'பிழையும் பிழைதிருத்தமும்': பகுதி 1 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

லகம் முழுவதும் அதிர்ந்து கிடக்கிறது.
அவ் அதிர்வுக்குக் காரணம் ஒரு சிறு கிருமி என்பதுதான் வேடிக்கை.
அறிவாலும் செல்வத்தாலும் திமிரெடுத்து,
உயர் அறிவின் வெளிப்பாடான விஞ்ஞானத்தை, 
அழிவுக்கான ஊடகமாய் ஆக்கியும், 
அறம் மீறி, உலகைச்சுரண்டிப் பெற்ற செல்வத்தை, 
அவ்வழிவு முயற்சிக்காய்ப் பயன்படுத்தியும், 
ஆட்டம் போட்ட வல்லரசுகள் இன்று ஆட்டம் கண்டு நிற்கின்றன.
💧💧💧💧
அணு ஆயுதங்களைத் தமக்கு மட்டுமேயான உடைமையாக்கி,
தம் பொருளாதார வலிமையால் ஏழை நாடுகளின் செவி பிடித்துத்திருகி,
அணுகுண்டு, ஹைற்றயன் குண்டு, அணுஏவுகணை, அணுசக்திநீர்மூழ்கிகள் என்பனவான,
அழிவுக்கருவிகளின் எண்ணிக்கைகளை அடுக்கி அடுக்கி, 
தம்முள் யார் பெரியரெனக் கொக்கரித்து நின்ற வல்லரசுகளை, இன்று 
கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறு கிருமி,
கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.
💧💧💧💧
உலகத்தை ஒரு வினாடியில் அழிப்போம் என அகங்காரத்தால் கூவி நின்றவர்கள்,
பேர் அழிவுசெய்யும் ஒரு சிறு கிருமியை அழிக்க வழி தெரியாது, 
மாதங்கள் பல கடந்தும் மயங்கி, மருண்டு நிற்கின்றனர்.
அடங்கி வாழ்வதிலும் ஆனந்தம் உண்டு என்று,
அறமுரைத்த பெரியோர்தம் வார்த்தைகளைக் கேலி பண்ணி
அடக்கமுடைமையை அடிமைத்தனமாய் விமர்சித்து,
ஆட்டம் போட்ட அனைவரையும்,
ஒரு சின்னஞ்சிறு கிருமி அதட்டி, அடக்கி, 
அவரவர் வீட்டினுள் பல நாட்களாய் அடைத்துவைத்திருக்கிறது.
💧💧💧💧
அறமுரைத்த பெரியோர்களை அலட்சியம் செய்து,
ஆணவச் செருக்குக் காட்டிய நவீன அறிஞர்களால்,
ஒரு கிருமியின் மிரட்டலை இன்று மீற முடியவில்லை.
அடக்கம் உரைத்த ஆன்றோர்கள் அனைவரையும்,
பிற்போக்குவாதிகள் எனப் பிதற்றித்திரிந்த முற்போக்குவாதிகள்
மூச்சடங்கிக்கிடக்கின்றனர்.
அறம்மீறி அட்டூழியம் செய்த அனைவரையும் தண்டிக்க, 
இயற்கை தன் கையில் 'கொரோனா' என்னும் சவுக்கை எடுத்திருக்கிறது.
💧💧💧💧
இயற்கையின் நுண்மை உணராது இயங்கிய,
ஆட்சியாளர்கள், அறிஞர்கள் என,
அனைவருமே அதிர்ந்து நிற்கும் இந்நிலைக்கான மாற்று யாது?
இன்று அனைவர் முன்பும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கேள்வி இதுவேயாம்.
இக்கொடிய நோயைக் கொணர்ந்தவர்கள் யார்? என்னும் கேள்விக்கு விடையாய், 
சீனா தொடங்கி பல வலிய நாடுகளின் பெயர்கள்,
பட்டியல் இடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நீதான்! இல்லை நீதான்! என, 
ஒருவரை நோக்கி ஒருவர் விரல் நீட்டி நிற்கும்,
இவர்களைக் காண சிரிப்புத்தான் வருகிறது.
