'சிவனருட்செல்வி': பகுதி 01 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகம் சுழலுமாற்போல் தோன்ற,
சிவனருட்செல்வி கலங்கி நின்றாள்.
வாழ்க்கையில் எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாத நிலை அவளுக்கு.
தன் காதல்க் கணவன் வாளால் வயிறு கிழிக்கப்பட்டு,
இரத்த வெள்ளத்தில் கிடக்கும் காட்சியை எந்தப் பெண்தான் தாங்குவாள்.
சிவனருட்செல்வியின் உள்ளம் கதறி அழுதது.
ஆனாலும் வாய்விட்டுக் கதறி அழமுடியாத அந்தரநிலையில் இருந்தாள் அவள்.
காரணம், இப்போதுதான் ஆலாலசுந்தரரின் வருகை,
உறவினர்களால் அவளுக்கு உரைக்கப்பட்டது.
மனைவாசலில் கலிக்காமரைக் காணவெனச் சுந்தரர் காத்து நிற்கிறாராம்.
உறவினர்கள் சொல்ல ஏது செய்வதென அறியாமல்,
'சிவசிவ' என்று உச்சியில் கரங்கூப்பி,
தன்னை நிதானப்படுத்த முயல்கிறாள் சிவனருட்செல்வி.
உள்ளே சடலமாகக் கணவர். 
வெளியே அவரைக் காணக் காத்திருக்கும் சுந்தரர்.
'தள்ளவொணாவிருந்து வர' முதலில் குழம்பியவள்,
பின்னர் ஏது செய்வதென நிதானித்து முடிவு செய்கிறாள். 
 
🦚 🦚 🦚
 
'ஆனாலும் கலிக்காமருக்கு இந்த அவசரம் கூடாது.'
உறவினர்களின் ரகசியப் பேச்சு சிவனருட்செல்வியின் காதில் விழுகிறது.
உண்மையில் கணவர் அவசரப்பட்டுத்தான் விட்டாரோ?
அவள் மனதிலும் பெருங்குழப்பம்.
வயிறு கிழிந்து குடல் தொங்க இறந்து கிடக்கும் கணவரை,
மீண்டும் ஒருதரம் அச்சத்தோடு பார்க்கிறாள் சிவனருட்செல்வி.
உள்ளத்தில் ஒருபுறம் பெருங்கவலை. 
மறுபுறம் கணவனாரின் இலட்சியப்பிடிப்பை நினைந்து பெருமிதம்.
மனச்சோர்வுடன் அவள் கண்மூட,
இன்று காலை நடந்த சம்பவங்கள்,
அவள் மனதில் மெல்ல மெல்ல விரிகின்றன.
 
🦚 🦚 🦚
 
கணவனார்க்கு அப்படியொரு கோபம் வந்து அவள் பார்த்ததேயில்லை.
பரம்பரைப் படைத்தளபதிகளாய் இயங்கும் குடிமரபில் வந்தவராயினும்,
திருமணம் செய்தநாள் முதல் அவரில் போர்க்குணம் வெளிப்பட்டு அவள் பார்த்ததேயில்லை.
அவளுக்குத் தெரிந்த கலிக்காமர்,
சிவனடியார்களையும் சிவனையும் போற்றும் ஒருவராய்த்தான் இருந்தார்.
அன்பு, கருணை, அருள் என்பவையே,
இதுநாள் வரை அவரிடம் அவள் கண்ட குணங்களாய் இருந்தன.
இன்றுதான் இத்தனை கோபத்துடன் அவரை அவள் முதல் முதலாய்க் காண்கிறாள்.
 
🦚 🦚 🦚
 
அங்குமிங்குமாய் உலவுவதும், 
இரத்தம் வடியும் வண்ணம் உதடுகளைக் கடிப்பதுமாய்,
முகம் சிவந்து கண்களில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தார் கலிக்காமர்.
அவர் அடியார்களைப் போற்றுவதையும் அன்பு செய்வதையுமே,
இதுவரை கண்டிருந்த அவளுக்கு, கணவனாரின் இக்கோலம் புதுக்கோலமாய் இருந்தது.
அதனால் அவருக்கு அருகில் செல்லவே அஞ்சித் தூரத்தில் நின்றிருந்த தூணோடு,
சேலைத்தலைப்பால் உடல் மூடி ஒதுங்கி நின்றாள் சிவனருட்செல்வி.
 
