உளமதனின் அன்பனைத்தும் உதட்டில் தோன்ற
உயர் கருணைக் கடலெனவே சிரிக்கும் அன்னை
நலமிகுந்த தனதாற்றல் எழுத்தால் இந்த
நானிலத்தில் பெயர் பதித்து நலங்கள் செய்தாள்
விளங்கிய நல் அறிவாலே மாதர் தங்கள்
வெற்றிக்காய்த் தினம் தினமும் உழைத்த நங்கை
தலமதனைத் துறந்தின்று விண்ணைச் சேர்ந்தாள்
தவித்தேதான் நல்லோர்கள் இதயம் வாட
'ஈழத்துச் சோமுதனின்' இதயம் வென்று
இனிதாக இல்லறத்தைச் செழிக்கச் செய்தாள்
வேழமென அம்மனிதர் நிமிர்ந்து வாழ்ந்து
வெற்றிகளைப் பெறவேதான் வழிகள் செய்தாள்
நாள் பொழுது பாராமல் கணவன் காட்டும்
நல்வழிகள் வெற்றி பெற துணையாய் நின்றாள்
வாழ்வதனில் பழமையொடு புதுமை பேணி
வாழ்ந்தேதான் புகழ்நிறுத்தி விண்ணைச் சேர்ந்தாள்.
கணவனொடு கைகோர்த்துக் கற்றோர் போற்றக்
கண்ணியமாய்ப் பலர் மகிழக் கனிந்து வாழ்ந்தாள்.
மனமதனில் நம் இனத்தின் நலத்தைத் தேக்கி
மாறாத விருப்பமொடு பணிகள் செய்தாள்
தனது மன மொழி மெய்யாம் அனைத்தும் கூட்டி
தமிழுக்காய்த் தொண்டாற்றி நிமிர்ந்து நின்றாள்
இனமழவே இம் மண்ணைத் துறந்து சென்றாள்
ஏற்றமுறும் 'பத்மாவாம்' எழில்கொள் நங்கை.
கல்விக்காய் பணி செய்தாள் கற்றோர் போற்றக்
காதைகளும் பல எழுதி மண்ணுக்கீந்தாள்
வெல்விக்கப் பெண்ணினத்தை வீறு கொண்டு
வேற்றுமைகள் ஒழிப்பதற்காய் பாடுபட்டாள்.
இல்லத்தில் தாயாக ஏற்றம் செய்தாள்.
எழில் பொங்க நல்லோரை இணைத்து நின்றாள்
பல்வித்தை தெரிந்தவளாம் அன்னை தன்னை
பார் இழந்து பரிதவித்து நின்றதம்மா
கம்பனது கழகமதை இதயந்தன்னில்
கனிவோடு பதித்தே தான் உரிமை பொங்க
தம்முடைய பிள்ளைகளாய் எமையே ஏற்று
தனதுறவால் சிறப்பித்த தனித்த அன்னை
தெம்புடனே நாம் நிமிர்ந்து தெளிந்து செல்ல
தெவிட்டாத நல்மொழியால் வழிகள் சொல்லி
நம்முடைய உயர்வுதனை நிலைக்கச் செய்தாள்
நல்லவளின் இழப்பாலே நலிந்து நின்றோம்.