'வாழ்த்தான வைதல்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

ள்ளத்தில் ஆயிரமாய்த் தோன்றும் எண்ணங்களை,
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள,
மனிதனுக்குக் கிடைத்த கருவியே மொழியாம்.
ஒருவர், தன் எண்ணங்களை முழுமையாய் மற்றவர்க்குப் புரிய வைக்க,
 எந்த மொழிக்கும் ஆற்றலில்;லை என்பது அறிஞர்தம் கருத்து.
எல்லைப் படுத்தப்பட்ட அர்த்தங்களைக் கொண்டிருக்கும் வார்த்தைகளைக் கொண்டு,
எல்லையற்ற மனித உணர்வுகளை முழுமையாய் வெளிப்படுத்தல் கடினமேயாம்.
முழுமையாய்த் தம் உளக்கருத்தை வெளிப்படுத்தும் ஆர்வத்தால்,
எழுத்து, சொல், வசனம், பொருள் என மனிதன் தன் மொழி முயற்சிகளை நீட்டியபோதும்,
அம் முயற்சிகள் நீண்டனவேயன்றி,
தம் கருத்தை முழுமையாய் மொழிக்குள் அடக்கும் ஆற்றல், 
சாதாரண மனிதர்க்கு மட்டுமன்றி, பெரும் புலவர்க்கும் எட்டாக் கனியாகவே ஆயிற்று,
 
🔥 🔥 🔥
 
முழுமையான கருத்து வெளிப்பாட்டில் மொழி தோற்பதன் காரணமென்ன?
நம் உணர்வுகளைச் சிரமப்பட்டு வார்த்தைகளுக்குள் அடக்கினும்,
அவ்வார்த்தைகளை விளங்க வேண்டிய மற்றவர்தம் மனஉணர்வு வேறுபடின்,
நம் வார்த்தைகள், அவர்தம் மன உணர்வினால், 
நாம் சொல்ல நினைத்த கருத்தினை இழந்து,
அவர் கருதும் கருத்தைத் தந்துவிட,
நம் முயற்சி வீணாகி வார்த்தைகள் வலுவிழந்து விடுகின்றன.
 
🔥 🔥 🔥
 
சொல்வோன், கேட்போன் எனும் இருவர்க்கிடையில்,
விளக்க ஊடகமாய் நிற்கும் மொழி,
அவ்விருவர்தம் மன உணர்வின் வேறுபாட்டால்,
சொல்வோன் கருத்தை வேறுபடுத்தி,
கேட்போன் மனதில் வேறுபொருளைத் தர,
சொல்வோனின் முயற்சி தோற்றுப் போகிறது.
 
🔥 🔥 🔥
 
'உடம்பு எப்படி இருக்கிறது'? என,
நம் வாயிலிருந்து தோன்றும் வார்த்தைகள்,
நண்பர்க்கு மகிழ்ச்சி தருகின்றன.
பகைவர்க்கு கோபமூட்டுகின்றன.
பிரயோகித்த வார்த்தைகள் ஒன்றே எனினும்,
வேறுபட்டோர் மனஉணர்வின் காரணமாய்,
அவ்வார்த்தைகள் வெவ்வேறு பொருள் தருவதை,
மேல் உதாரணத்தால் காண்கின்றோம்.
இருவர் தம் மன விகாரத்தால் ஒரே வார்த்தைகள்,
வேறுபடப் பொருள் தரும் இந்நிலையை,
தக்கதோர் இடத்தில் அழகாய்க் கையாள்கின்றான் கம்பன்.
அவ்விடத்தைக் காண்பாம்
 
🔥 🔥 🔥
 
இராமனுக்குப் பட்டாபிஷேகம் முடிவாகிறது.
கொடுமனக்கூனி காதில் அச்செய்தி விழ, கொதித்தெழுகிறாள் அவள்.
பாலகனாய் இராமன் செய்த பரிகசிப்பை, 
தன் சிறுமையினால் பற்றிக் கிடந்தது அவள் கொடிய மனம்.
பட்டாபிஷேகச் செய்தி கேட்டு மகிழ்வதற்குப் பதிலாய்,
உள்ளமும் கூனிய அக்கொடியவள்,
முன்பு, சிறுபிள்ளையாய் இருந்த இராமன், 
தன் முதுகில் மண் உருண்டையால் அடித்ததை எண்ணி,
பழி வாங்கத் துடிக்கிறாள்.
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உளத்து உன்னுவாள்
 
🔥 🔥 🔥
 
அயோத்தி மக்கள் அனைவரும் விரும்பி அடி சூடும் இராமனை,
முடி சூடாமற் செய்ய முனைகிறாள் அவள்.
தன் தீய எண்ணத்தை நிறைவேற்ற,
தூயளாம் கைகேயி கோயில் புகுந்தவள்.
வஞ்சனையில்லாக் கைகேயி, பஞ்சணையிற் படுத்துறங்க,
நஞ்சனைய தனது உள்ளத்தால் நாடகத்தைத் தொடங்குகிறாள்.
 
