'சிவனருட்செல்வி': பகுதி 02 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

திரம் ஏறிய கண்களோடு கொதித்து நின்ற கலிக்காமரை நோக்கி,
அப்பெரியவர் கனிந்த குரலில் பேசத் தொடங்குகிறார்.
'அப்பனே! அப்படி என்னதான் செய்துவிட்டார் அந்தச் சுந்தரர்?
அதனை முதலில் நாம் அறியும்படி சொல்லு. 'பெரியவர் உத்தரவிட,'
'சொல்கிறேன்! சொல்கிறேன்! சொல்லாமல் என்ன செய்ய?
அவன் செய்த அநியாயத்தை என் வாயால் வேறு சொல்லவேண்டியிருக்கிறது.'
மீண்டும் கலிக்காமர் கொதிக்கத் தொடங்க,
'போதும்! போதும்! உன் ஆத்திரத்தை நிறுத்தி நடந்ததை உரை',
இம்முறை கிழவரின் குரலில் சிறிதாய்க் கட்டளைத்தொனி தெரிகிறது.
 
💎 💎 💎
 
'பரம்பரை பரம்பரையாய் நாங்கள் வழிபட்டு வரும் எங்கள் சிவனை,
தன் தேவைக்காகக் காதல் தூதனுப்பினானாம் அந்தச் சுந்தரன்.
ஆதியும் அந்தமுமில்லா அப்பரம்பொருளை காதலுக்காய்த் தூதனுப்ப,
அவனுக்கு என்ன துணிவு இருந்திருக்க வேண்டும்.
நினைக்கவே என் நெஞ்சம் பதறுகிறது.
திருவாரூரில் நடந்த இந்தக் கூத்தை உலகம் எல்லாம் பேசுகிறது.
உங்களுக்கு இது தெரியவில்லையா?'
கலிக்காமரின் ஒவ்வொரு வார்த்தைகளும்,
நெருப்புத் துண்டங்களாய் கொதித்து விழுகின்றன.
 
💎 💎 💎
 
'ஓகோ அதுதான் உன் ஆத்திரத்தின் காரணமா?
இதற்குப் போய் நீ ஏன் இவ்வளவு கொதித்து நிற்கிறாய்?
சுந்தரர் ஒன்றும் சிவனாரைக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கவில்லையே?
உன் சிவனார், அவராக ஒப்பித்தானே தூது சென்றிருக்கிறார்.
அப்படியிருக்க, தனித்து சுந்தரனை நீ கோபிப்பதிலே என்ன நியாயம் இருக்கிறது?'
கிழவர் பேசி முடிக்கும் முன் துள்ளித் திரும்புகிறார் கலிக்காமர்.
 
💎 💎 💎
 
'பெரியப்பா! மூப்பின் காரணமாக உங்களுக்குமா மூளை மழுங்கிவிட்டது?'
சிவனார்மேல் கொண்ட காதல் தந்த சினத்தால்,
கலிக்காமரின் வார்த்தைகள் மூத்தவரிடம் வரம்பு மீறுகின்றன.
'அடியார்க்காக எதையும் செய்யும் அருளாளன் அன்றோ எங்கள் சிவன்.'
'வேண்டுவார்க்கு வேண்டுவன ஈயும்' வள்ளலான அவன்,
அடியார் கேட்டால் அனைத்தும் செய்வான் என்பது எவர்க்குத்தான் தெரியாது?
அவர் செய்வாரென்பது ஒருபுறம் கிடக்கட்டும்,
'இந்த அறிவீனன் சுந்தரனுக்கு,
இறைவனிடம் எதைத்தான் கேட்பது என்பதில் ஒரு வரன்முறை இல்லையா?
காதலுக்குத் தூதனுப்பும் அளவிலா அவனுக்கு எங்கள் கண்ணுதல் தாழ்ந்து தெரிந்தார்?
பேரருளாளனின் பெருமை தெரியாத முட்டாள் அவன்!
திருவாரூர் மண்ணில் கால் தோய அம்மகாதேவன் நடந்ததைக் கேட்ட அளவில்,
என் உயிர் பிரியாமலிருக்கிறது, நானும் கொடியன்தான்.
அச்சுந்தரனை மட்டும் நான் நேரில் கண்டால்,'
வார்த்தைகள் தடைப்பட மீண்டும் பற்களைக் கடிக்கிறார் கலிக்காமர்.
 
