'உண்மையும் உவமையும்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

யர்தெழுந்த பெரும் வனம். 
நாட்டினுள் புகுந்து, மக்களை வருத்தும் விலங்குகளைக் கொல்வதற்காக,
அதனுள், புதர் ஒன்றினுள் மறைந்து மன்னன் தசரதன் காத்திருக்கிறான்.
யானையொன்று நீர் அருந்துமாப் போற் சத்தம், அவன் காதில் விழுகிறது.
அது கேட்டு, வந்தது யானையே! எனும் முடிவோடு,
சத்தத்தைக் கொண்டு குறியமைத்துக் கணை தொடுக்கிறான் அவன்.
'சதக்' என்று அம்பு பாயும் சத்தம்.
சத்தத்தைத் தொடர்ந்து,
ஒரு யானையின்  பிளிறலை எதிர்பார்த்த தசரதனுக்கு அதிர்ச்சி.
பிளிறலுக்குப் பதிலாய், 'ஐயோ' என ஒரு மனிதக் குரல் கேட்டு அயர்கிறான் அவன்.
 
புக்குப் பெரு நீர் நுகரும் பொரு போதகம் என்று ஒலிமேல்
கைக் கண் கணை சென்றது அலால், கண்ணின் தெரியக் காணேன்
அக் கைக்கரியின் குரலே அன்று ஈது என்ன வெருவா
மக்கள் குரல் என்று அயர்வேன் மனம் நொந்து அவண் வந்தெனெனால்
 
🏹🌳🌳🌳
 
அதிர்ச்சியுடன் புதரைவிட்டு வெளிவந்த தசரதன்,
அம்புபட்டு நிலத்தில் வீழ்ந்து புரளும்,
ஒரு  இளைய முனிபுங்கவனைக் காண்கிறான்.
அக்காட்சியால் கலக்கமுற்ற அவன்,
அம்முனிவனின் அருகில் சென்று அவனடி பணிந்து,
'ஐய!நீ யாவன்? அந்தோ அருள்க!' என வினவ,
முனிபுங்கவன் மெல்லப் பதில் உரைக்கத் தொடங்குகிறான்.
'இரு கண்களும் இல்லாத் தாய் தந்தையர்க்கு மகன் யான்.
முனிவர்களான அவர்கள், நீர் வேட்கையால் வருந்த,
அவர்கள் தாகம் தீர்ப்பதற்காய், விரைந்து வந்து ஆற்றில் புனல் மொண்டேன்.
கடத்துள் நீர் புகும் சத்தத்தை யானை நீரருந்தும் சத்தமாய்த் தவறாய் நினைத்து,
விதி உந்த, நீ விட்ட அம்பால் வீழ்ந்தேன்.
இஃது உன் பிழையன்று வருந்தற்க!'
என்றான் அந்த ஞானத் தவப்புதல்வன்.
 
இரு கண்களும் இன்றிய தாய் தந்தைக்கும், ஈங்கு அவர்கள்
பருகும் புனல் கொண்டு அகல்வான் படர்ந்தேன் பழுது ஆயினதால்
இரு குன்றனைய புயத்தாய்! இபம் என்று உணராது எய்தாய்
உருகும் துயரம் தவிர் நீ ஊழின் செயல் ஈது என்றே.
 
🏹🌳🌳🌳
 
மீண்டும் தசரதனை நோக்கிய அம் முனி புதல்வன்,
'மன்னனே! எனக்காக நீ செய்யத்தக்க காரியம் ஒன்றுண்டு.
வேட்கையோடு இருக்கும் என் பொற்றோர்க்கு இந்நீரைக் கொண்டு கொடுத்து,
நும் திருவடி வணங்கி வானுற்றான் உம் மைந்தன் என, உரைப்பாய்' என வேண்டி மாள்கிறான்.
 
