'முந்தியெமைக் காப்பதுவே முறை' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

லகழிக்கப் புறப்பட்ட ஓர் சிறிய 'வைரஸி'ன்
பலமழிக்கும் வகை அறியவேண்டும் நாம்- நிலமழிக்க
வந்ததுவாம் கிருமியதன் வாயதனுள் வீழாமல்
முந்தியெமைக் காப்பதுவே முறை.

காலை எழுந்தவுடன் கை, கால், முகம் கழுவி
மூலையிலே நூலோடு முடங்கிடுக - சாலையிலே
ஊர் சுற்றும் வேலையதை ஒதுக்கித்தான் வைத்திட்டால்
பார் மிரட்டும் நோயறுமாம் பார்!

காய்ச்சலது வந்தால் கடிதாக வைத்தியரை
பாய்ச்சலுடன் சென்றே நீர் பார்த்திடுக! - ஓச்சலிலா
வேலை மிகுதியிலும் விருப்போடு பணியாற்றி
ஊழதையும் தடுத்திடுவார் உணர்.

தும்மல், இருமல் தொடங்கிட்டால் உடனே நீர்
மும்மரமாய் வாய், நாசி மூடிடுக - தம்மனையில்
இருப்போர்க்கும் நோய்வருமாம் என்றதனால் நீவீரும்
வெறுப்பின்றி அதைச் செய்வீர் விரும்பி!

வீட்டால் வெளிக்கிட்டு வீதிதனில் போய்வந்தால்
தீட்டெனவே மனம் நினைந்து திரும்பியதும் - நாட்டமுடன்
கையதனை சோப்பாலே கழுவித் துடைத்ததன் பின்
பைய நுழைந்திடுவீர் பதிக்கு.

வெளிநாட்டு உறவென்று விருப்புடனே எவர் வரினும்
நலியாது வார்த்தைகளால் நயம் கூறி - தெளிவாக
முகம் மகிழ முகாமுக்குச் சென்று வர முன்மொழிந்து 
அகமகிழ ஏற்பதுவே அறம்.

மூன்றடிக்குத் தூரமாய் முன்னின்று அன்போடு 
நீண்ட உரையாடல் நிகழ்த்திடலாம் - வேண்டாது
அருகிருந்து பேசி அநியாய 'வைரஸை'
வருவிருந்தாய் ஆக்காதீர் வலிந்து!

வெள்ளைத் தோல் கண்டதுமே விருப்போடு வரவேற்கும்
பொல்லாத பழக்கத்தைப் போக்கிடுவீர் - வெல்லாத
நோய்க்கிருமி கொண்டிங்கு நுழைவராம் உம் உயிரை
மாய்க்க வழி காணாதீர் மகிழ்ந்து!

முகக் கவசம் போட்டதனால் முந்திவரும் கிருமிகளை
அகத்தினுளே நுழையாது அறுத்திடுக - சகத்தினிலே
மக்களது உயிர்பறிக்கும் மாண்பில்லாக் கிருமியினைத்
தக்கபடி வென்றிடுவீர் தனித்து!

அஞ்சாது ஆண்டவனின் அடியிணைகள் போற்றிடுக!
நெஞ்சார அவன் நாமம் நினைந்திடுக! - பஞ்சாக
வயிரசும் பறந்திடுமாம் வருவினைகள் நீங்கிடுமாம்
உயிரச்சம் ஒழிந்திடுமாம் உணர்!

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்