'அன்புமிகு சகோதரர் அவர்கட்கு' -கம்பவாரிதி-

நடிகர் சிவகுமார்,                                                          05.05.2020
சென்னை.

ன்புமிகு சகோதரர் அவர்கட்கு,
வணக்கம். 
நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
நீண்ட நாட்களின் பின் கடிதம் வரைகிறேன்.
தங்கள் இல்லத்தில் நிகழ இருந்த சந்திப்பை 'கொரோனா' தடுத்துவிட்டது.
நேற்று தற்செயலாய் ஜெயா தொலைக்காட்சியில், 
தங்களின் நேர்காணலைக் காண நேர்ந்தது.
வியந்து போனேன்!
என் உணர்வுகளை விபரிக்க வார்த்தைகளைத் தேட வேண்டி இருக்கிறது.
சுருங்கச் சொன்னால்,
அற்புதம்! அற்புதம்! அற்புதம்!
ஒரு நல்ல புத்தகத்தைப் படித்த திருப்தியைத் தந்தீர்கள்.
நிகழ்ச்சி முடிந்த பிறகும் அதிலிருந்து வெளியே வர அதிக நேரம் பிடித்தது.

உங்களது எளிமையும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நான் முன்னறிந்த செய்திகள்தான்.
ஆனாலும் நேற்றைய நேர்காணலில் அவைபற்றிய புதிய பரிமாணத்தைப்பெறமுடிந்தது.
உங்களது தாயாரின் பெருமையை என் சொல்ல?
நேற்றைய இரவில் அவரது பாதங்களைப் பலதரம் வணங்கினேன்.
அவர் வாழ்க்கையில்த்தான் எத்தனை சோதனைகள்.
அவற்றைக் கடந்து உங்களை இவ்வளவு அற்புதமாய்ச் செதுக்கிய,
அத்தாயின் ஆற்றலை என்னென்பது?

இதுநாள் வரை நீங்கள்தான் பெருமையோடு என் மனதில் பதிந்திருந்தீர்கள்.
நேற்றைய நேர்காணலின் பின் உங்கள் தாயார் என் மனச்சிகரத்திலேயே ஏறி அமர்ந்து கொண்டார்.
இவ்வளவு வளர்ந்த பிறகும் சிறிதும் பொய்மையின்றி உங்கள் வாழ்க்கையை நிதர்சனமாய் விபரித்த விதம் வியப்பினை ஏற்படுத்தியது.
நீங்கள் நினைத்திருந்தால் வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்ததாய் பொய்மை பேசியிருக்கலாம். 
ஆனால், எந்தவித மறைப்பும் இன்றி ஒருநேர அரிசிச் சோற்றுக்காய் ஏங்கிய வாழ்க்கையை,
நீங்கள் விபரித்ததில் முழுமையான சத்தியதரிசனத்தைக் கண்டு கலங்கினேன்.
சினிமா நடிகர், ஓவியர், இலக்கியவாதி, என்பவற்றைக்கடந்து 
உங்கள் நேர்காணலில் மானுடம் வென்று நின்றது.
அதைவிடப் பெருமை வேறென்ன இருக்கிறது?
அறம், அன்பு, வறுமை, வாழ்வு, உறவு, ஒழுக்கம், மனிதம், நேர்மை என 
அந்தக் சொற்ப நேரத்தில் அனைத்தையும் அற்புதமாய் வெளிப்படுத்தினீர்கள்.
உங்களைச் சந்திக்க முடியாமற் போன வருத்தத்தை,
நேற்றைய நேர்காணல் ஓரளவு தீர்த்தது.
காலம் இடந்தந்தால் விரைவில் நேரில் சந்திப்பேன்.
உங்கள் ஆசி என்னை வாழவைக்கும் 
அதுநோக்கிப் பணிகிறேன்.
இல்லத்தார்க்கு என் அன்பும் வாழ்த்தும். 

'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'
அன்பன் 
இலங்கை ஜெயராஜ்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்