடந்ததை அறிய ஆவலாய் இருந்தாலும்,
அன்னையின் முகக்குறிப்பால் அவளது சோகம் அறிந்து,
பேசத் தயங்குகிறாள் சந்தனநங்கை.
 
🎗 🎗 🎗
 
சிறிது நேரம் சென்றபின்பு,
திருவெண்காட்டு நங்கையின் முகத்தில் ஓரளவு தெளிவு பிறக்கிறது.
தனது தொண்டையைச் செருமிக் கொண்டு அவர் பேசத் தொடங்குகிறார்.
'சந்தனநங்கை இங்கே வா! 
ஓடிச்சென்று அரிவாள்மணையைத் தீட்டிக் கூராக்கி எடுத்துவா!'
இறுகிய முகத்தோடு வெண்காட்டு நங்கை உரைக்க,
சந்தனநங்கைக்குப் பெரிய குழப்பம்.
 
🎗 🎗 🎗
 
'அன்னையே, சமையல் எல்லாம் முடிந்து விட்டதே,
இனி எதற்கு அரிவாள்மணை?
வந்த அடியார், குறித்த ஏதாவது உணவைச் சமைக்கச் சொன்னாராமா?
நல்ல விளையாட்டாய்த்தான் இருக்கிறது.
விரத அடியார்களும் வாய் ருசிக்க உணவு கேட்கத் தொடங்கிவிட்டார்களா?
அவருக்கு என்னதான் வேண்டுமாம்?
என்னிடம் சொல்லுங்கள், ஐந்தே நிமிடத்தில் நானே தயார் செய்துவிடுகிறேன்.'
வழமையான தன் விளையாட்டுக் குணத்தோடு சந்தனநங்கை பேசுகிறாள்.
 
🎗 🎗 🎗
 
'போதும், உன் பேச்சை நிறுத்து! சொன்னதை உடன் செய்,'
அன்னையின் இறுகிய வார்த்தைகள் முகத்தில் அறைய,
மனம் நொந்து போகிறாள் சந்தனநங்கை.
இன்னாதன உரைக்காத நம் அன்னையா இப்படிப் பேசுகிறாள்?
இன்றுவரை என்னை வேலைக்கார நங்கையாய் நினைந்து,
அவர் ஒரு வார்த்தையைக்கூட உத்தரவாய்ப் பேசியதில்லையே,
இன்று மட்டும் அவருக்கு என்னாயிற்று?
ஏன்தான் இந்தக் கடும் வார்த்தைகள்?
கண்ணீர் பொங்க மறுவார்த்தை பேசாமல்,
அரிவாள்மணையைக் கூர் செய்யத் தொடங்குகிறாள் சந்தனநங்கை.
 
🎗 🎗 🎗
 
மீண்டும் கதவு திறக்கும் ஓசை.
தலைவர் அடியாரை அழைத்து வந்து விட்டாரா?
ஆர்வம் பொங்க வாசல் நோக்கி ஓடுகிறாள் சந்தனநங்கை.
கதவு தட்டும் ஓசை கேட்டும் உட்கார்ந்த இடத்தில் அசையாது இருக்கும்,
வெண்காட்டு அன்னையின் செயல் அவளுக்குப் புதினமாகப்படுகிறது.
கதவு தட்டும் ஓசை அன்னைக்குக் கேட்கவில்லையா?
ஏலவே அன்னையிடம் கோபவார்த்தைகள் கேட்ட வருத்தம் இருந்ததால்,
ஏதும் பேச அஞ்சி நிற்கிறாள் சந்தனநங்கை.
மீண்டும் கதவு தட்டும் ஓசை.
 
🎗 🎗 🎗
 
இப்போதும் வெண்காட்டு நங்கை அசைவதாய்த் தெரியவில்லை.
தலைவர் கோபமுறப் போகிறாரே என நினைந்து,
பதற்றத்தோடு ஓடிச் சென்று தானே கதவைத் திறக்கிறாள் சந்தனநங்கை.
 
அவள் முகத்தில் திடீரென மலர்ச்சி.
எழுத்தாணியும் ஏடுகளும் தாங்கிய புத்தகப்பையோடு,
தந்தையின் கைபிடித்து நின்ற அவள் ஆசைத்தம்பி,
சீராளனின் திடீர் வருகையே அவளது மலர்ச்சியின் காரணமானது.
'அக்கையே' என அழைத்தபடி ஓடிவந்து தனை அணைத்துக் கொண்ட,
சீராளனின் முதுகை மெல்ல வருடிக் கொடுக்கிறாள் அவள்.
என்னாயிற்று? குருகுலத்திலிருந்து தம்பி மாலையில்த் தானே வருவது வழக்கம்.
இப்போது ஏன் அவனைத் தலைவர் அழைத்து வந்திருக்கிறார்?
ஏதும் புரியாமல் சந்தனநங்கை அன்னையை நோக்க,
விழியோரத்தில் தேங்கி நின்ற கண்ணீரைத் துடைத்தபடி வெண்காட்டு நங்கையார்,
தனை நோக்கி ஓடிவந்த மைந்தனை அணைத்துக் கொள்கிறார்.
 
🎗 🎗 🎗
 
மகனை உச்சிமுகர்ந்துவிட்டு,
'சீராளா வா நாம் குளித்துவிட்டு வரலாம்.'
அன்னை அழைக்க,
'அன்னையே நான் காலையிலேயே குளித்துவிட்டேனே' என்கிறான் சீராளன்.
பொங்கிய கண்ணீரை மைந்தனுக்குத் தெரியாமல் துடைத்தபடி,
'கண்ணா! நீ என் செல்வமல்லவா? அன்னை சொன்னால் மறுக்கலாமா?
இது தந்தை உத்தரவு! வா, குளித்துவிட்டு வருவோம்' என்று திருவெண்காட்டு நங்கை சொல்ல,
மறுவார்த்தை பேசாமல் சீராளன் அன்னையைப் பின் தொடர்கிறான்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் சந்தனநங்கை மேலும் குழம்புகிறாள்.
 
🎗 🎗 🎗
 
(அடுத்த வாரமும் சந்தனநங்கை வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்