'மங்கையராய் வந்து பிறப்பதற்கே' :பாகம் 2: 'சந்தனநங்கை':பகுதி 6-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளம் கொதித்தது சந்தனநங்கைக்கு.
'என்னது? அடியாரின் இந்த மூட நிபந்தனைகளுக்கு ஐயன் உடன்பட்டாரா?
ஒரு குடும்பத்திற்கு ஒரு பிள்ளையாய் இருக்கும்,
ஐந்து வயது ஆண்மகவை இவருக்குப் பலியாக எவர் கொடுப்பார்களாம்?
அப்படியே கொடுத்தாலும் தாய் பிடிக்கத் தந்தை அரிவதும்,
அந்நேரத்தில் மூவரும் மகிழ்வாய் இருப்பதும் நடக்கக்கூடிய காரியங்களா?
பேசாமல் அந்த அடியாரைத் துரத்திவிட்டு,
நம் ஐயனை வந்து உணவு உண்ணச் சொல்லுங்கள்.
ஒரு நாளைக்கு அடியார்க்கு உணவிடாவிட்டால் என்ன?
குடியா மூழ்கிவிடப் போகிறது?'
 
🌼 🌼 🌼
 
'நங்காய் அதிராதே அடியார் சொன்ன நிபந்தனைகளோடு விருந்திட,
நம் ஐயன் சம்மதம் சொல்லிவிட்டு வந்துவிட்டார்.
நம் சீராளனை குருகுலத்திலிருந்து ஏன் அழைத்து வந்தார் என்று,
இப்போதுமா நீ புரிந்து கொள்ளவில்லை?
ஐயன், நம் சீராளனை ஏன் முத்தமிடவில்லை என்று கேட்டாயே,
அடியார்க்கு இடும் உணவை எச்சில்படுத்தக் கூடாதாம்.
அதுதான் அவருடைய மன எண்ணம்.
இப்போது நிலமை புரிகிறதா உனக்கு?'
அன்னை முடிக்கும் முன்.
'என்னது எந்தன் அன்புத்தம்பி சீராளனையா?'
ஐயோ சிவனே! என்று கண்கள் செருக மயங்கி விழுகிறாள் சந்தனநங்கை.
 
🌼 🌼 🌼
 
முகத்தில் நீர் தெளிபட சந்தனநங்கைக்கு மயக்கம் சிறிது தெளிவடைகிறது.
ஏன் தான் மயங்கினேன் என்பதே அவளுக்குச் சரியாய்த் தெரியவில்லை.
அன்னையின் மடியில் தான் கிடப்பதை உணர்ந்ததும்,
பதறித் துள்ளி எழுகிறாள்  அவள்.
'அம்மா அடியார் சாப்பிட்டுவிட்டுப் போய்விட்டாரா?
நம் ஐயனும் சீராளனும் உணவுண்டுவிட்டனரா? நீங்கள்?
பாவி இந்நேரத்தில் நான் மயங்கி உங்களையும் பசியிருக்க வைத்துவிட்டேன்.
எனக்கு இப்பொழுது முற்றும் சரியாகிவிட்டது.
நீ;ங்கள் உட்காருங்கள். உங்களுக்கு உணவு படைத்துவிட்டு,
பின்னர் நான் உண்கிறேன்.'
அவசர அவசரமாகச் சந்தனநங்கை சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
அவள் அறிவு தெளிவாக, அன்னை முன் சொன்னவிடயங்கள் நினைவுக்கு வருகின்றன.
'ஐயையோ! நீங்கள் சொன்னவற்றை மறந்துபோனேனே.
எங்கள் பிள்ளையையா?' எனக்கேட்டு,
மீண்டும் மயங்கப் போனவளின் முதுகில் தடவி,
அசைவற்ற முகத்தோடு வெண்காட்டு நங்கை பேசத் தொடங்குகிறாள்.
 
