'மங்கையராய் வந்து பிறப்பதற்கே' :பாகம் 2: 'சந்தனநங்கை':பகுதி 5-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளே சென்று குழந்தையை நீராட்டி,
வெண்காட்டு நங்கை வருகிறார்.
தெய்வ அழகு கொண்ட குழந்தை,
குளித்து வந்ததனால் மேலும் அழகுறக் காட்சி தருகிறான்.
பிள்ளையை அழைத்து வந்து தந்தையின் அருகில் விட்டு,
திருவெண்காட்டு நங்கை ஒதுங்கிக் கொள்ள,
அழகு பொலிய நின்ற தன் மைந்தனை,
ஆரத்தழுவி முத்தமிட முனைந்த பரஞ்சோதியார்,
பின் ஏதோ நினைந்து சட்டென விலகிக் கொள்கிறார்.
 
🌼  🌼  🌼
 
அக்காட்சி கண்டு அழுகையை அடக்கமுடியாமல்,
சமையல் கூடத்திற்குள் ஓடி வந்த அன்னையின் கால்களை,
இறுகக் கட்டிக் கொள்கிறாள் சந்தனநங்கை.
'அன்னையே இதற்கு மேலும் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது.
தம்பியை ஏன் இந்த நேரம் தந்தையார் அழைத்து வந்திருக்கிறார்?
நீங்கள் ஏன் மறுகி மறுகி அழுகிறீர்கள்?
தம்பியை அணைத்து முத்தமிடச் சென்ற தந்தை திடீரென விலகியது ஏன்?
என்னதான் நடக்கிறது இங்கே?
நீங்கள் என்னைத் திட்டினாலும் பரவாயில்லை.
நானும் இந்த வீட்டுப் பிள்ளை என்பது உண்மையானால்,
தயவு செய்து உண்மையைச் சொல்லிவிடுங்கள்.
இதற்கு மேலும் என்னால் தாங்க முடியாது' என்று கூறி,
கதறி அழுதபடி காலில் விழுந்த அவளின் தோள் பிடித்து,
நிமிர்த்துகிறார் வெண்காட்டு நங்கை.
 
🌼  🌼  🌼
 
'நங்காய் உன் துன்பம் புரிகிறது.
இறைவன் எம்மைச் சோதிக்க நினைக்கிறான் போல,
எப்படித்தான் இந்தச் சோதனையிலிருந்து மீழப் போகிறோமோ?
நீ எங்கள் வீட்டுப் பெண் என்பதில் உனக்கு என்ன ஐயம்?
உனக்குச் சொல்லாமல் நான் எதையேனும் மறைத்திருக்கிறேனா?
உண்மையைச் சொன்னால் நீ தாங்கமாட்டாய் அதனால்த்தான்' என்று,
வெண்காட்டு நங்கை விடயத்தைச் சொல்லாமல் வார்த்தைகளை நீட்ட,
'அன்னையே தயைகூர்ந்து வார்த்தைகளை நீட்டாமல் விடயத்தைச் சொல்லுங்கள்'
ஏதோ துன்பச் செய்தி வரப்போகிறது என உணர்ந்து சந்தனநங்கை பதறுகிறாள்.
 
🌼  🌼  🌼
 
'பொறு, பொறு சொல்கிறேன், சொல்கிறேன்.
உன்னிடம் சொல்லாமல் யாரிடம் சொல்லப்போகிறேன்?
நீ என்ன வேற்று மனுஷியா? -மனதைத் தேற்றிக் கொள்.
சிறியவளாகிய உன்னால் இந்தச் செய்தியைத் தாங்கமுடியுமோ தெரியவில்லை.
விஷயத்தைச் சொல்வதற்கு முன் உனக்கு ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.
நம் இல்லத்தலைவர் எதைச் சொன்னாலும் அதைச் செய்யவேண்டியது நம் கடமை.
அதனை மட்டும் முதலில் உறுதி செய்துகொள்.'
அன்னை முடிக்கும் முன் குறுக்கிடுகிறாள் சந்தனநங்கை.
'தாயே இதென்ன விளையாட்டு?
என் பதற்றத்தைப் புரியாமல் என்னென்னவோ சொல்கிறீர்களே?
தந்தை சொன்ன சொல்லை,
இந்த இல்லத்தில் எப்போது? யார் மீறியிருக்கிறோம். இப்போது மீற.
முதலில் நடந்ததைச் சொல்லுங்கள் என் தலை வெடித்துவிடப் போகிறது.'
கதறுகிறாள் சந்தனநங்கை.
 
