'பாரதியிடம் பயில்வோம்' -பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன்-

காகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தொடங்கியிருக்கிறது. அவரை, நினைப்பதற்கு இது, ஒரு காரணமாகவிருக்கும்.
அவர் தொடர்ந்து நினைக்கப்பட வேண்டிய ஆளுமை என்பதில் கருத்து முரண்பாடிருக்க முடியாது.
ஏன் அவர் தொடர்ந்தும் நினைக்கப்படவேண்டும்?
அவர் உன்னத கவி.
வாக்குக்கும் வாழ்வுக்கும் வேறுபாடு அற்றவர்.
தமிழின் நவீனத்துவ முன்னோடி.
விடுதலைக்கு மொழியால் உழைத்த போராளி.

இவை எல்லாமுமே, அவர் மீளமீளவும் நினைக்கப்படுவதற்கு - கொண்டாடப்படுவதற்கு காரணமாகின்றன.
எனினும், அவரை இன்றைய இலங்கை நினைவதற்கு, இவற்றை விடவும் முக்கிய காரணம் இருக்கிறதெனக் கருத முடியும்.
அது, சமுதாயத்தின் பன்மைத்துவத்தை அங்கீகரித்து, அனுசரித்து நிற்கும் அவர் மனப்பாங்கு எனச் சுட்டலாம்.
பன்மைத்துவத்தை நிராகரித்து, கண்மூடித்தனமாக ஒற்றைவாதத்துள் செல்லும் எங்கள் நாடு இந்தக் கவிஞனிடமிருந்து பாடம் படிக்காதா? என நினையத் தோன்றுகிறது.
பாரதியைத் தனியொரு மத எல்லைக்குள்ளே மட்டும் சிறைவைத்து விட முடியாது.

அவர் ஒரு சமரசர். 
பாரதியாழ்வார் என்று குறிப்பிடப்படுகின்ற அளவுக்கு வைணவர்கள் மத்தியில் முக்கியத்துவமுடையவராக அவர் பெயர் பெற்றுள்ளார். அவர் பாடிய கண்ணன் பாட்டு, தமிழுக்கு அழியாத வளம் தந்துகொண்டிருக்கிறது.
அத்தோடு சிவன் குறித்துப் பாடியுள்ள தோத்திரப்பாடல்களால் சைவர்கள் மத்தியில் பாரதியாருக்குப் பெரும்புகழ் உண்டு. 
மேலும், சக்திதாசன் என அறியப்படுபவர் அவர். 'யாதுமாகி நின்றாய் காளி' என்றபடி  'சக்தி சக்தி' எனக் கூத்திட்டவர்.
இந்தளவில் நின்றுவிடாமல், 'கணபதிராயன் அவனிரு காலைப் பணிந்திடுவோம்' என்றும், 'முருகா முருகா முருகா வருவாய் மயில் மீதினிலே' என்றும் பாடிப் பரவியவர்.
இவ்வாறு, அறுவகைச் சமயங்கள் எனப்படுகிற சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் ஆகிய சமயப்பிரிவுகள் எல்லாமே பாரதிக்கு உடன்பாடானவையே.

மேலே காட்டப்பெற்ற அறுவகைச்சமயப் பிரிவுகளை மட்டுந்தாம் பாரதி ஏற்றாரென்பதற்கில்லை. 
பாரத எல்லையின் வெளியே தோற்றங்கொண்டு பின் இந்தியாவை வந்தடைந்த மதப் பிரிவுகளான கிறிஸ்தவம், இஸ்லாம், ஆகியவற்றையும் உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார்,
'ஆத்தி சூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்,
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்,
முகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்,
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே யுணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே' 
இவற்றோடு பௌத்த மத ஸ்தாபகரான கௌதமபுத்தருடைய போதனைகளையும் பாரதி தமது படைப்புகளில் பல இடங்களிலும் தந்துள்ளார்.
இவ்வாறு, இந்தியச் சமயங்களையும் இந்தியாவை வந்தடைந்த சமயங்களையும் அவர் எவ்விதமான விரோத மனப்பான்மையுமில்லாமல் தழுவிப் பாடுகிறார்.
இக்கருத்துகளை அவதானிப்பதன் மூலம் ஒரு தனிப்பட்ட ஒற்றை வரையறைக்குள் அடக்கப்பட்டுவிட முடியாத, பன்முகத்தன்மை கொண்ட பாரதியாருடைய சமரச மனோபாவத்தை அறிந்துகொள்ள முடியும்.
தாம் எடுத்துக்கொண்ட ஒற்றைக் கொள்கையை மட்டுமே கண்மூடித்தனமாக முன்னிறுத்தும் இன்றைய இலங்கையின் கடும்போக்குவாதிகள் பாரதியாரிடம் பாடம் படிக்க மாட்டார்களா?
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்