🔥 🔥 🔥
 
உறங்குகிக் கிடக்கும் கைகேயியின் கால்தொட்டு எழுப்புகிறாள் கூனி.
 
எய்தி, அக்கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமைசால் செம்பொன், சீறடி
கைகளின் தீண்டினள் காலக்கோள் அனாள்.
 
கூனி கைகேயியைத் தொட்டதை, 
தீண்டினள் எனக் கம்பன் அழகுறச் சுட்டுகிறான்.
தீண்டுவது விஷமன்றோ?
தன் மன நஞ்சை கைகேயிக்குள் புகுத்த எண்ணும்,
கூனியை நாகத்தோடு ஒப்பிட்டு,
அவள் தொடுகையைத் தீண்டுதல் எனக் கம்பன் குறிப்பிடுதல்,
பொருளோடு கூடி நம்மை இரசிக்கச் செய்கிறது.
 
🔥 🔥 🔥
 
தீண்டலும் உணர்ந்த, அத்தெய்வக் கற்பினளாம் கைகேயியின்,
தூக்க மயக்கம் நீங்கும் முன்பே,
தன் நோக்கங் கருதிப் பேசத் தலைப்படுகிறாள் கூனி. 
'கிரகண காலத்தில் விட அரவம் தன்னைப் பற்ற வருவதை அறியாது,
முழு நிலா ஒளி வீசி நிற்பது போலப் பெருந்துன்பம் பிணிக்க வரவும்,
வருந்த வேண்டிய நீ, கவலையின்றி உறங்கினையோ?' என்று,
அச்ச மூட்டி தன் கருத்தைச்  செலுத்தக் களம் அமைக்கிறாள் அவள்.
 
அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்
குணம் கெடாது ஒளிர் விரி குளிர் வெண் திங்கள் போல்,
பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்
உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய் என்றாள்.
 
🔥 🔥 🔥
 
தூக்க மயக்கத்திலிருக்கும் ஒருவரிடம்,
பெருந்துன்பம் வந்ததாய்த் திடீரெனச் சொன்னால்,
யாரெனினும் அலமந்து போதல் இயல்பன்றோ?
அவ்வியல்பைக் கைகேயியிடம் எதிர்பார்க்கிறாள் கூனி.
அவளுக்குப் பெருத்த ஏமாற்றம்!
அதிர்வாள் என எதிர்பார்த்த கைகேயி,
கூனியின் முன் அசைவின்றிப் பேசுகிறாள்.
அவள் மனத்தெளிவு வாக்காய் வெளிப்படுகின்றது.
விராவு அரும் புவிக்கெலாம் வேதமே அன
இராமனைப் பயந்த ஏற்கு இடருண்டோ?
 
🔥 🔥 🔥
 
கைகேயியின் மனத் தெளிவு கூனியை இடியெனத் தாக்குகிறது.
பெற்றவள் கோசலையெனினும் இராமனை வளர்த்தவள் கைகேயியன்றோ?
அவள் தூய தாயன்பு, தான் பெற்ற மைந்தன் பரதனைவிட,
இராமனையே புதல்வனாய் முற்படப் பேசிற்று.
கூனியா அசைவாள்? 
தான் வீழ்த்த நினைக்கும் இராமனை வாழ்த்தி நிற்கும் கைகேயியை,
மேலும் மிரட்ட நினைக்கிறாள் அவள்.
மாற்றாளாகிய கோசலை மேல் இயல்பாய்க் கைகேயிக்கு இருக்கக்கூடிய,
பகைமையைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில்,
வாழ்ந்தாள் கோசலை, வீழ்ந்தாய் நீயெனப் பேசுகிறாள்.
 
