'வரிசையில் நிற்றல்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

ள்ளங் கை மச்சமும்
உருச்சிறுத்து உருச்சிறுத்து
இல்லையென ஆகும் படிக்கு,
கழுவிக் கழுவி, வெளுத்த கரமெனக்கு.

'பழுது படா வாழ்க்கை, பார் கறை படியாத கை'
எனக்கு என்றேன்.
என்றபடி, சென்று
நின்றேன் வரிசையில்,

வாக்களிப்பின்று.
எப்படியோ இது முடிந்தால் போதும்.
அப்படி உள்ளம் எண்ணியதுண்மை.
போதும்... போதும்... அசிங்கம், குமட்டல்,

வாது நிறைத்தல்,
வயிறு வளர்த்தல்.
போதும்... போதும்...
பொழுதற்றாரின் மோதல்.
முகப்புத்தகச் சாதல்.

எப்படியேனும் முடிந்தால் போதும்.
அப்படி 
உள்ளம் எண்ணியதுண்மை.
நின்றேன் வரிசையில், அதுவோ
மெல்லச் சென்றதெம் தீர்வு போலவே.

நிற்கும்பொழுது நகர்ந்தது நினைவு.
யாருக்கிடுவது வாக்கினை இங்கு?
யார்தான் புனிதர்?
புனிதர் வேண்டாம்
யாரே மனிதர்? யாவரிங்குள்ளார்?

எங்கே பெயர்ப் பட்டியல்.
ஆமாம்.
தாங்கக்கூடாப் பெயர்களைத் தாங்கி,
தூங்கித் தற்கொலை செய்துள தாளில், 
பட்டியல், சின்னம் எல்லாம் பார்த்தேன்.

புனிதர் வேண்டாம்... ஒரு மனிதராவது?
யார்தான் பொருத்தம்? யாவரிங்குள்ளார்?

நின்றேன் வரிசையில், 
நீண்ட வெயில் சுட,
கொன்றது கதிரே, குளிர் நிழலில்லை...
ஒருபடியாக
உள்ளே அழைத்தனர்.

மூடிக் கிடந்த முகக் கவசத்தை
நாடிக்கிறக்கி
'நான்தான்' என்றேன்.
தந்தனர் சீட்டு.

தமிழரின் துயர் போல
அந்தமில்லாது நீண்டது, அதுவே.

உள்ளே,
சரியான தெரிவுக்குப் 
பிழை எனப் புள்ளடி 
தருமோர் 
தலைகீழ்க் காரியம் புரிந்தேன்.

கையினைப் பார்த்தேன்...
கறை பட்டுப் போயிற்று.

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்