உண் நீர் வேட்கை மிகவே உயங்கும் எந்தைக்கு ஒரு நீ
தண்ணீர் கொடுபோய் அளித்து, என் சாவும் உரைத்து, உம்புதல்வன்
விண்மீது அடைவான் தொழுதான் எனவும், அவர்பால் விளம்பு என்று
எண் நீர்மையினான் விண்ணோர் எதிர் கொண்டிட ஏகினான்.
 
🏹🌳🌳🌳
 
அவனின் வேண்டுதலுக்கு உடன்பட்டு அம்முனிவனின் பெற்றோர்தம்  இருப்பிற்கு,
தசரதன் அந்நீரைக் கொண்டு செல்லத் தம் மைந்தனே வந்ததாய் எண்ணி,
மகிழ்கின்றனர் அப்பெற்றோர்.
அவர்தமக்கு மைந்தன் மாண்ட செய்தியை மெல்லக் கூறிய தசரதன்,
'தவறிழைத்தேன், பொருத்தருள்க!' என அவர் திருவடியைச் சரணடைகிறான்.
 
ஐயா! யான் ஓர் அரசன், அயோத்தி நகரத்து உள்ளேன்
மையார் களபம் துருவி மறைந்தே வதிந்தேன் இருள்வாய்
பொய்யா வாய்மைப் புதல்வன் புனல் மொண்டிடும் ஓதையின் மேல்
கையார் கணை சென்றது அல்லால் கண்ணின் தெரியக்காணேன்
 
வீட்டுண்டு அலறும் குரலால் வேழக்குரல் அன்று எனவே
ஓட்டத்து எதிரா நீ யார்? என, உற்ற எல்லாம் உரையா
வாட்டம் தரும் நெஞ்சினனாய் நின்றான் வணங்கா, வானோர்
ஈட்டம் எதிர் வந்திடவே இறந்து ஏகினன் விண்ணிடையே
 
அறுத்தாய் கணையால் எனவே, அடியேன் தன்னை, ஐயா!
கறுத்தே அருளாய், யானோ கண்ணின் கண்டேன் அல்லேன்
மறுத்தான் இல்லான் வனம் மொண்டிடும் ஓதையின் எய்தது அல்லால்
பொறுத்தே அருள்வாய்! என்னா, இருதாள் சென்னி புனைந்தேன்
 
🏹🌳🌳🌳
 
இறந்தான் மைந்தன் எனும் செய்தி கேட்ட அப்பெற்றோர்,
அப்போதுதான், தம் இரு கண்களும் போயினாற்போல் கதறி வீழ்ந்தனர்.
 
வீழ்ந்தார், அயர்ந்தார்,புரண்டார், விழி போயிற்று இன்று என்றார்
ஆழ்ந்தார் துன்பக்கடலுள் ஐயா! ஐயா! என்றார்
போழ்ந்தாய் நெஞ்சை என்றார், பொன்னாடு அதனில் போய் நீ
வாழ்ந்தே இருப்பத் தரியேம், வந்தேம்! வந்தேம்! இனியே
 
தொடர்ந்து தாமும் உயிர்விடத் தலைப்பட்ட அவர்கள்,
தசரதனை நோக்கி,
'செய்த தவறுணர்ந்து எம்மிடமே நீ சரண் புகுந்தாய்.
ஆதலால், நின் மேல் கடிய சாபம் தரோம்.
ஆனாலும் ஒன்று.
என்றோ ஒரு நாள் எம்மைப் போல் நீயும் மகப்பிரிந்து,
புத்திர சோகத்தால் உயிர் விடுதல் திண்ணம்.'
என்று சாபம் உரைத்துப் பொன்னாடு போயினர்.
 