💧💧💧💧
இத்தனை அழிவுகளின் பின்பும், 
உண்மைக் காரணத்தைத் தேடி அறிய மாட்டாத இவர்தம் மடமையை என் சொல்ல ?
கிருமி எந்த நாட்டில் இருந்தும் வந்திருக்கலாம். எந்த வழியாகவும் வந்திருக்கலாம்.
ஆனால் இக்கிருமியை உருவாக்கியது, 
இயற்கையின் வலிய ஆற்றல் என்பதுவே உண்மைத் தரிசனமாம்.
இதுபற்றி நம் தமிழ் அறிஞர்கள், 
தெளிவான செய்திகளை அன்றே பதிவு செய்திருந்தனர்.
💧💧💧💧
'தமிழ் படித்தவர்களுக்கு இதுவே வேலையாய்ப் போயிற்று.
எதை எடுத்தாலும் இது தமிழில் இருக்கிறது என்று, 
பொய்ப் பெருமிதம் கொள்வதுதான் இவர்கள் வேலை' என,
உங்களில் சிலர் குமுறும் குரல் என் காதில் விழுகிறது.
என் செய்ய?
எம் இனத்திலும் எம்மொழியிலும் தீர்க்கதரிசனம் மிக்க அறிஞர்கள்,
இருக்க வாய்ப்பே இல்லை எனக் கருதும்,
மூடர்களின் கூடாரமாய் எம் இனம் இன்று ஆகிவிட்டது.
அக் கூடாரத்தை அமைத்தவர்கள் பாமரர்கள் அல்ல படித்தவர்களேயாம்!
💧💧💧💧
நம் மொழியிலும் அறிஞர்களிலும் எதுவுமே இல்லை. 
வேற்று நாட்டார் தருவதே அறிவு எனும் மூடக்கொள்கையால்,
நம் மூதாதையர்களின் உண்மைஅறிவைக் குப்பையில்இட்டு, 
மேற்குலகு சுயநலதோடு உரைக்கும் பல பொய்களுக்கு,
பொற்கம்பளம் விரிக்கும் சில கற்றவர்கள் காட்டிய கீழ்மை வழியால், 
நம் தமிழின் பெருமையை அறியாது, 
தத்தளித்து நிற்கிறது புதிய தமிழ்த் தலைமுறை.
நான் அடிக்கடி சொல்வது போல, 
நம் மூதாதையர்கள் மூடர்கள் என உரைத்து மகிழும் அறிஞர் கூட்டம்,
உலகில் வேறெங்கிலும் இருக்குமா? தெரியவில்லை. 
என் செய்ய அது நம் விதியின் பிழை!
💧💧💧💧
இன்றைய இவ் இக்கட்டான நிலைக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு?
உங்கள் விழிகள் வினாத்தொடுத்து விரிவது தெரிகிறது. 
அது பற்றியே இக்கட்டுரையில் உரைக்கப் போகிறேன்.
💧💧💧💧
ஓர் இடத்தில் அதிக காலம் வாழ்ந்தவனுக்கே, 
அவ் இடம்பற்றிய அனுபவஅறிவு கூர்மை உறும்,
அவ் அனுபவ அறிவை, கற்றுப் பெறுதல் கடினமாம். 
இவ்வுலகில் நீண்ட காலம் வாழ்ந்து வரும் தொன்மையே,
நம் தமிழினத்தின் தனித்தகுதி.
அத் தகுதியால் நம் மூதாதையர்கள்,
இவ்வுலகின் இயற்கையை மிக நுட்பமாய் விளங்கியிருந்தனர்.
💧💧💧💧
இன்றைய விஞ்ஞான உலகைப் போல,
அறிவாணவத்தால் இயற்கையை அலட்சியம் செய்யும் எண்ணம்,
அவர்களிடம் கிஞ்சித்தும் இருக்கவில்லை.
அழிவுகள் செய்யும் ஆற்றல் இருந்தும்
அவ் ஆற்றலை அடக்கி வைத்து 
உலகின் நலன் நோக்கியே அவர்கள் செயற்பட்டார்கள்.
சீதையை இராவணன் அபகரித்துப் போன கோபத்தில், 
'இவ்வுலகை அழிக்கிறேன்' என்று கொதித்தெழுகிறான் இராமன்.
