'நெஞ்சிருக்கும் வரைக்கும்' - பகுதி 5: 'சீனி மாமா' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-

ங்களுக்கு இக்கட்டுரை சம்பந்தமாய் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்.
முக்கியமான அச்செய்தி உங்கள் மனதைப் பாதிக்கக்கூடும் என்பதால்,
இக்கட்டுரையின் நிறைவில் அச்செய்தியைச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.
🌑 🌑 🌑
இம்முறை உங்களுக்குச் சீனி மாமாவைப் பற்றிச் சொல்லப் போகிறேன்.
எனது அம்மா குடும்பத்தில் நான்கு பெண்களும், ஐந்து ஆண்களுமாக ஒன்பது உருப்படிகள்.
பெண்களுக்குள் என் அம்மாதான் மூத்தவர்.
அம்மாவிற்கு அடுத்ததுக்கு அடுத்ததாகப் பிறந்த தம்பிதான் சீனி மாமா.
படிப்புக் குறைவு, உத்தியோகமின்மை, குடிகாரப்பட்டம் என,
மாமாவின் 'மைனஸ் பொயின்றுகள்' அதிகம். 
நிறைந்த அன்புள்ளம் மட்டும்தான் அவரது ஒரே 'பிளஸ் பொயின்ற்'.
🌑 🌑 🌑
ஒரு காலத்து யாழ்ப்பாணத்தின் உறவுகளுக்கிடையிலான நெருக்கம்,
இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
என்றைக்கு ஆளுக்கொரு திசையாய், 
ஊர்விட்டு ஊரும் நாடுவிட்டு நாடுமாய் செல்லத் தலைப்பட்டோமோ,
அன்றைக்கே எங்களின் உறவு நெருக்கமெல்லாம் ஒடியே போய்விட்டது.
அதனால்த்தானோ என்னவோ அனுபவமிக்க நம் பெரியவர்கள்,
சூழ இருத்தல் சுற்றத்திற்கு அழகு என்று சொன்னார்கள் போலும்.
🌑 🌑 🌑  
உறவு நெருக்கத்திற்கு சீனி மாமா ஓர் அடையாளம்.
பலகாலம் கல்யாணம் கட்டாமல் இருந்தபடியால் மாமாவுக்கு நாங்கள்தான் குழந்தைகள்.
எங்களின் அம்மா தனது சகோதரர்களுக்குத் தமக்கையாய் இல்லாமல் தாயாய் வாழ்ந்தவர்.
அதனாலோ என்னவோ சீனி மாமாவுக்கு மற்றை மருமக்களைவிட,
எங்கள்மேல் தனிப்பிரியம், எங்களை உயிராய் நேசிப்பார்.
🌑 🌑 🌑
புசல்லாவையில் நாங்கள் இருந்த வீடு ஓர் சிறிய பள்ளத்தாக்கிற்குள் இருந்தது.
'மெயின் றோட்டிலிருந்து' பல படிகள் கீழிறங்கித்தான் வீட்டிற்கு வர வேண்டும்.
அது, நான் தத்தித்தவழ்ந்து நடந்து கொண்டிருந்த பருவம்.
ஏதோ காரணத்திற்காய் ஒருமுறை சீனி மாமா  புசல்லாவை வந்திருந்தார்.
அவர் அங்கு வந்துநின்றபோது வேலைக்காரனின் கவனயீனத்தால்,
குழந்தையாக இருந்த நான் அப்படிகளில் உருண்டு வந்து கீழே விழுந்தேன்.
அன்று மாமா பட்டபாட்டை அறிந்தால்,
இத்தனை அன்பா? என்று  நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
குழந்தையாய் இருந்த உனக்கு மாமா பட்ட துன்பம் எப்படித் தெரியும்?
என்னை மடக்கிவிட்டதாய் உங்களில் சிலருக்கு மகிழ்ச்சி.
உங்களின் கேள்வி நியாயமானது, பதில் சொல்லுகிறேன்.
🌑 🌑 🌑
வேலையில்லாமல் பெரும்பாலும் ஊர் சுற்றித்திரிந்தவர் சீனி மாமா.
அவர் நல்ல முஸ்பாத்திக்காரன்.
அவர் ஒருவிதமாய் மூக்கைச் சுழித்துச் சிரிக்கும் பாணியில்,
பழைய நகைச்சுவை நடிகர் 'டனால்' தங்கவேலுவின் சாயல் இருக்கும்.
படிக்காத அவரது ஆழமின்மை அவர் பேச்சிலும் வெளிப்படும்.
அவரின் அலட்டல் பேச்சுக்கு உதாரணமாய் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
🌑 🌑 🌑
மாமாவுக்கு மிகப் பிந்தி கல்யாணம் நிச்சயமானது.
அப்போது அவர் கிட்டத்தட்ட நடுவயதை எட்டிக் கொண்டிருந்தார்.
