'பிழையும் பிழைதிருத்தமும்': பகுதி 2 -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-

27.04.20அன்று உகரத்தில் வெளியிடப்பட்ட 'பிழையும் பிழைதிருத்தமும்' எனும் கட்டுரையின் இரண்டாம் பாகம் இன்று(28.04.20), இங்கே, உங்களுக்காக...

ல்லா உயிர்களுக்குமாக இறைவன் படைத்த இவ் உலகின் இயற்கையை, 
மனிதன் தன் தனியுரிமை என நினைத்து, 
தனது சுயநலத்திற்காய் செய்த அட்டூழியங்களை, 
பொறுக்கும் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, 
இயற்கை குமுறிக் கொந்தளித்திருக்கிறது.
அதன் விளைவே இன்று உருவாகி இருக்கும்,
'கொரோனாக்' கொடுமையாம்.
💈 💈 💈 💈
பகுத்தறிவுவாதிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டு,
புதுமை என்ற பெயரால் உலகைக் கெடுத்து வரும் புல்லறிவாளர் சிலர்,
எனது மேற்கருத்தைக் கண்டு கைகொட்டிச் சிரிக்கப்போகிறார்கள்.
அறிவில்லாத இயற்கையும் எதிர்வினை ஆற்றுமா? ஏன, 
வினாத்தொடுத்து, அவர்கள் என்னை விமர்சிக்கப் போகிறார்கள்.
அவர்தம் வினாவிற்கு விடையளிப்பது என் கடமையாகிறது.
💈 💈 💈 💈
'காலமும்' இயற்கையினுடைய ஒரு கூறேயாம். 
அந்த, கால ஊடகமும் அறிவற்ற சடம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அக் கால ஊடகமும் உலகில் பல இயக்கங்களை நடாத்துகின்றது.
மாரியில் மழை வரச் செய்வதும், கோடையில் வெயில் வரச் செய்வதும்,
பூ காயாவதும், புளித்த காய் கனியாகி இனிப்பதும்,
பாலன் இளைஞனாவதும், இளைஞன் கிழவனாவதும்
காலவிஷேடம் இயற்றும் காரியங்களாம் என்பதை எவரும் மறுத்தல் இயலாது.
💈 💈 💈 💈
சடமான காலம் எங்ஙனம் காரியங்களை இயற்றுகிறது?- வினாப் பிறக்கும். 
ஆழ்ந்து சிந்திக்க விடை தானாய்க் கிடைக்கிறது.
உயிரற்ற சடமான ஓரு மண்வெட்டி, 
கொத்தவும், குழிதோண்டவும், புல்லைச் செதுக்கவும், பயன்படுதலை,
பிரத்தியட்சமாக நாம் காண்கிறோம்.
அறிவற்ற அக்கருவி மேற்செயல்களை செய்வது எங்ஙனம்?
ஆராய ஓர் உண்மை புலனாகிறது.
அறிவற்ற ஓர் கருவியை அறிவுள்ள ஒருவன் கையாண்டால்,
அதனால் காரியங்கள் நிகழ்தல் கைகூடுமாம் 
💈 💈 💈 💈
இவ் உண்மை கொண்டு நோக்க, 
சடமான, அறிவற்ற காலத்தையும் பஞ்சபூதங்களையும் கொண்டு செயலாற்றுவிக்க, 
பேரறிவுமிக்க ஓர் சக்தி பின்னணியில் இருத்தல் வேண்டும் எனும் உண்மை, 
தானாய் வெளிவரும்.
அச் சக்தியைத்தான் நம் மூதாதையர்கள் கடவுள் என்றனர் 
விரிந்து கிடக்கும் இப்பிரபஞ்சங்கள் முழுவதையும்,
தன் கட்டுப்பாட்டுள் வைத்து, இயக்கி நிற்கும், 
அச் சக்தியின் ஆற்றல் கண்டு அவர்கள் அதிர்ந்தனர்.
பின் அச்சக்தியிடம் அடைக்கலம் புகுந்தனர்.