💎 💎 💎
 
தனது கணவனாரின் சிவபக்தியை நன்கு அறிந்திருந்த சிவனருட்செல்விக்கு,
அவரின் கோபத்தின் காரணம் இப்போது புரிகிறது.
சிவன்மீதும் சிவனடியார்மீதும் அவர் கொண்ட அன்பு சாதாரணமானதா என்ன?
முதல் முதல் அவரைச் சந்தித்த அன்றே,
அவரின் மனநிலையை அறிந்தவளல்லவா அவள்.
அச்சந்திப்பு சாதாரண சூழ்நிலையிலா நடந்தது?
இப்போது நினைத்தாலும் அன்றைய சம்பவங்கள்,
சிவனருட்செல்விக்குச் சிலிர்ப்பைத் தந்தன.
தங்கள் திருமணத்தன்று  நடந்த அச்சம்பவங்கள்,
சிவனருட்செல்வியின் மனதில் மீளத் துளிர்க்கின்றன. 
 
💎 💎 💎
 
உயர்ந்தோரும் உற்றாரும் கூடியிருந்த சபை.
எங்கு பார்த்தாலும் அச்சபையில் மங்களம் நிறைந்திருந்தது.
ஆங்காங்கு குனிந்து நின்ற குலை தள்ளிய வாழைமரங்கள்,
கும்பிட்டு நிற்கும் மெய்யடியார்களை நினைவூட்டின.
காற்றில் அசையும் மகரதோரணங்களில் இருந்து ஏற்படும் சத்தத்தில்,
சிவன் நாமம் ஒலிக்குமாப்போல் ஒரு பிரம்மை.
பற்றறக் கற்றவரின் நிறையை உணர்த்துமாப்போல்,
ஆங்காங்கு பூரண கும்பங்கள் பொன்னிறத்தில் ஒளிர்விட்டன.
பந்தர் முழுவதும் மங்கள இசை நிரம்பி வழிந்தது.
 
💎 💎 💎
 
ஊர்க்கதைபேசி பூத்தொடுக்கும் பெண்கள் குழாம் ஒருபுறம்.
வார்த்தைகளை அளவுபடுத்தி பரம்பொருளின் பெருமை பேசும் சிவனடியார் கூட்டம் மறுபுறம்.
அங்குமிங்கும் அழகுற வலம்வரும் மங்கையர்பால் மனதைப் பறிகொடுத்து,
பூக்களை மொய்க்கும் வண்டுகளாய்ப் புறம் புறம் திரியும் இளையோர்கூட்டம் இன்னொரு புறம்.
பரவிக் கிடந்த பட்சணத்தட்டங்களில் தமக்குப் பிடித்தவற்றை எடுத்தும்,
பிடிக்காதவற்றைச் சிதைத்தும் விளையாடும் சிறுவர்குழாம் வேறொருபுறமுமாக,
அந்த மங்களச் சபை மாண்புற்றிருந்தது.
 
