'சிவனருட்செல்வி': பகுதி 08 -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளம் சோர்ந்து போகிறது சுந்தரருக்கு,
அரண்மனையிலிருந்து தன்னை வரவேற்க வந்த கூட்டத்தில்,
கலிக்காமரைக் காணாததால் மீண்டும் சுந்தரர் மனதில் கலக்கம்.
கலிக்காமர் தன்னை வரவேற்க ஏன் வரவில்லை எனும் கேள்வி குழப்ப,
தயங்கி நின்ற சுந்தரரை கலிக்காமரின் உறவுக்கூட்டம், 
இன்முகம் காட்டி வரவேற்கிறது. 
சுந்தரருக்குப் பாதபூசை செய்து, இனிய வார்த்தைகள் கூறி,
உரிய மரியாதைகளுடன் அவரை அரண்மனையுள் அழைத்துச் செல்கிறார்கள்.
எங்கே கலிக்காமர்?, எங்கே கலிக்காமர்? எனச் சுந்தரரின் கண்கள் தேடியபடி நிற்க,
அவரது கால்கள் மட்டும் கலிக்காமரின் உறவுகளோடு முன் செல்கின்றன.

🌊 🌊 🌊

அரண்மனையின் நடுக்கூடம்.
அங்கே கம்பீரமாக இன்முகம்காட்டி நிற்கிறாள் சிவனருட்செல்வி.
அவளது தோற்றமே இவள்தான் கலிக்காமரின் மனைவி என்பதை உரைக்க,
அவளை நோக்கிச் சுந்தரர் முகமலர்ந்து கரங்கூப்புகிறார்.
சுந்தரரின் பாதங்களில் வீழ்ந்து ஆசி பெற்ற சிவனருட்செல்வி,
எழுந்து வணங்கி நிற்க,
'அம்மணி உங்களையேனும் காணக்கிடைத்ததில் மகிழ்வடைகிறேன்.
கலிக்காமர் என்மேல் கோபம் கொண்டிருப்பதை அறிவேன்.
நான் செய்தது தவறு என்பதை உணர்ந்ததால்,
கலிக்காமர் காலில் விழுந்த மன்னிப்புக்கோரியேனும்,
அவரைச் சமாதானம் செய்யவே வந்திருக்கிறேன்.
கலிக்காமரைக் காணக் கிடைக்காத ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு வருடமாய்க் கழிவதுபோல் உணருகிறேன்.
அன்னையே! கலிக்காமர் எங்கே?
என்னை வரவேற்க அவர் ஏன் வரவில்லை?
அவர் என்மேல் இன்னும் கோபமாய்த்தான் இருக்கிறாரா?
அவரைச் சூலைநோய் வாட்டுவதாய் அறிந்தேன்.
அதனால்த்தான் அவர் வாராமல் உள்ளே இருக்கிறாரா?
ஐயோ! எல்லாம் என்னால்த்தான் விளைந்தது.
தாயே! அவரைச் சமாதானம் செய்தற்காய்,
நான் அவரை உடனே காண வழிசெய்ய வேண்டும்.'

சுந்தரர் பேசப்பேச சிவனருட்செல்வியின் மனம்,
அவரின் பணிவைக் கண்டு நெகிழ்கிறது.

🌊 🌊 🌊

மனம் நெகிழ்ந்தாலும் கணவரின் கொள்கையை விட்டுக் கொடுக்க விருப்பமின்றி,
மனதைத் தேற்றிக்கொண்டு பேசத் தொடங்குகிறாள் சிவனருட்செல்வி.
'சுவாமி! தாங்கள் எழுந்தருளியதால் எங்கள் இல்லம் பெருமைபெற்றது.
நாம் அனைவரும் தன்னியர்களானோம்.
தலைவர் நலமாகத்தான் இருக்கிறார், அவருக்கு ஏதும் இல்லை.
வேலைகள் முடித்து இப்பொழுதுதான் கண்ணயர்ந்தார்.
அதனால்த்தான் அவரை எழுப்ப மனம் இல்லாமல்,
அவரின் சார்பாகத் தங்களை அழைக்க நாங்களே வந்திருக்கிறோம்.
நீங்கள் மனம் வருந்தாதீர்கள்.'

அவள் பேசி முடிக்க, சுந்தரரின் மனம் மேலும் கலங்கிற்று.

🌊 🌊 🌊

தெளிவுற்றாற்போல் சிவனருட்செல்வி பேசினாலும்,
அவளின் உள்மனச் சோகத்தைச் சுந்தரரால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் சிவனடியார்களைப் போற்றி நிற்கும் கலிக்காமர்,
ஆயிரம் தான் இருந்தாலும் வீடுதேடி வந்த தன்னை,
வரவேற்க வராமல் இருக்கமாட்டார் என்பதையும் ஊகிக்கிறார் சுந்தரர்.
அப்படியானால் ஏன் கலிக்காமர் வெளியே வரவில்லை?
கேள்விக்கு விடையாகக் கற்பனைகள் பல பெருக பதறுகிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

'அம்மணி! தாங்கள் சொல்வது உண்மையல்ல என்பது மட்டும் தெரிகிறது.
ஏதோ ஒரு நோக்கத்திற்காகத்தான் தாங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்.
கலிக்காமரைக் காணமுடியாத ஒவ்வொரு நிமிடமும்,
என்மனம் அக்கினி உலையாய்த் தகிக்கிறது.
கலிக்காமருக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதை,
நீங்கள் சொல்லாவிட்டாலும்கூட நான் உணருகிறேன்.
தாயே! இதற்குமேலும் என்னைச் சோதிக்கவேண்டாம்.
தயைகூர்ந்து உண்மை உரையுங்கள்.' 
என்று கூறியபடி,
கண்ணீர் வலிய தலைமேல் கைகூப்பி வணங்குகிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

