'மங்கையராய் வந்து பிறப்பதற்கே' :பகுதி 2: 'சந்தனநங்கை' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧
   ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦

லகம் சுழன்று தன் தலையில் விழுந்தாற்போல் உணர்ந்து,
வருந்தினாள் சந்தனநங்கை.
விடிகாலையில் வந்த கனவின் பாதிப்பிலிருந்து,
இப்போதும் அவளால் மீண்டு வரமுடியவில்லை.
'சிவசிவா' கனவா அது? 
இப்போது நினைக்கவும் அவளது நெஞ்சு நடுங்கிற்று.
அக்கனவை மீள நினைக்கவும் விருப்பமில்லாமல்,
தனது மனப்பதிவிலிருந்து அதனை வெளியேற்றத் துடித்தாள் அவள்.
ஆனால் அக்கனவின் நினைவுகள் அவளை விட்டு அகல்வதாய்த் தெரியவில்லை.
 
🦩 🦩 🦩
 
இப்படி ஒரு கனவிற்குப் பிறகுதான்,
அவள் வாழ்க்கையில் மறக்கமுடியாத அந்தச் சோகமும் நிகழ்ந்தது.
அப்போது அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயதுதான் இருக்கும்.
தேசப்பற்று மிகுந்த அவளது தந்தையார் சோழ அரசனின் படையில்,
பரஞ்சோதியார் எனும் படைத்தளபதியின் கீழ் பணியாற்றி வந்தார்.
அது 'வாதாபிப்' போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம்.
தந்தையார் போருக்குப் புறப்பட்ட நிகழ்வு,
அவள் மனதில் மறையாமல் பதிந்திருக்கிறது.
தாயார் அவருக்கு வீரத்திலகம் இட்டு அனுப்பி வைத்ததும்,
ஒரே மகளான தன்னை தந்தையார் கட்டி அணைத்து முத்தமிட்டு விடைபெற்றதும்,
இன்றும் அவள் கண்களில் நிழலாடுகின்றன.
 
🦩 🦩 🦩
 
அன்றும் அப்படித்தான்.
விடியற்காலை நேரத்தில் அந்தக் கனவு வந்தது.
தந்தையாரை ஓர் கறுப்பு நிறம் கொண்ட உருவம்,
கட்டியிழுத்துச் செல்வதாயும்,
அதனைக் கண்டு கதறிய அவளது தாய்,
அந்த உருவத்தைப் பின்தொடர்ந்து ஓடுவதாயும் வந்த கனவினை,
நிஜம்போலவே உணர்ந்து அவள் அலறிய அலறலைக் கேட்டு,
அவளது தாய், பதறியடித்து ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.
'என்ன சந்தனநங்கை, ஏன் இந்த விடியல் நேரத்தில் இப்படி அலறுகிறாய்?
கனவு ஏதேனும் கண்டாயா?' என்று தாய் கேட்க,
தந்தை போர்க்களத்திற்குச் சென்றிருக்கும் இவ்வேளையில்,
தான் கண்ட இத் தீக்கனவைச் சொல்வது உசிதமல்ல என நினைந்து,
எதுவும் பேசாமல் விழித்தாள் சந்தனநங்கை.
 
🦩 🦩 🦩
 
'தோழியரோடு உச்சிவேளையில்,
புளியமரத்திற்குக் கீழே விளையாடாதே என்று சொன்னால் கேட்கிறாயா?
சரி, சரி அஞ்சாதே' எனக் கூறி அவளை அணைத்து முத்தமிட்ட பின்,
முந்தானையை ஈரப்படுத்தி அவளின் முகம் துடைத்து,
இறைமனையில் 'சம்புடத்தில்' இருந்த விபூதியை எடுத்து வந்து,
நெற்றியில் இட்டு மீண்டும் படுக்கவைத்தாள் தாய்.
 
🦩 🦩 🦩
 
பொழுது புலர்ந்த வேளையில் இல்லத்தின் கதவு பதற்றமாய் தட்டப்படுகிறது.
வெளியில் பலரும் ஒருமித்துப் பேசுகிற ஓசை.
சந்தனநங்கையின் தாய் அவசரமாய் ஓடிப்போய்க் கதவைத் திறக்க,
வாசலில் ஊரே கூடி நிற்கிறது.
ஓர் அரச ஒற்றன் எல்லோர்க்கும் முன்பாகச் சீருடையோடு நிற்கிறான்.
சந்தனநங்கையின் தாய் அவனைக் கண்டு பதறினாள். 
வந்த ஒற்றன் அவள் கண்களை நேரே பார்க்காமல் தவிர்க்க,
கூடி நின்ற பெண்களின் கண்களில் கண்ணீர்.
சந்தனநங்கையின் தாயைக் கண்டதும் தலையில் கைவைத்து,
ஓ....! என அரற்றத் தொடங்கினார்கள் அவர்கள்.
சந்தனநங்கையின் தாய்க்குச் சூழ்நிலையின் அவலம் ஓரளவு புரிந்தது.
 