🦚 🦚 🦚
 
கலிக்காமரைச் சூழ நின்ற உறவுப்பெரியவர்கள்,
அவரை ஆறுதல் செய்ய முயன்று கொண்டிருந்தனர்.
'கலிக்காமா! இது என்ன இப்படியொரு கோபம்? 
உன்னை நாங்கள் இதுவரை இப்படிப் பார்த்ததேயில்லையே,
என்ன நடந்துவிட்டது என்று இப்படிக் கொதித்து நிற்கிறாய்?'
அவர்கள் கேட்டு வாய்மூடும் முன்,
கலிக்காமரின் வாயிலிருந்து வார்த்தைகள் சூடாய் வெளிவருகின்றன.
'இன்னும் என்ன நடக்க வேண்டும்? நடந்ததெல்லாம் போதாதா?
நான் கடையவன், அதனால்த்தான் நடந்ததை அறிந்த பின்னும்,
இன்னும் உயிரோடு இருக்கிறேன்.'
ஆத்திரத்தில் வார்த்தைகள் தடுமாறப் பேசுகிறார் கலிக்காமர்.
 
🦚 🦚 🦚
 
'அப்பனே! சற்றுப் பொறு. அப்படி என்னதான் நடந்தது?
நம் அரசரை யாரும் இழிவு செய்துவிட்டார்களா? அல்லது,
உன்னை எவரேனும் அவமரியாதை செய்தார்களா?
விளையாத சீற்றம் இன்று உன்னில் விளைந்ததன் காரணம் என்ன?'
உறவுப் பெரியார் ஒருவர் சற்றுத் தூரத்தள்ளி நின்று, குரல் உயர்த்திக் கேட்கிறார்.
 
🦚 🦚 🦚
 
'பெரியப்பா! நான் சொல்லப்போவதைக் கேட்டால்,
நீங்களே கொதித்துப் போவீர்கள்.
நீங்கள் இப்போது சொன்னவைகள் நடந்திருந்தால்,
வாய் பேசாமல் எப்போதோ என் வாள் பேசியிருக்கும்.
அதற்கும் வழியில்லாமல்த்தான் ஆத்திரப்பட்டு நிற்கிறேன்.'
கலிக்காமர் உரைக்க, மீண்டும் அப்பெரியவர் வாய் திறக்கிறார்.
'கலிக்காமா! கொஞ்சம் பொறு! 
நடந்த எதையும் கூறாமல் இப்படிக் கொதித்தால்,
நாங்கள் என்னவென்று நினைவது? முதலில் நடந்ததைக் கூறு.'
பெரியவர் உத்தரவிட கலிக்காமர் பேசத் தொடங்குகிறார்.
 
🦚 🦚 🦚
 
'என்ன திமிர் இருக்க வேண்டும் அந்தச் சுந்தரனுக்கு?
அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் .......,' 
பேசுவதை இடை நிறுத்திப்  பற்களை நெரிக்கின்றார் கலிக்காமர்.
'யாரைச் சொல்கிறாய்? தம்பிரான் தோழன் என்று சொல்லப்படும்,
நமது சுந்தரமூர்த்தியையா?' பெரியவர் மீண்டும் கேட்க,
'ஆமாம் அந்த மூடனைத்தான் சொல்கிறேன், தோழனாம் தோழன்,
யாருக்கு என்ன பட்டம் கொடுப்பது என்று தெரியாமல்,
ஊரார் பட்டம் கொடுத்து விடுகிறார்கள்.
சிவனின் பெருமை உணராத இவன் எப்படி சிவனுக்குத் தோழனாக முடியும்?'
கலிக்காமர் வார்த்தைகளில் சூடேற, மீண்டும் பெரியவர் குறுக்கிடுகிறார்.
 
🦚 🦚 🦚
 
(சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்