'நுண்மாண்நுழைபுலத் தரிசனம்' -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

 
ங்களுக்கு,
'நுண்மாண்நுழைபுலம்' எனும் தொடரின் அர்த்தம் தெரியுமா?
உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ?
நெடுநாட்களாய் மேடைகளிலும் கட்டுரைகளிலும்,
அறிஞர்களை உயர்த்தப் பயன்படுத்தப்படும்,
வெறும் அலங்காரத் தொடராகவே,
இத்தொடர் எனக்கு அறிமுகமாகியிருந்தது.
பொருள் விளங்காமலே இத்தொடரைப் பாவித்து,
பலரை நான் பாராட்டியும் இருக்கிறேன்.
நுண்மையான,
மாட்சிமைப்பட்ட,
நுழைந்து தேடும் அறிவு என,
இத்தொடருக்கான பொருளைப் பிற்காலத்தில் அறிந்தபோதும்,
அதன் முழுப்பெறுமதியையும் உணர்ந்திலேன்.
அத்தகு அறிவை நான் சந்திக்காமலே இருந்தது,
அதற்கான காரணமாக இருக்கலாம்.பேராசான் இலக்கண வித்தகர் நமசிவாய தேசிகர் அவர்களை,
என்று சந்தித்தேனோ,
அன்றுதான் இத்தொடரின் முழுப்பெறுமதியையும் உணர்ந்தேன்.
இத்தொடரின் பெறுமதியை என்பதைவிட,
தமிழின் பெறுமதியை,
அறிவின் பெறுமதியை,
தேடலின் பெறுமதியை,
உணர்ந்தேன் எனல் சாலப்பொருத்தமாம்.

   

எளிமைப்படுத்துவதாகச் சொல்லி,
தமிழை மலினப்படுத்தி வரும் இக்காலத்தில்,
சிறுகதைகளும்,
நாவல்களும்,
மேலோட்டமான கட்டுரைகளுமே,
கல்வியாய் முடி சூட்டப்பட்டன.
'கனகா கதறிக்கதறி அழுதாள்' என்று,
எழுதப்படும் இன்றைய தமிழைப்படிக்க,
எவருக்கும் 'நுண்மாண்நுழைபுலம்' ஒன்றும் அவசியமில்லையாம்.
பத்திரிகைத் தமிழளவில்,
படிக்குந்தமிழும் வந்துவிட்ட இக்காலத்தில்,
அறிவுலகில்,
'நுண்மாண்நுழைபுலம்' எனும் தொடர்,
பெரும்பாலும் வழக்கொழிந்த தொடராயிற்று.
மேற்சொன்ன கல்விச் சூழலிலேயே வளர்ந்த எனக்கு,
இத்தொடர்பற்றி விளக்கம் இல்லாமற் போனதில்,
ஆச்சரியம் என்ன?

   

நலிந்து கிடந்த இத்தகு அறிவுச் சூழலில்,
தமிழ்மேல் உள்ள ஆர்வம் மட்டுமே தகுதியாக,
ஒரு சில பெரியார்களின் தமிழினால் ஈர்க்கப்பட்டு,
இறைவன் தந்த பேச்சாற்றல் பெருந்துணையாக,
மேடைகளில்,
ஓர் அறிஞன் போல,
நானும் உலா வந்த காலம் அது.
பல மேடைகளிலும் என்னைப் பேச அழைத்ததால்,
புதிது புதிதாய் பேச வேண்டிய தேவை உண்டாக,
எனது அறிவின் விரிவின்மையை நானாய் உணர்ந்தேன்.

   

அது படிக்கும் தேவையை உணர்த்திற்று.
பதவிகளால் இனங்காணப்பட்டு,
பேரறிஞர்களாக உலாவந்த பலரையும்,
அடிக்கடி மேடைகளில் சந்தித்ததால்,
அவர்களிடம் நான்பெற ஒன்றும் இல்லையென்பது,
ஏலவே தெளிவாகியிருந்தது.
படிக்கும் பசியோடு தக்க குருவைத் தேடித்திரிந்தேன்.
'பண்டிதர்கள் ஆழக்கற்றவர்கள்' எனும் செய்தி சொல்லப்பட,
பண்டிதர்கள் சிலரைத் தேடிப் படிக்க முயன்றேன்.
அவர்களிடம் கல்வி இருந்தது.
ஆனால் எனக்குத் திருப்தி உண்டாகவில்லை.
காரணம்,
பெரும்பாலும் அவர்களிடம் இருந்தது,
வெறும் 'மனனக்' கல்வியேயாம்.
அவர்களும்,
ஓதி இருந்தார்களே தவிர உணர்ந்திருக்கவில்லை.
சரியானதைத் தேடுவதைவிட,
பிழையைக் கண்டுபிடிப்பதிலேயே,
அவர்களுக்கு அதிக அக்கறை இருந்தது.
என் மனப்பசிக்கு அவர்களாலும் சோறிட முடியவில்லை.
அதனால் என் தேடல் தொடர்ந்தது.

   

இந்நிலையில்,
யாழ்ப்பாணம் கோண்டாவில் எனும் ஊரில்  ஒரு கூட்டம்.
பல்கலைக்கழகம் பட்டமளித்த ஒரு பண்டிதருக்குப் பாராட்டு,
இங்ஙனமாய் அழைப்பிதழ் சொல்லிற்று.
பல்கலைக்கழகம் பண்டிதரைக் கௌரவிக்கிறதா?
'ஏதோ இருக்கவேண்டும்' என்று என் உணர்வு உந்த,
அக்கூட்டத்திற்குச் சென்றேன்.