அதற்குமேலும் தன் மன உணர்வுகளை,
சிவனருட்செல்வியால் அடக்கமுடியவில்லை.
சேலைத்தலைப்பால் தன் வாயை மூடிக்கொண்டு,
விம்மி அழத்தொடங்குகிறாள் அவள்.
அவள் அழுகைகண்டு உறவெல்லாம் கதறி அழுகிறது.
அக்கூட்டத்தில் மூத்தவராய் இருந்த ஒருவர் மெல்ல முன்வந்து 
கலிக்காமரின் உடலைக் கிடத்தி இருக்கும் இடத்திற்கு, 
சுந்தரரை அழைத்துச் செல்கிறார்.
கலிக்காமரின் உயிரற்ற உடலைக் கண்ட சுந்தரர் கதறி அழத் தொடங்கிறார்.

🌊 🌊 🌊

வன்தொண்டர் மென்தொண்டராய் அழுது நிற்கும் காட்சி,
அனைவரையும் கலங்கச் செய்கிறது.
'ஐயோ! என்னாலன்றோ இப்பாவம் விளைந்தது.
சிவன்மேல் எவ்வளவு அன்பு இருந்திருந்தால்,
கலிக்காமர் இப்படி உயிரை விட்டிருப்பார்.
அவர் உயிரை விடவில்லை, அவரை நானன்றோ கொன்றுவிட்டேன்.
இனி ஒருநிமிடமேனும் நான் உயிர் வாழ்ந்தால்,
அதை இந்தப் பூமித்தாய் பொறுக்கமாட்டாள்,
இதோ நானும் கலிக்காமருடனேயே சென்றுவிடுகிறேன்.'
என்று கூறியபடி,
அருகிலிருந்த உடைவாள் ஒன்றை எடுத்து,
தனது கழுத்தை அறுக்க முனைகிறார் சுந்தரர்.

🌊 🌊 🌊

அந்த நிமிடமே, அனைவரும் ஆச்சரியப்படத்தக்கதாய்,
சிவனாரின் பெருங்கருணையினால் கலிக்காமர் உயிர்பெற்று எழுகிறார்.
சுந்தரரதும் நின்றவர்களதும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்குகிறது.
உயிர்பெற்று எழுந்த கலிக்காமரின் காலில் விழுகிறார் சுந்தரர்.
தன் காலில் விழவந்த சுந்தரரின் காலில் விழுகிறார் கலிக்காமர்.
இருவரும் எழுந்து ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொள்கின்றனர்.
ஊர், உறவெல்லாம் அவர் இருவர்தம் உணர்வு நிலைகண்டு மகிழ்ந்து நிற்கிறது.

🌊 🌊 🌊

அவ்வுறவுக்கூடத்தின் பின்னால்,
ஓர் மூலையில் அசைவற்று நிற்கிறாள் சிவனருட்செல்வி.
அவள் முகத்தில் எந்தவித சலனமுமில்லை.
கணவனின் தியாகத்தைக் கண்ட அவள்,
அத்தியாகத்திற்கு இறைவன் பதிலிறுப்பான் என நம்பி இருந்ததனால்,
கணவன் உயிர்பெற்று எழுந்ததில் எந்தவித,
அதிர்வும் கொள்ளாமல் நிற்கிறாள்.
சுந்தரரையும் கலிக்காமரையுமே கொண்டாடிக் கொண்டிருந்தவர்கள்,
ஓர் ஓரத்தில் நின்ற சிவனருட்செல்வியைக் கவனிக்கவேயில்லை.
அவளும் அவர்கள்பற்றிய எண்ணம் ஏதுமின்றி அசையாது நிற்கிறாள்.

🌊 🌊 🌊

இறைவனது சோதனையும் அருள்பாலிப்பும் மற்றவர்களுக்குப் புதிதாய் இருக்கலாம்.
சிவனருட்செல்விக்கு அவை புதிதல்லவே.
திருமண நாளன்று அலங்கரிக்கப்பட்டிருந்த தன் கூந்தலை தந்தை அறுத்துக் கொடுக்க,
அச்செயலைத் தாங்கி நின்றவள் அல்லவா அவள்.
அதனால் அன்று அவளுக்குள் ஏற்பட்ட அசையாத மனஉறுதி,
அவளை ஒரு ஞானிபோல் ஆக்கியிருந்தது.

🌊 🌊 🌊

உறவுக்கூட்டம், இறைவனையும் சுந்தரரையும் கலிக்காமரையும் போற்றி நிற்க,
எந்த எதிர்பார்ப்புமின்றி தனித்து நிற்கிறாள் சிவனருட்செல்வி.
தந்தையும் கணவனும் சிவனடியாராய் உலகத்தாரால் போற்றப்படுவதற்காய்,
அவள் செய்த தியாகங்கள் சாதாரணமானவையா என்ன?
ஆனாலும் அத்தியாகங்களுக்காய் எவரிடமும் பாராட்டை எதிர்பாராது,
இருவினையொப்பு நிலை உற்றவள் போல,
அப்பெண்தெய்வம் தனித்து நிற்கிறது.
ஊரும் உறவும் கூடிக்களிக்க, 
அக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாமல்,
மோனமாய் வானம் பார்த்து நிற்கிறாள் சிவனருட்செல்வி.

🌊 🌊 🌊

 (சிவனருட்செல்வி நிறைவுற்றாள்)

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்