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீவினை நிகர் கூனி சொல்லுவாள். 
'வீழ்ந்தது நின்னலம் திருவும் வீந்தது
வாழ்ந்தனள் கோசலை, மதியினால்' என்றாள்
 
🔥 🔥 🔥
 
தெளிந்திருந்த கைகேயியின் மனதில்,
கூனியின் வார்த்தைகளால் சிறியதோர் தடுமாற்றம் தோன்றுகிறது.
அவளும் பெண்தானே! மாற்றாள் வாழ்ந்தனள் எனும் கூற்று, 
மனதிற் பகையூட்ட, அவளிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படுகின்றன.
 
அன்னவள் அவ் உரை உரைப்ப, ஆயிழை,
மன்னர் மன்னனேல் கணவன், மைந்தனேல்
பன்ன அரும் பெரும் புகழ்ப் பரதன், பார்தனில்
என் இதன் மேல் அவட்கு எய்தும் வாழ்வு? என்றாள்.
 
🔥 🔥 🔥
 
முன்னர், இராமனைத் தன்மகனாய்ப் பேசிய கைகேயி,
பின்னர் பரதனைத் தன் மகனாய்ப் பேசுகின்றாள்.
கோசலைக்கு வந்த வாழ்வு எது? எனக் கைகேயி கேட்க,
கைகேயியின் மனமாற்றத்தை உணர்ந்த கூனி,
அவளுக்கு இராமனின் முடிசூட்டு விழாச் செய்தியை,
வஞ்சனையாய்ச் சொல்ல நினைக்கிறாள்.
அச் செய்தியைச் சொல்லும் போதே,
இராமன்மேல் கைகேயி கொண்ட நல்லெண்ணத்தை,
இல்லாது ஒழிக்கும் கருத்துடன் பேசத் தலைப்படுகிறாள் அவள்.
 
🔥 🔥 🔥
 
ஆண் மக்கள் நகைக்கவும், ஆண்மை மாசுறவும் பழியஞ்சாது,
வில்லறத்தின் நின்றும் வழுவி, தாடகை எனும் பெயர் கொண்ட,
பெண்ணைக் கொன்ற இராமன், நாளை முடிசூடப் போகிறான்.
இதுவே கோசலைக்கு எய்திய வாழ்வு என்றுரைத்து,
தனது வார்த்தைகளுள், 
பெண்ணைக் கொன்ற இராமன் உன்னையும் வருத்துவான் எனும் குறிப்பேற்றி,
கைகேயியின் மனத்துள் நஞ்சூட்டுகிறாள் கூனி.
 
🔥 🔥 🔥
 
இவ்விடத்தில், இருவர்தம் உணர்வு மாற்றத்தால்,
மொழி, மாறுபட்டுப் பொருள் தந்து நிற்கும் நிலையை,
விளக்கம் செய்ய முற்படுகிறான் கம்பன்.
கூனியின் கூற்று, கம்பன் கவிதையாய் வெளிப்படுகின்றது.
 
ஆடவர் நகையுற, ஆண்மை மாசு உற,
தாடகை எனும் பெயர்த் தையலாள் பட,
கோடிய வரி சிலை இராமன் கோ முடி,
சூடுவன் நாளை வாழ்வு இது எனச் சொல்லினாள்.
 
🔥 🔥 🔥
 
தன் வார்த்தைகள் கைகேயியை இராமன் பால் வெறுப்புறச் செய்யும் என,
எதிர்பார்த்த கூனிக்கு மீண்டும் ஏமாற்றம்.
கைகேயியின் முகமோ நிலவென மலர்கிறது.
அன்பு, கடலென ஆர்த்தெழுகின்றது.
அதனால், ஒளி வீசும் ஒரு மாலையை,
மந்தரைக்கு உவந்து பரிசளிக்கின்றாள் அவள்.
 
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முகமதி விளங்கித் தேசுற
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்.
 
🔥 🔥 🔥
 
இவ்விடத்தில் நமக்கோர் ஐயம் ஏற்படுகிறது.
கைகேயி, கோசலை மேற் பகை கொண்டவளேயன்றி,
இராமன் மேற் பகை கொண்டவள் அல்லள்.
முன்பு இராமனைப் பழித்துரைத்த கூனியை 
 
எனக்கு நல்லையும் அல்லை நீ என் மகன் பரதன்,
தனக்கு நல்லையும் அல்லை அத்தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லை வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்
என்றும்,
போதி, என் எதிர்நின்று, நின் புன் பொறி நாவைச்
சேதியாது இது பொறுத்தனன், புறம் சிலர் அறியின்,
நீதி அல்லவும், நெறி முறை அல்லவும், நினைந்தாய்
ஆதி, ஆதலின், அறிவு இலி! அடங்குதி' என்றாள்.
என்றும்,
கொதித்துப் பேசியதை இக் கருத்தின் சான்றாய்க் கொள்ளலாம்.
 