 'தாவாது ஒளிரும் குடையாய்! தவறு இங்கு இது நின் சரணம்
காவாய் என்றாய், அதனால் கடிய சாபம் கருதேம்
ஏவா மகவைப் பிரிந்து, இன்று எம்போல் இடர் உற்றனை நீ
போவாய் அகல் வான்' என்னா, பொன் நாட்டிடை போயினரால்'
 
🏹🌳🌳🌳
 
தேவியர் மூவரைத் திருமணம் செய்த பின்பும்,
மகப்பேறு இன்றி வருந்தியிருந்த தசரதனுக்கு, 
இச்சாப வார்த்தை, மகிழ்வைத் தந்ததென்கிறான் கம்பன்.
'புத்திர சாபத்தால் இறப்பாய்!' என,
முனிதம்பதியர் அளித்த சாபம் நிறைவேற வேண்டின்,
புதல்வன் பிறத்தல் திண்ணமன்றோ?
இதுவே தசரதன் மகிழ்ச்சிக்குக் காரணமாம்.
 
சிந்தை தளர்வுற்று அயர்தல் சிறிதும் இலனாய் இன்சொல்
மைந்தன் உளன் என்றதனால், மகிழ்வோடு இவன் வந்தனெனால்
அந்த முனி சொற்றமையின், அண்ணல் வனம் ஏகுதலும் 
எந்தம் உயிர் வீகுதலும் இறையும் தவறா என்றான்
 
🏹🌳🌳🌳
 
கால ஓட்டத்தில் வசிட்டன் ஆலோசனைப்படி,
கலைக்கோட்டு முனிவனின் தலைமையில்,
'புத்ரகாமேஷ்டி' யாகம் நடந்து அதன் பயனாய்ப் புதல்வர்கள் பிறக்க,
மூத்தவனாம் கரிய செம்மல் இராமன் மீது தன் உயிர் பதித்து, 
தசரதன் வாழும் நாளில் மூவுலகையும் புதிதாய்ச் சமைப்பேன் என,
முனிந்து எழுந்த முனிவனாம் விசுவாமித்திரன்,
திடீரெனத் தசரதன் அரண்மனைக்கு வந்து சேர்கிறான்.
முனிவன் வருகையால், மனமுவந்து, அடிபணிந்து,
'என்னால் ஆவதென்ன?' என வினவி நிற்கிறான் தசரதன்.
 
🏹🌳🌳🌳
 
முனிவனிடம் இன்சொல்லை எதிர்பார்த்த தசரதன் செவியில்,
கூற்றாய்ப் புகுந்தது முனிவர் கூற்று.
பேசத் தொடங்குகிறார் விசுவாமித்திரர்.
'நான் வனத்துள் இயற்றும் வேள்விக்கு, அரக்கர் இடையூறு இயற்றுகிறார்.
அதனைக் காக்க நின் கரிய நிறப்புதல்வனான இராமனைத் தருவாய்!'
இங்ஙனமாய் முனிவர் வேண்டத் தளர்கிறான் தசரதன்.
 
தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
     இடையூறா, தவஞ் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம, வெகுளி என
     நிருதர் இடை விலக்கா வண்ணம்
செருமுகத்து காத்தி! என, நின் சிறுவர்
     நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி! என, உயிர் இரக்கும்
     கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்.
 
🏹🌳🌳🌳
 
தான் உயிர் பதித்திருந்த இராமனை 'வேள்வி காக்க, கானகம் அனுப்புக!' என,
முனிவன் வேண்டி நிற்க, அயர்கிறான் தசரதன்.
'இராமனைத் தருக!' எனும் முனிவனின் அம்மொழி மார்பில் வேல் பாய்ந்த பெரும் புண்ணில்,
கனல் நுழைந்தமையை ஒத்திருந்தது  என்கிறான் கம்பன்.
 
எண்ணிலா அருந்தவத்தோன் இயல்பிய சொல் 
மருமத்தின் எறிவேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால் 
எனச் செவியில் புகுதலோடும்......
 
🏹🌳🌳🌳
 
முனிதம்பதியர் சாபமிட்ட பழைய சம்பவம் தசரதனின்  மனதில் உதிக்கிறது.
மருள்கிறான் அவன்.
முன்பு அவர் சாபமொழி மகிழ்வைத் தந்ததெனினும்
இராமன் பிறந்தபின்பு, அச்சாபம் பலித்து விடுமோ? எனும் பயம்,
அடி மனதில் பதிந்து தசரதனை வருத்தியிருந்தமையை மறைமுகமாய்ச் சுட்டி,
பாடலைத் தொடர்கிறான் கம்பன்.
 
