'மனுநீதி கண்ட சோழன்' : பகுதி 1 - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

🔔 🔔 🔔 🔔

லகு இறைவனின் படைப்பு. 
அவ்வுலகின் இயக்கமே இயற்கையாம்.
இயற்கையுள் காணப்படும் ஒழுங்கே அறம் எனப்படும்.
அவ் அறவொழுங்கிற்கு உட்பட்டே நம் வாழ்வு அமைதல் வேண்டும்.
அங்ஙனம் அமையின், 
இறை,
இறையால் ஆக்கப்பட்ட இயற்கை, 
இயற்கையின் ஒழுங்காய் அமைந்த அறம்,
என்ற வரிசையின் மறுதலைப் பெறுபேறாய்,
அறவாழ்வால் இயற்கையுணர்வும், 
இயற்கையுணர்வால் இறையின்பமும் எய்தப்படும்.
எனவே,
இறையின்பம் எய்த அறவாழ்வே அடிப்படையாம்.

🔔 🔔 🔔 🔔

மேற் சொன்ன அறத்தின் பெருமையை நமக்கு உணர்த்த,
தெய்வச் சேக்கிழார் விழைகிறார்.
அவ்விழைவின் வெளிப்பாடே,
பெரியபுராண திருநகரச் சிறப்புள் கூறப்படும்,
மனுநீதி கண்ட சோழன் கதையாம்.

🔔 🔔 🔔 🔔

இறையைப் போலவே அறமும், 
முற்றும் அறிய முடியாதது.
கடைப்பிடிப்பார்தம் ஆன்ம தகுதிக்கேற்ப,
அறம் பலவாய் விளக்கமுறும்.
அதனால்த்தான் தர்மம், அறம், நீதி எனும் பல சொற்களால்,
அறம் எனும் ஒரு பொருள் குறிக்கப்பட்டது.
பொதுவாய் நோக்க,
தர்மம், அறம், நீதி எனும் சொற்கள் 
ஒரு பொருளவாய் கருதப்படினும் 
சிறப்பு நோக்கில் அவற்றின் அர்த்தங்கள் வேறு வேறாம்.

🔔 🔔 🔔 🔔

தர்மம் என்பது,
இயற்கையின் நுண்மைகளை உட்கொண்ட,
உலகியல் கடந்த உண்மைநெறி.
நீதி என்பது,
அவ் உலகியல் கடந்த உண்மைநெறியில்,
அனைவரையும் நிறுத்தற்பொருட்டு, 
அனைவர்க்குமாய் நூலால் வகுக்கப்;பட்ட உலகியற் சட்டம்.
நூல் வழக்கில்,
அறம் என்ற சொல் சந்தர்ப்பத்திற்கேற்ப
தர்மம், நீதி எனும் இரண்டினையும் குறிக்கப் பயன்படும்.

🔔 🔔 🔔 🔔

தர்மம் உலக ஜீவராசிகள் அனைத்திற்குமானது.
நீதி மானுடருக்கு சிறப்புரித்தானது.
தர்மம் கடல்.
நீதி ஆறு. 
இவ்வுவமையே,
தர்மம், நீதி என்பவற்றின் வேறுபாட்டிற்கான விளக்கமாம்.
ஆறு ஓடிக் கடலுள் கலக்கும்.
அதுபோலவே நீதி உயர்ந்து தர்மத்துள் சங்கமமாகும்.
ஆறு கடலுள் அடங்கும் கடலோ ஆற்றுள் அடங்கா
அங்ஙனமே, 
நீதி தர்மத்துள் அடங்கும், தர்மமோ நீதியினுள் முழுமையாய் அடங்கா.
தர்மம் முதலறம்
நீதி சார்பறம், 
சார்பறம், உலகியலின்கண் மானுடத்தை செம்மையுற நிலைநிறுத்தி,
இம்மை இன்பம் பயப்பிக்கும்.
முதலறம், உயிரைச் செம்மைப்படுத்தி,
மறுமைப்பேறு நல்குவதோடு வீட்டுநெறிக்கும் காரணமாகும்.
சார்பறத்தூடு சென்று முதலறத்தைத் தொடின்,
அம்முதலறமாகிய தர்மம் இறையின்பம் விளைவிக்குமாம்.
இவ்வுண்மையை உரைப்பதே மனுநீதி கண்ட சோழன் கதை.