🔥 🔥 🔥
 
இத்தகைய கைகேயி,
ஆடவர் நகையுற ஆண்மை மாசுற
தாடகை எனும் பெயர் தையலாள் பட,
கோடிய வரிசிலை இராமன், எனக் கூனி பேசியது கேட்டு,
இராமனை இழிவு படுத்திப் பேசியமைக்காகக்
அவளைக் கோபித்திருக்க வேண்டாமா?
கூனி உரைத்த தீய வார்த்தைகளைக் கேட்டு,
கைகேயி அவளை நிச்சயம் கடிந்திருத்தல் வேண்டுமன்றோ?
கேள்விகள் மனத்துள் எழுகின்றன.
 
🔥 🔥 🔥
 
ஆனால் கைகேயியோ கூனி உரைத்த வார்த்தைகளைக் கேட்டு,
எவ்விதச் சலனமுமின்றி மகிழ்ந்து அவளுக்குப் பரிசளிக்கிறாள்.
இம் முரண்பாட்டுக்கு விடை தேடுகிறது நம் மனம்.
ஆழ்ந்து சிந்திக்க விடை கிடைக்கிறது.
எது விடை?
 
🔥 🔥 🔥
 
இராமன்மேல் பகைகொண்டு கூனி சொன்ன இழி வார்த்தைகள்,
அவன்மேல் அன்பு கொண்டு நின்ற கைகேயிக்கு,
பாராட்டு வார்த்தைகளாய்ப் பட்டு விடுகின்றன.
உணர்வு மாற்றம் வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றி விடுகின்றது.
எங்ஙனம்? என்பதை ஒவ்வொன்றாய் நாம் காணலாம்.
 
🔥 🔥 🔥
 
ஆடவர்கள் பார்த்துச் சிரிக்கும் படியாக எனும் பொருளிலே,
கூனி சொன்னதான ஆடவர் நகையுற எனும் வார்தைகள்,
ஆடவரைப் பார்த்து உலகம் சிரிக்கும் படியாக எனவும்,
இராமனால் ஆண்மை மாசுபடும் படியாக எனும் பொருளில்,
ஆண்மை மாசுற எனக் கூனி சொன்னது,
தாடகையால் ஆண்மை மாசுற எனவும், 
வில்லறத்தினின்றும் வழுவிப் போனவன் எனும் பொருளில்,
கோடிய வரிசிலை இராமன் எனக் கூனி சொன்னது,
வில்லை வளைத்த இராமன் எனவும், 
தாடகை எனும் பெயருள்ள ஒரு பெண்ணைக் கொன்றான் எனும் பொருளிற், 
தாடகை எனும் பெயர்த் தையலாள் எனக் கூனி சொன்னது,
பெயரளவில் மாத்திரம் பெண்ணாயிருந்த தாடகை எனவும் பொருள் தர,
கைகேயியால் கூனியின் வைதல், வாழ்த்தாய் விளங்கப்படுகிறது.
 
🔥 🔥 🔥
 
ஆண்களை விட வலிமையாய் இருந்ததால்,
இவளை வெல்ல ஆண்மக்கள் யாருமில்லை என்று கருதும்படி,
பெண்ணாய் வாழ்ந்த தாடகையால் ஆடவர் நகையுற்றனர்.
ஆண்மையும் மாசுற்றது.
இந்நிலமையைத் தவிர்த்து,
ஆண்மையை எழுச்சி கொள்ளச் செய்வதற்காய்
வில்லை வளைத்து அவளைக் கொன்று பெருமை கொண்ட இராமன்,
நாளை முடி சூடுவன் என்று,
கூனியின் வார்த்தைகள் கைகேயிக்குப் பொருள் தர,
மகிழ்ந்து பரிசளிக்கிறாள் அவள்.
இதுவே அவள் மகிழ்ச்சியின் காரணமாம்.
 
🔥 🔥 🔥
 
கைகேயியின் நல்லுணர்வால்,
கூனியின் வைதல் வாழ்த்தாகிப் போக,
கம்பன் தந்த, 
வார்த்தைகளின் பொருள் மாற்ற விளக்கம் கண்டு.
மகிழ்கிறது நம் மனம்.
 
🔥 🔥 🔥
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்