🦩 🦩 🦩
 
அவளது சேலையைப் பற்றி நின்ற சிறுமியாகிய சந்தனநங்கை,
ஏதும் புரியாமல் விழித்தாள்.
தான் ஓர் போர்வீரனின் மனைவி என்பதை நிறுவி, 
தன் உணர்ச்சிகளை நிதானப்படுத்திய சந்தனநங்கையின் தாய்,
'ஒற்றரே! நிகழ்ந்தது எதுவானாலும் அச்சமின்றிக் கூறுங்கள்.' என,
ஒற்றனை நேர்ப்பார்வை பார்த்து உரைக்க,
சற்றுத் துணிவடைந்த அந்த ஒற்றன்,
'அன்னையே மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.
நேற்றைய போரிலே நமது தளபதி பரஞ்சோதியார் கவனிக்காத நேரத்தில்,
அவரை நோக்கி வந்த அம்பைத் தன் மார்பில் ஏற்று உயிர் துறந்தார் உங்கள் கணவர்.
இதுதான் செய்தி' அவன் சொல்லிமுடிக்க,
சந்தனநங்கையின் தாயின் கண்களில் கண்ணீர் அருவியாய்ப் பொங்கிற்று.
ஊர்ச் சிவன்கோயிலை நோக்கிய அவள், தலையில் கைகூப்பினாள்.
'சிவசிவ' என அவள் வாய் முணுமுணுத்தது.
அடுத்த நிமிடம் உயிரற்ற அவளது உடல் நிலத்தில் சரிய ஊரே ஓலமிட்டது.
தாயின் சேலையைப் பற்றி நின்ற குழந்தையான சந்தனநங்கை,
விழிகள் குத்திநிற்க விறைத்து நின்றாள்.
 
🦩 🦩 🦩
 
அத்தனையும் நேற்று நடந்தாற்போல் இருக்க,
சந்தனநங்கையின் கண்ணோரங்களில் மெல்லிய கசிவு.
தாயும் தந்தையும் இறந்து போகத் தனித்து நின்ற தன்னை,
போர் முடிந்து வந்த பரஞ்சோதியார் பொறுப்பேற்று,
தனது இல்லத்திற்கே அழைத்துச் சென்று,
சொந்தப் பிள்ளைபோல் தன்னை வளர்த்துவரும் நினைவுகள்,
அவள் எண்ணங்களில் மீண்டும் பதிவாகின்றன.
 
🦩 🦩 🦩
 
பரஞ்சோதியார் தம்பதியர்க்கு,
தான் வந்து ஆறாண்டுகளின் பின்னரே புதல்வன் பிறந்ததும்,
அவனுக்குச் சீராளன் எனப் பெயர்சூட்டி அவர்கள் மகிழ்ந்ததும்,
அந்தச் சீராளனை சொந்தத் தம்பிபோலவே தான் நேசித்து வளர்த்ததும்,
சந்தனநங்கையின் மனதில் படிய மீண்டும் அவள் பதற்றமுறுகிறாள்.
 
🦩 🦩 🦩
 
விடியற்காலையில் வந்த தீக்கனவே,
சந்தனநங்கையின் பதற்றத்திற்குக் காரணமாய் இருந்தது.
இதென்ன? விடியற்காலையில் ஓர் தீக்கனவு.
தந்தையின் இழப்பின் அன்று தான் கண்டது போலவே,
ஒரு கரிய உருவம் சீராளனைக் கட்டி இழுத்துச் செல்கிறது.
முன்பு தான் கண்ட கனவில் ஒருசிறு மாற்றம்.
அந்த உருவத்திடம் பிள்ளையை ஒப்படைத்து,
பரஞ்சோதியாரும் மனைவி திருவெண்காட்டு நங்கையும்,
அசையாது நிற்கிறார்கள்.
அவர்கள் அருகில் அழுத கண்ணீரோடு தான்.
வந்த கறுத்த உருவம் 'நீ உன் கடமையைச் செய்தாயா?' என,
சந்தனநங்கையைப் பார்த்து உரத்துக் கேட்கிறது.
'செய்தேன் செய்தேன்' என அவ் உருவத்திற்குப் பதிலுரைத்து,
சந்தனநங்கையின் வாய் முணுமுணுக்கிறது.
திடீரெனக் கனவில் ஒரு மாற்றம்.
 
🦩 🦩 🦩
 
வந்த இருள்வடிவம் ஒளிவடிவமாக மாறி,
பரஞ்சோதியார், திருவெண்காட்டு  நங்கை, சீராளன் ஆகியோரோடு,
தன்னையும் உள் இழுக்கிறது.
இதுதான் அவள் இன்று கண்ட கனவு.
அக்கனவின் நினைவால் அவள் வாடி நிற்க,
காலைப்பூசைக்கான கோயில் மணியோசை கேட்கிறது.
 
🦩 🦩 🦩
 
(அடுத்த வாரமும் சந்தனநங்கை வருவாள்)
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்