💎 💎 💎
 
உள் மனையில் தோழியரின் கிண்டல் பேச்சுக்கிடையில்,
கன்னம் சிவந்து நின்றாள் சிவனருட்செல்வி.
ஆம். அன்றுதான் மானக்கஞ்சாறனாரின் ஒரே செல்ல மகளான,
சிவனருட்செல்விக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
 
💎 💎 💎
 
வேளாளர் குலத்தைச் சேர்ந்த மானக்கஞ்சாறனார்,
அரசர்க்கு போர்த்தளபதிகளாய் இருக்கும் மரபில் உதித்தவர்.
சிவபக்தரான அவருக்கு அருந்ததியை ஒத்த மனைவி வாய்த்திருந்தார்.
அத்தம்பதியரிடம், புறத்தில் பொருட்செல்வமும் அகத்தில் அருட்செல்வமும்,
தேவைக்கதிகமாகவே நிறைந்திருந்தது. 
சிவனடியார்களைப் பேணி எப்போதும் நிறைவுற்றிருந்த மானக்கஞ்சாறனார்,
திருமணமாகி பலகாலம் குழந்தைகள் இல்லாதிருந்ததால்,
மகவில்லா வருத்தம் மனதைத் தாக்கச் சிறிது கவலையுற்றிருந்தார்.
தாங்கள் அக்காரணத்தால் தவித்தது பற்றி,
அன்னை பலதரம் சிவனருட்செல்விக்குச் சொல்லியிருக்கிறார்.
 
💎 💎 💎
 
அக்குறை நீங்க மானக்கஞ்சாறனார்,
வாழ்க்கைத்துணையுடன் ஒன்றித்து சிவனை நோக்கி விரதங்கள் இருக்க,
சிவனருளால் அழகுநிறைப் பெண் குழந்தை ஒன்று அவர் தமக்கு வந்துதித்தது.
'அவ் விரதங்களின் பயனாய்ப் பிறந்தவள் தான் நீ! அதனால்த்தான்,
சிவனருளால் எமக்குக் கிடைத்த உனக்குச் சிவனருட்செல்வி எனத் தந்தை பெயரிட்டார்'. 
அன்னை அடிக்கடி சொல்லும் அவ்வார்த்தைகள்,
சிவனருட்செல்வியின் மனதில் வந்து போயின.
தூர இருந்த தந்தையை வாஞ்சையுடன் பார்க்கிறாள் சிவனருட்செல்வி.
 
💎 💎 💎
 
முதிர்ந்த அடியார்கள் மத்தியில் மானக்கஞ்சாறனார் அமர்ந்திருந்தார்.
அவரின் அகத்தின் நிறைவு, முகத்தில் பொழிந்தது.
மகளின் திருமணம் நினைந்து மகிழ்ச்சியும்,
மகள் புகுந்தவீடு செல்லப்போவதை நினைந்து கவலையுமாக,
அவரது மனம் மாறி, மாறி உணர்ச்சிவயப்பட்டுக் கொண்டிருந்தது.
நேற்றுத்தான் சிவனருட்செல்வி பிறந்தாற்போல் இருக்கிறது.
இன்று அவளுக்குத் திருமணமா?
நினைத்ததும் அவர் கடைக்கண்களில் நீர் கோர்த்தது.
 
💎 💎 💎
 
அரசர்க்குப் படைத்தலைமை வகிக்கும் தகுதி பெற்றிருந்த,
வேளாளர் மரபில் தோன்றிய தனது தந்தை,
தன்னை ஓர் மலர்போலப் போற்றி வளர்த்தமையை,
நினைத்துப் பார்க்கிறாள் சிவனருட்செல்வி.
தந்தையைப் பொறுத்தவரை அவர்க்குத் தான் மகள் அல்லள்.
சிவனின் அருள் என்பதே அவர் கருத்தாய் இருந்தது.
தனது துடுக்கத்தனத்திற்காகத் தாயார் சிறிய அளவில் கண்டித்தால்கூட,
தந்தையார் கடுங்கோபம் கொள்வதை அவளது மனம் நினைத்துப் பார்க்கிறது.
வாராது வந்த மாமணியாய் தந்தையார் தன்னைப் போற்றி வளர்த்தமையை நினைக்க,
சிவனருட்செல்வியின் கண்களிலும் வற்றாத நீரூற்று.
💎 💎 💎
(சிவனருட்செல்வி தொடர்ந்து வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்