🌼 🌼 🌼
 
'நங்காய் மனதைத் தேற்றிக்கொள்.
எங்கள் ஐயன் சிவன் மீதும் சிவனடியார் மீதும் வைத்திருக்கும்,
அன்பினை நீ அறியமாட்டாயா?
அவருக்குச் சிவன்தான் ஐயன்.
எனக்கும் உனக்கும் நம் ஐயன் தான் சிவன்.
எப்படி எங்கள் ஐயன் எங்களைக் கைவிடமாட்டாரோ,
அப்படியே நம் ஐயனையும் சிவன் கைவிடமாட்டார்.
ஏதோ சோதனைக்காலம் என்று நினைத்துக் கொள்.
எதுவானாலும் கடைசிவரை சென்று பார்த்துவிடலாம்.
நீயும் மனதினுள் உறுதிகொள்.
இது சிவனின் சோதனை.
இதில் ஐயனை வெற்றி பெற வைப்பது நம் இருவரினதும் கடமை.
இனி, நம் நிலைகளை மறந்து எங்கள் ஐயனின் அடிமைகளாய்ச் செயற்படுவோம்.
அவர் நோக்கத்தை நிறைவேற்றுவோம்.'
 
🌼 🌼 🌼
 
அன்னை சொல்லச் சந்தனநங்கையின் மனதிலும் உறுதி பிறக்கிறது.
'தாயே நீங்கள் சொல்கிறபடியே நடந்து கொள்கிறேன்.
எதற்கும் கடைசியாய் ஒரு தரம் என் தம்பி சீராளனைப் பார்த்துவிட்டு வருகிறேன்.'
என்று கூறியபடி மெல்ல எழுந்தவளைத் தடுக்கிறாள் அன்னை.
 
🌼 🌼 🌼
 
'நங்காய் சற்றுப்பொறு.
நீ மயங்கிக் கிடந்த வேளையில்,
சீராளனின் கால்களை நான் பற்றிக்கொள்ள,
ஐயன் அவன் தலையை அரிந்துவிட்டார்.'
அன்னை சொல்லும் போதே பதறினாள் சந்தனநங்கை.
'ஐயோ இதென்ன கொடுமை?
என் அன்புத்தம்பி கதறி அழுதிருப்பானே என்ன செய்தீர்கள்?'
நங்கையின் கேள்விக்கு அன்னை பதிலுரைக்கிறாள்.
 
🌼 🌼 🌼
 
'அவனை யாரின் பிள்ளை என்று நினைக்கிறாய்?
தந்தையின் மகன் அல்லவா?
தன்னால் தந்தையின் நோக்கம் நிறைவேறுவதை எண்ணி மகிழ்ந்தபடி,
சிரித்த முகத்தோடு தன்னைப் பலிகொடுத்தான்.
சிறியவனாகிய அவனே அங்ஙனம் இருக்கையில்,
இதுகால் வரையில் அவரோடு ஒன்றித்து வாழ்ந்த நான் துயருறலாமா என நினைந்து 
நானும் மனதில் மகிழ்வை வருவித்துக் கொண்டேன்.
அதோ! அவன் உடலைக் கறிசமைத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும்.' 
 
🌼 🌼 🌼
 
நடந்தவை அறிந்து, சந்தனநங்கையின் மனதிலும் இப்பொழுது உறுதி பிறக்கிறது.
தாய், தந்தை, தம்பி என எல்லோரும் ஒருமித்து நின்று,
சிவத்தொண்டில் மகிழ்வோடு தம்மை அர்ப்பணிக்க,
நான் மட்டும் கவலையுறலாமா? நானும் இவ்வீட்டுப் பிள்ளைதானே?
இது எதுவரை போகிறது என்று பார்த்து விடலாம்.
நம் ஐயனின் விரதத்தை நிறைவேற்ற நானும் என்னால் ஆனதைச் செய்வேன் என உறுதி பூண்டு,  
'அன்னையே எதுவானாலும் கட்டளையிடுங்கள் செய்கிறேன்' என்கிறாள் அவள்.
 
🌼 🌼 🌼
 
(அடுத்த வாரமும் சந்தனநங்கை வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்