கல்யாணம் நிச்சயமானதும் மாமா காட்டிய பரபரப்பை எப்படிச் சொல்ல?
கண்டறியாதவன் பெண்டிலைக் கண்ட கதைதான்.
ஒவ்வொருவருக்கென்று ஒவ்வொருவரை இறைவன் படைத்து வைத்திருக்கின்றான் என்பது,
எவ்வளவு உண்மை? மாமாவுக்கு ஏற்ற மாமி வந்து சேர்ந்தார்.
மாமாவின் கூத்து ஒருபுறம் என்றால், முதிர் கன்னியான மாமியின் கூத்து  இன்னொரு புறம்.
🌑 🌑 🌑
பேப்பர்களில் படித்தவற்றையும் வானொலியில் கேட்டவற்றையும் வைத்து,
உலகச் செய்திகள் அனைத்தும் தனக்குத் தெரியும் எனக் காட்டுவதற்காக,
மாமி எந்நேரமும் பேசிக்கொண்டேயிருப்பார்.- அதில்  அவருக்கு ஒரு சுகம்.
புளி மாங்காய் தின்றவர் போல, வாயை ஊறி ஊறியும், ஒருவிதமாகச் சுழித்துச் சுழித்தும்,
அவர் பேசும் பாங்கு சகிக்கமுடியாத வினோதமாய் இருக்கும்.
அமெரிக்க அரசியலிலிருந்து எங்களது ஐயனார் கோயில் புதினங்கள்வரை,
'அப்டேற்' செய்துகொண்டேயிருப்பார்.
🌑 🌑 🌑
மாமாவின் அலட்டல் பற்றிச் சொல்லத்தொடங்கிவிட்டு வேறெங்கோ வந்துவிட்டேன்.
விட்ட அந்த விஷயத்தைத் தொடர்கிறேன்.
மாமாவின் கல்யாணத்திற்காகக் கூறைச்சேலை எடுக்க ஒரு உறவுக்கூட்டம் கிளம்பியது
சிறுவனாய் இருந்தபடியால் நானும் அக்கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.
அன்று சேலைக்கடைக்காரன் மாமாவால் பட்ட துன்பத்தை எப்படிச் சொல்ல?
உள்ளே போனதுமே, 'என்ன நிறச்சேலை வேண்டும்?' என்று பெண்களைப் பார்த்து அவன் கேட்க,
அவர்கள் பதில் சொல்வதற்கு முன்பாக மாமா முந்திக்கொண்டு,
'வெங்காயக் கலரில் சேலை வேண்டும்' என்றார்.
🌑 🌑 🌑
கடைக்காரனுக்கு, இவர் மாப்பிள்ளையா? மாப்பிள்ளையின் தந்தையா? என்று சந்தேகம்.
ஒருமாதிரி முறைத்துக் கொண்டு வெங்காயக் கலர் சேலைகளை அடுக்கத் தொடங்கினான்.
அவன் வைத்த அனைத்துச் சேலைகளையும் நிராகரித்தார் மாமா.
கூட வந்த உறவுப்  பெண்களுமே சலித்துப் போனார்கள்.
கடைசியில் மாமாவின் அட்டூழியத்தைச் சகிக்க முடியாத கடைக்காரன்.
'உங்களுக்கு என்ன கலரில் சேலை வேண்டும்? தெளிவாய்ச் சொல்லுங்கோ ஐயா' என்றான்.
மாமா அவனை அருகில் அழைத்துச் சற்றுக் குரலைத் தாழ்த்தி,
'உனக்கு வெங்காயம் தெரியுமோ வெங்காயம்' என்று கேட்டார்.
இரண்டாவது வெங்காயம் மாமாவின் குசும்பு.
கடைக்காரன் மாமாவைப் பார்த்த பார்வையில் நீதானே அது என்ற பதில் இருந்தது.
அதை வெளிக்காட்டாமல், 'ஓம் தெரியும் ஐயா,'  என்றான் அவன்.
'வெங்காயத்தை உரித்துப் பாத்திருக்கிறியோ?' இது மாமாவின் அடுத்த கேள்வி.
இந்தச் சனியன் தொலைந்தால் போதும் என்ற நினைப்பில்,
'உரித்த வெங்காயக் கலர் வேண்டுமோ' என்றான் அவன்.
'ஏன் அவசரப்படுகிறாய்? நான் சொல்லுறத பொறுமையாய்க் கேள்.
வெங்காயத்தை உரித்து உரித்துக் கொண்டுபோக,
கடைசித் துண்டிலே ஒரு கலர் வருமே அந்தக் கலரிலேதான் சீலை வேண்டும்'.
மாமா சொல்லக் கடைக்காரன் முறைத்த முறைப்பு இப்போதும் நினைவில் இருக்கிறது.