🔔 🔔 🔔 🔔

சுந்தரரின் திருத்தொண்டர் தொகையை,
முதல் நூலாய்க் கொண்டு, 
வழிநூல் சமைக்;கும் சேக்கிழார்,
அம்முதல் நூலில் இல்லாத,
மனுநீதிச் சோழன் கதையை,
திருநகரச் சிறப்பினுள் புகுத்துகிறார்.
அறமே பக்தியின் முதல் நிலை எனும் பேருண்மையை 
மனுநீதிச்சோழன் கதை மூலம் வலியுறுத்துகிறார்.
மந்திரியாய் மாண்புற்ற சேக்கிழார்
அப்பதவி அனுபவத்தினூடு தாம் பெற்ற அறவுண்;மையை 
காவிய முகப்பில் காட்ட நினைத்தார் போலும்.

🔔 🔔 🔔 🔔

அறமே பக்தியின் முதல் நிலை எனும் இக்கருத்து
ஏலவே தமிழர் தம் பண்பாட்டில் பதிவானது.
தமிழர் தம் வாழ்வியலறமான வள்ளுவம்,
இக்கருத்தை தெளிவுற வலியுறுத்தும்.

'ஒழுக்கத்து நீத்தார் பெருமை 
விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு'.

எனும், நீத்தார் பெருமை அதிகாரக் குறளுக்கு,
உரைசெய்யும் பரிமேலழகர்,
இக்கருத்தைத் தெளிவு பட விளக்கம் செய்கிறார்.

🔔 🔔 🔔 🔔

'ஒழுக்கத்து நீத்தார்' எனும் தொடரினை,
ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தார் என விரித்து,
ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தலாவது யாதென,
நுட்பமாய் எடுத்துரைக்கின்றார் அவர்.
ஒழுக்கங்களை வழுவாது ஒழுக, அறம் வளரும்.
அறம் வளரப் பாவம் தேயும்.
பாவம் தேய அறியாமை நீங்கும்.
அறியாமை நீங்க,
நித்த அநித்தங்களின் வேறுபாட்டு உணர்வும்,
அழியும் இயல்புடைய இம்மை மறுமை இன்பங்களில் உவர்ப்பும்,
பிறவித் துன்பங்களும் தோன்றும்.
அவை தோன்ற, 
வீட்டின் கண் ஆசை உண்டாகும்.
அஃது உண்டாக, 
பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எல்லாம் நீங்கி,
வீட்டுக்குக் காரணமாகிய யோக முயற்சி உண்டாகும்.
அஃது உண்டாக மெய்யுணர்வு பிறந்து,
புறப்பற்றாகிய எனது என்பதும், 
அகப்பற்றாகிய நான் என்பதும் விடும்.
அவ்விரண்டும் நீங்க வீடு எய்தப்படும்.
இதுவே ஒழுக்கத்தின்கண் நின்று நீத்தல் என்பதாகிய,
அறத்தை முதலாய்க் கொண்டு வீடடையும் வழியாம்.

🔔 🔔 🔔 🔔

குறித்த ஓர் இடத்தைச்சார வாகனம் ஒன்றினுள் ஏறுபவன்,
அவ்வாகனத்துள் ஏறியபின்,
தான் செல்ல நினைத்த இடம்நோக்கி நடக்கத்தேவையில்லை.
அவன் ஏறிய வாகனமே அவன் நினைத்த இடத்திற்கு அவனைச் சேர்ப்பிக்கும்.
அதுபோல அறநெறியில் புகுந்தார் முக்திநெறி நோக்கித் தனித்தியங்கத் தேவையில்லை.
அவ்வறநெறியே அவர்தம்மைத் முக்திநெறியிற் சேர்ப்பிக்கும்.
மேற்குறளால் இக்கருத்தே வலியுறுத்தப்படுகிறது.
இக்குறள்க் கருத்தினையே மனுநீதிச் சோழன் கதைமூலம்
வலியுறுத்த விழைகிறார் சேக்கிழார்.
இனி தெய்வச் சேக்கிழார் தரும் அத் திருக்கதையுள் நுழைவாம்.

🔔 🔔 🔔 🔔

திருவாரூரின் சிறப்புரைக்க முற்படும் சேக்கிழார்,
அந்நகரை முன்னர் ஆண்ட,
மனுநீதிச்சோழனின் வரலாற்றினை உரைக்கத்தலைப்படுகிறார்.
தன்னைப் பெரியபுராணம் பாடப் பணிப்பித்த, 
அநபாயச் சோழனின் வழிமுதலாய் திகழ்ந்தவனே,
சூரிய மரபில் உதித்த அம்மனுநீதிச்சோழன் என்றுரைத்து,
காவியத் தொடக்கத்திலேயே தன் நன்றியுணர்வையும் பதிவு செய்கிறார் அவர்.