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த 
ஆர் உயிர் நின்று ஊசலாட.....
 
🏹🌳🌳🌳
 
முனிவனின் வேண்டுதலால், தசரதன் உற்ற வருத்தத்தை விளக்கம் செய்ய முனைந்த கம்பனுக்கு,
ஒப்பிலா ஓர் உவமை வாய்க்கிறது.
பாடலை முடிக்கிறான்.
 
கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான், 
கடுந்துயரம் கால வேலான்
 
🏹🌳🌳🌳
 
இங்கு,
கம்பன் கையாண்ட உவமை புதுமையானது.
இயல்பாகவே குருடனாய்ப் பிறந்த ஒருவனுக்கு காட்சியில்லா அந்நிலைமை துயர்தரினும்,
பிறப்பிலேயே காட்சியின் அருமை தெரியாததால் அத்துன்பம் கடுமையானதன்றாம்.
கண் இருந்த ஒருவனோ அஃது இழப்பின் காட்சியின் அருமை முன்; தெரிந்ததால்,
அவன் அடையும் துன்பம் முன்னையவனிலும் மிக மிக அதிகமாம்.
 
🏹🌳🌳🌳
 
இவ்;விரு நிலையை விடத் துன்பமான ஓர் அந்தக நிலையைக் கம்பன் இங்கு சுட்டுகிறான்.
இயற்கையில் கண்ணில்லாமல் இருந்த ஒருவன் அபூர்வமாய்க் காட்சி கிட்ட,
அதனால் எல்லையற்று மகிழ்ந்திருக்கும் வேளையில் மீண்டும் பார்வை பறிக்கப்படுமானால்,
அந்நிலை தரும் வருத்தத்திற்கு எல்லையுண்டோ?
அத்தகையவனின் நிலைமையை ஒத்தது தசரதனின் துன்பம் என்கிறான் கம்பன்.
 
🏹🌳🌳🌳
 
குழந்தைப் பேறின்றி இருந்த தசரதன் அப்பேறு கிடைத்து,
பின் அப்பேற்றை இழக்கும் நிலைமையுற அதனால் அவனடையும் துன்பத்தை,
மேற்சொன்ன உவமையால் விளக்குகிறான் அவன்.
 
கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான்
 
கம்பன் கவிச்சக்கரவர்த்தியல்லவா? தசரதன் துன்பத்தை வெளிப்படுத்தும்,
இவ் உவமையில் உண்மையையும் அமைத்து அற்புதம் செய்கிறான்.
தசரதன் வாழ்வில் இளமையில் நிகழ்ந்த முன் சொன்ன சம்பவத்தை,
இவ் உவமை வரிகளோடு உண்மை நிலையாகவும் பொருத்திக் காட்டுகிறான்.
கண்ணில்லாத அம்முனிவன் தசரதன் செயலால்,
பெற்ற மைந்தனை இழந்தபோது உற்ற துன்பத்தை,
இப்போது தசரதன் படுகிறான் எனும் உண்மையையும்,
அவ் உவமை வரி வெளிப்படுத்துகின்றது.
கண்ணிலான் - கண்ணில்லாத அம்முனிவன்
பெற்று இழந்தான் என - பெற்ற மகனை இழந்ததைப் போல
உழந்தான் - தசரதன் வருந்தினான் 
எனப் பொருள் கொள்ள,
உவமை வரிகள் உண்மையை உணர்த்தும்  வரிகளாகி,
வரலாற்றையும் உணர்த்தி நிற்கின்றன. 
இங்ஙனமாய் கம்பன் பாடிய உவமை,
உண்மையையும் வெளிப்படுத்திக் கற்றோர் நெஞ்சத்தைக் களிக்கச் செய்கிறது.
 
🏹🌳🌳🌳
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்