💈 💈 💈 💈
சடமான இவ் உலக இயக்கத்தைக் கண்டு,
அதனை இயக்கி நிற்கும்  பேராற்றல் மிக்க சக்தியை உணரும் 
அறிவும் ஆற்றலும் அற்ற சிறுமதியாளர் சிலர், 
கையளவேயான தம் சிறுமதியைக் கொண்டு,
கடலளவான அப்பெரும் சக்தியை, தாம் நிராகரிப்பதாய்க் கூறி,
வாலால் கடலின் ஆழம் அளந்த நரிகள் போல்,
தாமும் மயங்கி உலகையும் மயங்கச் செய்தனர்.
அம் மயக்கச் செயற்பாடுகளின் விளைவே,
இன்றைய அவலமாம்!
💈 💈 💈 💈
அறிவற்ற சடமான ஒரு கருவி செயல்களை இயற்றுமானால்,
அக்கருவி கொண்டு செயல்களை இயற்ற,
ஒரு அறிவுள்ள சக்தி வேண்டும் என்னும்,
சாதாரண தர்க்க அறிவைக் கூட பெறாத இவர்கள்,
தம்மைப் பகுத்தறிவுவாதிகள் என, பறைசாற்றி நிற்பது,
வேடிக்கையிலும் வேடிக்கையாம்!
💈 💈 💈 💈
பஞ்சபூதங்கள், காலம் போன்ற அறிவற்ற சடப்பொருட்களைக் கொண்டு,
ஒரு பெரும்சக்தி இவ் உலகை இயக்குகிறது எனும் பேருண்மையை, 
இவ் உலகில் நீண்ட காலம் வாழ்ந்த தமது அனுபவத்தால், 
நம் தமிழ் மூதாதையர்கள் தெளிவுற உணர்ந்து கொண்டனர்.
அச் சக்தி இவ் உலகில் விதித்த வரையறைகளே, 
இவ் உலகின் இயற்கை என்று உணரந்த அவர்கள், 
இவ் உலகில் அமைந்த ஒவ்வொரு பொருள்களுக்கும், 
அச் சக்தி வகுத்துக் கொடுத்த இயற்கையே, 
அவ்வப் பொருட்களின் அறம் என்று அறிந்து கொண்டனர்.
💈 💈 💈 💈
அதனால்த்தான், அச்சக்தி வகுத்த இயற்கையோடு பொருந்தி வாழ்தலின் அவசியத்தை, 
தம் அடுத்த தலைமுறையினர்க்கு உணர்த்தல் வேண்டி, 
ஆயிரமான அறநூல்களை நம் தமிழ்ப் புலவோர் இயற்றித்தந்தனர்.
அவ் அறநூல்களினூடு அவர்கள் உரைத்த அப் பேருண்மைகளை, 
தாமும் உணராது உலகிற்கும் உணர்த்தாது, 
நாத்திகம் பேசி மறம் வளர்த்த சிறுமதியாளரின் 
இயற்கையைச் சிதைத்த செயலே, இன்றைய சீரழிவின் காரணம்.
💈 💈 💈 💈
உயிரதும் உடலதும் சேர்க்கையே நம் இயக்கமாம்.
உயிர் சூக்குமமாய் உள் நின்று இயக்க அதன் உந்துதலால்
நம் தூல உடல் இயங்குகிறது.
ஒருவரின் உடலை மற்றொருவர் தாக்கினால், 
அத்தாக்குதலால் விளையும் வேதனையை உணர்வது, 
அவ் உடலுள் பொருந்திய உயிரேயாம்.
மற்றவர் தாக்கத்தால் விளைந்த வேதனையை உணர்ந்த உயிர், 
தாக்குதல் பெற்ற உடலைக் கொண்டே, தன் எதிர் வினையைத் 
தாக்குதல் செய்தார்மேல் இயற்றும். 
இஃது வெளிப்படையான உண்மை. 
⧫ ⧫ ⧫
இயற்கை அல்லது அறமே இறைவனின் உடலாம்.