🌑 🌑 🌑
வயது போகப் போக மறதி கூடுகிறது.-புசல்லாவையில் குழந்தையான நான் விழுந்ததற்கு,
மாமா துடித்தவிபரம் உனக்கு எப்படித் தெரியும்? என்றல்லவா கேட்டீர்கள்.
அதற்குப் பதில் சொல்லத் தொடங்கி என்னென்னவோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
இனி விஷயத்திற்கு வந்துவிடுகிறேன், சீனி மாமா நன்றாகக் கள்ளுக் குடிப்பார்.
கையில் காசுகிடைத்தால் 'கூழ் காய்ச்சித்தாங்கோ அக்கா' என்று கேட்டு,
இறால், நண்டு, மீன், கிழங்கு எனப் பலவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து குவிப்பார்.
வெளியில் திட்டினாலும் அம்மாவுக்குச் சீனி மாமாவின் மேல் பெரிய அன்பு.
அவரின் வேண்டுதலுக்காய் பெரிய பானையில் கூழ் காச்சல் நடக்கும், அது பெரிய உற்சவம்.
மாமா நன்றாகக் கள்ளுக்குடித்துவிட்டு கூழ் குடிக்க வந்து உட்காருவார்.
🌑 🌑 🌑
வெறி ஏறிவிட்டால் மாமா நவரச நாயகன்தான். 
அவர் கூழ் குடிக்கும் பாணியைச் சகிப்பது மிகக்கடினம்.
மீன் தலையை அவர் உறிஞ்சுகிற உறிஞ்சில்,
அடுத்தவர் பிளாவில் இருக்கும் மீனும் அவரை நோக்கிப் பயணிக்கப்பார்க்கும்.
நண்டு, மீன், இறால் என்பவற்றை நறுக்நறுக்கென்று கடிப்பார்.
சப்பிய அவற்றின் மீதங்களை சுற்றிவரத் துப்பித்தள்ளி அதகளப்படுத்துவார்.
🌑 🌑 🌑
வெறி கொஞ்சம் உச்சத்திற்கு ஏறிவிட்டால் மூக்கு வழியவழிய அழத்தொடங்குவார்.
பார்க்கப்  பரிதாபமாக இருக்கும், அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும்.
'எட விசரா ஏன் இப்ப அழுகிற' என்று அம்மா கேட்டக வேண்டியதுதான்.
ஒவ்வொரு முறையும் மாமா இரண்டு காரணங்களைச்  சொல்லத் தவறமாட்டார
அவர் சொல்லும் முதல் காரணம்,  'சின்னத் தம்பலையெல்லோ செத்துப்போனான்' என்பது,
சின்னத் தம்பலை என்பவன் எங்கள் உறவுப் பையன், இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்து போனவன்.
கள்ளுவெறியில் அவனை நினைந்து தம்பலை ஏதோ நேற்றுத்தான் செத்தவன் போல,
மாமா விம்மிவிம்மி அழத் தொடங்கிவிடுவார், உறவெல்லாம் வெடித்துச் சிரிக்கும்.
🌑 🌑 🌑
வெறியில் அழுவதுக்கு மாமா சொல்லும் இரண்டாவது காரணம்.
'எங்கட ஜெயா அல்லோ படியால விழுந்திட்டான்' என்பதாயிருக்கும்.
இருபது வயது இளைஞனாக நான் பக்கத்தில் நிற்பேன்.
இரண்டு வயதில் நான் படியால் விழுந்ததைச் சொல்லி அவர் அழுவதைப் பார்க்க,
நான் விழுந்த அன்று அவர் எப்படித் துடிதுடித்திருப்பார் என்பது புரியும்.
அதனால்த்தான் சின்னவயதுச் சம்பவத்திற்கு மாமா துடிதுடித்தது பற்றி என்னால் சொல்லமுடிந்தது.
🌑 🌑 🌑
இக்கட்டுரையின் தொடக்கத்தில் முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றேன் அல்லவா?
மாமாவும் மாமியும் கடந்த இரண்டு மாத இடைவெளியில் இறந்து போனதுதான் அச்செய்தி.
எங்கள்மேல் அவ்வளவு அன்பு காட்டிய மாமாவின் இறப்பை அறிந்து,
ஏனோ எனக்குப் பெரிய அளவில் கவலையோ கண்ணீரோ வரவில்லை, அது எனக்குப் பெரிய ஆச்சரியம். 
உறவுகளுக்கு இடையில் ஏற்படும் நீண்ட இடைவெளி உறவின் வலிமையைக் குறைக்கிறது போல.
வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பலவசதிகளைப் பெற்றுவிட்டதாய் நினைத்துக் கொண்டிருப்போர்,
புலம்பெயர் வாழ்வு ஏற்படுத்தியிருக்கும் இந்த ஒப்பற்ற உறவு இழப்புக்கள் பற்றி அறிவார்களா?
🌑 🌑 🌑
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்