அப்போது, 'சுயபாதிப்பிற்காய் உலகை அழிக்கும் உரிமை உனக்கு இல்லை' என, 
உயிர் பிரியும் நிலையில் இருந்த சடாயு,
இராமனின் அச் செயலைக் கண்டித்துத் தடுத்து நிறுத்துகிறான்.
உலகம் பற்றிய நம் முன்னோர்களின் பொறுப்புணர்ச்சிக்கான சான்றாய் அமையும், 
கம்பகாவியக் காட்சி இது.
💧💧💧💧
ஒன்றோடொன்று தொடர்புபட்டு இயற்கையுள் அமைந்த பல கூறுகளுள் 
மனுக் குலமும் ஒரு கூறு எனும் உண்மையை அறிந்ததால் 
இயற்கைச் சம நிலையைக் குழப்பாமல், வளரும் வழியையே, 
நம் மூதாதையர் மனிதர்தம் ஆக்க வழியாய் அறியத்தந்தனர்.
💧💧💧💧
உலக வரலாற்றில் சொற்பகாலமே பதிவாகி, 
இயற்கை அனுபவம் பெறாத, இன்றைய சில செல்வந்த நாடுகள்,
இயற்கையின் சமநிலை பற்றி எவ்வித கவலையும் இன்றி,
தம் வெற்றி நோக்கி விரைந்து செயற்பட முயல்கின்றன.
அச்செயற்பாட்டின் விளைவே,
உலகம் முழுவதையும் அதிரச் செய்திருக்கும் 
இன்றைய 'கொரோனாத்தாக்கம்' என்பது திண்ணமாம்.
💧💧💧💧
தத்தம் செல்வ வளர்ச்சிக்காகவும் அதன் மூலம் வரும் அதிகார ஆசைக்காகவும்
இயற்கையை மாசுபடுத்துவதில் இவர்கள் இட்ட போட்டியால்,
இன்று உலகு உருக்குலைந்து போய் நிற்கிறது.
தம் ஆடம்பரத்தை அளவிற்கு அதிகமாக்கி,
அவ் ஆடம்பரத்திற்காய் உலகின் இயற்கைச் சமநிலையை சிதைத்த
இவர்தம் செயலே, இன்று மனுக்குலத்தை பாதித்திருக்கிறது.
💧💧💧💧
வசதிக்காய் ஊருக்கொரு வாகனம் என்றிருந்த நிலையை மாற்றி,
வீட்டிற்கொரு வாகனம் எனக் கொண்டு, 
இன்று ஆளுக்கொரு வாகனம் என்றுமாற்றியதாலும்,
தேவைக்கதிகமான பயன் பெறுதற்காய்,
மனிதமுயற்சிக்கு இடமில்லாமல் செய்து, 
இயந்திரங்களின் அளவை அதிகரித்ததாலும், 
அவை விடும் புகைகளால்,
கவலையே இல்லாமல் அவர்கள் காற்றை மாசுபடுத்தினர்.
தொழிற்சாலைக் கழிவுகளை ஆறுகளில் கலக்கச் செய்து,
நீசத்தனமாய் நீரை மாசுபடுத்தினர். 
உடல் உழைப்பைத் தவிர்த்துப் பெரும் விளைவு காண விரும்பி,
விவசாயத்தில் நச்சுகளைக் கொட்டியும்,
தமது சுகத்திற்காய் மக்காத 'பொலித்தீன்' போன்ற பொருட்களை,
மண்ணுள் கலக்கவிட்டும் மண்ணை மாசுபடுத்தினர். 
ஒருவரோடு ஒருவர் போட்டி இட்டு,
விண்ணில் செலுத்தும் செய்மதிகளின் கழிவுகளால்,
இன்று விண்ணையும் மாசுபடுத்தத் தொடங்கிவிட்டனர்.
அக்கினி மட்டும் அழுக்குகளை அழிக்கும் தன் இயல்பாற்றலால்,
ஏதோ, இன்றுவரை மாசுபடாமல் தப்பிப்பிழைத்துக் கிடக்கிறது.
💧💧💧💧
பகுதி 2 - நாளை தொடரும்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்