இப்பேருண்மையை திருக்குறளுக்கு உரை செய்த பரிமேலழகர்,
'அறவாழி அந்தணன்' எனும் குறளுரையில் தெளிவுற விளக்கம் செய்கிறார்.
பல்வேறுவகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும்
தனக்கு வடிவாக உடையான் ஆகலின் அற ஆழி அந்தணன் என்றார். 
என்பது அவர்தம் உரை.  
💈 💈 💈 💈
இன்று நிகழ்ந்திருக்கும் அவலத்தின் காரணம் இங்குதான் புலப்படுகிறது.
தம் சுயநலத்திற்காய், இறைவன் வகுத்த அறங்களை மீறி,
அவன் வடிவாகிய இயற்கை மீது, மனுக்குலம் போர் தொடுக்கத் தொடங்கியது.
அதன் பாதிப்பால் இன்று இறைவன்,
இயற்கையைக் கொண்டே நம்மீது போர் தொடுத்திருக்கிறான்.
மனிதனின் சிறு புத்தி எங்கே?இறைவனின் பெரும் சக்தி எங்கே?
வல்லவராய்த் தம்மைத் தாமே வியந்துரைத்து,
உலகை அசைப்பதாய் ஆட்டம் போட்டவர்கள் எல்லாம், 
இயற்கையூடு இறைவன் செய்த சிறு அதிர்வைத் தாங்கமாட்டாது, 
ஓடி ஒளிந்து உருக்குலைந்து நிற்கின்றார்.
💈 💈 💈 💈
இறைவன் படைத்த உலகியற்கையே அறம் என்று உணர்ந்ததால்த்தான்
நம் மூதாதையர் அறத்தைப் போணுவதில் பெரும் அக்கறை காட்டினர்.
முதல் நாள் போரில் தோற்று நிற்கின்றான் இராவணன்.
அவ்விடத்தில் அறம் பற்றிய ஓர் பேருண்மையை, 
உலகுரையாய் நமக்கு உணர்த்தி நிற்கிறான் கம்பன். 
இராவணனின் தோல்விக்காம் காரணத்தை, இராமனின் வீரத்தின் மேல் ஏற்றாது, 
அறத்தின் ஆற்றலின்மேல் ஏற்றிக் கம்பன் உரைக்கும், 
'அறம் கடந்தவர் செயல் இது என்று உலகெலாம் ஆர்ப்ப 
நிறம் கரிந்திட நிலம் விரல் கிளைந்திட நின்றான்' எனும் கவி அடிகள்
ஆழ்ந்த சிந்தனைக்குரியன.- அதே காட்சியில், 
இராவணனுக்கு அறிவுரை கூறும் இராமனும்,
'அறத்தினால் அன்றி அமரர்க்கும் அரும்சமம் கடத்தல் 
மறத்தினால் அரிதி என்பது மனத்திடை வலித்தி' என, 
வெற்றியின் அடிப்படை, அறமே என உரைத்து நிற்பதும்,
நம்மூதாதையரின் ஆழ்ந்த அறச்சிந்தனையின் அறிவிப்புக்களாம்!
💈 💈 💈 💈
தேவைக்கு அதிகமான ஆசையினால், 
அற்புதமாக இறைவன் அமைத்துத் தந்த இயற்கையின்மேல் போர் தொடுத்து,
இன்று அவ் இயற்கையால் தண்டிக்கப்பட்டு தத்தளித்து நிற்கிறோம் நாம். 
இங்கு ஓர் கேள்வி பிறக்கும்.
பெருங்கருணையாளனாகிய இறைவன் சிற்றறிவுடைய மனிதர்தம் பிழையை,
ஓர் எச்சரிக்கை கூடச் செய்யாமல் இங்ஙனம் தண்டிக்கலாமா?
இதுவே அக்கேள்வியாம்.
💈 💈 💈 💈
இவ்விடத்தில் ஓர் உண்மையை நாம் தெளிவுறத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நம் எல்லை மீறல்களைச் சகிக்க முடியாமல், 
இயற்கையூடு எச்சரிக்கைகள் பலதரமாய் நமக்கு விடப்பட்டன.
