'மங்கையராய் வந்து பிறப்பதற்கே' :பகுதி 3: 'சந்தனநங்கை' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளம் உருகி நின்ற சந்தனநங்கையின் எண்ணங்களை,
இல்லக் கதவம் தட்டும் ஓசை கலைத்தது.
ஐயன் இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டாரா?
ஆச்சரியத்துடன் சமையல் கூடத்திலிருந்தபடி எட்டிப் பார்க்கிறாள் சந்தனநங்கை.
சேலைத் தலைப்பை இழுத்து முழுமையாய்த் தன்னை மூடிக்கொண்டு,
இல்லத்தலைவி திருவெண்காட்டு நங்கை,
மெல்லக் கதவைத் திறப்பது தெரிகிறது.
திடீரென அவ் அன்னை முகத்தில் மகிழ்ச்சிக் கோடுகள்.
என்னாயிற்று?
ஐயன் அடியாரோடு வந்துவிட்டாரா? மனத்துள் கேள்வி எழ,
சந்தனநங்கை ஓடிவந்து,
திருவெண்காட்டு நங்கையின் முதுகுப்பக்கமாய் நின்று எட்டிப் பார்க்கிறாள்.
 
🦚 🦚 🦚
 
வீட்டு முற்றத்தில் வைரவ சந்நியாசிக் கோலத்தில் ஒரு சிவனடியார்.
'ஓம் சிவோஹம், ஓம் சிவோஹம்' என அவரது வாய் முணுமுணுக்கிறது.
கதவு திறந்த ஓசை கேட்டுக் கண் திறந்த அவர்,
'பரஞ்சோதியார் இல்லத்தில் இருக்கிறாரா?' என,
கம்பீரமான குரலில் அழுத்திக் கேட்கிறார்.
அடியாரின் அகோரத் தோற்றமும் கம்பீரக் குரலும் மிரட்ட,
அதிர்ந்து போன திருவெண்காட்டு நங்கை,
ஈனஸ்வரத்தில் நடுங்கும் குரலால்,
'இப்போதுதான் அடியார்களைத் தேடி வெளிச் சென்றிருக்கிறார்.
சுவாமிகள் உள்ளே வந்து அமர வேண்டும்.
ஒரே நொடியில் என் பிராணநாதரை அழைப்பிக்கிறேன்.'
திருவெண்காட்டு நங்கை சொல்ல,
வந்த அடியார் வானம் பார்க்கிறார்.
 
🦚 🦚 🦚
 
அடியார் முகத்தில் சிறிது குழப்பம்.
'ஆண்கள் இல்லா வீட்டில் நான் வந்து அமர்வது முறையன்று.
அருகிருக்கும் ஆலய மரநிழலில் அமர்ந்திருப்பேன்.
விரும்பினால் பரஞ்சோதியைத் தேடி வரச்சொல்!'
உத்தரவாய் வார்த்தைகள் உதிர்த்து 'ஓம் நமசிவாய' என்றபடி,
வைரவர் சந்நியாசி சென்று மறைகிறார்.
 
🦚 🦚 🦚
 
திருவெண்காட்டு நங்கையின் முகத்தில் பதற்றம்.
அடியார் எவரும் வாராவிட்டால் ஐயன் மனநிலை என்னாகும் என்பதறிந்த அவள்,
வந்த அடியாரும் சென்று விடுவாரோ? என்று பதறுகிறாள்.
'சந்தனநங்கை, சந்தனநங்கை இங்கு ஓடி வா, 
வந்த அடியார் வேற்றிடம் செல்வதற்கு முன்பாக,
ஓடிப்போய்ச் செய்தி உரைத்து நம் ஐயனை அழைத்து வா, சீக்கிரம் போ!'
அன்னை உத்தரவிட, உடைதிருத்திக் கொண்ட சந்தனநங்கை,
காற்றாய்ப் பறந்து வீட்டு வாசலில் வர, 
வாடிய முகத்தோடு பரஞ்சோதியார் உள் நுழைகிறார்.
தலைவரைக் கண்டதும் வந்த வேகத்தில் பின்வாங்கி,
சமையல் கூடத்துள் புகுந்து கொள்கிறாள் சந்தனநங்கை.
 
🦚 🦚 🦚
 
'சிவனே இதென்ன சோதனை ஊர் முழுவதும் தேடியும்,
ஓர் அடியாரைக் கூடக் காணமுடியவில்லையே' என்று உரைத்தபடி,
பரஞ்சோதியார் திண்ணையில் உட்கார முற்பட,
தலைவர் வந்துவிட்ட செய்தியைச் சந்தனநங்கை மூலம் அறிந்த திருவெண்காட்டு நங்கை,
அவரின் முன் முகமலர்ச்சியோடு ஓடி வருகிறாள்.
'சுவாமி! கவலையை விடுங்கள்,
நீங்கள் அப்புறம் சென்ற மறுகணமே,
இங்கு ஒரு வைரவ சந்நியாசி  தங்களைத் தேடி வந்தார்.'
இல்லாளின் வார்த்தை காதில் விழும் முன் துள்ளி எழுகிறார் பரஞ்சோதியார்.
 
