'நீளத்தான் புகழ் வளர்த்து நிமிர்ந்து நின்றான்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

புகழ் பெற்ற மகாராஜா நிறுவனத்தின் தலைவரும் எமது கம்பன் கழகத்தின் ஆதரவாளருமான ஆர். இராஜமகேந்திரன் அவர்களின் மறைவையொட்டி கம்பவாரிதி அவர்கள் எழுதிய அஞ்சலிக்கவிதை
 
லகமது போற்றுகிற தமிழ்த்தாய் தன்னின்
ஒப்பற்ற பெரும் புதல்வன் ஓய்ந்து போனான்.
திலகமென ஈழத்துத் தமிழர்க்கெல்லாம்
திகழ்ந்த பெரும் அறிவாளன் வீழ்ந்து போனான்
நலமிகுந்த இலங்கைத் தாய் உலகோர் முன்னே
நற்புகழைத் தேடிடவே வழிகள் செய்த
வளம் மிகுந்த பேராளன் பலரும் வாட
வையமதைத் துறந்தே வான் காணப் போனான்.
 
ஈழத்துத் தமிழர்களின் 'சக்தி' யாக 
ஏற்றமுடன் தலைநகராம் கொழும்பில் வாழ்ந்து
நீளத்தான் புகழ் வளர்த்து நிமிர்ந்து நின்றான்
நெடிதாக இனப்பெருமை வளர்த்து நின்றான். 
காலத்திற்கேற்ற பல கடமை செய்து 
கண்ணியமாய் பல இனமும் பணிந்து போற்ற
சாலத்தான் தனிமரத்து விருட்சமாக 
சார்பின்றி அனைவர்க்கும் நிழலே செய்தான்.
 
தமிழர்க்கு இந்நாடு தரத்தைத் தந்து
தாழ்வில்லா வாழ்வு தர மறுக்கும் நாளில்
அமிழ்தொத்த தன் அறிவால் ஆற்றல் காட்டி 
அனைவரையும் தன் அடியில் பணியச் செய்தான்.
திமிரில்லா நற்பண்பால் தேசம் ஈர்த்து
தேற்றமுடன் அனைவரையும் போற்றி நின்ற
நிமிர்வுற்ற பெருமனிதன் நிழலாய்ப் போனான்.
நெஞ்சமெலாம் நெருப்பாக, நெகிழ்ந்து நின்றோம்.

இராஜ மகேந் திரனார் தன் நிமிர்வதாலே
ஏற்றமுடன் தலைவர்களும் பணிய நின்றார்.
பரா முகமாய் இருந்தோரும் இவரைத் தேடி
பணிந்த கதை பலவுண்டு பண்பால் இந்த
தரா தலத்தில் கட்சிகளை ஆட்டி வைத்து
தன் கருத்தை மக்கட்காய் உரைத்து நின்றோன்
நிராதரவாய்த் தமை விட்டுப் பிரிந்து போக
நெஞ்சமெலாம் வாடித்தான் மக்கள் சோர்ந்தார்.
 
செல்வத்தால் மலையளவு உயர்ந்து நின்றும்
சிறிதேனும் தற்பெருமை கொள்ளா ஐயன்
வெல்லத்தான் நினைந்தவர்கள் வீழ்ந்து போக
விருப்புடனே அவர் தமையும் ஈர்த்த ஐயன்
கள்ளத்தால் சதிகள் பல காட்டி நின்றோர்
களவெல்லாம் பயமின்றி வென்ற மன்னன்
உள்ளத்தால் இலங்கைத் தாய் மக்கள்தம்மை
உறவாக்கி நின்றவனும் உறங்கிப் போனான்.
 
விளையாட்டை விருப்போடு வளர்த்துவிட்டான்
வீறுடனே வர்த்தகத்தை ஆண்டு நின்றான்
கலையாதி விடயங்கள் தன்னில் தோய்ந்து
கற்றவர்கள் மகிழ்ந்திடவே பலவும் செய்தான். 
சளையாது அரசியலார் எதிர்ப்பை மீறி
தான் நினைத்த அத்தனையும் மக்கட்காக
நிலையாகச் செய்த மகன் விண்ணைச் சேர
நேசமுள நெஞ்சமெலாம் வாடிற்றம்மா!
 
குறி வைத்தால் அவர்தம்மின் நோக்கம் தன்னை
குறுக்கிட்டுத் தடுத்திடுதல் எவர்க்கும் ஆகா
நெறியற்ற எதையும் தன் மனத்தால் தானும் 
நினைக்காத, செய்யாத நேர்மை தன்னால்
அறிவுற்ற பலர் மகிழ அனைத்தும் வென்றார்.
அன்பதனால் வீழ்ந்தோரை எழவே செய்தார்.
தறிகெட்ட யமனவனும் தடுக்கலாகா 
தன் பாசம் வீசித்தன் சதியில் வென்றான். 
 
மலையகத்து இனம் உயர வழிகள் செய்தான்
மாண்புடனே வடகிழக்கைத் தாங்கி நின்றான்
அலைஅலையாய் பகை வளர்ந்த காலம் தன்னில்
அன்புடனே முஸ்லிம்கள் தன்னைக் காத்தான்
நிலையுடனே இந்துக்கள், பௌத்த மக்கள் 
நெறி நின்று இயேசுபிரான் தன்னைப் போற்றும்
விலையதிலா அன்பரொடு இஸ்லாம் மக்கள்
வேற்றுமைகள் பாராது அணைத்து நின்றான்.
 
அன்றொரு நாள் கம்பனுடை பணிகட்காக
ஐயன் அவன் தனைத் தேடி நானும் சென்றேன்
என்னை அவன் தான் எழுந்து வந்தே ஏற்று
இனிமையுடன் பல பேசி மகிழச் செய்தான்
எண்ணரிய பெருந்தொகையை அள்ளித் தந்து
எங்களுடை ஆலயத்தை எழும்பச் செய்தான்
தன் நிலையின் உயர்வுதனை மறந்து என்னை
தரைவரையும் வந்தேதான் அனுப்பிவைத்தான்.
 
இலங்கை அதன் வேர் அசையும் இந்த வேளை
இப் பெரிய மாமனிதன் இருந்தால் தாங்கி
நிலையுறவே செய்திடுவான் தேசம் என்று
நினைத்தேதான் விதி மகனும் சதி செய்தானோ?
அலைஅலையாய் சோதனைகள் அடுத்து வந்து
அசைக்கிறது தேசத்தை யாரே காப்பார்
விலையதிலாப் பெருமகனும் விண்ணில் நின்று
விதிமாற்றி அருள்வானோ? வேண்டி நிற்போம்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்