'வாணி அவள் உன் வடிவில் வந்தாள் அன்றே!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் எலாம் உன் பெரிய இசையினாலே
உவப்படையச் செய்கின்ற எங்கள் அன்னாய்
திலகம் என உன் திறமை எடுத்துக்காட்டி
தேசமது உனை வணங்கிப் பலரும் போற்ற
நலம் திகழும் 'பத்மஸ்ரீ' விருது தந்த
நற்செய்தி தனை அறிந்து மகிழ்வு கொண்டோம்.
வளம் பெருக! மென்மேலும் உயர்வு கொள்வாய்!
வாணி அவள் உன் வடிவில் வந்தாள் அன்றே.
 
பாடுகிற இசைச்சிறப்பு! பண்போடென்றும் 
பழகுகிற நலச்சிறப்பு! பலரும் போற்ற
நீடு புகழ் கொண்டதனால் பெரும் சிறப்பு!
நிலமெல்லாம் நினது புகழ் ஓங்குதன்றே
வாடுகிற ஈழத்தார் தங்கள் நெஞ்சம் 
வற்றாது மனம் குளிர அன்போடென்றும்
ஓடியெமை நாடிவந்து இசைகள் தந்த
ஒப்பற்ற தேவதையே நீடு வாழி! 
 
முந்தையதாம் பிறவிகளில் நாங்கள் செய்த
முற்றியதாம் நல்வினைகள் வாய்த்ததாலே
உந்தனது பேரன்பை உவந்து பெற்றோம்.
உலகதனில் வேறென்ன எமக்கு வேண்டும்?
சிந்தையிலே நினையும்போதெல்லாம் இன்பம்
சேர்க்கின்ற இசைவாணி! விருது பெற்றாய்
அந்தமிலாதுன்பெருமை வளர வேண்டி
ஆண்டவனைத் தினம் தினமும் தொழுது நின்றோம்.
 
தேன் ஒத்த இசையதனால் தெய்வப் பெண்ணாய்
திகழுகிறாய் புகழ் நிறுத்தித் திசைகள் தோறும்!
தான் என்னும் அகந்தைதனைத் தூரத் தள்ளி
தன்னடக்கக் குன்றாகத் திகழும் தாயே!
ஊன் உருக உளம் உருக உயர்ந்தோர் தங்கள்
ஒப்பற்ற சிந்தையெலாம் உருகப் பொங்கும்
மாண்புடைய உந்தன் இசை மேலும் மேலும்
வளம் பெருகி உலகுதனைக் காத்தல் வேண்டும்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்