🦚 🦚 🦚
 
'என்னது, என்னது அடியார் வந்தாரா? ஆஹா நான் தன்யனானேன்.
சிவனடியாரை முறைப்படி உபசரித்தீர்களா?
அவர்க்குப் பாதபூஜை செய்தீர்களா?
அவர் உண்ண பானம் ஏதும் கொடுத்தீர்களா?
என் வருகையை எதிர்பார்க்காமல் உணவிட்டிருக்கலாமே?
பாவம் பசித்திருக்கப் போகிறார்.
எங்கே அவர்? உள்ளே ஓய்வெடுக்கிறாரா?'
பதற்றத்தோடு வார்த்தைகளை உதிர்க்கிறார் பரஞ்சோதியார்.
 
🦚 🦚 🦚
 
தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்குகிறாள் திருவெண்காட்டு நங்கை,
'சுவாமி அடியார் வீட்டில்  இல்லை.'
மனைவியின் வார்த்தை காதில் விழும்முன்,
பரஞ்சோதியார் கண்கள் சிவக்கின்றன.
'மூடப் பெண்ணே! இது தான் நீ என்னோடு இதுவரை வாழ்க்கை நடத்திய லட்சணமா? 
வந்த அடியாரை உபசரித்து உள் அழைத்து இருத்தியிருக்க வேண்டாமா?'
கோபத்தோடு அவர் வார்த்தைகள் சீற,
அவரது கோபங்கண்டு தடுமாறிய திருவெண்காட்டு நங்கையின் கண்களில்,
கண்ணீர் ததும்புகிறது.
கோபமாய் இருக்கும் கணவரை எதிர்த்துப் பேச அவள் தயங்கி நிற்க,
சந்தனநங்கை தன் வளர்ப்புத் தாயின் துயரம் கண்டு பொறுக்க முடியாமல்,
குறுக்கிட்டுத் தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்குகிறாள்.
 
🦚 🦚 🦚
 
'ஐயனே! அன்னையார் அடியாரை வருந்தித்தான் உள் அழைத்தார்,
ஆண்கள் இல்லா வீட்டினுள் நுழையமாட்டேன் எனக் கூறி அவர் சென்றுவிட்டார்.
இதில் அன்னையின் தவறு ஏதும் இல்லை.
தாங்கள் அஞ்சாதீர்கள்.
அருகிருக்கும் ஆலயமரநிழலில் அமர்ந்திருப்பதாய்ச் சொல்லித்தான் அடியார் சென்றிருக்கிறார்.
தாங்கள் உத்தரவிட்டால் ஐந்தே நிமிடத்தில்,
ஓடிச் சென்று நான் அவரை அழைத்து வந்துவிடுகிறேன்.'
சந்தனநங்கை உரைக்கப் பரஞ்சோதியாரின் கோபப் பார்வை அவள்மேல் பதிகிறது.
 
🦚 🦚 🦚
 
'நீ அவளினும் மேலானவள்.
நான் ஊரெல்லாம் அடியார்களைத் தேடித்திரிகிறேன்.
வந்த அடியாரை இல்லத்தில் இருத்தி வைக்க,
உங்கள் இருவர்க்கும் தெரியவில்லை.
நல்ல பண்பைக் கற்றிருக்கிறீர்கள்.
இந்த இலட்சணத்தில் உன்னை அனுப்பி அடியாரை அழைப்பிப்பதா?
அது நல்ல மரியாதையாகத்தான் இருக்கும்.
இல்லத் தலைவனாகிய நான் சென்று அழைக்காமல் உன்னை அனுப்பி வைத்தால்,
அவர் என்ன நினைப்பார்?
நீ விலகு! நானே சென்று அடியார் பாதம் பணிந்து அவரை இங்கு அழைத்து வருகிறேன்.
பொழுது மதியத்தைத் தாண்டிவிட்டது.
அடியார் பசித்திருப்பார்.
அவர் வந்தவுடன் உணவிட வேண்டும்.
அதற்கான ஆயத்தத்தையாவது ஒழுங்காகச் செய்யுங்கள்.' 
நங்கையர் இருவரும் தலைவரின் கோபவார்த்தைகளால் கண் கசிய,
அடியார்க்கு உணவிடும் ஆயத்தத்தை ஓடியோடிச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
 
🦚 🦚 🦚
 
(அடுத்த வாரமும் சந்தனநங்கை வருவாள்)
 
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்