'நின்றவனே காத்திடுவான் நினையும்!' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-

உருத்திரனார் தன் வஞ்சம் உளமதனில்  பெருகிடவே
அருகிருந்த பொன்னரையே அண்டித்தான் - வெறுப்பேற்ற
ஏன்காணும் நீரும் அவ்விழவெடுத்த தடுப்பூசி
தான் போட்டுவிட்டீரோ தடுக்க.

எவ் ஊசிதனைப் போட்டீர் இந்தியர்கள் தான் தந்த
அவ் ஊசி தனைத்தானோ! அவர் கேட்க - பவ்வியமாய்
பொன்னர் தலையாட்ட போச்சுது உம் வாழ்வு இனி 
பின்னர் அது வாராதாம் பிரண்டீர்.

விசரே உமக்கென்று வேம்பெனவே பொன்னரையும்
கசப்போடு பார்த்தேதான் கடுகடுப்பாய் - நிசமாக
என்ன இனிச் செய்வீர்நீர் எல்லாமே வீணாச்சு
மண்ணதுதான் உம்வாழ்வு மடிந்தீர்.

ஏன் காணும் ஒன்றதனால் ஏதும் பயனிலையோ!
வீண் தானோ அவ்வூசி விளம்பிடுவீர் - பொன்னருமே
ஏங்கிப் பயத்துடனே இதயம் தனைக் கையால் 
தாங்கித்தான் கேட்டாராம் தவித்து.

நீர் போட்ட ஊசி எது நெஞ்சம் படபடக்க
ஆர்வமதால் கேட்டார் அப்பொன்னருமே - வீறுடனே
உருத்திரனார் தலைநிமிர்த்தி உரைத்திட்டார் சீனர்களின்
மருத்தினையே நான் போட்டேன் மதித்து.

சீனரவர் ஊசியதே சிறப்பென்று சொல்லுகினம்
நானதனைத் தான் போட்டேன் - நன்றாக
பல்லாண்டு நான் வாழ்வேன் பயமில்லை இனி எனக்கு
எல்லோரும் போற்றிடவே இனிது.

விழி பிதுங்கிப் பொன்னருமே நின்றாராம் விதியதனால்
வழி பிறழ்ந்து தான் போட்ட மருந்ததனால் - பழி சுமந்து
செத்தேதான் நான் போனால் சிரியாரோ என்றெண்ணி
வித்தாக வழி நினைந்து விழித்தார்.

பொன்னரது துன்பத்தைப் பொல்லாத உருத்திரரும்
தன்னளவில் ரசித்தாராம் தயையின்றி - விண்ணுலகம்
போகாமல் இருந்திடவே போய் நீர்தான் 'பேச்சி'தனை
வாகாக வரங்கேளும் வருந்தி.

என்றுரைத்து உருத்திரனார் எட்டடிதான் வைப்பதன் முன்
விண்ணதிர யமனாக விரைந்தோடி - கொன்றழிக்கும்  
பொல்லாத 'ரிப்பரு'மே பொசுக்கென்று மோதிவிட
வல்லாரும் போனாராம் வருந்தி.

வாழ்வதுவும் சாவதுவும் வள்ளலவன் கையில்தான்
பாழ் உயிரைக் காப்பதுவும் பரமன்தான் - தாழ்வதனால்
வென்றுலகை வாழ்வதற்கு விரும்புகிற பெரியோரே
நின்றவனே காத்திடுவான் நினையும்

Tags :

Post Comment

அதிர்வுகள்
அதிர்வுகள்
அரசியல்களம்
அரசியல்களம்
சர்ச்சைக்களம்
சர்ச்சைக்களம்
இலக்கியக் களம்
இலக்கியக் களம்