   

பாராட்டப் பெற்றவர் 'வித்தகர்'
வெள்ளை வேட்டி,
வெள்ளை நஷனல்,
வெள்ளைச் சால்வை,
வழமையான பண்டிதக்கோலம்.
அதே அச்சில் வார்க்கப்பட்டவர் தானோ? இவரும்,
என் மனதில் ஐயம்.
அன்றைய அவரின் பேச்சு,
அவ்வெண்ணத்தைத் தகர்த்தது.

   

தெளிந்த,
தேடுதலுடன் கூடிய சிந்தனை,
கருத்தின் தேவையை அளவாய்க் கொண்டு,
சொற்கள் பிறந்தன.
அவர் பேச்சில் வெற்றுச் சொற்கள் ஏதுமில்லை.
என்னையறியாமல் என் உள்ளம் பணிந்தது.
குரு தரிசனம் கிட்டிய சிலிர்ப்பில்,
என்னை மறந்தேன்.
அவரைச் சந்தித்த அவ்விநாடியில்,
என் மன ஏக்கம் புரிந்து,
தேவதைகள் வாழ்த்தியிருக்கும் போலும்.
தொடர்ந்து அவரிடம் பாடங்கேட்கும் வாய்ப்புப் பெற்றேன்.
அது ஒரு தனிக் கதை.

   

மேற்சொன்ன சந்திப்பு நடந்து ஐந்து வருடங்களாகியும்,
அவரை அணுகவும், கற்கவும்,
வாய்ப்பில்லாமல் போயிற்று.
படிக்கும் ஆசை தொடர்ந்து உந்த,
எப்படியும் அவரைப் பிடிப்பது என்ற துடிப்போடு,
எனது தேடல் தொடங்கியது.
'குற்றம் பொறுக்க மாட்டார்'
'அவரிடம் படிக்கவே ஆழமான அறிவு வேண்டும்'
'கடுமையான ஆசாரசீலர்'.
இப்படிப் பலரும் பலவிதமாய் மிரட்டினர்.
இவை எல்லாவற்றையும் விட,
'இலக்கணமே தெரியாத உனக்கு,
இலக்கண வித்தகரிடம் கல்வியா?'
என் மனமே கேள்வி கேட்டு என்னை மிரட்டியது.
'ஆசை வெட்கமறியாது' என்பது எத்தனை உண்மை.
இத்தனையையும் தாண்டி,
அவரைத் தேடிச் சென்றேன்.

   

மருதனார்மடம் எனும் கிராமத்தின் உட்புறத்தில் ஒரு வயல்வெளி.
அதை அண்டி ஒரு தென்னந்தோட்டம்.
அதனுள்ளே மிகச் சிறியதொரு வைரவர் கோவில்.
அக்கோவிலின் சிறிய முற்றத்தில்,
ஒரு கிழிசல் பாய்.
அப்பாயில்,
அழுக்கு வேட்டி, நரைத்ததாடியுடன் கூடிய,
ஒரு வயோதிபர்,
இடுங்கிய கண்களால் ஒரு புத்தகத்தைப் படித்தபடி,
படுத்துக் கிடக்கிறார்.
'அவரே வித்தகர்!'
ஊர் கைகாட்ட.
மெல்ல அருகில் செல்கின்றேன்.

   

மேடைத் தோற்றத்திற்கும் நேரிற் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம்.
புத்தகங்களில் படித்த,
அறிவாளிகளைச் சூழ்ந்திருப்பதாய்ச் சொல்லப்படும்,
'தேஜஸ்' ஒன்றும் அப்போது என்கண்களில் பட்டதாய் ஞாபகமில்லை.
கிட்டத்தட்ட ஒரு பிச்சைக்காரத் தோற்றம்.
'இவரிடமா படிக்கப்போகிறாய்?'
பட்டுவேட்டித் தோற்றத்தை அறிஞ இலட்சணமாய் பழகிய,
என் மனம் கேள்வி எழுப்புகிறது.
அவர் பேச்சின் தெளிவு ஞாபகத்தில் வர,
அருகில் சென்று அமர்கிறேன்.
என்னைக் கண்டதும் எழும்பி வெற்றிலையைத் துப்புகிறார்.
கையிலிருந்த புத்தகத்தை அவர் கீழே வைக்க,
அது காற்றில் பறந்து,
தன் பெயர் 'சிவஞானமாபாடியம்' என்கிறது.
புத்தகத்தின் தோற்றத்திலிருந்த பழைமையால்,
எனக்கு அதில் கவர்ச்சி ஏற்படவில்லை.
அதை அலட்சியம் செய்து அவர் பாதம் தொடுகிறேன்.
'வாரும் இரும், என்ன காரியமாய் வந்தீர்'
அளந்த வார்த்தைகளால் தளர்ந்த குரலில் கேள்வி பிறக்கிறது.

'உங்களிடம் படிக்க வேண்டும்'
நெளிந்தபடி சொல்கிறேன்.
'ஏன் ஏதாவது சோதனை எடுக்கப்போகிறீரோ?'
கேள்வியா, கிண்டலா என்று புரியாத அவரது வார்த்தைகள்,
சாட்டையாய் அறிவில் விழ அதிர்ந்து பதில் சொல்லத் தொடங்கினேன்.

      
                                                                                               (அடுத்த வாரமும் வித்தகர் வருவார்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்