நில அதிர்வு, காட்டுத்தீ, கடும்புயல், கடற்கொந்தழிப்பு என, 
இயற்கை விடுத்த எச்சரிக்கைகளை மனுக்குலம் கண்டுகொள்ளவில்லை. 
இன்றைய அறிவியலாளர்கள் பாதகங்கள் விளையாமல் தடுப்பதற்குப் பதிலாக 
விளைந்த பாதகத்திலிருந்து தப்புவது பற்றியே ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
காரணத்தை நீக்க காரியம் தானே நீங்கிவிடும் எனும்,
காரண காரியத் தொடர்பான உண்மை கூட, அவர்தமக்குப் புரியவில்லை.
அதனாற்றான் இயற்கை விடுத்த எச்சரிக்கைகளை விளங்கிக் கொள்ளாமல், 
அவர்கள் தம் பாதகப் பயணத்தைத் தொடர்ந்தபடி இருந்தனர்.
💈 💈 💈 💈
இவ்விடத்தில்,
நம் தமிழ் மூதாதையரின் நிர்வாகம் பற்றிய,
ஓர் ஆழ்ந்த சிந்தனையையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
நிர்வாகத்திறம் பற்றி உரைக்கும் திருக்குறளின் பொருட்பால்ப் பகுதியில், 
பெரியாரைத் துணைக்கோடல் எனும் ஓர் அதிகாரத்தை, 
வள்ளுவக் கடவுளார் அமைத்திருக்கிறார்.
ஒரு நாட்டின் நிர்வாகத்தை நடாத்தும் தலைவன்,
தீ நெறியில் இருந்து தன்னை விலக்கி, நன்நெறியில் செலுத்தும் பெரியோரை 
தனக்கு துணையாகக் கொண்டிருக்க வேண்டும் எனும் செய்தியையே,
இவ் அதிகாரம் உரைக்கிறது.
💈 💈 💈 💈
இவ் அதிகாரத்தில், ஒரு தலைவனுக்கு வரக்கூடிய பாதிப்புக்களை,
மானுடக் குற்றம், தெய்வக்குற்றம் என இருவகையாய் வள்ளுவர் பிரிக்கிறார்.
அக்குற்றங்கள் பற்றிய விபரங்களையும் அவற்றை நீக்கும் முறைமையையும், 
உரையாசிரியர் பரிமேலழகர் மிகத் தெளிவாக விளக்கம் செய்கிறார்.
அவர்கருத்தை அவர் மொழியிலேயே தருகிறேன்
💈 💈 💈 💈
'தெய்வத்தால் வரும் துன்பங்கள் ஆவன
 மழையினது இன்மை, மிகுதிகளானும்
 காற்று, தீ, பிணி, என்ற இவற்றானும் வருவன
 அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யப்படும் சாந்திகளால் நீக்கப்படும்'
💈 💈 💈 💈
'மக்களால் வரும் துன்பங்கள் ஆவன,
 பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினைசெய்வார் என்று இவர்களால் வருவன. 
அவை சாம, பேத, தான, தண்டங்கள் ஆகிய 
நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும்'
💈 💈 💈 💈
இங்ஙனம் உரைக்கும் பரிமேலழகர் 
தெய்வக்குற்றங்களை உற்பாதங்களால் (தீச்சகுனம்) அறிந்து,
அவற்றை நீக்கும் வல்லமை உள்ள புரோகிதரையும்,
மக்களால் வரும் பகை முதலிய துன்பங்களை நீக்க,
ஆற்றல் மிகுந்த அமைச்சர்களையும்,
தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என்றும், 
இவர்களே தலைவனால்ப் பேணப்பட வேண்டிய பெரியோர்கள் என்றும்,
தெளிவுபட உரைக்கிறார்.
💈 💈 💈 💈
பகுதி 3 - நாளை தொடரும்.
Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்