'அன்ன தொன் நகருக்கு அரசன் ஆகினான்
துன்னு வெங் கதிரோன் வழித்தோன்றினான்
மன்னு சீர் அநபாயன் வழிமுதல்
மின்னு மாமணிப் பூண் மனுவேந்தனே'

அந்தப் பழமையான திருவாரூர்த் திருநகரத்திற்கு அரசனாய் வீற்றிருந்தவன்,  சூரியமரபிலே தோன்றியவனும், நிலைபெற்ற சிறப்புடைய அநபாயச் சக்கரவர்த்தியின்  மரபில் முன்னவனுமாகிய, விளங்குகின்ற ஆபரணங்களையணிந்த  மனுவேந்தனாவான்.
(அன்ன - அந்த, தொன் - பழைய, துன்னு - பொருந்திய,  மன்னுசீர் - நிலைபெற்ற சிறப்பு)

🔔 🔔 🔔 🔔

இப்பாடலில் 'மன்னுசீர் அநபாயன்' என,
வினைத்தொகையால் அநபாயன் சிறப்புரைத்தது கவனிக்கத்தக்கது.
மனுநீதிகண்டசோழன் மரபால் இறந்தகாலச் சிறப்பும்,
பெரியபுராணக் காவியம் செய்வித்த நிகழ்காலச் சிறப்பும்,
காவியம் நிலைத்தலால் எய்தப்போகும் வருங்காலச் சிறப்பும்,
ஒருங்கே அமைய அநபாயச்சோழனை,
'மன்னுசீர் அநபாயன்' எனச் சேக்கிழார் உரைக்கிறார்.
இவ்வினைத்தொகையால்,
பெரியபுராண பெரும்பேற்றை உலகுக்கு நல்கிய,
அநபாயனின் சந்ததி வருங்காலத்திலும் சிறக்கட்டும் என,
கேக்கிழார் தம் தெய்வச்சிந்தை வாழ்த்தியதையும் நாம் உணர்கிறோம். 

🔔 🔔 🔔 🔔

மனுநீதிச்சோழன், தன் தேசத்தைக் காவல்செய்த சிறப்பினை,
அடுத்துக் கூறுகிறார் சேக்கிழார்.

'மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலன்
விண்ணுலார் மகிழ்(வு) எய்திட வேள்விகள்
எண்ணிலாதன மான இயற்றினான்.'

(மன் - நிலைத்த, ஆம் - போல, மான - சிறப்பாக)

இம்மன்னவன்  நிலவுலகில் வாழும் எல்லா உயிர்களையும் கண்ணையும் உயிரையும் போல,  
காவல்  செய்ததோடு, விண்ணுலகத் தேவரும் மகிழும்படி பல வேள்விகளையும் சிறப்பாகச் செய்தனன்.
இஃது இப்பாடல் பொருள்.

🔔 🔔 🔔 🔔

மன்னுயிர்கட்கெலாம் என குறிப்பிடுவதன் மூலம்,
இம்மன்னவன் மனிதர்க்கன்றி,
எல்லாவுயிர்க்கும் காவலனாய் திகழ்ந்தான் என்பதை,
சேக்கிழார் சுட்டிக் காட்டுகிறார்.
மனிதர்க்குச் சமமாய்,
பசுவினிற்கு இவன் நீதியுரைக்கப் போகிறான் என்பதை,
சேக்கிழார் முன்னரே குறிப்பால் உணர்த்தும் உத்தி இது.
மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கெல்லாம்  
இந்த அடியில் வரும்,
வாழ்தரு என்பதை ஒருசொல்லாய்க் கொண்டு,
இந்நிலவுலகில் வாழ்கின்ற,
நிலைத்த உயிர்கள் எல்லாவற்றையும் என்று,
இவ்வடிக்குப் பொருள் கொள்ளலாம்.

🔔 🔔 🔔 🔔

அங்ஙனமன்றி வாழ், தரு எனப் இச்சொல்லைப் பிரித்து,
மன்னுயிர்கட்கெல்லாம் மண்ணில் வாழ் தரு எனக் கொண்டு கூட்டி,
உயிர்க்கட்கெல்லாம்,
மண்ணில் வாழ்கின்ற கற்பகத்தருவாய் பயன் செய்பவன் எனவும்,
இவ்வடிக்குப் பொருள் கொள்ளல் கூடும்.

🔔 🔔 🔔 🔔 🔔 🔔 🔔 🔔
 (சோழன் கதை தொடரும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்