🌼  🌼  🌼
 
தன்னை சுதாகரித்துக் கொண்டு பேசத் தொடங்குகிறார் வெண்காட்டு அன்னையார்.
'நங்கை, வந்த வைரவ சந்நியாசியார் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் உண்பாராம்.
அந்த நாளும் இன்றுதானாம்.' வெண்காட்டு நங்கையார் சற்று நிறுத்த,
அதுகேட்டு சந்தனநங்கையின் முகம் மலர்ந்தது.
'அன்னையே நல்லதாய்ப் போயிற்று.
இன்னும் ஓரிரு கறியமுதுகளைக் கூட ஒரு விநாடியில் சமைத்துவிடலாம்.
அவரை உடனே அழைத்து வரச்சொல்லலாமே' என்று கூறி,
அன்னையின் முகம் பார்க்கிறாள் அவள்.
 
🌼  🌼  🌼
 
'பேதைப் பெண்ணே! விடயத்தை முடிக்கும் முன் அவசரப்படுகிறாயே.
அந்த அடியார் பசு அறுத்துத்தான் உண்பாராம்.' அன்னை சொல்ல
'என்னது? சிவனடியார் பசு அறுத்து உண்பாரா? இது நல்ல கதையாய் இருக்கிறதே.
சந்தனநங்கை குறுக்கிட அவசரப்படாதே அதுவல்ல பிரச்சினை.
அவர் உண்ணும் பசுவும் நரப்பசுவாம். அதாவது மானுடப்பிள்ளையாம்.
அப்பிள்ளையும் ஐந்து வயதிற்கு உட்பட்டவனாயும்,
பெற்றோர்க்கு ஒரே பிள்ளையாயும் இருக்கவேண்டுமாம்.
அப்பிள்ளையை தாய் பிடிக்கத் தந்தை அரியவேண்டுமாம்.
அக்காரியம் நடக்கும் போது,
தாய், தந்தை, பிள்ளை மூவரும் மகிழ்வாகவும் இருத்தல் அவசியமாம்.
அப்படி அறுத்த குழந்தையின் சதையில் கறி சமைத்துத் தந்தால்த்தான்,
அவர் உண்பாராம். என்னடி கொடுமை இது!'
விடயத்தைச் சொல்லி அன்னை கண்ணீர் வடிக்கக் கொதிக்கிறாள் சந்தனநங்கை.
 
🌼  🌼  🌼
 
'அன்னையே! நீங்களோ, தந்தையோ கோபித்தாலும் பரவாயில்லை.
அந்த அடியார் நம் வீட்டுப் பக்கம் வந்தால்,
அவரைத் திட்டித் துரத்தாமல் விடமாட்டேன்.
மனிதமாமிசம் கேட்கும் இவரெல்லாம் ஒரு அடியாரா?'
கண் சிவக்கப் பேசுகிறாள் சந்தனநங்கை.
 
🌼  🌼  🌼
 
திருவெண்காட்டு நங்கை கண்களிலிருந்து கண்ணீர் அருவி பாய்கிறது.
'நங்காய் இதற்கே நீ கோபிக்கிறாயே,
மிகுதியையும் நான் சொன்னால் நீ எப்படித் தாங்கப் போகிறாயோ?
சிவனடியார்க்கு உணவிடும் விரதம் குலையக்கூடாது என்பதற்காக,
அடியாரின் நிபந்தனைகளுக்கெல்லாம் நம் ஐயன் உடன்பட்டு விட்டாராம்.'
அன்னை கூற திகைக்கிறாள் சந்தனநங்கை.
 
🌼  🌼  🌼
(அடுத்த வாரமும் சந்தனநங்கை வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்