'முத்தமிழ்க்கம்பன்': பகுதி 03-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

யர் கம்பனின் காவியத்தில்,
முத்தமிழ்த்துறையின் மூன்றாவதான நாடகத்துறை பற்றிய,
செய்திகளை இனிக் காண்போம்.

நாடகத்துறை

கம்பன் காலத்தில்,
நடனக்கலையே நாடகக் கலையாய்க் கணிக்கப்பட்டமை,
வெளிப்படை. 
நடனக்கலையின் பிரிவுகளான,
நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றில்,
நாட்டியம் எனும் சொல் நாடகத்தையே குறிக்கிறது.
இயல், இசை போலவே,
நடனக்கலை பற்றியும் கம்பன் பல இடங்களில் பேசுவான். 
அவையனைத்தையும் ஆராயும் அவசியமின்றி, 
நடனக்கலை பற்றிய நுட்பங்கள் அனைத்தையும்,
கம்பன் ஒரே கவிதையில் தருகிறான். 
அக்கவிதை மிதிலைக் காட்சிப்படலத்தில் வருகிறது.
அப்பாடல் காண்பாம்.

'நெய்திரள் நரம்பிற்றந்த மழலையின் இயன்ற பாடல்
தைவரு மகரவீணை தண்ணுமை தழுவித் தூங்க
கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல
ஐய நுண்ணிடையாராடும் ஆடக அரங்கு கண்டார்'

தேனொழுக்குப் போன்ற திரண்ட வடிவமான,
யாழ் நரம்பின் இசையையொத்த,
தம்மழலைக் கண்டத்தொனியால் பெண்கள் தரும் பாட்டிசையும், 
தடவி வாசிக்கப்படுகின்ற மகரவீணையின் நரம்பிசையும், 
மத்தளத்தின் தோல் இசையும், 
இணங்கி ஒலிக்க,
கைகள் செல்லும் வழியே கண்களின் குறிப்பு நோக்கம் செல்லவும்,
அக்கண்களின் பார்வை செல்லும் வழியே மனத்தின் குறிப்புச் செல்லவும், 
உண்டோ இல்லையோ எனும் ஐயந்தரும்படியான,
நுண்ணிடையினைக் கொண்ட மங்கையர் ஆடும்,
பொன்னாற்  சமைக்கப்பட்ட நடனசாலைகளை,
இராம இலக்குவர்கள் கண்டார் என்பது இப்பாடற் கருத்து.
பாட்டுப் பாடிக் கொண்டே அபிநயத்துடன் ஆடும்போது,
செய்யும் முறைமை நான்கு வகைப்படும்.
கையும், கருத்தும், மிடறும், சரீரமும் என்பவை அவை.
'அவைதாம் கையே கருத்தே மிடறே சாரீரமென்று,
எய்த முன்பமைந்த இவையென மொழிப'

இவை நான்கனுள், 
'கைவழி நயனம் செல்ல' என்றதனால் கையின் தொழிலையும், 
'கண்வழி மனமும் செல்ல' என்றதனால் கருத்தின் தொழிலையும், 
'மழலையின் இயன்ற பாடல்' என்பதனால் மிடற்றின் தொழிலையும், 
'ஆடும்' என்றதனால் சரீரத்தின் தொழிலையும்,
நுட்பமாய்க் கம்பன் வெளிப்படுத்துகின்றான்.
நாட்டியத்துக்கு அவசியமான பாடலை, 
'மழலையின் இயன்ற பாடல்' என்ற தொடராலும்,
நரம்பு வாத்திய, தோல் வாத்திய அவசியத்தை,
'தைவரு மகரவீணை தண்ணுமை' என்ற தொடராலும்,
இம்மூன்றும் நடனமும் லயத்தினால் ஒன்றுபடுதலை, 
'தழுவி..' என்ற சொல்லினாலும், 
ஆடும் பெண்ணின் அங்கலட்சணத்தின் அவசியத்தை,
'ஐய நுண்ணிடையர்' என்ற சொற்களாலும்,
அரங்கின் அவசியத்தை,
'ஆடக அரங்கு' என்னும் வார்த்தைகளாலும் சுட்டி, 
நாட்டிய சாஸ்திர அடிப்படை முழுவதையும்,
இப்பாடலில் கம்பன் எடுத்துக் காட்டுகிறான். 
மனத்தின்வழி கண் செல்வதே இயற்கை.
இங்கு 'கண் வழி மனமும் செல்ல' என்று குறித்ததால்,
ஆடும் பெண்ணின் பயிற்சி மிகுதியையும் எடுத்துக் காட்டி,
நடனக்கலையின் அவசியப் பண்பான முற்பயிற்சியையும்,
கம்பன் குறிப்பால் விளக்கி நிற்பது இரசிக்கத்தக்கது.
இப்பாடலில் வரும்,
'நெய் திறல் நரம்பின்' எனும் தொடருக்கு,
தேனொழுக்குப்போல் திரண்ட வடிவமான,
யாழ் நரம்பின் இசை என்பது பொருள்.
நெய் எனும் சொல்லுக்கு, தேன் என்பதும் பொருளாம்.
'நெய்க்கண்ணிற்றா அல்' எனும் கலித்தொகைப் பாடலில்,
இப்பொருள் காணலாம்.
அன்றியும்,
அசைத்து வாசிப்பதற்கு வசதியாக,
வாத்திய நரம்புகளில் நெய்யிடப்படுதல் இயல்பு.
அங்ஙனம் இடப்பட்ட நெய்,
திரண்டு கிடக்கின்ற யாழ் நரம்பின் இசை என,
இத்தொடருக்குப் பொருள் கொள்ளினும் பொருந்தும்.
இங்ஙனமாய், ஒரே பாடலில்,
நடனக்கலை பற்றிய முக்கிய அம்சங்கள் அனைத்தையும்,
கம்பன் உள்ளடக்கியிருப்பது எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
🎀 🎀 🎀
தான் செய்த இராம காவியத்தில்,
கதைப்போக்கு, பாத்திர அமைப்பு, கவிதை நுட்பம், 
காவியச்சுவை, தத்துவம், அரசியல், சமூகக்கோட்பாடு என,
பல விடயங்களையும் இடையிடை வரையறுக்கும் கம்பன்,
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் பற்றியும்,
பல செய்திகளைத் தந்து நிற்கின்றான்.
மேற் சொன்னவை அவற்றுக்கான 'ஒரு சோற்றுப் பதங்கள்'.
அகன்று ஆராயத் தலைபடுவார்க்கு,
கம்ப காவியம்,
செய்திகளை அள்ளித்தரப்போவது திண்ணம்.
இங்ஙனம்,
பல்துறை பற்றிய செய்திகளையும்,
நுட்பமாய் அள்ளித் தந்ததாற்தான்,
பாரதி,
தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கு விளக்கமாய்,
கம்பன் பிறப்பினை எடுத்துக் காட்டுகின்றான் போலும்.
'கல்வி சிறந்த தமிழ்நாடு, புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு'
பாரதியின் கவிதைவரிகள்,
கம்பனாற்றலை உணர்த்தி நிற்கின்றதன்றோ? 
🎀 🎀 🎀
(முற்றும்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்